Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்

எறும்பீஸ்வரர் கோவில், திருவெறும்பூர்

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருவெறும்பூர்
இறைவன் பெயர்எறும்பீஸ்வரர், பிப்பிலிகேஸ்வரர், மதுவனேஸ்வரர்
இறைவி பெயர்சௌந்தரநாயகி, நறுங்குழல் நாயகி, மதுவனேஸ்வரி
பதிகம்திருநாவுக்கரசர் - 2
எப்படிப் போவது திருச்சி - தஞ்சாவூர் சாலையில் திருச்சியில் இருந்து சுமார் 11 கி.மி. தொலைவில் திருவெறும்பூர் சிவஸ்தலம் உள்ளது. திருச்சி - தஞ்சாவூர் ரயில் மார்க்கத்தில் திருவெறும்பூர் ரயில் நிலையம் இருக்கிறது.

தல புராண வரலாறு: தாரகாசுரன் என்ற அரக்கனின் காரணமாக தேவர்கள் மிகவும் துன்பப்பட்டனர். அவர்கள் நாரதரிடம் சென்று தாரகாசுரன் கொடுமைகளில் இருந்து மீள வழி சொல்லும்படி வேண்டினர். நாரதர் திருசிராபள்ளி அருகே உள்ள இத்தலத்திற்குச் சென்று சிவபெருமானை வழிபட்டு அவரிடம் முறையிடும்படி ஆலோசனை கூரினார். தேவர்களும் அதன்படி இங்கு வந்து அசுரன் கண்ணில் படாமல் இருக்க எறும்பு உருவம் எடுத்து இறைவனை வழிபட்டு வந்தனர். அச்சமயம் லிங்கத் திருமேனி மிகவும் வழுவழுப்பாக இருக்க எறும்பு உருவில் இருந்த தேவர்கள் அதன் மீதேறி இறைவனை வழிபட மிகவும் சிரமப்பட்டனர். இறைவன் அவர்கள் சிரமத்தைப் பார்த்து தன் லிங்க உருவை ஒரு எறும்புப் புற்றாக மாற்றிக் கொண்டார். இநதன் காரணமாக இத்தலம் எறும்பியூர் என்றும் இறைவன் எறும்பீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார்.

இத்தலத்தில் ஆலயம் ஒரு சிறிய குன்றின் மீது அமைந்திருக்கிறது. கல்லில் வெட்டப்பட்டுள்ள சுமார் 125 படிகளின் மீதேறி ஆலயத்தை அடையலாம். கருவறை முற்றும் கற்களால் கட்டப்பட்டுள்ளது. கோவிலின் நுழைவு வாயில் வடக்கு திசையில் உள்ளது. இரண்டு பிரகாரங்கள் உள்ளன. கருவறை நுழை வாயிலின் இருபுறமும் விநாயகர், முருகன் ஆகியோரின் உருவச் சிலைகள் உள்ளன. கருவறை உள்ளே மூலவர் எறும்பீஸ்வரர் கிழக்கு நோக்கி காணப்படுகிறார். இறைவி நறுங்குழல் நாயகியின் சந்நிதி வெளிப் பிரகாரத்தில் தெற்கு நோக்கி உள்ளது. உட்பிரகாரத்தில் சோமச்கந்தர், முருகன், கஜலக்ஷ்மி, காசி விஸ்வநாதர், லக்ஷ்மி, பைரவர் ஆகியோரின் உருவச் சிலைகள் காணப்படுகின்றன. பிரம்மா, இந்திரன், அக்னிதேவன், முருகர், அகத்திய முனிவர், நைமிச முனிவர் ஆகியோர் இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளனர்.

எறும்பீஸ்வரர் ஆலயம் 9 புகைப்படங்கள்

 

திருநாவுக்கரசர் இத்தலத்து இறைவன் மேல் இரண்டு பதிகங்கள் பாடியருளியுள்ளார். கீழே உள்ள இப்பதிகம் 6-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

பன்னியசெந் தமிழறியேன் கவியேன் மாட்டேன்
எண்ணோடு பண்ணிறைந்த கலைக ளாய
தன்னையுந்தன் றிறத்தறியாப் பொறியி லேனைத்
தன்றிறமு மறிவித்து நெறியுங் காட்டி
அன்னையையும் அத்தனையும் போல அன்பாய்
அடைந்தேனைத் தொடர்ந்தென்னை யாளாக் கொண்ட
தென்னெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே. 	

பளிங்கினிழ லுட்பதித்த சோதி யானைப்
பசுபதியைப் பாசுபத வேடத் தானை
விளிந்தெழுந்த சலந்தரனை வீட்டி னானை
வேதியனை விண்ணவனை மேவி வையம்
அளந்தவனை நான்முகனை அல்லல் தீர்க்கும்
அருமருந்தை ஆமா றறிந்தென் னுள்ளந்
தெளிந்தெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.

கருவையென்றன் மனத்திருந்த கருத்தை ஞானக்
கடுஞ்சுடரைப் படிந்துகிடந் தமர ரேத்தும்
உருவையண்டத் தொருமுதலை யோத வேலி
உலகினிறை தொழிலிறுதி நடுவாய் நின்ற
மருவைவென்ற குழன்மடவாள் பாகம் வைத்த
மயானத்து மாசிலா மணியை வாசத்
திருவெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே. 

பகழிபொழிந் தடலரக்கர் புரங்கள் மூன்றும்
பாழ்படுத்த பரஞ்சுடரைப் பரிந்து தன்னைப்
புகழுமன்பர்க் கின்பமரும் அமுதைத் தேனைப்
புண்ணியனைப் புவனியது முழுதும் போக
உமிழுமம்பொற் குன்றத்தை முத்தின் றூணை
உமையவள்தம் பெருமானை இமையோ ரேத்துந்
திகழெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே. 

பாரிடங்க ளுடன்பாடப் பயின்று நட்டம்
பயில்வானை அயில்வாய சூல மேந்தி
நேரிடும்போர் மிகவல்ல நிமலன் றன்னை
நின்மலனை அம்மலர்கொண் டயனும் மாலும்
பாரிடந்தும் மேலுயர்ந்துங் காணா வண்ணம்
பரந்தானை நிமிர்ந்துமுனி கணங்க ளேத்துஞ்
சீரெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே. 

கார்முகிலாய்ப் பொழிவானைப் பொழிந்த முந்நீர்
கரப்பானைக் கடியநடை விடையொன் றேறி
ஊர்பலவுந் திரிவானை ஊர தாக
ஒற்றியூ ருடையனாய் முற்றும் ஆண்டு
பேரெழுத்தொன் றுடையானைப் பிரம னோடு
மாலவனும் இந்திரனும் மந்திரத்தா லேத்துஞ்
சீரெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே. 

நீணிலவும் அந்தீயும் நீரும் மற்றை
நெறியிலங்கு மிகுகாலும் ஆகா சமும்
வாணிலவு தாரகையும் மண்ணும் விண்ணும்
மன்னுயிரும் என்னுயிருந் தானாஞ் செம்பொன்
ஆணியென்றும் அஞ்சனமா மலையே யென்றும்
அம்பவளத் திரளென்றும் அறிந்தோ ரேத்துஞ்
சேணெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே. 

அறந்தெரியா ஊத்தைவாய் அறிவில் சிந்தை
ஆரம்பக் குண்டரோ டயர்த்து நாளும்
மறந்துமரன் திருவடிகள் நினைய மாட்டா
மதியிலியேன் வாழ்வெலாம் வாளா மண்மேற்
பிறந்தநாள் நாளல்ல வாளா வீசன்
பேர்பிதற்றிச் சீரடிமைத் திறத்து ளன்பு
செறிந்தெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே. 

அறிவிலங்கு மனத்தானை அறிவார்க் கன்றி
அறியாதார் தந்திறத்தொன் றறியா தானைப்
பொறியிலங்கு வாளரவம் புனைந்து பூண்ட
புண்ணியனைப் பொருதிரைவாய் நஞ்ச முண்ட
குறியிலங்கு மிடற்றானை மடற்றேன் கொன்றைச்
சடையானை மடைதோறுங் கமல மென்பூச்
செறியெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.

அருந்தவத்தின் பெருவலியா லறிவ தன்றி
அடலரக்கன் றடவரையை யெடுத்தான் றிண்டோ ள்
முரிந்துநெரிந் தழிந்துபா தாள முற்று
முன்கைநரம் பினையெடுத்துக் கீதம் பாட
இருந்தவனை ஏழுலகு மாக்கி னானை
எம்மானை கைம்மாவி னுரிவை போர்த்த
திருந்தெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.