Shiva temples of Tamilnadu

தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்
பாடல் பெற்ற தலம் கோவில் விபரங்கள் தமிழ்நாடு வர ஆலோசனைகள்

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்மேலைதிருக்காட்டுப்பள்ளி
இறைவன் பெயர்அக்னீஸ்வரர், தீயாடியப்பர்
இறைவி பெயர்சௌந்தர நாயகி, அழகம்மை
பதிகம்திருநாவுக்கரசர் - 1
திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது திருவையாறு - கல்லணை சாலையில் திருவையாற்றுக்கு மேற்கே சுமார் 19 கி.மீ. தொலைவில் குடமுருட்டியாற்றின் தென்கரையில் மேலைத்திருக்காட்டுப்பள்ளி கோவில் உள்ளது. திருச்சி, தஞ்சையிலிருந்தும், திருக்கண்டியூர், திருவையாறு, கல்லணை முதலிய இடங்களிலிருந்தும் இத்தலத்திற்குப் பேருந்துகள் உள்ளன.
ஆலய முகவரி அருள்மிகு அக்னீசுவரர் திருக்கோயில்
திருக்காட்டுப்பள்ளி
திருக்காட்டுப்பள்ளி அஞ்சல்
தஞ்சாவூர் மாவட்டம்
PIN - 613104

இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
Tirukkattuppalli route mapதிருவையாறில் இருந்து மேலைதிருக்காட்டுப்பள்ளி செல்லும் வழி வரைபடம்
Map courtesy by: Google Maps

திருக்காட்டுப்பள்ளி என்னும் பெயருடைய இரு தலங்கள் உள்ளன. காவிரியின் வடகரையில் உள்ளது கீழைத் திருக்காட்டுப்பள்ளி எனப்படும். அது திருவெண்காட்டிற்கு அருகில் உள்ளது. மேலைத் திருக்காட்டுப்பள்ளி எனப்படும் இத்தலம் காவிரி தென்கரை தலங்களில் ஒன்று. இங்குத்தான் குடமுருட்டியாறு பிரிகின்றது.

கோவில் அமைப்பு: மேலைத் திருக்காட்டுப்பள்ளி சிவாலயம் 5 நிலை கோபுரத்துடனும், 3 பிரகாரங்களைக் கொண்டும் அழகுற அமைந்துள்ளது. மூலவர் அக்னீஸ்வரர் கருவறை தரை மட்டத்திலிருந்து கீழே ஒரு பள்ளப்பகுதியில் இருக்கிறது. இத்தலத்தில் அக்னி பகவான் இறைவனை வழிபட்டதால் கோயிலுக்கு ""அக்னீஸ்வரம்" என்பது பெயர். அக்னி பகவான் சிவபெருமானை வழிபட ஏற்படுத்திய அக்னி தீர்த்தம் இன்று கிணறு வடிவில் உள்ளது. மூலவர் அக்னீஸ்வரர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். சிவலிங்கம் உருவில் சிறியது. லிங்கத்தின் சிரசின் மீது ஐந்து நாகங்கள் படமெடுக்கும் தோற்றம் காணலாம். மூலவர் சற்றே தாழ்வான பள்ளத்தில் உள்ளார். குறுகிய கருவறைக்குள் குனிந்து நெருங்கி யாரையும் தரிசிக்க அனுமதிப்பதில்லை. பக்தர்கள் சற்று தூரத்திலிருந்து தான் இறைவனை வழிபட வேண்டும். மூலவரைச் சுற்றி வரும் பிராகாரத்தில் கோஷ்ட மூர்த்தமாக யோக தட்சிணாமூர்த்தி விளங்குகின்றார். உள் பிராகாரத்தில் விநாயகர் உள்ளார். இலிங்கோத்பவர், கோஷ்ட மூர்த்தமாக இருக்காமல், விநாயகருக்குப் பக்கத்தில் தனி சந்நிதியில் காணப்படுகிறார். இலிங்கோத்பவர் இயல்பாக இருக்கும் இடமான மேற்கு கோஷ்டத்தில் அர்த்த நாரீஸ்வரர் உள்ளார். அடுத்து வள்ளி தெய்வயானை சமேத ஆறுமுகப் பெருமானுள்ளார். பக்கத்தில் காசி விசுவநாதர் விசாலாட்சி, கஜலட்சுமி, துர்க்கை சந்நிதிகள் ஆகியவையும் உள்ளன.

இறைவி சௌந்தரநாயகி தனி சந்நிதியில் வீற்றிருக்கிறாள். இறைவன் சந்நிதிக்கு இடது பக்கத்தில் பிரம்மாவிற்கு தனி சந்நிதி அமைக்கப்பட்டிருக்கிறது. பிரம்மாவிற்கு ஏற்பட்ட சாபம் நீங்கிய தலம் இது. பிரம்மா இத்தலத்தில் இறைவனை வணங்கி மும்மூர்த்திகளில் ஒருவர் என்ற அங்கீகாரம் தரவேண்டும் என்று பிரார்த்தனை செய்தார். சிவன் அவருக்கு தனியிடம் தந்து தங்க அனுமதித்தார் என்று இத்தலத்து கல்வெட்டு கூறுகிறது. இத்தலத்தில் விஷ்ணுவிற்கு தனி ஆலயமில்லை. தீயாடியப்பர் ஆலயத்தின் உள்ளே விஷ்னு ஸ்ரீனிவாச பெருமாள் என்ற திருநாமத்துடன் தனி சந்நிதியில் பக்தர்களுக்கு அருள் புரிகிறார். இத்தலத்திலுள்ள இரண்டாம் பிரகாரத்தில் இரண்டு தட்சிணாமூர்த்திகள் உள்ளனர். குரு தட்சிணாமூர்த்தியின் அடிப்பகுதியில் உள்ள துவாரம் வழியே மற்றொரு தட்சிணாமூர்த்தியைப் பார்க்கலாம். நவக்கிரக சந்நிதியில், எல்லாக் கிரகங்களும் சூரியனைப் பார்த்தவாறே மைந்துள்ளன.

இத்தலத்திலுள்ள யோக தட்சிணாமூர்த்தி விசேஷமானவர். இவர் குரங்காசனத்தில் அமர்ந்து, இரண்டு திருக்கரங்களுடன் கழுத்தில் மகரகண்டி ருத்திராஷம் அணிந்து, திருச்சடையில் சூரிய, சந்திரன் அணிந்து யோக மூர்த்தியாக காட்சி தருகிறார். இவரை 5 நெய்தீபம் ஏற்றி மூல்லைப் பூவால் வழிபட்டால் திருமணம், கல்வி, செல்வம் யோகத்தை அடையலாம்.

தல புராண வரலாறு: புராண காலத்தில் தேவர்களும், அவர்கள் தலைவனான இந்திரனும் இத்தலத்திற்கு வந்து இறைவனை வணங்கினர். அப்போது அக்னிதேவன் தான் தொட்ட பொருட்கள் யாவும் சுட்டெரிக்கப்பட்டு நாசமாகி விடுகிறதென்றும் அதனால் ஏற்படும் பழியிலிருந்து விடுபட வழி சொல்ல வேண்டுமென்றும் இறைவனிடம் முறையிட்டான். இறைவன் சிவன் அக்னிதேவன் முன் தோன்றி இத்தலத்தில் ஒரு குளம் அமைத்து அதற்கு அக்னி தீர்த்தம் என்று பெயரிட்டு அந்த குளத்து நீரைக்கொண்டு தன்னை அபிஷேகம் செய்தால் என்னை வழிபடும் உனக்கு அந்தப் பழி தீரும் என்றும் அதில் நீராடும் பக்தர்களுக்கும் அவர்கள் செய்த பாவங்கள் தீரும் என்றும் வரமளித்தார். இந்த தீர்த்தத்தில் கார்த்திகை ஞாயிறு, மாசிமகம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் முதலிய நாள்களில் நீராடி வழிபடுவோர் எல்லா நலன்களும் பெறுவர்.

இத்தலத்திற்கான திருநாவுக்கரசர் பதிகம் 5-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. உயிர் உடலை விட்டுப் பிரியும் முன் ஒரு முறையேனும் திருக்காட்டுப்பள்ளி அடைந்து அங்குள்ள இறைவனை வழிபடுங்கள் என்று அவர் தனது பதிகத்தின் பல பாடல்களில் குறிப்பிடுகிறார்.

Top
அக்னீஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்
5 நிலை இராஜகோபுரம்
சிவன் சந்நிதி கொடிமரம், பலிபீடம்
தல விருட்சம் வன்னிமரம், வில்வ மரம்
அக்னீஸ்வரர் சந்நிதி நுழைவாயில்
தட்சிணாமூர்த்தி
யோக தட்சிணாமூர்த்தி
பள்ளத்தில் நந்தி