Shiva Temples of Tamilnadu
தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்
ஆத்மநாதேஸ்வரர் கோவில், திருவாலம்பொழில்
தென்னாடுடைய சிவனே போற்றிஎந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
| தகவல் பலகை | |
|---|---|
| சிவஸ்தலம் பெயர் | திருவாலம்பொழில் |
| இறைவன் பெயர் | ஆத்மநாதேஸ்வரர் |
| இறைவி பெயர் | ஞானாம்பிகை |
| பதிகம் | திருநாவுக்கரசர் - 1 |
| எப்படிப் போவது | திருக்கண்டியூரில் இருந்து திருக்காட்டுப்பள்ளி செல்லும் சாலையில் திருப்பூந்துருத்திக்கு அடுத்து திருஆலம்பொழில் தலம் இருக்கிறது. கண்டியூரில் இருந்து சுமார் 5 கி.மி. தொலைவில் உள்ளது. கண்டியூரிலிருந்து நகரப் பேருந்து செல்கிறது. சாலையோரத்திலேயே கோயில் உள்ளது. திருவையாற்றிலிருந்து பூதலூர் வழியாகத் திருச்சி செல்லும் பேருந்தில் வந்தால் இத்தலத்திலேயே இறங்கலாம். |
| ஆலய முகவரி |
அருள்மிகு ஆத்மநாதேசுவரர் திருக்கோயில் திருவாலம் பொழில் திருவாலம் பொழில் அஞ்சல் திருப்பந்துருத்தி - S.O. (வழி) திருக்கண்டியூர் திருவையாறு வட்டம் தஞ்சாவூர் மாவட்டம் PIN - 613 103 இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும். |
இவ்வாலயம் ஒரு 5 நிலை கோபுரத்துடன் விளங்குகிறது. மேற்கு நோக்கிய சந்நிதி. கோபுர வாயில் இருபுறமும் துவார பாலகர் உள்ளனர். கோபுர வாயில் வழியே உள்ளே சென்றால் இடதுபுறம் சுப்பிரமணியர் சந்நிதி உள்ளது. வெளிப் பிரகாரத்தில் விநாயகர், விசுவநாதர், விசாலாட்சி சந்நிதிகள் உள்ளன. அடுத்துள்ள மண்டபத்தில் வலதுபுறம் நவக்கிரக சந்நிதியும், இடதுபுறம் அம்பாள் சந்நிதியும் உள்ளன. அம்பாள் நின்ற திருக்கோலத்தில் அருட்காட்சி தருகிறாள். இத்தலத்து அம்மனை வழிபட்டால் ஞானம் கிடைக்கும் என்பது ஐதீகம். நேரே கருவறையில் இத்தலத்தின் மூலவர் சுயம்பு ரூ,த்தியாக மேற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். கருவறைச் சுற்றில் சுப்பிரமணியர், நவக்கிரகங்கள், நால்வர் சன்னதி, மூல விநாயகர், பஞ்சலிங்கம், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், காசி விஸ்வநாதர், வள்ளி, தெய்வானையுடன் முருகன், நவக்கிரகம், காசி விசாலாட்சி, நடராஜர் ஆகியோர் சந்நிதிகள் உள்ளன. இத்தல இறைவனை காசிபர், அஷ்டவசுக்கள் ஆகியேர் பூஜித்துள்ளனர். இத்தலத்தில் உள்ள துர்க்கை மிகவும் சக்தி வாய்ந்தவள். தட்சிணாமூர்த்தி இத்தலத்தில் மேதா தட்சிணாமூர்த்தியாக உள்ளார்.
திருநாவுக்கரசர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய இப்பதிகம் 6-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. அப்பர் இத்தலத்திற்கான தம் பதிகத்தில் தென் பரம்பைக் குடியின் மேய திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே என்று ஒவ்வொரு பாடலிலும் குறிப்பிடுகிறார். இதிலிருந்து ஊரின் பெயர் பரம்பைக்குடி என்றும், கோவிலின் பெயர் திருவாலம் பொழில் என்றும் அந்நாளில் வழங்கப்பட்டதாகத் தெரிகின்றது. இத்தலக் கல்வெட்டிலும் இறைவன் "தென் பரம்பைக்குடி திருவாலம் பொழில் உடைய நாதர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளார்.
1. கருவாகிக் கண்ணுதலாய் நின்றான் றன்னைக் கமலத்தோன் றலையரிந்த கபா லியை உருவார்ந்த மலைமகளோர் பாகத் தானை உணர்வெலா மானானை ஓசை யாகி வருவானை வலஞ்சுழியெம் பெருமான் றன்னை மறைக்காடும் ஆவடுதண் டுறையு மேய திருவானைத் தென்பரம்பைக் குடியின் மேய திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே. 2. உரித்தானைக் களிறதன் றோல் போர்வை யாக உடையானை உடைபுலியி னதளே யாகத் தரித்தானைச் சடையதன்மேற் கங்கை யங்கைத் தழலுருவை விடமமுதா வுண்டி தெல்லாம் பரித்தானைப் பவளமால் வரையன் னானைப் பாம்பணையான் றனக்கன்றங் காழி நல்கிச் சிரித்தானைத் தென்பரம்பைக் குடியின் மேய திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே. 3. உருமூன்றாய் உணர்வின்கண் ஒன்றா னானை ஓங்கார மெய்ப்பொருளை உடம்பி னுள்ளாற் கருவீன்ற வெங்களவை யறிவான் றன்னைக் காலனைத்தன் கழலடியாற் காய்ந்து மாணிக் கருளீன்ற ஆரமுதை அமரர் கோனை அள்ளூறி எம்பெருமா னென்பார்க் கென்றுந் திருவீன்ற தென்பரம்பைக் குடியின் மேய திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே. 4. பார்முழுதாய் விசும்பாகிப் பாதா ளமாம் பரம்பரனைச் சுரும்பமருங் குழலாள் பாகத் தாரமுதாம் அணிதில்லைக் கூத்தன் றன்னை வாட்போக்கி யம்மானை எம்மா னென்று வாரமதா மடியார்க்கு வார மாகி வஞ்சனைசெய் வார்க்கென்றும் வஞ்ச னாகுஞ் சீரரசைத் தென்பரம்பைக் குடியின் மேய திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே. 5. வரையார்ந்த மடமங்கை பங்கன் றன்னை வானவர்க்கும் வானவனை மணியை முத்தை அரையார்ந்த புலித்தோல்மேல் அரவ மார்த்த அம்மானைத் தம்மானை அடியார்க் கென்றும் புரையார்ந்த கோவணத்தெம் புனிதன் றன்னைப் பூந்துருத்தி மேயானைப் புகலூ ரானைத் திரையார்ந்த தென்பரம்பைக் குடியின் மேய திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே. 6. விரிந்தானைக் குவிந்தானை வேத வித்தை வியன்பிறப்போ டிறப்பாகி நின்றான் றன்னை அரிந்தானைச் சலந்தரன்றன் உடலம் வேறா ஆழ்கடல்நஞ் சுண்டிமையோ ரெல்லா முய்யப் பரிந்தானைப் பல்லசுரர் புரங்கள் மூன்றும் பாழ்படுப்பான் சிலைமலைநா ணேற்றி யம்பு தெரிந்தானைத் தென்பரம்பைக் குடியின் மேய திருவாலம் பொழிலானைச்சிந்தி நெஞ்சே. 7. பொல்லாத என்னழுக்கிற் புகுவா னென்னைப் புறம்புறமே சோதித்த புனிதன் றன்னை எல்லாருந் தன்னையே இகழ அந்நாள் இடுபலியென் றகந்திரியும் எம்பி ரானைச் சொல்லாதா ரவர்தம்மைச் சொல்லா தானைத் தொடர்ந்துதன் பொன்னடியே பேணு வாரைச் செல்லாத நெறிசெலுத்த வல்லான் றன்னைத் திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே. 8. ஐந்தலைய நாகவணைக் கிடந்த மாலோ டயன்தேடி நாடரிய அம்மான் றன்னைப் பந்தணவு மெல்விரலாள் பாகத் தானைப் பராய்த்துறையும் வெண்காடும் பயின்றான் றன்னைப் பொந்துடைய வெண்டலையிற் பலிகொள் வானைப் பூவணமும் புறம்பயமும் பொருந்தி னானைச் சிந்தியவெந் தீவினைகள் தீர்ப்பான் றன்னைத் திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே. 9. கையிலுண் டுழல்வாருஞ் சாக்கி யருங் கல்லாத வன்மூடர்க் கல்லா தானைப் பொய்யிலா தவர்க்கென்றும் பொய்யி லானைப் பூணாகம் நாணாகப் பொருப்பு வில்லாக் கையினார் அம்பெரிகால் ஈர்க்குக் கோலாக் கடுந்தவத்தோர் நெடும்புரங்கள் கனல்வாய் வீழ்த்த செய்யினார் தென்பரம்பைக் குடியின் மேய திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே. இப்பதிகத்தின் 10-ம் பாடல் சிதைந்து போயிற்று.
