Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்

வசிஷ்டேஸ்வரர் கோவில், தென்குடித்திட்டை

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்தென்குடித்திட்டை
இறைவன் பெயர்வசிஷ்டேஸ்வரர், பசுபதிநாதர், பசுபதீஸ்வரர்
இறைவி பெயர்உலகநாயகி, சுகந்த குந்தளாம்பிகை, மங்களேஸ்வரி
பதிகம்திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது தஞ்சாவூரில் இருந்து மெலட்டூர் வழியாக கும்பகோணம் செல்லும் சாலை மார்க்கத்தில் தஞ்சாவூரில் இருந்து 15 கி.மி. சென்றால் இத்தலத்தை அடையலாம். தஞ்சாவூர் - கும்பகோணம் ரயில் மார்க்கத்தில் உள்ள பசுபதிகோவில் என்ற ரயில் நிலையத்தில் இருந்தும் இத்தலத்தை அடையலாம்.
Thittai temple front gopuram

தென்குடித்திட்டை ஆலய கோபுரம்

காவிரியின் கிளை நதிகளான வெண்ணாறு, வெட்டாறு ஆகியவற்றின் இடையில் உள்ள திட்டில் இவ்வாலயம் இருப்பதால் திட்டை என்றும் தென்குடித்திட்டை என்றும் வழங்கப்படுகிறது. புராண காலத்தில் பிரளயம் ஏற்பட்ட போது பூலோகமே நீரில் அமிழ்ந்திருந்த போது திட்டை என்னும் இவ்விடம் மட்டும் நீரில் மூழ்காமல் இருந்தது. இவ்விடத்தில் சிவபெருமான் சுயம்புவாக ஒரு லிங்க உருவில் எழுந்தருளினார். இக்கோவிலின் நான்கு மூலைகளிலும் நான்கு லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. மூலவர் வசிஷ்டேஸ்வரர் ஐந்தாவது லிங்கமாக சுயம்பு லிங்கமாக அருள் புரிகிறார். இவ்வாறு ஐந்து லிங்கங்கள் இருப்பதால் இத்தலத்தை பஞ்சலிங்க ஷேத்திரம் என்று கூறுவர். இந்த ஒரு தலத்தை வழிபட்டால் சிதம்பரம், காளஹஸ்தி, திருவண்ணாமலை, திருஆனைக்கா மற்றும் காஞ்சீபுரம் ஆகிய பஞ்சபூத தலங்களுக்கு சென்று வந்த புண்ணியம் கிட்டிவிடும். சம்பந்தர் சிவபெருமானை விட அவர் சுயம்பு லிங்கமாக காட்சி தரும் இத்தலம் மேலானது என்று குறிப்பிடுகிறார்.

சூரியன் இங்கு இறைவனை வழிபட்டிருக்கிறான். இதன் அடையாளமாக சூரிய ஒளி ஆண்டிற்கு இரண்டு முறை மூலவர் லிங்கத் திருமேனியில் விழுகிறது. ஆவணி மாதம் 15, 16, 17 தேதிகளிலும், பங்குனி மாதம் 25, 26, 27 தேதிகளிலும் சூரிய கிரணங்கள் மூலவர் மீது விழுகின்றன.

மூலவர் கருவறையின் மேல் விதானத்தில் ஒரு சந்திர காந்தக் கல் பொருத்தப்பட்டிருக்கிறது. காற்றில் உள்ள ஈரப்பசையை உறிஞ்சி சுமார் 24 நிமிடங்களுக்கு (ஒரு நாழிகை) ஒருமுறை மூலவர் சிவலிங்கத் திருமேனியில் ஒரு சொட்டு நீர் விழும்படி இக்கல் பொருத்தப்பட்டிருப்பது இத்தலத்தின் சிறப்பம்சமாகும். பிரம்மா, விஷ்ணு, சுப்பிரமணியர், பைரவர், சூரியன், யமதர்மன், சனீஸ்வரன், தேவேந்திரன், ஆதிசேஷன், வசிஷ்டர், ஜமதக்னி முனிவர் ஆகியோர் இத்தலத்தில் வசிஷ்டேஸ்வரரை வழிபட்டுள்ளனர். ஆலயத்தின் முன்புறம் பசு தீர்த்தம் அமைந்துள்ளது. ராஜகோபுர வழியாக உட்சென்று சில படிகள் ஏறிச் சென்றால் முதல் பிரகாரத்தை அடையலாம்.

மூலவர் சந்நிதிக்கும் அம்பாள் சந்நிதிக்கும் இடைப்பட்ட நிலையில், அமபாள் சந்நிதிக்கு மேற்குப் பக்கத்தில் தனி விமானத்துடன் கூடிய தெற்கு நோக்கிய குரு பகவானின் தனி சந்நிதி அமைந்துள்ளது. இவர் ராஜ குருவாக நின்ற நிலையில் அபய ஹஸ்த முத்திரையுடன் பக்தர்களுக்கு அருள் புரிகிறார். அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. அம்மன் சந்நிதிக்கு முனபாக மேல் கூரையில் 12 ராசிகளுக்கும் ராசி சக்கரம் சிற்ப வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. அவரவர் ராசிக்குக் கீழே நின்று பிரார்த்தனை செய்தால் வேண்டியது கிட்டும் என்பது ஆன்றோர் நம்பிக்கை.

சம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடிய இப்பதிகம் 3-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

முன்னைநான் மறையவை முறைமுறை குறையொடுந்
தன்னதாள் தொழுதெழ நின்றவன் தன்னிடம்
மன்னுமா காவிரி வந்தடி வருடநற்
செந்நெலார் வளவயல் தென்குடித் திட்டையே.

மகரமா டுங்கொடி மன்மத வேள்தனை
நிகரலா காநெருப் பெழவிழித் தானிடம்
பகரபா ணித்தலம் பன்மக ரத்தோடுஞ்
சிகரமா ளிகைதொகுந் தென்குடித் திட்டையே.

கருவினா லன்றியே கருவெலா மாயவன்
உருவினா லன்றியே உருவுசெய் தானிடம்
பருவநாள் விழவொடும் பாடலோ டாடலுந்
திருவினான் மிகுபுகழ்த் தென்குடித் திட்டையே.

உண்ணிலா வாவியா யோங்குதன் தன்மையை
விண்ணிலார் அறிகிலா வேதவே தாந்தனூர்
எண்ணிலார் எழில்மணிக் கனகமா ளிகையிளந்
தெண்ணிலா விரிதருந் தென்குடித் திட்டையே.

வருந்திவா னோர்கள்வந் தடையமா நஞ்சுதான்
அருந்திஆர் அமுதவர்க் கருள்செய்தான் அமருமூர்
செருந்திபூ மாதவிப் பந்தர்வண் செண்பகந்
திருந்துநீள் வளர்பொழில் தென்குடித் திட்டையே.

ஊறினார் ஓசையுள் ஒன்றினார் ஒன்றிமால்
கூறினார் அமர்தருங் குமரவேள் தாதையூர்
ஆறினார் பொய்யகத் தையுணர் வெய்திமெய்
தேறினார் வழிபடுந் தென்குடித் திட்டையே.

கானலைக் கும்மவன் கண்ணிடந் தப்பநீள்
வானலைக் குந்தவத் தேவுவைத் தானிடந்
தானலைத் தெள்ளமூர் தாமரைத் தண்டுறை
தேனலைக் கும்வயல் தென்குடித் திட்டையே.

மாலொடும் பொருதிறல் வாளரக் கன்நெரிந்
தோலிடும் படிவிர லொன்றுவைத் தானிடங்
காலொடுங் கனகமூக் குடன்வரக் கயல்வரால்
சேலொடும் பாய்வயல் தென்குடித் திட்டையே.

நாரணன் தன்னொடு நான்முகன் தானுமாய்க்
காரணன் அடிமுடி காணவொண் ணானிடம்
ஆரணங் கொண்டுபூ சுரர்கள்வந் தடிதொழச்
சீரணங் கும்புகழ்த் தென்குடித் திட்டையே.

குண்டிகைக் கையுடைக் குண்டரும் புத்தரும்
பண்டுரைத் தேயிடும் பற்றுவிட் டீர்தொழும்
வண்டிரைக் கும்பொழில் தண்டலைக் கொண்டலார்
தெண்டிரைத் தண்புனல் தென்குடித் திட்டையே.

தேனலார் சோலைசூழ் தென்குடித் திட்டையைக்
கானலார் கடிபொழில் சூழ்தருங் காழியுள்
ஞானமார் ஞானசம் பந்தன செந்தமிழ்
பானலார் மொழிவலார்க் கில்லையாம் பாவமே.