Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்


தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

ஆலந்துறை நாதர் கோவில், திருப்புள்ளமங்கை

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருப்புள்ளமங்கை (தற்போது பசுபதிகோவில் என்று வழங்குகிறது)
இறைவன் பெயர்ஆலந்துறை நாதர், பசுபதி நாதர்
இறைவி பெயர்அல்லியங்கோதை, சௌந்தரநாயகி
பதிகம்திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூருக்குச் செல்லும் நெடுஞ்சாலையில் அய்யம்பேட்டையைத் தாண்டி, மாதாகோயிலிடத்தில் வலப்புறமாகப் பிரியும் கண்டியூர் செல்லும் பேருந்துச் சாலையில் சென்றால் பசுபதி கோயிலை அடையலாம். தஞ்சையிலிருந்து பசுபதி கோயிலுக்குப் பேருந்து வசதியுண்டு. திருவையாறு - கும்பகோணம் பேருந்து இவ்வூர் வழியாகச் செல்கின்றது.
ஆலய முகவரி அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில்
பசுபதி கோயில்
பசுபதி கோயில் அஞ்சல்
தஞ்சை மாவட்டம்
PIN - 614 206

இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் திறந்திருக்கும்.
Tirupullamangai Durgai

குடமுருட்டி ஆற்றின் கரையில் இந்த ஆலயம் உள்ளது. ஊர்ப்பெயர் பண்டைநாளில் புள்ள மங்கை என்றும், கோயிற் பெயர் ஆலந்துறை என்றும் வழங்கப்பெற்றது. ஆல மரத்தைத் தலமரமாகக் கொண்டு விளங்கிய நீர்த்துறைத் தலம் ஆதலின் ஆலந்துறை என்று பெயர் பெற்றதாக கருதப்படுகிறது. சம்பந்தர் தன் பதிகத்தின் எல்லா பாடலிலும் புள்ளமங்கை என்ற பெயரையும், ஆலந்துறையில் உறையும் இறைவன் என்றும் குறிப்பிடுகிறார். கல்வெட்டுக்களில் "ஆலந்துறை மகாதேவர் கோயில்" என்று இக்கோயில் குறிக்கப்படுகின்றது. இன்றைய நாளில் ஊர்ப் பெயர் மாறி பசுபதி கோயில் என்று வழங்கப்படுகிறது.

இத்தலத்திற்கு அருகிலுள்ள பாடல் பெற்ற தலமான திருச்சக்கரப்பள்ளியை முதலாவதாகக் கொண்ட சப்த ஸ்தான தலங்களுள் இது 5வது தலம். சக்கரப்பள்ளி, அரியமங்கை, சூலமங்கை, நந்திமங்கை, பசுமங்கை, தாழமங்கை, புள்ளமங்கை ஆகிய ஏழும் சப்தமாதர்களும், சப்த ரிஷிகளும் வழிபட்ட சப்தஸ்தான தலங்கள் ஆகும். இவற்றுள் பசுபதீச்சரத்து இறைவனை சப்த கன்னியர்கள் மட்டுமன்றி, கேட்டவரமருளும் தேவலோகப் பசுவான காமதேனு நாள் தோறும் சிவனை தன் மடி சுரந்த பாலினால் அபிஷேகம் செய்து வழிபட்ட தலம் என்ற சிறப்பும் இத்தலத்திற்குண்டு. ஆகையால் இத்தல இறைவன் பசுபதீஸ்வரர் என்ற பெயர் பெற்றார். பாற்கடலை அசுரர்களும், தேவர்களும் கடைந்தபோது முதன் முதலில் வெளிவந்த ஆலகால நஞ்சினை எடுத்துச் சிவபெருமான் உண்டு தன் கழுத்தில் அடக்கிய ஊர் இத்தலம் என்பதால் இதலத்திற்கு ஆலந்துறை என்ற பெயரும், இறைவன் ஆலந்துறைநாதர் என்றும் கூட அழைக்கப்படுகிறார்.

இத்தலத்தில் வடக்குப் பிரகாரத்திலுள்ள துர்க்கையின் மகிஷாசுரமர்த்தினி உருவம் தனிச் சிறப்புடையதாகத் திகழ்கின்றது. கருங்கல் குடை நிழலில், எருமைத் தலைமீது நின்று, சங்கு சக்கரம் மற்றும் வாள், வில், கதை, சூலம், கேடயம், அங்குசம் முதலிய ஆயுதங்களையும் ஏந்தி இருபுறமும் கலைமானும் சிங்கமும் இருக்க; இருவீரர்கள் கத்தியால் தலையை அரிந்து தருவதுபோலவும், தொடையைக் கிழித்து இரத்த பலி தருவது போலவும் காட்சி தருகிறார். திருநாகேஸ்வரம், பட்டீச்சுரம், திருப்புள்ளமங்கை ஆகிய இம்மூன்று தலங்களிலும் உள்ள துர்க்கைகள் ஒரே சிற்பியால் செய்யப்பட்டவை என்றும், இம்மூன்றுமே மிகவும் சக்தி வாய்ந்தவை என்றும் சொல்லப்படுகிறது..

சோழர் காலச் சிற்பச் சிறப்புக்களுடைய இக்கோவிலுள்ள சிற்பங்கள் யாவும் பார்த்து அனுபவிக்க வேண்டியவையாகும். அர்த்த மண்டபத் தூண்களில் அநேக சிற்பங்களைக் காணலாம்.

சோழ மன்னன் கோச்செங்கட்சோழன். பூர்வ ஜென்ம உள்ளுணர்வால் யானை ஏறமுடியாத கட்டுமலை போன்ற கோயில்களைக் கட்டினான். அவையே மாடக்கோயில்கள் எனப்படுகின்றன. அவ்வகை மாடக்கோவிலகளில் திருப்புள்ளமங்கை பசுபதீஸ்வரர் ஆலயமும் ஒன்றாகும். மூன்று நிலைகளைக் கொண்ட கிழக்கு நோக்கிய சிறிய ராஜகோபுரத்துடன் விளங்குகிறது. கோபுர வாயில் வழியே உள்ளே சென்றால் பெரிய முன்மண்டபம் உள்ளது. இம்மண்டபத்தின் வடபுறம் அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது. வெளிப் பிரகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர் சந்நிதிகள் உள்ளன. மூலவர் கருவறை அகழி அமைப்புடன் உள்ளது. கருவறைச் சுற்றில் கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, நேர்பின்புறத்தில் மஹாவிஷ்ணு, பிரம்மா மற்றும் துர்க்கை ஆகியோர் உள்ளனர். நால்வர் சந்நிதி, நவக்கிரக சந்நிதி ஆகியவையும் இவ்வாலயத்தில் உள்ளன

திருபுள்ளமங்கை ஆலந்துறை நாதர் ஆலயம் மற்றும் பசுபதிகோவில் பசுபதீஸ்வரர் ஆலயம் ஆகிய இரண்டு கோவில்களுமே பாடல் பெற்ற தலங்களாக போற்றப்படுகின்றன.

சம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடிய இப்பதிகம் 1-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

பாலுந்துறு திரளாயின பரமன்பிர மன்தான்
போலுந்திற லவர்வாழ்தரு பொழில்சூழ்புள மங்கைக்
காலன்திற லறச்சாடிய கடவுள்ளிடங் கருதில்
ஆலந்துறை தொழுவார்தமை யடையாவினை தானே. 

மலையான்மகள் கணவன்மலி கடல்சூழ்தரு தன்மைப்
புலையாயின களைவானிடம் பொழில்சூழ்புள மங்கைக்
கலையால்மலி மறையோரவர் கருதித்தொழு தேத்த
அலையார்புனல் வருகாவிரி ஆலந்துறை அதுவே. 

கறையார்மிட றுடையான்கமழ் கொன்றைச்சடை முடிமேல்
பொறையார்தரு கங்கைப்புன லுடையான்புள மங்கைச்
சிறையார்தரு களிவண்டறை பொழில்சூழ்திரு வாலந்
துறையானவன் நறையார்கழல் தொழுமின்துதி செய்தே. 

தணியார்மதி அரவின்னொடு வைத்தானிடம் மொய்த்தெம்
பணியாயவன் அடியார்தொழு தேத்தும்புள மங்கை
மணியார்தரு கனகம்மவை வயிரத்திர ளோடும்
அணியார்மணல் அணைகாவிரி யாலந்துறை யதுவே.

மெய்த்தன்னுறும் வினைதீர்வகை தொழுமின்செழு மலரின்
கொத்தின்னொடு சந்தாரகில் கொணர்காவிரிக் கரைமேல்
பொத்தின்னிடை யாந்தைபல பாடும்புள மங்கை
அத்தன்நமை யாள்வானிடம் ஆலந்துறை யதுவே. 

மன்னானவன் உலகிற்கொரு மழையானவன் பிழையில்
பொன்னானவன் முதலானவன் பொழில்சூழ்புள மங்கை
என்னானவன் இசையானவன் இளஞாயிறின் சோதி
அன்னானவன் உறையும்மிடம் ஆலந்துறை யதுவே.

முடியார்தரு சடைமேல்முளை இளவெண்மதி சூடி
பொடியாடிய திருமேனியர் பொழில்சூழ்புள மங்கை
கடியார்மலர் புனல்கொண்டுதன் கழலேதொழு தேத்தும்
அடியார்தமக் கினியானிடம் ஆலந்துறை யதுவே. 

இலங்கைமன்னன் முடிதோளிற எழிலார்திரு விரலால்
விலங்கல்லிடை அடர்த்தானிடம் வேதம்பயின் றேத்திப்
புலன்கள்தமை வென்றார்புக ழவர்வாழ்புள மங்கை
அலங்கல்மலி சடையானிடம் ஆலந்துறை யதுவே. 

செறியார்தரு வெள்ளைத்திரு நீற்றின்திரு முண்டப்
பொறியார்தரு புரிநூல்வரை மார்பன்புள மங்கை
வெறியார்தரு கமலத்தயன் மாலுந்தனை நாடி
அறியாவகை நின்றானிடம் ஆலந்துறை யதுவே. 

நீதியறி யாதாரமண் கையரொடு மண்டைப்
போதியவ ரோதும்முரை கொள்ளார்புள மங்கை
ஆதியவர் கோயில்திரு ஆலந்துறை தொழுமின்
சாதிம்மிகு வானோர்தொழு தன்மைபெற லாமே.

பொந்தின்னிடைத் தேனூறிய பொழில்சூழ்புள மங்கை
அந்தண்புனல் வருகாவிரி யாலந்துறை யானைக்
கந்தம்மலி கமழ்காழியுள் கலைஞானசம் பந்தன்
சந்தம்மலி பாடல்சொலி ஆடத்தவ மாமே. 

திருபுள்ளமங்கை ஆலந்துறை நாதர் கோவில் புகைப்படங்கள்

Pullamangai temple photo Pullamangai temple photo Pullamangai temple photo Pullamangai temple photo
Pullamangai temple photo Pullamangai temple photo Pullamangai temple photo Pullamangai temple photo
Pullamangai temple photo Pullamangai temple photo Pullamangai temple photo

பசுபதிகோவில் பசுபதீஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்


பசுபதீஸ்வரர் சந்நிதி


பசுபதீஸ்வரர்


3 நிலை இராஜகோபுரம்


காசி விஸ்வநாதர், முருகர், சந்திரன்


பசு லிங்கத்தின் மேல் பால் அபிஷேகம் செய்தல்


மாடக்கோவில் கோபுரம்


உச்சிஷ்ட மகா கணபதி சந்நிதி


தட்சிணாமூர்த்தி