Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்


தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

சக்ரவாகேஸ்வரர் கோவில், திருசக்கரப்பள்ளி

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருசக்கரப்பள்ளி (தற்போது அய்யம்பேட்டை என்று வழங்கப்படுகிறது)
இறைவன் பெயர்சக்ரவாகேஸ்வரர்
இறைவி பெயர்தேவநாயகி
பதிகம்திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது தஞ்சாவூரில் இருந்து சுமார் 18 கி.மி. தொலைவில் இத்தலம் உள்ளது. தஞ்சாவூர் - கும்பகோணம் சாலை மார்க்கத்தில் உள்ள அய்யம்பேட்டை என்ற ஊரில் நெடுஞ்சாலையின் ஓரத்திலேயே சற்று உள்ளடங்கி கோயில் உள்ளது. சாலையில் திருக்கோயிலின் பெயர்ப் பலகை உள்ளது. அய்யம்பேட்டை என்ற பெயரில் பல ஊர்கள் இருப்பதால் வழக்கில் இவ்வூரைத் தஞ்சாவூர் அய்யம்பேட்டை என்று கூறுகின்றனர். ஊர்ப் பெயர் அய்யம்பேட்டை. கோயிலிருக்கும் பகுதி சக்கரப்பள்ளி என்று வழங்குகிறது.
ஆலய முகவரி அருள்மிகு சக்ரவாகேஸ்வரர் திருக்கோவில்
அய்யம்பேட்டை
அய்யம்பேட்டை அஞ்சல்
தஞ்சை மாவட்டம்
PIN - 614201

இவ்வாலயம் தினந்தோறும் காலை 9 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5-30 மணி முதல் 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.

திருச்சக்கரப்பள்ளி பாடல் பெற்ற தலத்தை முதலாவதாகக் கொண்ட சப்தமங்கைத் தலங்களுள் இது முதலாவது தலம். சக்கரமங்கை, அரியமங்கை, சூலமங்கை, நந்திமங்கை, பசுமங்கை, தாழமங்கை, புள்ளமங்கை ஆகிய ஏழும் பிராமி, மகேஸ்சுவரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, மாகேந்திரி, சாமுண்டி முதலிய சப்தமாதர்களும், சப்த ரிஷிகளும் வழிபட்ட சப்தமங்கை தலங்கள் ஆகும். மகாவிஷ்ணு சிவபெருமானை வழிபட்டுச் சக்கராயுதம் பெற்றதால் இத்தலம் திருசக்கரப்பள்ளி என்று பெயர் பெற்றது. சக்கரவாளப் பறவை வழிபட்டதால் இறைவன் சக்ரவாகேஸ்வரர் எனப் பெயர் பெற்றார்.

கிழக்கு நோக்கியுள்ள இவ்வாலயத்திற்கு இராஜகோபுரமில்லை.ஒரு முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. முகப்பு வாயிலின் மேலே சுதைச் சிற்பங்களாக ரிஷப வாகனத்தின் மீது அமர்ந்தபடி சிவன், பார்வதி, மற்றும் விநாயகர், முருகர் ஆகியோர் உள்ளனர். ஆலயத்தில் கொடிமரமில்லை. முகப்பு வாயில் வழியே உள்ளே நுழைந்ததும் பிரகாரத்தில் வலதுபுறம் தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதி உள்ளது. மூலவர் கருவறைக்குச் செல்லும் இரண்டாவது நுழைவாயிலிலும் மேலே சுதைச் சிற்பங்கள் உள்ளன. ரிஷப வாகனத்தின் மீது அமர்ந்துள்ள சிவன், பார்வதி, ஒருபுறம் மூஞ்சூறு வாகனத்தில் அமர்ந்துள்ள விநாயகர், மறுபுறம் மயில் வாகனத்தில் அமர்ந்துள்ள தண்டபாணி ஆகியோரைக் காணலாம். கருவறைச் சுற்றில் கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை அகியோர் உள்ளனர். பிரகார வலம் வரும்போது விநாயகர், சுப்பிரமணியர் சந்நிதிகள் உள்ளன. கருவறைக்கு முன்னுள்ள மகாமண்டபத்தில் சூரியன், சந்திரன், அழகான பைரவர், நால்வர் ஆகியோர் காட்சி தருகின்றனர்.

தேவேந்திரன் குமாரனான ஜயந்தனும் தேவர்களும் இத்தல இறைவனை பூசித்த தலம். இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக உயர்ந்த பாணத்துடன் அருள்பாலிக்கிறர்.

இத்தலம் ஒரு திருப்புகழ் தலம். இத்தலத்திலுள்ள முருகப் பெருமான் அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப் பெற்றுள்ளார். முருகப் பெருமான் ஒரு திருமுகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு வள்ளி, தெய்வானை சமேதராய் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். மயில் முருகப்பெருமானின் முனபுறம் உள்ளது. திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது

சம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடிய இப்பதிகம் 3-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. இத்தல பதிகத்தை நாள் தோறும் பக்தியுடன் பாடுபவர்களின் பாவம் நீங்கும் என்று திருஞானசம்பந்தர் தனது 11-வது பாடலில் குறிப்பிடுகிறார்.

1. படையினார் வெண்மழுப் பாய்புலித் தோலரை
உடையினார் உமையொரு கூறனார் ஊர்வதோர்
விடையினார் வெண்பொடிப் பூசியார் விரிபுனல்
சடையினார் உறைவிடஞ் சக்கரப் பள்ளியே.

2. பாடினார் அருமறை பனிமதி சடைமிசைச்
சூடினார் படுதலை துன்னெருக் கதனொடும்
நாடினார் இடுபலி நண்ணியோர் காலனைச்
சாடினார் வளநகர் சக்கரப் பள்ளியே.

3. மின்னினார் சடைமிசை விரிகதிர் மதியமும்
பொன்னினார் கொன்றையும் பொறிகிளர் அரவமுந்
துன்னினார் உலகெலாந் தொழுதெழ நான்மறை
தன்னினார் வளநகர் சக்கரப் பள்ளியே.

4. நலமலி கொள்கையார் நான்மறை பாடலார்
வலமலி மழுவினார் மகிழுமூர் வண்டறை
மலர்மலி சலமொடு வந்திழி காவிரி
சலசல மணிகொழி சக்கரப் பள்ளியே.

5. வெந்தவெண் பொடியணி வேதியர் விரிபுனல்
அந்தமில் அணிமலை மங்கையோ டமருமூர்
கந்தமார் மலரொடு காரகில் பன்மணி
சந்தினோ டணைபுனற் சக்கரப் பள்ளியே.

6. பாங்கினால் முப்புரம் பாழ்பட வெஞ்சிலை
வாங்கினார் வானவர் தானவர் வணங்கிட
ஓங்கினார் உமையொரு கூறொடும் ஒலிபுனல்
தாங்கினார் உறைவிடஞ் சக்கரப் பள்ளியே.

7. பாரினார் தொழுதெழு பரவுபல் லாயிரம்
பேரினார் பெண்ணொரு கூறனார் பேரொலி
நீரினார் சடைமுடி நிரைமலர்க் கொன்றையந்
தாரினார் வளநகர் சக்கரப் பள்ளியே.

8. முதிரிலா வெண்பிறை சூடினார் முன்னநாள்
எதிரிலா முப்புரம் எரிசெய்தார் வரைதனால்
அதிரிலா வல்லரக் கன்வலி வாட்டிய
சதிரினார் வளநகர் சக்கரப் பள்ளியே.

9. துணிபடு கோவணஞ் சுண்ணவெண் பொடியினர்
பணிபடு மார்பினர் பனிமதிச் சடையினர்
மணிவண னவனொடு மலர்மிசை யானையுந்
தணிவினர் வளநகர் சக்கரப் பள்ளியே.

10. உடம்புபோர் சீவரர் ஊண்தொழிற் சமணர்கள்
விடம்படும் உரையவை மெய்யல விரிபுனல்
வடம்படு மலர்கொடு வணங்குமின் வைகலுந்
தடம்புனல் சூழ்தரு சக்கரப் பள்ளியே.

11. தண்வயல் புடையணி சக்கரப் பள்ளியெங்
கண்ணுத லவனடி கழுமல வளநகர்
நண்ணிய செந்தமிழ் ஞானசம் பந்தன்சொல்
பண்ணிய இவைசொலப் பறையுமெய்ப் பாவமே.

திருசக்கரப்பள்ளி சக்ரவாகேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்


ஆலயத்தின் முகப்பு வாயில்


பலிபீடம், நந்தி மண்டபம்


சக்ரவாகேஸ்வரர் கோவில் தோற்றம்


இறைவன் கருவறை விமானம்


வள்ளி தெய்வானையுடன் முருகர்

திருசக்கரப்பள்ளி சக்ரவாகேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்


நால்வர் சந்நிதி


பாணலிங்கம், பைரவர், சூரியன்


சக்ரவாகேஸ்வர சுவாமி சந்நிதி


தல விநாயகர்


அம்பாள் தேவநாயகிCopyright © 2004 - 2019 - www.shivatemples.com - All rights reserved