Shiva Temples of Tamilnadu
தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்
சிவக்கொழுந்தீசர் கோவில், திருசத்திமுத்தம்
தென்னாடுடைய சிவனே போற்றிஎந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
| தகவல் பலகை | |
|---|---|
| சிவஸ்தலம் பெயர் | திருசத்திமுத்தம் |
| இறைவன் பெயர் | சிவக்கொழுந்தீசர் |
| இறைவி பெயர் | பெரியநாயகி அம்மை |
| பதிகம் | திருநாவுக்கரசர் - 1 |
| எப்படிப் போவது | கும்பகோணத்திற்கு அருகில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலம் பட்டீஸ்வரம் கோவிலுக்கு மிக அருகில் திருசத்திமுத்தம் கோவில் இருக்கிறது. அருகில் உள்ள ரயில் நிலையம் தாராசுரம். |
| ஆலய முகவரி |
அருள்மிகு சிவக்கொழுந்தீசர் திருக்கோவில் திருச்சத்திமுற்றம் பட்டீஸ்வரம் அஞ்சல் கும்பகோணம் வட்டம் தஞ்சாவூர் மாவட்டம் PIN - 612703 இவ்வாலயம் தினந்தோறும் காலை 8 முதல பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். |
தல வரலாறு: காஞ்சீபுரத்தில் அம்பிகை இறைவனைத் தழுவக் குழைந்தது போலவே திருசத்திமுற்றத்திலும் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. சிவபெருமான் ஒருமுறை அம்பிகையை பூலோகத்தில் இத்தலத்தில் தம்மை பூஜை செய்யுமாறு பணித்தார். அம்பிகையும் இத்தலத்திற்கு வந்து காவிரிக்கரையில் ஒரு லிங்கத்தை ஸ்தாபித்து பூஜை செய்து வந்தாள். இறைவன் அம்பிகையை சோதிக்க விரும்பி காவிரியில் வெள்ளம் வருமாறு செய்தார். ஆற்று வெள்ளம் லிங்கத்தை அடித்துச் சென்று விடுமோ என்று அஞ்சி அம்பிகை இறைவனை ஆரத் தழுவினார். இறைவன் அம்பிகைக்கு காட்சி கொடுத்து அம்மையை தழுவக் குழைந்தார். சக்தி இறைவனை தழுவக் குழைந்ததால் இத்தலம் திருசத்திமுற்றம் என்று அழைக்கப்படுகிறது. மேற்கொண்டு இத்தலத்தில் இறைவனை நோக்கி ஒற்றைக்காலில் நின்று தவம் செய்த அன்னையின் பக்திக்குக் கட்டுப்பட்டு அம்பிகையை மேலும் சோதிக்கும் வகையில் சோதி ரூபமாய் காட்சி கொடுத்தார். தீப்பிழம்பாய் எழுந்து நிறபது ஈசனே என்றுணர்ந்த அம்பிகை மகிழ்ந்து அத்தீப்பிழம்பையே தழுவிக் குழைந்தாள். இனைவன் மகிழ்ந்து அன்னைக்கு அருள் பாலிக்கிறார். அன்னை தழுவி முத்தமிட்டதால் "சக்தி முத்தம்" என்பது மருவி "சத்தி முற்றம்" என்று ஆகி இருக்கிறது. மூலவர் சிவக்கொழுந்தீசர் கருவறையின் நுழைவு வாயிலின் வ்லதுபுறம் அம்பிகை சிவனை தழுவியபடி காட்சி கொடுக்கும் சந்நிதி உள்ளது. அதன் பின்னாலேயே அன்னை ஒற்றைக் காலில் தவம் இருந்த கோலத்தையும் கண்டு களிக்கலாம்.
கோவில் அமைப்பு: இவ்வாலயம் கிழக்கு நோக்கிய 5 நிலை இராஜகோபுரத்துடன் காட்சியளிக்கிறது. கோபுர வாயிலில் வல்லபை கணபதி காட்சியளிக்கிறார். முதல் கோபுர வாயிலைக் கடந்தால் பெரிய வெளிப் பிரகாரத்தைக் காணலாம். அடுத்துள்ள இரண்டாங் கோபுர வாயிலில் விநாயகர் முருகன் சந்நிதிகள் உள்ளன. மூலவர் சிவக்கொழுந்தீசர் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி கருவறையில் காட்சி கொடுக்கிறார். திருமேனியில், தீச்சுடர்கள் தெரிகின்றன. தெரியாதவர்கள் குருக்களிடம் கேட்டால் தீப ஆராதனை செய்து காட்டுகிறார். நன்றாகப் பார்க்கும் வண்ணம் மூன்று சுடர்கள் புடைத்துத் தெரிகின்றன. சுவாமி சன்னதிப் பிரகாரத்தில் உள்ள பைரவர் சன்னதியின் பைரவர் நிஜமாகவே ஒரு ஆள் உயரத்துக்கு இருக்கிறார். கண்ணையும் கருத்தையும் கவரும் அழகு வாய்ந்த சிற்பம். மற்றக் கோவில்களில் சிறு சிற்பமாகக் காணப்படும் காவல் தெய்வமான பைரவர் இங்கே நிஜமான ஒரு ஆள் போல இருக்கிறார். அன்னை பெரியநாயகியாகத் தெற்கு நோக்கி அருள் பாலிக்கிறாள். நடராஜர் மற்றும் சரபேஸ்வரர் சந்நிதிகளும் பார்க்க வேண்டியவை. உட் பிராகாரத்தில் தலவிநாயகரும் சோமாஸ்கந்தரும் ஆறுமுகர், கஜலட்சுமி சந்நிதிகளும் உள்ளன.
இத்தலத்திலுள்ள முருகப் பெருமான் அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப் பெற்றுள்ளார். முருகப் பெருமான் ஆறு திருமுகமும், பன்னிரு திருக்கரங்களும் கொண்டு வள்ளி, தெய்வானை சமேதராய் மயில் மீது அமர்ந்த கோலத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது
செங்கற்களால் கட்டபட்டிருந்த இக்கோவிலை கற்கோவிலாக மாற்றியவர் சோழ ராஜ வம்சத்தைச் சேர்ந்த செம்பியம் மாதேவி ஆவார். முதலாம் ராஜ ராஜ சோழன் காலத்திலும் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. முதலாம் ராஜ ராஜ சோழன், மூன்றாம் குலோத்துங்க சோழன் மற்றும் விஜயநகர அரசர்கள் காலத்திய கல்வெட்டுகள் இக்கோவிலில் காணப்படுகின்றன.
திருமணம் ஆகாதவர்களும், விதிவசத்தால் பிரிந்து போன தம்பதியரும் தழுவக்குழைந்த அன்னைக்கும், ஈசனுக்கும் சிறப்புப் பூஜை செய்து வழிபடுகின்றனர். சக்தி தழுவிய ஈசனை திருமணமாகாத ஆண்களும், பெண்களும் திங்கள்கிழமைகளில் வந்து வணங்கினால் தோஷங்களும், தடைகளும் நீங்கி நல்ல இல்வாழ்க்கை அமையும்.
| திருச்சத்திமுற்றம் சிவக்கொழுந்தீசர் ஆலயம் புகைப்படங்கள் | |
|---|---|
![]() 5 நிலை இராஜகோபுரம் |
![]() கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் |
![]() நந்தியெம் பெருமான் |
![]() வெளிப் பிரகாரம், சுவாமி விமானம் |
![]() வள்ளி தெய்வானையுடன் ஷண்முகர் |
![]() உட்பிரகாரத்தில் லிங்கங்கள் |
![]() பைரவர், சூரியன், சந்திரன், நாகர், சனீஸ்வரர் |
![]() சிவக்கொழுந்தீசர் சந்நிதிக்குச் செல்லும் வழி |
அப்பர் இத்தலத்தில் தங்கி ஆலயத் திருப்பணி செய்துகொண்டு இறைவனை வணங்கித் தொழுது வந்தார். ஒருநாள் திருநாவுக்கரசர் இறைவனை விழுந்து வணங்கி இறைவன் திருப்பாதங்களைத் தன் தலைமேல் வைத்து அருளவேண்டும் என்று பதிகம் பாடி வேண்டுகோள் வைத்தார்.அவர் பாடிய பதிகம்:
1. கோவாய் முடுகி யடுதிறற் கூற்றங் குமைப்பதன்முன் பூவா ரடிச்சுவ டென்மேற் பொறித்துவை போகவிடின் மூவா முழுப்பழி மூடுங்கண் டாய்முழங் குந்தழற்கைத் தேவா திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே. 2. காய்ந்தாய் அனங்கன் உடலம் பொடிபடக் காலனைமுன் பாய்ந்தாய் உயிர்செகப் பாதம் பணிவார்தம் பல்பிறவி ஆய்ந்தாய்ந் தறுப்பாய் அடியேற் கருளாயுன் அன்பர்சிந்தை சேர்ந்தாய் திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே. 3. பொத்தார் குரம்பை புகுந்தைவர் நாளும் புகலழிப்ப மத்தார் தயிர்போல் மறுகுமென் சிந்தை மறுக்கொழிவி அத்தா அடியேன் அடைக்கலங் கண்டாய் அமரர்கள்தஞ் சித்தா திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே. 4. நில்லாக் குரம்பை நிலையாக் கருதியிந் நீணிலத்தொன் றல்லாக் குழிவீழ்ந் தயர்வுறு வேனைவந் தாண்டுகொண்டாய் வில்லேர் புருவத் துமையாள் கணவா விடிற்கெடுவேன் செல்வா திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே. 5. கருவுற் றிருந்துன் கழலே நினைந்தேன் கருப்புவியிற் தெருவிற் புகுந்தேன் திகைத்தடி யேனைத் திகைப்பொழிவி உருவிற் றிகழும் உமையாள் கணவா விடிற்கெடுவேன் திருவிற் பொலிசத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே. 6. வெம்மை நமன்தமர் மிக்கு விரவி விழுப்பதன்முன் இம்மையுன் தாளென்றன் நெஞ்சத் தெழுதிவை ஈங்கிகழில் அம்மை அடியேற் கருளுதி யென்பதிங் காரறிவார் செம்மை தருசத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே. 7. விட்டார் புரங்கள் ஒருநொடி வேவவோர் வெங்கணையாற் சுட்டாயென் பாசத் தொடர்பறுத் தாண்டுகொள் தும்பிபம்பும் மட்டார் குழலி மலைமகள் பூசை மகிழ்ந்தருளுஞ் சிட்டா திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே. 8. இகழ்ந்தவன் வேள்வி அழித்திட் டிமையோர் பொறையிரப்ப நிகழ்ந்திட அன்றே விசயமுங் கொண்டது நீலகண்டா புகழ்ந்த அடியேன்றன் புன்மைகள் தீரப் புரிந்துநல்காய் திகழ்ந்த திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே. 9. தக்கார்வ மெய்திச் சமண்தவிர்ந் துன்றன் சரண்புகுந்தேன் எக்காதல் எப்பயன் உன்றிற மல்லால் எனக்குளதே மிக்கார் திலையுள் விருப்பா மிகவட மேருவென்னுந் திக்கா திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே. 10. பொறித்தேர் அரக்கன் பொருப்பெடுப் புற்றவன் பொன்முடிதோள் இறத்தாள் ஒருவிரல் ஊன்றிட் டலற இரங்கிஒள்வாள் குறித்தே கொடுத்தாய் கொடியேன்செய் குற்றக் கொடுவினைநோய் செறுத்தாய் திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே.
இறைவன் சிவக்கொழுந்தீசர் 'திருநல்லூருக்கு வா!' என்று திருவாய் மலர்ந்தருளினார். அப்பருக்கு இவ்வாறு அருள் புரிந்த தலம் திருச்சத்திமுற்றம்.











