Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்

தேனுபுரீஸ்வரர் கோவில், பட்டீச்சரம்

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்பட்டீச்சரம் (தற்போது பட்டீஸ்வரம் என்று அழைக்கப்படுகிறது)
இறைவன் பெயர்தேனுபுரீஸ்வரர்
இறைவி பெயர்ஸ்ரீஞானாம்பிகை, ஸ்ரீபல்வளைநாயகி
பதிகம்திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது கும்பகோணத்தில் இருந்து தென்மேற்கே 8 கி.மி. தொலைவில் பட்டீஸ்வரம் இருக்கிறது. சுவாமிமலை முருகன் கோவிலில் இருந்து 3 கி.மி. தொலைவில் உள்ளது. பட்டீஸ்வரம் தேனுபுரீசுவரர் ஆலயத்திற்கு அருகில் திருசத்திமுற்றம் என்ற பாடல் பெற்ற சிவஸ்தலம் இருக்கிறது.

தேவலோகப் பசு காமதேனுவின் மகள் பட்டி இத்தலத்தில் இறைவனை பூஜித்ததால் இத்தலம் பட்டீஸ்வரம் எனபட்டது. இத்தலத்திலுள்ள சிவாலயம் கிழக்கு மேற்காக 650 அடி நீளமும், தெற்கு வடக்காக 295 அடி நீளமும் உடையது. 5 பெரிய உயரமான கோபுரங்களும் 3 பிரகாரங்களும் உடையது. பிரதான கோபுரம் 7 நிலைகளையும் மற்ற கோபுரங்கள் 5 நிலைகளையும் உடையன. கோவிலின் முதல் பிரகாரத்தில் உள்ள நடு மண்டபத்தில் மூலவர் பட்டீசுவரர் சந்நிதி இருக்கிறது. வெளியில் சோமச்கந்தரும், சுற்றிலும் சப்த கன்னிகைகள், மகாலிங்கம், இராமலிங்கம், லக்ஷ்மி, சண்டிகேசுவரர், நடராஜர், சூரியன் மற்றும் நவக்கிரகங்கள் முதலானோர் சந்நிதிகள் உள்ளன. வடபுறத்தில் அம்மன் ஞானாம்பிகை சந்நிதி இருக்கிறது.அம்மன் சந்நிதியில் உள்ள மண்டபம் கலையம்சம் வாய்ந்தது. இம்மண்டத் தூண்களில் உள்ள யாளிகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மண்டபத்தின் நடுவில் மேலே கல்லாலான ஊஞ்சல் சங்கிலி உள்ளது. ஒரே கல்லாலான சக்கரம் சுழலக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கலையம்சம் பொருந்திய பல சிற்ப வேலைப்பாடுகளைக் காணலாம்.

பட்டீஸ்வரம் கோவில் வடக்கு வாசலில் உள்ள துர்க்கை மிகவும் சக்தி வாய்ந்தவள். சோழ அரசர்கள் காலத்தில் பழையாறையில் அரச மகளிர் வசிப்பதற்கான மாளிகை இருந்தது. அந்த மாளிகைக் கோட்டையின் வடக்கு வாசலில் குடி கொண்டிருந்தவள் இந்த துர்க்கை. சோழர்கள் காலத்திற்குப் பிறகு இந்த துர்க்கையை அங்கிருந்து கொண்டுவந்து பட்டீஸ்வரம் கோவிலில் பிரதிஷ்டை செய்தார்கள். பட்டீஸ்வரம் துர்க்கையை பக்தர்கள் ராகுகால நேரங்களிலும், செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளிலும், அமாவாசை, பௌர்ணமி நாட்களிலும், அஷ்டமி, நவமி திதிகளிலும் வழிபடுதலைச் சிறப்பாக கருதுகின்றனர். துர்க்கை இங்கு சாந்த சொரூபியாக, கருணை வடிவமாக எட்டு திருக்கரங்கள் கொண்டு அருள் பாலிக்கிறாள்.

கோவில் திருவிழாக்கள்:

திருஞானசம்பந்தர் பாடியருளிய இத்தலத்திற்கான இப்பதிகம் மூன்றாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

பாடன்மறை சூடன்மதி பல்வளையோர் பாகமதில் மூன்றோர்கணையாற்
கூடஎரி யூட்டியெழில் காட்டிநிழல் கூட்டுபொழில் சூழ்பழைசையுள்
மாடமழ பாடியுறை பட்டிசர மேயகடி கட்டரவினார்
வேடநிலை கொண்டவரை வீடுநெறி காட்டிவினை வீடுமவரே.

நீரின்மலி புன்சடையர் நீளரவு கச்சையது நச்சிலையதோர்
கூரின்மலி சூலமது ஏந்தியுடை கோவணமும் மானின்உரிதோல்
காரின்மலி கொன்றைவிரி தார்கடவுள் காதல்செய்து மேயநகர்தான்
பாரின்மலி சீர்பழைசை பட்டிசர மேத்தவினை பற்றழியுமே.

காலைமட வார்கள்புன லாடுவது கௌவைகடி யார்மறுகெலாம்
மாலைமணம் நாறுபழை யாறைமழ பாடியழ காயமலிசீர்ப்
பாலையன நீறுபுனை மார்பனுறை பட்டிசர மேபரவுவார்
மேலையொரு மால்கடல்கள் போற்பெருகி விண்ணுலகம் ஆளுமவரே.

கண்ணின்மிசை நண்ணியிழி விப்பமுக மேத்துகமழ் செஞ்சடையினான்
பண்ணின்மிசை நின்றுபல பாணிபட ஆடவல பால்மதியினான்
மண்ணின்மிசை நேரில்மழ பாடிமலி பட்டிசர மேமருவுவார்
விண்ணின்மிசை வாழும்இமை யோரொடுட னாதலது மேவலெளிதே.

மருவமுழ வதிரமழ பாடிமலி மத்தவிழ வார்க்கஅரையார்
பருவமழை பண்கவர்செய் பட்டிசர மேயபடர் புன்சடையினான்
வெருவமத யானையுரி போர்த்துமையை அஞ்சவரு வெள்விடையினான்
உருவமெரி கழல்கள்தொழ உள்ளமுடை யாரையடை யாவினைகளே.

மறையின்ஒலி கீதமொடு பாடுவன பூதமடி மருவிவிரவார்
பறையினொலி பெருகநிகழ் நட்டம்அமர் பட்டிசரம் மேயபனிகூர்
பிறையினொடு மருவியதோர் சடையினிடை யேற்றபுனல் தோற்றநிலையாம்
இறைவனடி முறைமுறையின் ஏத்துமவர் தீத்தொழில்கள் இல்லர்மிகவே.

பிறவிபிணி மூப்பினொடு நீங்கியிமை யோருலகு பேணலுறுவார்
துறவியெனும் உள்ளமுடை யார்கள்கொடி வீதியழ காயதொகுசீர்
இறைவனுறை பட்டிசர மேத்தியெழு வார்கள்வினை யேதுமிலவாய்
நறவவிரை யாலுமொழி யாலும்வழி பாடுமற வாதவவரே.

நேசமிகு தோள்வலவ னாகியிறை வன்மலையை நீக்கியிடலும்
நீசன்விறல் வாட்டிவரை யுற்றதுண ராதநிரம் பாமதியினான்
ஈசனுறை பட்டிசர மேத்தியெழு வார்கள்வினை யேதுமிலவாய்
நாசமற வேண்டுதலின் நண்ணலெளி தாம்அமரர் விண்ணுலகமே.

தூயமல ரானும்நெடி யானும்அறி யாரவன தோற்றநிலையின்
ஏயவகை யானதனை யாரதறி வாரணிகொள் மார்பினகலம்
பாயநல நீறதணி வானுமைத னோடுமுறை பட்டிசரமே
மேயவன தீரடியு மேத்தஎளி தாகுநல மேலுலகமே.

தடுக்கினையி டுக்கிமட வார்களிடு பிண்டமது வுண்டுழல்தருங்
கடுப்பொடியு டற்கயவர் கத்துமொழி காதல்செய்தி டாதுகமழ்சேர்
மடைக்கயல்வ யல்கொள்மழ பாடிநகர் நீடுபழை யாறையதனுள்
படைக்கொரு கரத்தன்மிகு பட்டிசர மேத்தவினை பற்றறுதலே.

மந்தமலி சோலைமழ பாடிநகர் நீடுபழை யாறையதனுள்
பந்தமுயர் வீடுநல பட்டிசர மேயபடர் புன்சடையனை
அந்தண்மறை யோரினிது வாழ்புகலி ஞானசம் பந்தன்அணியார்
செந்தமிழ்கள் கொண்டினிது செப்பவல தொண்டர்வினை நிற்பதிலவே.