Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்


தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

கற்பகநாதர் கோவில், திருவலஞ்சுழி

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருவலஞ்சுழி
இறைவன் பெயர்கற்பகநாதேஸ்வரர், வலஞ்சுழிநாதர், கபர்த்தீசர், கற்பகநாதர்
இறைவி பெயர்பெரியநாயகி, பிருகந்நாயகி
பதிகம்திருநாவுக்கரசர் - 2
திருஞானசம்பந்தர் - 3
எப்படிப் போவது கும்பகோணத்தில் இருந்து 6 கி.மி. தொலைவில் சுவாமிமலைக்கு அருகே இத்தலம் இருக்கிறது. கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூர், பாபநாசம், சுந்தரப் பெருமாள் கோயில் முதலிய ஊர்களுக்குச் செல்லும் பேருந்துச் சாலையில் சென்று கோயிலை அடையலாம். கோயில் சாலையோரத்தில் உள்ளது.
ஆலய முகவரிஅருள்மிகு வலஞ்சுழிநாதர் திருக்கோயில்
திருவலஞ்சுழி
சுவாமிமிலை அருகில்
கும்பகோணம் வட்டம்
தஞ்சை மாவட்டம்
PIN - 612302

இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

தல வரலாறு: காவிரி நதி வலமாக சுழித்துச் செல்லும் இடத்தில் அமைந்துள்ளதால் இத்தலம் திருவலஞ்சுழி என்று பெயர் பெற்றது. அவ்வாறு வலம் சுழித்துச் சென்ற காவிரியில் இருந்து வெளிப்பட்ட ஆதிசேஷனால் ஒரு பெரிய பிலத்துவாரம் (பள்ளம்) ஏற்பட்டது. பாய்ந்து வந்த காவிரியாறு ஆதிசேஷன் வெளிப்பட்ட பள்ளத்தில் பாய்ந்து பாதாளத்தில் இறங்கிவிட்டது. அதுகண்ட சோழமன்னன் கவலையுற்றுத் திகைத்தபோது, அசரீரியாக இறைவன், "மன்னனோ மகரிஷியோ இறங்கி அப்பாதாளத்தில் பலியிட்டுக் கொண்டால் அப்பிலத்துவாரம் மூடிக்கொள்ளும். அப்போது காவிரி வெளிப்படும்" என்றருளினார். அதுகேட்ட மன்னன் கொட்டையூர் என்ற ஊரில் ஏரண்டம் என்னும் கொட்டைச் செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ள இடத்தில் தவம் செய்த ஏரண்ட முனிவரையடைந்து அசரீரி செய்தியைச் சென்னான். இதைக் கேட்ட ஏரண்ட முனிவர் நாட்டுக்காகத் தியாகம் செய்ய முன்வந்தார். அவர் அந்த பிலத்துவாரத்தில் இறங்கி தன்னைப் பலி கொடுக்கவும் பள்ளம் மூடிக்கொள்ள காவிரி வெளிப்பட்டாள. ஹேரண்ட முனிவருக்கு இக்கோவிலில் சிலை இருக்கிறது. இன்றும் மஹாசிவராத்திரி நாளில் இரவில் நான்கு ஜாமங்களிலும் ஆதிசேஷன் வெளிப்பட்டு திருவலஞ்சுழி, திருநாகேச்சுரம், திருப்பாம்புரம், நாகைக்காரோணம் என்னும் தலங்களில் வந்து வழிபடுவதாகச் செவிவழிச் செய்தி சொல்லப்படுகிறது.

ஸ்வேத விநாயகர்: திருவலஞ்சுழியில் உள்ள தல விநாயகர் ஸ்வேத விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். தேவர்கள் திருப்பாற்கடலை கடையத் தொடங்கும் முன் விநாயக பூஜை செய்ய மறந்தார்கள். ஆகையல் தான் ஆலகால விஷம் பாற்கடலில் இருந்து வெளி வந்தது. அதனால் அவதிகளுக்கு உட்பட்ட தேவர்கள், தங்கள் தவறை உணர்ந்து, அந்த வேளையில் விநாயகரை ஆவாஹனம் செய்ய வேறு ஏதும் இல்லா நிலையில் பொங்கி வந்த கடல் நுரையை பிடித்து பிள்ளையாரை உருவாக்கி பூஜை செய்தனர். அதன் பின் விநாயகர் அருளால் எடுத்த காரியம் பூர்த்தி அடைந்து அமுதம் பெற்றார்கள். அந்த விநாயகர் மூர்த்தியைப் பிரதிஷ்டை செய்யத் திருவலஞ்சுழியே ஏற்ற இடம் என இங்கே பிரதிஷ்டை செய்து வழிபட்ட இந்திரன் ஒரு கோயிலும் கட்டினான். அந்தக் கோயிலில் இன்றும் இந்திரன் பூஜித்த அந்த விநாயகர் மூர்த்தி அருள் பாலிக்கிறார். இன்றும் ஒவ்வொரு விநாயக சதுர்த்தி அன்று தேவேந்திரன் வந்து விநாயகரை வழிபட்டுச் செல்வதாக ஐதீகம். தேவர்களால் உருவாக்கப்பட்ட இந்த விநாயகர் தான் திருவலஞ்சுழியில் உள்ள ஸ்வேத விநாயகர். மற்ற ஆலயங்களில் நடப்பது போன்ற அபிஷேகம் இவருக்கு இங்கே இல்லை. சுமார் 10 அங்குல உயரமே உள்ள இந்த வெள்ளைப் பிள்ளையாருக்கு புனுகு மட்டும் சாத்துவார்கள். மேலும் பச்சைக் கற்பூரத்தைக் குறிப்பிட்ட பக்குவத்தில் அரைத்து, அதை இந்த விநாகயரின் திருமேனியைத் தொடாமல் அவர் மேல் மெள்ள தூவி விடுவார் அர்ச்சகர். அதனால் இந்த விநாகயர் தீண்டாத் திருமேனி ஆவார். விநாயகர் துதிக்கை வலப்பக்கம் சுழித்துள்ளதால் திருவலஞ்சுழி என இத்தலம் பெயர் பெற்றதென்றும் கூறுவர்.

கோவில் அமைப்பு: திருவிடைமருதூருக்குரிய பரிவாரத் தலங்களுள் திருவலஞ்சுழி விநாயகருக்கு உரிய தலமாகும். இத்தலத்திலுள்ள கற்பகநாதேஸ்வரர் கோவில் ஒரு பெரிய கோவில். கிழக்கு நோக்கி உள்ள ஒரு இராஜகோபுரத்துடன் இவ்வாலயம் விளங்குகிறது. அம்பாள் பெரியநாயகியின் சந்நிதி இறைவன் சந்நிதிக்கு வலதுபுறம் அமைந்துள்ளது. இத்தகைய அமைப்புள்ள தலங்கள் திருமணத் தலங்கள் என அழைக்கப்படுகின்றன.இறைவனுக்கும், இறைவிக்கும் உள்ள தனித்தனி சன்னதிகள் போக அஷ்டபுஜ மஹாகாளிக்கும், வெளிப் பிரகாரத்தில் பைரவருக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன. இங்குள்ள அஷ்டபுஜகாளி சிறப்பு வாய்ந்த மூர்த்தம். இங்குள்ள பைரவமூர்த்தி மிகவும் உக்கிரமம் வாய்ந்தவராக விளங்கியமையால் அதைத் தணிப்பதற்காகச் சிறிது பின்னப்படுத்தப் பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. சனீஸ்வரலுக்கும் இவ்வாலயத்தில் தனி சந்நிதி உள்ளது.

கடல் நுரையால் செய்யப்பட்டு இந்திரனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மூர்த்தியே ஸ்வேத விநாயகர் என்ற வெள்ளைப் பிள்ளையார் ஆவார். இவரே இத்தலத்தின் சிறப்பு மூர்த்தியாவார். இப்பிள்ளையார் உள்ள மண்டபம் இந்திரனால் அமைக்கப்பட்டது என்று புராணங்கள் கூறுகின்றன. சித்திரத் தூண்களும், கல்குத்துவிளக்கும் கொண்ட அழகான மண்டபமாக இது விளங்குகிறது. இச்சந்நிதியிலுள்ள கருங்கல் பலகணி நுணக்கமான சிற்ப வேலைப்பாடுடன் திகழ்கிறது. இத்தலம் திருமுறைத் தலம் என்பதைவிட வெள்ளை விநாயகர் தலம் என்ற பெயரிலேயே மிகவும் பிரசித்தி பெற்றுள்ளது.

இதலத்தின் தீர்த்தங்களாக காவிரி, அரசலாறு, ஜடாதீர்த்தம் ஆகியவையும், தலமரமாக வில்வமரமும் உள்ளது. ஹேரண்ட முனிவர், ஆதிசேஷன், உமையம்மை, இந்திரன், திருமால், பிரமன் ஆகியோர் வழிபட்ட தலம் என்ற பெருமையும் திருவலஞ்சுழிக்கு உண்டு.

இத்தலம் ஒரு திருப்புகழ் தலம். இங்கு உள்பிராகாரத்திலுள்ள முருகப்பெருமான் ஆறு திருமுகங்களும், பன்னிரு கரங்களும் கொண்டு மயில் மீதமர்ந்து கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளா,. தேவியர் இருவரும் அருகில் நிற்கின்றனர். திருப்புகழில் இத்தல முருகர் மீது ஒரு பாடல் உள்ளது.

திருவலஞ்சுழி கற்பகநாதேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்


5 நிலை இராஜகோபுரம்


2-வது வாயிலுக்குச் செல்லும் வழியில் வலதுபுறம் ஜடா தீர்த்தம்


அம்பாள் சந்நிதி நுழைவாயில்


ஆலயத்தின் உள் தோற்றம்


2-வது வாயிலுக்குச் செல்லும் வழி


ஜடா தீர்த்தம் கரையில் ஜடாதீர்த்த விநாயகர்


சப்தமாதர்கள்


விசாலமான வெளிப் பிராகாரம்


இரட்டை விநாயகர்


ஸ்வேத விநாயகர் சந்நிதி கருங்கல் பலகணி


ஆலயத்தின் உள் தோற்றம்


காலபைரவர்