Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்


தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

நாகேஸ்வரர் கோவில், திருகுடந்தை கீழ்கோட்டம்

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருகுடந்தை கீழ்கோட்டம்
இறைவன் பெயர்நாகேஸ்வரர்
இறைவி பெயர்பிரஹந்நாயகி
பதிகம்திருநாவுக்கரசர் - 1
எப்படிப் போவது இத்தலம் கும்பகோணம் நகரில் நாகேஸ்வரம் சந்நிதி தெருவில் இருக்கிறது.
ஆலய முகவரிஅருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில்
கும்பகோணம்
கும்பகோணம் அஞ்சல்
தஞ்சை மாவட்டம்
PIN - 612001

இவ்வாலயம் தினந்தோறும் காலை 6-30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
Arthanareeswarar

அர்த்தநாரீஸ்வரர்

கோவில் விபரங்கள்: கும்பகோணம் நகரின் மத்தியில் அமைந்துள்ள இந்த சிவஸ்தலம் நாகேஸ்வரன் கோவில் என்ற பெயரில் எல்லோராலும் அறியப்படுகிறது. கிழக்கு, மேற்கு, தெற்கு திசைகளில் கோபுரங்களைக் கொண்டுள்ள இவ்வாலயத்திற்கு கிழக்கு கோபுர வாயிலே பிரதான வாயிலாகும். கிழக்கு கோபுர வாயில் வழியாக உள் நுழைந்தவுடன் வெளிப் பிரகார சுற்றில் இடது புறம் சிங்கமுக தீர்த்தக்கிணறு உள்ளது. படிகள் இறங்கிச் செல்லவேண்டும். இறங்கு வாயிலில் கல்லில் இரு சிங்கங்கள் சுதையில் உள்ளன. சப்தமாதாக்கள் சந்நிதியும் இங்குள்ளது. வலது புறம் தெற்கு நோக்கிய அம்பாள் பிரஹந்நாயகி சந்நிதி அமைந்திருக்கிறது. தெற்கிலுள்ள போபுர வாயில் வழியாகவும் இந்த வெளிப் பிரகாரத்திற்கு வரலாம்.

அடுத்துள்ள நுழைவாயிலின் வழியாக உள்ளே நுழைந்தால் இடதுபுறம் பதினாறுகால் மண்டபமும் வலதுபுறம் நடராசசபையும் உள்ளன. இந்த நடராச மண்டபம், பேரம்பலம் என்றழைக்கப்படுகிறது. ரத அமைப்பில் உள்ளது. இருபுறங்களிலும் உள்ள கல்லில ஆன தேர்ச் சக்கரம் கண்டு மகிழத்தக்கது. இச்சக்கரங்களின் ஆரங்களாக உள்ள சிற்ப வேலைப்பாடுகள் கண்டு ரசிக்கத் தக்கவையாகும். குதிரைகளும், யானைகளும் இழுக்கும் நிலையில் இத்தேர் மண்டபம் அமைந்துள்ளது. அடுத்துள்ள வாழில் வழி உள்ளே நுழைந்தால் மூலவர் நாகேஸ்வரர் சந்நிதி கிழக்கு நோக்கி உள்ளது. உயரமான ஆவுடையார் மீது மிகவும் குட்டையான பாணத்துடன் காட்சி தருகிறார். கருவறை வாயிலில் தண்டூன்றிய விநாயகர் உள்ளார். கருவறைச் சுற்றில் கோஷ்டமூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, ரிஷபத்தின் முன் நின்று வலக்கையை ரிஷபத்தின் தலை மீது கை ஊன்றி நிற்கும் நிலையில் அர்த்தநாரீஸ்வரர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். இத்தலத்தில் சூரியனும் ஆதிசேஷனும் இறைவனை வழிபட்டுள்ளனர். இத்தலத்திலுள்ள மற்ற சந்நிதிகள் - பிரளயகாலருத்ரர், வலஞ்சுழி விநாயகர், ஐயனார், சப்தமாதாக்கள், சுப்பிரமணியர், சப்தலிங்கங்கள், வைத்தீஸ்வரர், சூரியன், சோமாஸ்கந்தர், சண்டேசுவரர் முதலிய சந்நிதிகள் உள்ளன.

இத்தலம் ஒரு ராகு தோஷ நிவர்த்தி தலமாகும். திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் நாகேஸ்வரரை வழிபட்டால் ராகு தோஷம் நீங்கப்பெற்று திருமணம் மற்றும் மகப்பேறு சித்திக்கும். இக்கோயிலுக்குள் மகாகாளி சன்னதியும், எதிரே ருத்ர தாண்டவமாடும் அக்னி வீரபத்திரர் சன்னதியும் உள்ளன. இருவரும் போட்டி நடனம் ஆடுவதுபோல அமைக்கப்பட்டுள்ளது மிக மிக சிறப்பாகும். இக்கோயிலின் சிறப்பம்சமே இந்த பிரளயகால ருத்திரர் சன்னதிதான். சித்திரை 11,12,13 தேதிகளில் காலை வேளையில் சூரியனின் கிரணங்கள் சிவலிங்கத் திருமேனி மீது படுகின்றன. இந்நாட்களில் சூரிய பூஜையைக் காண பக்தர்கள் பெருமளவில் ஆலயத்தில் கூடுகின்றனர்.

இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். இவ்வாலயத்தின் உட்பிரகாரத்தில் ஆறுமுகப் பெருமானின் சந்நிதி உள்ளது. ஒரு முகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு தனது தேவியர் இருவருடன காட்சி தருகிறார்.

திருநாவுக்கரசு சுவாமிகள் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளியுள்ள இப்பதிகம் 6-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

சொன்மலிந்த மறைநான்கா றங்க மாகிச்
சொற்பொருளுங் கடந்தசுடர்ச் சோதி போலுங்
கன்மலிந்த கயிலைமலை வாணர் போலுங்
கடல்நஞ்ச முண்டிருண்ட கண்டர் போலும்
மன்மலிந்த மணிவரைத்திண் டோ ளர் போலும்
மலையரையன் மடப்பாவை மணாளர் போலுங்
கொன்மலிந்த மூவிலைவேற் குழகர் போலுங்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.

கானலிளங் கலிமறவ னாகிப் பார்த்தன்
கருத்தளவு செருத்தொகுதி கண்டார் போலும்
ஆனவிளங் கடுவிடையொன் றேறி அண்டத்
தப்பாலும் பலிதிரியும் அழகர் போலுந்
தேனலிளந் துவலைமலி தென்றல் முன்றிற்
செழும்பொழிற்பூம் பாளைவிரி தேறல் நாறுங்
கூனலிளம் பிறைதடவு கொடிகொள் மாடக்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.

நீறலைத்த திருவுருவும் நெற்றிக் கண்ணும்
நிலாவலைத்த பாம்பினொடு நிறைநீர்க் கங்கை
ஆறலைத்த சடைமுடியும் அம்பொற் றோளும்
அடியவர்க்குக் காட்டியருள் புரிவார் போலும்
ஏறலைத்த நிமிர்கொடியொன் றுடையார் போலும்
ஏழுலகுந் தொழுகழலெம் மீசர் போலுங்
கூறலைத்த மலைமடந்தை கொழுநர் போலுங்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.

தக்கனது பெருவேள்வி தகர்த்தார் போலுஞ்
சந்திரனைக் கலைகவர்ந்து தரித்தார் போலுஞ்
செக்கரொளி பவளவொளி மின்னின் சோதி
செழுஞ்சுடர்த்தீ ஞாயிறெனச் செய்யர் போலும்
மிக்கதிறல் மறையவரால் விளங்கு வேள்வி
மிகுபுகைபோய் விண்பொழியக் கழனி யெல்லாங்
கொக்கினிய கனிசிதறித் தேறல் பாயுங்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.

காலன்வலி தொலைத்தகழற் காலர் போலுங்
காமனெழில் அழல்விழுங்கக் கண்டார் போலும்
ஆலதனில் அறம்நால்வர்க் களித்தார் போலும்
ஆணொடுபெண் ணலியல்ல ரானார் போலும்
நீலவுரு வயிரநிரைப் பச்சை செம்பொன்
நெடும்பளிங்கென் றறிவரிய நிறத்தார் போலுங்
கோலமணி கொழித்திழியும் பொன்னி நன்னீர்க்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.

முடிகொண்ட வளர்மதியும் மூன்றாய்த் தோன்றும்
முளைஞாயி றன்னமலர்க் கண்கள் மூன்றும்
அடிகொண்ட சிலம்பொலியும் அருளார் சோதி
அணிமுறுவற் செவ்வாயும் அழகாய்த் தோன்றத்
துடிகொண்ட இடைமடவாள் பாகங் கொண்டு
சுடர்ச்சோதிக் கடிச்செம்பொன் மலைபோ லிந்நாள்
குடிகொண்டென் மனத்தகத்தே புகுந்தார் போலுங்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.

காரிலங்கு திருவுருவத் தவற்கும் மற்றைக்
கமலத்திற் காரணற்குங் காட்சி யொண்ணாச்
சீரிலங்கு தழற்பிழம்பிற் சிவந்தார் போலுஞ்
சிலைவளைவித் தவுணர்புரஞ் சிதைத்தார் போலும்
பாரிலங்கு புனலனல்கால் பரமா காசம்
பருதிமதி சுருதியுமாய்ப் பரந்தார் போலுங்
கூரிலங்கு வேற்குமரன் தாதை போலுங்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.

பூச்சூழ்ந்த பொழில்தழுவு புகலூ ருள்ளார்
புறம்பயத்தார் அறம்புரிபூந் துருத்தி புக்கு
மாச்சூழ்ந்த பழனத்தார் நெய்த்தா னத்தார்
மாதவத்து வளர்சோற்றுத் துறையார் நல்ல
தீச்சூழ்ந்த திகிரிதிரு மாலுக் கீந்து
திருவானைக் காவிலோர் சிலந்திக் கந்நாள்
கோச்சோழர் குலத்தரசு கொடுத்தார் போலுங்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.

பொங்கரவர் புலித்தோலர் புராணர் மார்பிற்
பொறிகிளர்வெண் பூணநூற் புனிதர் போலுஞ்
சங்கரவக் கடன்முகடு தட்ட விட்டுச்
சதுரநட மாட்டுகந்த சைவர் போலும்
அங்கரவத் திருவடிக்காட் பிழைப்பத் தந்தை
அந்தணனை அறஎறிந்தார்க் கருளப் போதே
கொங்கரவச் சடைக்கொன்றை கொடுத்தார் போலுங்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.

ஏவியிடர்க் கடலிடைப்பட் டிளைக்கின் றேனை
இப்பிறவி யறுத்தேற வாங்கி யாங்கே
கூவிஅம ருலகனைத்து முருவிப் போகக்
குறியிலறு குணத்தாண்டு கொண்டார் போலுந்
தாவிமுதற் காவிரிநல் யமுனை கங்கை
சரச்வதிபொற் றாமரைப்புட் கரணி தெண்ணீர்க்
கோவியொடு குமரிவரு தீர்த்தஞ் சூழ்ந்த
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.

செறிகொண்ட சிந்தைதனுள் தெளிந்து தேறித்
தித்திக்குஞ் சிவபுவனத் தமுதம் போலும்
நெறிகொண்ட குழலியுமை பாக மாக
நிறைந்தமரர் கணம்வணங்க நின்றார் போலும்
மறிகொண்ட கரதலத்தெம் மைந்தர் போலும்
மதிலிலங்கைக் கோன்மலங்க வரைக்கீ ழிட்டுக்
குறிகொண்ட இன்னிசைகேட் டுகந்தார் போலுங்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.

திருகுடந்தை கீழ்கோட்டம் நாகேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்


5 நிலை முதல் கோபுரம்


விசாலமான வெளிப் பிரகாரப் பகுதி

2-ம் நிலை நுழைவாயில்


3 நிலை தெற்கு கோபுரம்


சிவன் சந்நிதி விமானம்


வள்ளி தெய்வானையுடன் முருகர்


நடராஜ சபை தேர் சக்கரம், குதிரை


நடராஜ சபை தேர் சக்கரம்


நடராஜ சபை தேர் சக்கரம், குதிரை - மறுபுற தோற்றம்


Copyright © 2004 - 2019 - www.shivatemples.com - All rights reserved