Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்


தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

வைகல் நாதர் கோவில், திருவைகல் மாடக்கோவில்

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருவைகல் மாடக்கோவில்
இறைவன் பெயர்வைகல் நாதர், சண்பகாரண்யேஸ்வரர்
இறைவி பெயர்கொம்பியல்கோதை, வைகல் நாயகி
பதிகம்திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது கும்பகோணம் - காரைக்கால் பேருந்து வழித் தடத்தில் திருநீலக்குடி தாண்டி, பழியஞ்சிய நல்லூர் கூட்ரோடு என்னுமிடத்தில் வலப்புறமாகப் பிரிந்து செல்லும் சாலையில் திரும்பி பழியஞ்சிய நல்லூரை அடைந்து, மேலும் 2 கி.மீ. அதே சாலையில் சென்றால் வைகல் கிராமத்தை அடையலாம். கும்பகோணத்தில் இருந்து கிழக்கே சுமார் 12 கி.மி. தொலைவிலும், கொல்லுமாங்குடிக்கு மேற்கே சுமார் 20 கி.மி. தொலைவிலும் உள்ளது. திருநீலக்குடி என்ற மற்றொரு சிவஸ்தலம் இங்கிருந்து 3 கி.மி. தொலைவில் உள்ளது. அருகில் உள்ள பெரிய நகரம் கும்பகோணம்.
ஆலய முகவரிஅருள்மிகு வைகல் நாதர் திருக்கோயில்
வைகல் கிராமம்
மேலையூர் அஞ்சல்
வழி ஆடுதுறை
தஞ்சாவூர் மாவட்டம்
PIN - 612101

இவ்வாலயம் தினந்தோறும் காலை 6-30 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும். கோவில் மெய்காப்பாளர் அருகிலேயே இருப்பதால் எந்நேரமும் தரிசனம் செய்ய இயலும்.

வைகல் என்ற இந்த சிறிய கிராமத்தில் 3 சிவாலயங்கள் இருக்கின்றன. 1)ஊரின் தென்புறமுள்ள திருமால் வழிபட்ட விசுவநாதர் ஆலயம், 2) பிரமன் வழிபட்ட பிரமபுரீசுவரர் ஆலயம், 3) ஊரின் மேற்கு திசையிலுள்ள வைகல்நாதர் ஆலயம் - இதுவே மாடக்கோயில். சிவபெருமானின் 3 கண்களைப் போல் விளங்கும் இந்த விசுவநாதர் கோவில், பிரம்மபுரீஸவரர் கோவில் மற்றும் வைகல்நாதர் கோவில் ஆகியவற்றில் ஊரின் மேற்கே அமைந்துள்ள வைகல்நாதர் ஆலயமே தேவாரப் பதிகம் பெற்ற தலம் என்ற பெருமையைப் பெற்றதாகும். கோச்செங்கட் சோழன் முற்பிறவியில் சிலந்தியாய் இருந்து திருவானைக்கா இறைவனுக்கு வலைப்பந்தல் அமைத்து வழிபட்டு இறைவன் அருளால் சோழ நாட்டின் பேரரசனாக பிறக்கும் பேறு பெற்றான். முற்பிறவியில் தான் சிலந்தியாக இருந்து செய்த சிவத்தொண்டிற்கு யானை இடையூறாக இருந்த காரணத்தினால் யானை ஏறாத மாடக் கோவில்களைக் கட்டினான். இத்தலத்தில் உள்ள ஆலயம் கோச்செங்கட் சோழன் கட்டிய அத்தகைய மாடக் கோவில்களுள் ஒன்றாகும்.

தேவாரப் பதிகம் பெற்ற இந்த ஆலயமும், இவ்வூரிலுள்ள மற்ற இரண்டு ஆலயங்களும் திருமால், பிரம்மா, திருமகள் ஆகியோராலும், இந்திரன் முதலான தேவர்களாலும் அகத்தியர் போன்ற முனிவர்களாலும் வழிபடப் பெற்ற பெருமைக்குரியதாக திகழ்கின்றன.

தல வரலாறு: முன்னொரு காலத்தில் பூமிதேவி தன்னை விரும்பி மணம் செய்து கொள்ளுமாறு திருமாலை வேண்ட, திருமாலும் அதற்கு இசைந்து நிலமகளான பூமிதேவியை மணம் புரிந்து கொண்டார். திருமால் மேல் கோபம் கொண்ட திருமகள் சணபகவனமாகிய இத்தலம் வந்து சிவபெருமானை கடுந்தவம் புரிந்து வழிபட்டாள். திருமாலும், பூமிதேவியும் பிரிந்து சென்ற திருமகளை அடையும் பொருட்டு இத்தலம் வந்து அவர்களும் சிவபெருமானை வழிபட்டனர். திருமாலைத் தேடி வந்த பிரம்மாவும் இத்தலம் வந்து சிவபெருமானை வழிபட்டார். சிவபெருமான் திருவருளால் திருமால் திருமகளை அடையும் பேறு பெற்றார். பிரம்மாவிற்கும் அருள் புரிந்தார் என்பது இத்தலத்தின் மூன்று கோவிலகளையும் இணைத்துக்கூறும் புராண வரலாறாகும்.

இவ்வாலயத்திற்கு இராஜகோபுரம் இல்லை. கிழக்கில் ஒரு நுழைவாயில் மட்டும் உள்ளது. தெற்கு வெளிப் பிரகாரத்தில் உள்ள படிகள் மூலம் ஏறி மாடக்கோவிலின் முன்புற மேடையை அணுகலாம். முன்புற மேடையில் இறைவன் சந்நிதியை நோக்கி நந்தி மண்டபம் உள்ளது. மாடக்கோவிலின் உள்ளே இறைவன் வைகல் நாதர் கிழக்கு நோக்கிய சந்நிதியில் அருட்காட்சி தருகிறார். வலதுபுறம் தெற்கு நோக்கிய இறைவி கொம்பியல்கோதையின் சந்நிதி அமைந்துள்ளது. வள்ளி தெய்வானை சமேத முருகர், ஸ்ரீதேவி பூதேவி சமேத மஹாவிஷ்ணு ஆகியோர் சந்நிதிகளும் ஆலயத்தில் உள்ளன. காகவாகனர் சனீஸ்வரருக்கும் தனி சந்நிதி உள்ளது.


சம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடிய பதிகம் 3-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. சம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடிய பதிகத்தில் இக்கோவில் கோச்செங்கட் சோழனால் கட்டப்பெற்றதையும், வைகல் ஊரின் மேற்கில் உள்ள கோவில் என்றும் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். மேலும் தன் பதிகத்தின் 10-வது பாடலில் இத்தலம் வடமலையான கயிலைமலைக்கு இணையான தலம் என்றும் சிறப்பித்துப் பாடியுள்ளார்.

1. துளமதி யுடைமறி தோன்று கையினர்
இளமதி யணிசடை எந்தை யாரிடம்
உளமதி யுடையவர் வைக லோங்கிய
வளமதி தடவிய மாடக் கோயிலே.

2. மெய்யகம் மிளிரும்வெண் ணூலர் வேதியர்
மையகண் மலைமக ளோடும் வைகிடம்
வையகம் மகிழ்தர வைகல் மேற்றிசைச்
செய்யகண் வளவன்முன் செய்த கோயிலே.

3. கணியணி மலர்கொடு காலை மாலையும்
பணியணி பவர்க்கருள் செய்த பான்மையர்
தணியணி உமையொடு தாமுந் தங்கிடம்
மணியணி கிளர்வைகல் மாடக் கோயிலே.

4. கொம்பியல் கோதைமுன் அஞ்சக் குஞ்சரத்
தும்பிய துரிசெய்த துங்கர் தங்கிடம்
வம்பியல் சோலைசூழ் வைகல் மேற்றிசைச்
செம்பியன் கோச்செங்க ணான்செய் கோயிலே.

5. விடம்அடை மிடற்றினர் வேத நாவினர்
மடமொழி மலைமக ளோடும் வைகிடம்
மடவனம் நடைபயில் வைகல் மாநகர்க்
குடதிசை நிலவிய மாடக் கோயிலே.

6. நிறைபுனல் பிறையொடு நிலவு நீள்சடை
இறையவ ருறைவிடம் இலங்கு மூவெரி
மறையொடு வளர்வுசெய் வாணர் வைகலில்
திறையுடை நிறைசெல்வன் செய்த கோயிலே.

7. எரிசரம் வரிசிலை வளைய ஏவிமுன்
திரிபுரம் எரிசெய்த செல்வர் சேர்விடம்
வரிவளை யவர்பயில் வைகல் மேற்றிசை
வருமுகி லணவிய மாடக் கோயிலே.

8. மலையன இருபது தோளி னான்வலி
தொலைவுசெய் தருள்செய்த சோதி யாரிடம்
மலர்மலி பொழிலணி வைகல் வாழ்வர்கள்
வலம்வரு மலையன மாடக் கோயிலே.

9. மாலவன் மலரவன் நேடி மால்கொள
மாலெரி யாகிய வரதர் வைகுஇடம்
மாலைகொ டணிமறை வாணர் வைகலில்
மாலன மணியணி மாடக் கோயிலே.

10. கடுவுடை வாயினர் கஞ்சி வாயினர்
பிடகுஉரை பேணிலார் பேணு கோயிலாம்
மடம் உடையவர் பயில் வைகல் மாநகர்
வடமலை அனைய நல் மாடக் கோயிலே.

11. மைந்தன திடம்வைகல் மாடக் கோயிலைச்
சந்தமர் பொழிலணி சண்பை ஞானசம்
பந்தன தமிழ்கெழு பாடல் பத்திவை
சிந்தை செய்பவர் சிவலோகஞ் சேர்வரே.

வைகல் நாதர் ஆலயம் புகைப்படங்கள்


வைகல் மாடக்கோவில் ஆலய நுழைவாயில்


மாடக்கோவிலின் தோற்றம்


வெளிப் பிரகாரம்


மாடக்கோவில் மேடையில் உள்ள நந்தி


சனீஸ்வரர் திருமேனி

வைகல் நாதர் ஆலயம் புகைப்படங்கள்


ஸ்ரீதேவி பூதேவி சமேத மஹாவிஷ்ணு


வள்ளி தெய்வானை சமேத முருகர்


விநாயகர்


தட்சிணாமூர்த்தி