Shiva temples of Tamilnadu

தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்
பாடல் பெற்ற தலம் கோவில் விபரங்கள் தமிழ்நாடு வர ஆலோசனைகள்

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருத்துருத்தி (தற்போது குத்தாலம் என்று வழங்கப்படுகிறது)
இறைவன் பெயர்உக்தவேதீஸ்வரர், சொன்னவாறு அறிவார்
இறைவி பெயர்அரும்பன்ன வளமுலையாள், பரிமள சுகந்த நாயகி
பதிகம்திருநாவுக்கரசர் - 1
திருஞானசம்பந்தர் - 1, சுந்தரர் - 1
எப்படிப் போவது மயிலாடுதுறை - கும்பகோணம் சாலையில் மயிலாடுதுறையில் இருந்து 11 கி.மீ தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து 24 கி.மீ. தொலைவிலும் குத்தாலம் என்ற ஊரில் இத்தலம் அமைந்துள்ளது. திருவேள்விக்குடி, திருஎதிர்கொள்பாடி, திருமணஞ்சேரி ஆகிய பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் இத்தலத்திற்கு அருகாமையில் உள்ளன.
ஆலய முகவரிஅருள்மிகு உக்தவேதீஸ்வரர் திருக்கோயில்
குத்தாலம்
குத்தாலம் அஞ்சல்
மயிலாடுதுறை வட்டம்
மயிலாடுதுறை மாவட்டம்
PIN - 609801

இவ்வாலயம் தினந்தோறும் காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5-30 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
Kuthalam route map

மயிலாடுதுறையில் இருந்து உக்தவேதீஸ்வரர் ஆலயம் செல்லும் வழி வரைபடம்
Map courtesy by: Google Maps

திருவாவடுதுறை தலத்தில் அம்பாள் பசு வடிவம் நீங்கப் பெற்று சுய உருவம் அடைந்ததும் சிவபெருமான் காட்சி அளித்தார். ஆனால் திருமணம் நடைபெறவில்லை. அம்பாளுக்கு இன்னொரு பணி காத்திருந்தது. அருகிலுள்ள குத்தாலத்தில் தவம் செய்து வந்த பரதமா முனிவருக்கு அவர் விரும்பியபடி அம்பாள் வேள்விக் குண்டத்தில் இறைவன் விருப்பப்படி ஒரு பெண்ணாகப் பிறந்தாள். ஈஸ்வரனை திருமணம் செய்து கொள்ளும் பொருட்டு தினமும் காவிரிக்குச் சென்று ந்தியில் நடுவிலிருந்த மணல் மேட்டில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தாள். 8-ம் நாள் இறைவன் அங்கு லிங்க வடிவில் தோன்றி லிங்கத்தில் இருந்து வெளிப்பட்டு அம்பிகையின் கரம் பற்றினார். அம்பிகை நாணம் கொண்டு "சாத்திரங்களில் கூறப்பட்டுள்ளபடி தாய் தந்தையர், உற்றார் உறவினர் சூழ என்னைத் திருமணம் முடிக்க வேண்டும்" என்று கூறினாள். உன் விருப்பப்படியே நம் திருமணம் நடக்கும் என்று ஈசன் கூற அம்பிகை முனிவரின் ஆசிரமம் அடைந்தாள். இனைவன் தாமே சொல்லிய விதியின்படி தான் திருமணம் செய்து கொள்வதாக அம்பாளுக்கு வாக்களித்து அதன் படியே நடந்து கொண்டதால் இறைவன் நாமம் சொன்னவாரறிவார் என்றாயிற்று.

இத்தலத்தின் தலவிருட்சம் உத்தால மரம் என்ற் ஒரு வகை ஆத்தி மரம்.அம்மரம் குடையாக அமைய அம்பாளைத் திருமணம் செய்து கொள்ள சுவாமி மணவாளநாதராக எழுந்தருளினார். அம்மரத்தினடியில் இன்றும் இரண்டு பாதுகைகள் இருப்பதைக் காணலாம். எனவே இத்தலம் உத்தாலவனம் என்று பெயர் பெற்று பின் மருவி குத்தாலம் என்றாயிற்று. தற்போது குத்தாலம் என்று அறியப்படும் இத்தலம் தேவாரப் பதிகம் பாடப் பெற்ற காலத்தில் துருத்தி என்று வழங்கப்பட்டது. துருத்தி என்றால் ஆற்றின் இடையில் உள்ள தீவு என்று பொருள் படும். திருநாவுக்கரசர் தனது பதிகத்தின் 3-வது பாடலில்


பொன்னின் நடுவு தன்னுள் பூம்புனல் பொலிந்து தோன்றும்
துன்னிய துருத்தியானைத் தொண்டனேன் கண்டவாறே

என்று குறிப்பிடுவதால் இவ்வூர் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் காவிரி நதியின் இடையில் ஒரு தீவாக இருந்திருக்க வேண்டும் என்பது புலனாகிறது.

சுந்தரரும் இத்தலத்து இறைவன் மேல் பதிகம் பாடி இருக்கிறார். சங்கிலி நாச்சியாருக்கு திருவொற்றியூரில் செய்து கொடுத்த சத்தியத்தை மீறி அவளைப் பிரிந்து சென்றதால் இரண்டு கண்களையும் இழந்து உடல் நலிந்து திருத்துருத்தி வந்திருக்கிறார். காஞ்சீபுரத்தில் ஒரு கண்ணில் பார்வையை மீண்டும் பெற்றாலும் நலிந்த உடலுடன் இத்தலத்திற்கு வந்து இங்குள்ள இறைவனை மனமுருகி வேண்டி தன்னை மன்னித்தருளும்படி வேண்டினார். இறைவனும் ஆலயத்தின் வடபாகத்திலுள்ள தாமரைக் குளத்தில் நீராடினால் உன் உடற்பிணி தீர்ந்துவிடும் என்று அருளினார். சுந்தரரும் அவ்வாறே செய்ய, நீரிலிருந்து எழும்போது முன்னிலும் பளபளக்கும் திருமேனி எழிலுடன் திகழ்ந்தார். அப்போது தான் திருத்துருத்தியையும், திருவேள்விக்குடியையும் இணைத்து


மின்னுமா மேகங்கள் பொழிந்திழிந் தருவி
வெடிபடக் கரையொடுந் திரைகொணர்ந்த் எற்றும்
அன்னமாங் காவிரி அகன்கரை உறைவார்
அடியிணை தொழுது எழும் அன்பராம் அடியார்
சொன்னவாறறிவார் துருத்தியார் வேள்விக்
குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
என்னைநான் மறக்குமாறு எம்பெருமானை
என்னுடம் படும்பிணி இடர் கெடுத்தானை.

எனத் தொடங்கும் பதிகம் பாடினார். சுந்தரமூர்த்தி நாயனாரின் பிணி தீர்த்ததால் தாமரைத் தடாகத்திற்கு சுந்தர தீர்த்தம் என்று பெயர் ஏற்பட்டது. தீர்த்தக்கரையில் சுந்தரருக்கு கோயில் உள்ளது.

ஆலயம் ஊருக்கு நடு நாயகமாக விளங்குகிறது. 5 நிலை இராஜகோபுரம் மேற்கு நோக்கி உள்ளது. இரண்டு பிரகாரங்கள் கொண்டது. கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் கொடிமரம், பலிபீடம் உள்ளன. வலதுபுறம் ஸ்தல விருட்சமான உத்தால மரமும் அதை சுற்றி உள்ள பீடமும் உள்ளது. மூலவர் சந்நிதி மேற்கு பார்த்து அமைந்திருக்கிறது. பக்கத்திலேயே தெற்குப் பார்த்த இறைவியின் சந்நிதி உள்ளது. இவ்விரு கோவில்களும் தனித்தனியே வலம் வருமாறு தனிப் பிரகாரங்களோடு அமைந்துள்ளன. அம்பிகையை மணந்து கொள்ள வந்த இறைவனுக்குத் துணையாக வந்த விநாயகர் "துணைவந்த விநாயகர்" என்ற பெயருடன் அம்பாள் சந்நிதிக்கு செல்லும் வழியில் வெளிப் பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் கோயில் கொண்டிருக்கிறார். உட்பிரகாரத்தில் வலஞ்சுழி விநாயகரையும் தரிசிக்கலாம். கிழக்குப் பிரகாரத்தில் மேற்கு நோக்கி எழுந்தருளியிருக்கும் ஸ்ரீசண்முகரை பார்த்துப் பரவசம் அடையலாம். அத்தனை கலையழகுடன் இவர் காட்சி அளிக்கிறார். பிரகாரத்தின் வணகிழக்குப் புறத்தில் நவக்கிரகங்கள், சப்தரிஷீஸ்வரர், சனீஸ்வரர், பைரவர் மற்றும் பஞ்ச லிங்கங்கள் ஆகிய சந்நிதிகள் உள்ளன. சுவாமி கருவறை விமானத்திலுள்ள சுதைச் சிற்பங்கள் யாவும் பெரியவையாகவும், கலையழகோடும் காணப்படுகின்றன.இவற்றை நிதானமாக பார்த்து ரசிக்க வேண்டும். அக்னி பகவான் இத்தலத்து இறைவனை வழிபட்டு தன் பாபங்களை போக்கிக் கொண்டுள்ளார். காசிபன், ஆங்கிரசன், கௌதமன், மார்க்கண்டேயர், வசிஷ்டர், புலஸ்தியர், அகஸ்தியர் ஆகிய சப்தரிஷிகளும் வழிபட்டு இத்தலத்தில் பேறு பெற்றுள்ளனர். சூரியன், பரத முனிவர் ஆகியோரும் இத்தலத்து இறைவனை வழிபட்டு பெறும் பேறு பெற்றிருக்கின்றனர்.

Top
உக்தவேதீஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்
5 நிலை இராஜகோபுரம் உள்ளிருந்து தோற்றம்
தட்சிணாமூர்த்தி சந்நிதி விமானம்
அம்பாள் கோவில், 2-ம் கோபுரம், தல விருட்சம்
3 நிலை அம்பாள் கோவில் கோபுரம்
கொடிமரம், பலிபீடம், நந்தி
சுவாமி சந்நிதி விமான சுதைச் சிற்பங்கள்
சுவாமி சந்நிதி விமான சுதைச் சிற்பங்கள்
அரும்பன்ன வளமுலையாள்
பிரகாரத்தில் 63 நாயன்மார்
சொன்னவாரறிவார் சந்நிதி