Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்

வேதபுரீஸ்வரர் கோவில், திருவழுந்தூர்

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருவழுந்தூர் (தேரழுந்தூர் என்றும் கூறப்படுகிறது)
இறைவன் பெயர்வேதபுரீஸ்வரர்
இறைவி பெயர்சௌந்தராம்பிகை
பதிகம்திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது மயிலாடுதுறையில் இருந்து 11 கி.மி. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. மயிலாடுதுறையில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் இருக்கின்றன.

தேரழுந்தூர் என்று இன்று அறியப்படும் ஊரின் கிழக்குப் பகுதியில் வேதபுரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இதே ஊரின் மற்றொரு பகுதியில் 108 திவ்யதேசங்களில் ஒன்றான விஷ்னுவின் ஆலயமும் இருக்கிறது. இறைவி சௌந்தராம்பிகையின் சந்நிதி சிவன் கோவிலின் வெளியே தனியாக அமைந்திருக்கிறது. அகத்தியர், மார்க்கண்டேயர், காவேரி ஆகியோர் இத்தலத்தில் இறைவனை வழிபட்டு மோட்சம் பெற்றிருக்கின்றனர்.

கம்ப இராமயணத்தை இயற்றிய தமிழ் கவிஞர் கம்பர் பிறந்த ஊர் இதுவாகும்.

திருஞானசம்பந்தர் பாடியருளியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் இரண்டாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

தொழுமா றுவல்லார் துயர்தீ ரநினைந்
தெழுமா றுவல்லார் இசைபா டவிம்மி
அழுமா றுவல்லார் அழுந்தை மறையோர்
வழிபா டுசெய்மா மடம்மன் னினையே.  

கடலே றியநஞ் சமுதுண் டவனே
உடலே உயிரே உணர்வே யெழிலே
அடலே றுடையாய் அழுந்தை மறையோர்
விடலே தொழமா மடம்மே வினையே.

கழிகா டலனே கனலா டலினாய்
பழிபா டிலனே யவையே பயிலும்
அழிபா டிலராய் அழுந்தை மறையோர்
வழிபா டுசெய்மா மடம்மன் னினையே.  

வானே மலையே யெனமன் னுயிரே
தானே தொழுவார் தொழுதாள் மணியே
ஆனே சிவனே அழுந்தை யவரெம்
மானே யெனமா மடம்மன் னினையே. 

அலையார் புனல்சூழ் அழுந்தைப் பெருமான்
நிலையார் மறியும் நிறைவெண் மழுவும்
இலையார் படையும் மிவையேந் துசெல்வ
நிலையா வதுகொள் கெனநீ நினையே. 

நறவார் தலையின் நயவா வுலகிற்
பிறவா தவனே பிணியில் லவனே
அறையார் கழலாய் அழுந்தை மறையோர்
மறவா தெழமா மடம்மன் னினையே.  

தடுமா றுவல்லாய் தலைவா மதியம்
சுடுமா றுவல்லாய் சுடரார் சடையில்
அடுமா றுவல்லாய் அழுந்தை மறையோர்
நெடுமா நகர்கை தொழநின் றனையே. 

பெரியாய் சிறியாய் பிறையாய் மிடறுங்
கரியாய் கரிகா டுயர்வீ டுடையாய்
அரியாய் எளியாய் அழுந்தை மறையோர்
வெரியார் தொழமா மடம்மே வினையே.  

மணீநீள் முடியான் மலையை அரக்கன்
தணியா தெடுத்தான் உடலந் நெரித்த
அணியார் விரலாய் அழுந்தை மறையோர்
மணிமா மடம்மன் னியிருந் தனையே. 

முடியார் சடையாய் முனநா ளிருவர்
நெடியான் மலரான் நிகழ்வா லிவர்கள்
அடிமே லறியார் அழுந்தை மறையோர்
படியாற் றொழமா மடம்பற் றினையே.  

அருஞா னம்வல்லார் அழுந்தை மறையோர்
பெருஞா னமுடைப் பெருமா னவனைத்
திருஞா னசம்பந் தனசெந் தமிழ்கள்
உருஞா னமுண்டாம் உணர்ந்தார் தமக்கே.