Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்


தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

சுவர்ணபுரீசர் கோவில், திருசெம்பொன்பள்ளி

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருசெம்பொன்பள்ளி (செம்பொனார்கோவில்)
இறைவன் பெயர்சுவர்ணபுரீஸ்வரர்
இறைவி பெயர்சுகந்த குந்தளாம்பிகை, மருவார் குழலியம்மை
பதிகம்திருநாவுக்கரசர் - 2
திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது மயிலாடுதுறையில் இருந்து பொறையாறு செல்லும் பேருந்துப் பாதையில் 10 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. மயிலாடுதுறையில் இருந்து நகரப் பேருந்து வசதி உண்டு.
ஆலய முகவரி அருள்மிகு சுவர்ணபுரீஸ்வரர் திருக்கோயில்
செம்பொனார்கோவில்
செம்பொனார்கோவில் அஞ்சல்
தரங்கம்பாடி வட்டம்
நாகப்பட்டிணம் மாவட்டம்
PIN - 609309

இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

தல வரலாறு: பிரம்மாவின் மானச புத்திரரான தட்சன் தன் மகள் தாட்சாயினியை இறைவன் சுவர்ணபுரீஸ்வரருக்கு மணமுடித்து தருகிறாரன். பின் ஒரு சமயம் தட்சன் தனது அகந்தை காரணமாக தான நடத்தும் ஒரு யாகத்திற்கு சிவனை அழைக்கவில்லை. இதனால் தன் தந்தை தட்சனை திருத்தி நல்வழிப்படுத்த தாட்சாயினி இத்தலத்திலிருந்து திருப்பறியலூருக்கு சென்றபோது தட்சன் ஆணவத்தினால் சிவனையும் சக்தியையும் நிந்தித்து விடுகிறான். தாட்சாயிணி கோபம் கொண்டு தட்சனின் யாகம் அழிந்து போகட்டடும் என்று சாபம் இடுகிறார். அத்துடன் சிவனிடம் தட்சனை தண்டிக்கும் படி வேண்டுகிறார். சிவனும் வீரபத்திரர், பத்திரகாளி ஆகியோரை தோற்றுவித்து யாகத்தை அழித்து தட்சனையும் சம்ஹாரம் செய்து விடுகிறார். தாட்சாயிணியும் சிவநிந்தை செய்த தட்சனின் மகள் என்ற பாவம் தீர வேண்டி இத்தலத்தில் பஞ்சாக்னி மத்தியில் கடும் தவம் புரிகிறார். சிவபெருமான் தாட்சாயிணியை மன்னித்து மருவார் குழலியம்மை என்னும் திருநாமத்துடன் இத்தலத்தில் என்னருகில் இருந்து அருளாட்சி செய் என்று அருள்பாலிக்கிறார். இத்தலம் தாட்சாயணிக்கு அருள்புரிந்ததும், வீரபத்திரர் தோன்றியதுமாகிய சிறப்பினையுடையது.

தலச் சிறப்பு: லட்சுமி இத்தல இறைவனை வழிபட்டு திருமாலை தன் கணவனாக அடைந்ததாள். எனவே இத்தலத்திற்கு இலக்குமிபுரி என்ற பெயர் வந்தது. இந்திரன் இங்குள்ள சூரிய தீர்த்தத்தில் நீராடி சிவனை பூஜித்து விருத்திராசூரனை வெல்ல வச்சிராயுதம் பெற்றான். இதனால் இத்தலத்திற்கு இந்திரபுரி என்ற பெயரும் உண்டு. முருகப்பெருமான் இத்தல இறைவனை வழிபட்டு தாருகனை வதைத்ததால் இத்தலத்திற்கு கந்தபுரி என்றும் பெயர் உண்டு. வட்டவடிவமான ஆவுடையார் மேல் லிங்க உருவில் எழுந்தருளியுள்ள இத்தல மூர்த்தியான சுவர்ணபுரீஸ்வரர் திருமாலால் பூஜிக்கப்பட்டவர்.

கோவில் அமைப்பு: கோச்செங்கட்சோழனால் திருப்பணி செய்யப்பட்ட இவ்வாலயம் கிழக்கு நோக்கிய திருவாயிலுடன் காணப்படுகிறது. கீழே பதினாறும் மேலே பதினாறும் இதழ்களையுடைய தாமரை போன்ற ஆவுடையில் மூலவர் சுயம்பு லிங்கத் திருமேனியராக காட்சி தருகிறார். கோஷ்ட மூர்த்தங்களாக இந்திர கணபதி, தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீசுவரர், துர்க்கை ஆகியோரைக் காணலாம், மகாமண்டபத்தில் விநாயகர், சூரிய சந்திர லிங்கங்கள், சுப்பிரமணியர் சந்நிதிகள் உள்ளன. இங்குள்ள பிட்சாடனத் திருக்கோலம் மிகப்பழைமையானது. அம்பாள் தெற்கு நோக்கிய சந்நிதியில் காட்சி தருகிறாள். அம்பிகைக்கு ஆலயத்தின் தென்மேற்கில் சப்தகன்னிகையர் கோயில் உள்ளது. மேற்கில் தலவிநாயகர் பிரகாசப் பிள்ளையார் உள்ளார். மற்றும் வனதுர்க்கை, விசுவநாதர், சீனிவாசப் பெருமாள், சிபிகாட்சிநாதர் எனப்படும் மான்மழுவேந்திய சிவபெருமான், உருத்திராக்கமாலையும் சக்தி ஆயுதம் தரித்த நான்கு கைகளையுடைய பாலசுப்பிரமணியர், கஜலட்சுமி, ஜேஷ்டாதேவி, வீரபத்திரர், சூரியர், பைரவர் முதலிய மூர்த்தங்களும் ஆலயத்தில் உள்ளன. நவக்கிரக தோஷத்திற்கு இத்தல வழிபாடு சிறந்த பரிகாரமாக இன்றும் சொல்லப்படுகிறது. இத்தலத்தில் துர்க்கை வழிபாடு விசேஷமானது.

கோவிலுக்கு அருகில் ஆலயத்தின் தீர்த்தம் சூரிய தீர்த்தம் உள்ளது. சித்திரை மாத அமாவாசையிலும், வைகாசியிலும் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடினால் சகல பாவங்களும் விலகும். சுவாமி அம்பாள் சந்நிதிகளிடையே உள்ள வன்னி மரமும், வடக்குச் சுற்றில் உள்ள வில்வ மரமும் இவ்வாலயத்தின் தலவிருட்சங்கள். சித்திரை மாதம் 7-ம் நாள் முதல் 18-ம் நாள் வரை 12 நாட்கள் காலையில் சூரியனின் கதிர்கள் மூலவரின் மீது படுவது மிகவும் விசேஷம். கார்த்திகை- திங்கட்கிழமைகளில் (சோமவாரங்களில்) இத்தலத்தில் 108 சங்காபிஷேகம் நடைபெறும். .இந்தப் புண்ணிய நாட்களில் செம்பனார்கோவில் வந்து, சோமவார தரிசனம் செய்து இத்தல இறைவனையும், இறைவியையும் வழிபட்டால், திருமண பாக்கியம் முதலான அனைத்து வரங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை!

திருசெம்பொன்பள்ளி சுவர்ணபுரீஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்


நுழைவாயில் சுதைச் சிற்பங்கள்


சுவர்ணபுரீஸ்வரர் சந்நிதி


ஆலயம் உட்பறத் தோற்றம்


தல விருட்சம் வில்வ மரம்


மூலவர் சுவர்ணபுரீஸ்வரர்

தெய்வானை

சூர்ய மகா கணபதி, சூரிய லிங்கம்


சந்திர லிங்கம், வள்ளி, சுப்பிரமணியர், தெய்வானை


நால்வர்


மாணிக்கவாசகர், ஸ்ரீனிவாசப் பெருமாள்

மருவார் குழலியம்மை

சூரியன்

துர்க்கை

அர்த்தநாரீசுவரர்


Copyright © 2004 - 2019 - www.shivatemples.com - All rights reserved