Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்


தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

திருமேனி அழகர் கோவில், திருவேட்டக்குடி

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருவேட்டக்குடி
இறைவன் பெயர்திருமேனி அழகர், சுந்தரேஸ்வரர்
இறைவி பெயர்சௌந்தரநாயகி, சாந்தநாயகி
பதிகம்திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது புதுச்சேரி மாவட்டத்தின் ஒரு பகுதியான காரைக்கால் வட்டத்தில் இத்தலம் இருக்கிறது. காரைக்காலில் இருந்து சுமார் 8 கி.மி. தொலைவில் இத்தலம் உள்ளது. காரைக்காலில் இருந்து தரங்கம்பாடி செல்லும் சாலை வழியில் வரிச்சக்குடி என்ற ஊர் வரும். அங்கிருந்து வலதுபுறம் கிழக்கே செல்லும் கிளைச்சாலையில் சுமார் 2 கி.மி. சென்றால் இத்தலத்தை அடையலாம்.
ஆலய முகவரிஅருள்மிகு
திருமேனி அழகர் திருக்கோவில்
திருவேட்டக்குடி
திருவேட்டக்குடி அஞ்சல்
காரைக்கால் வட்டம்
புதுச்சேரி மாவட்டம்
PIN - 609609

இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8-30 மணி வரையும் திறந்திருக்கும்.
tiruvettakkudi route map

காரைக்காலில் இருந்து திருவேட்டக்குடி
செல்லும் வழி வரைபடம்
Map courtesy by: Google Maps

தலப்பெயர்க் காரணம்: பாண்டவர்கள் வனவாசம் செய்த போது அர்ச்சுனன் தீர்த்த யாத்திரை மேற்கொண்டான். அவ்வாறு தீர்த்த யாத்திரை செய்த போது பல தலங்களில் சிவபெருமானை ஆராதித்தான். அப்படி வழிபட்ட தலங்களில் இத்தலமும் ஒன்று. அருச்சுனன் தவம் செய்த சமயம் இறைவன் வேட வடிவத்தில் வெளிப்பட்டு அர்ச்சுனனுக்கு அருள் செய்ததாக புராண வரலாறு சொல்கிறது. இறைவன் வேட வடிவத்தில் தோன்றியதால் இத்தலம் திருவேட்டக்குடி என்று பெயர் பெற்றது.

கோவில் அமைப்பு: கிழக்கு நோக்கிய ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் நம்மை வரவேற்கிறது. கோபுரத்தில் சிற்பங்கள் அதிகமாக காணப்படுகின்றன. கோபுர வாயில் கடந்து உள்ளே சென்றவுடன் ஒரு விசாலமான மண்டபம். அதில செப்புக் கவசமிட்ட கொடிமரம், முன்னால் கொடிமர விநாயகர், பலிபீடம், நந்தி மண்டபம் ஆகியவற்றைக் காணலாம். வெளிப் பிரகாரம் வலம் வரும் போது தென்மேற்குச் சுற்றில் சுந்தர விநாயகர் சந்நிதியும், மேற்குச் சுற்றில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி சந்நிதியும் உள்ளன. வடக்குப் பிரகாரத்தில் புன்னை வனநாதர் சந்நிதி, மகாலட்சுமி சந்நிதி ஆகியவை உள்ளன. சம்பந்தருக்கும் சனி சந்நிதி உள்ளது.

கருவறை பிரகாரத்தில் நால்வர், பைரவர், சூரியன், சந்திரன் ஆகியோரின் சந்நிதிகளும், கோஷ்ட மூர்த்திகளாக தட்சினாமூர்த்தி, துர்க்கை ஆகியோரும் உள்ளனர். சிவன் மீனவர், வேடன் என இரண்டு வடிவங்களில் வந்து அருள் செய்த தலம் இது. கருவறையில் மூலவர் திருமேனி அழகர் என்கிற சுந்தரேஸ்வரர் லிங்க வடிவில் சதுர பீடத்துடன் ருத்ராட்ச பந்தலின் கீழ் கிழக்கு நோக்கி அருட்காட்சி தருகிறார். உயரமான பாணத்துடன் தீபாராதனை ஒளி திருமேனியில் தெளிவாகத் தெரிகின்றபடி காட்சி அளிக்கிறார். சிவனிடம் பாசுபத அஸ்திரம் பெற்ற அர்ஜுனர், கையில் சூலம், வில்லை வைத்துக்கொண்டு ருத்ராட்ச மாலை அணிந்தபடி உற்சவராக இருக்கிறார். விழாக்காலங்களில் இவருக்கும் பூஜைகள் நடக்கிறது.

அம்பாள் தனி சந்நிதியில் தெற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறாள். சாந்தமான கோலத்தில் இருப்பதால் இவளை "சாந்தநாயகி" என அழைக்கின்றனர். உற்சவத் திருமேனிகளில் வேடனாக வந்த தலமூர்த்தி, வேடுவச்சியாக வந்த அம்பாள் ஆகிய வேடரூபர், வேடநாயகி திருமேனிகள் சிறப்பானைவை. வேடரூபர் கையில் வில்லேந்திக் கம்பீரமாகக் காட்சி தருகிறார். இங்கு முருகனும் கையில் வில்லுடன் காட்சியளிக்கிறார். இவர் நான்கு கரங்களுடன் வள்ளி, தெய்வானையுடன் இருக்கிறார். ஒரே தலத்தில் சிவன், முருகன் இருவரையும் வில்லுடன் தரிசனம் செய்வது அபூர்வம்.

கடலாடு விழா: மாசிமக தினத்தன்று திருமேனியழகரான சுவாமி வேட மூர்த்தியாகக் காட்சி தந்து கடல் நீராடும் வைபவம் கடலாடு விழா என்ற பெயரில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இத்தலத்தில் உமாதேவி மீனவர் குலத்தில் மீனவப் பெண்ணாக வந்து அவதரித்தாக புராண வரலாறு கூறுவதால், இந்த கடலாடு விழாவை திருவேட்டக்குடி தலத்திற்கு அருகிலுள்ள கடலோர ஊர்களில் வாழும் மீனவர்கள் ஏற்று நடத்துகிறார்கள். மாசிமகத்தில் கோயிலுக்கு எதிரில் உள்ள தேவதீர்த்தத்தில் நீராடுவது சிறப்பானதாகச் சொல்லப்படுகிறது.

திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய பதிகம் 3-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

வண்டு இரைக்கும் மலர்க்கொன்றை விரிசடைமேல் வரி அரவஙம்
கண்டு இரைக்கும் பிறைச் சென்னிக் காபாலி கனைகழல்கள்
தொண்டு இரைத்துத் தொழுது இறைஞ்சத் துளங்கொளிநீர்ச் சுடர்ப்பவளம்
தெண்டிரைக்கள் கொணர்ந்து எறியும் திருவேட்டக் குடியாரே. 

பாய் திமிலர் வலையோடு மீன்வாரிப் பயின்று எங்கும்
காசினியில் கொணர்ந்து அட்டும் கைதல்சூழ் கழிக்கானல்
போய் இரவில் பேயோடும் புறங்காட்டில் புரிந்து அழகார்
தீ எரி கை மகிழ்ந்தாரும் திருவேட்டக் குடியாரே.  

தோத்திரமா மணல் லிங்கம் தொடங்கி ஆன் நிரையின்பால்
பாத்திரமா ஆட்டுதலும் பரஞ்சோதி பரிந்து அருளி
ஆத்தம் என மறைநால்வர்க்கு அறம்புரிநூல் அன்று உரைத்த
தீர்த்தம் மல்கு சடையாரும் திருவேட்டக் குடியாரே. 

கலவம் சேர் கழிக்கானல் கதிர்முத்தம் கலந்து எங்கும்
அலவன் சேர் அணைவாரிக் கொணர்ந்து எறியும் அகன்றுறைவாய்
நிலவு அம்சேர் நுண்ணிடைய நேரிழையாள் அவளோடும்
திலகம் சேர் நெற்றியினார் திருவேட்டக் குடியாரே. 

பங்கம் ஆர் கடல் அலறப் பருவரையோடு அரவு உழலச்
செங்கண் மால் கடைய எழு நஞ்சு அருந்தும் சிவமூர்த்தி
அங்கம் நான்மறை நால்வர்க்கு அறம் பொருளின் பயன் அளித்த
திங்கள் சேர் சடையாரும் திருவேட்டக் குடியாரே. 

நாவாய பிறைச்சென்னி நலம் திகழும் இலங்கு இப்பி
கோவாத நித்திலங்கள் கொணர்ந்து எறியும் குளிர்கானல்
ஏ ஆரும் வெஞ்சிலையால் எயின்மூன்றும் எரிசெய்த
தேவாதி தேவனார் திருவேட்டக் குடியாரே.  

பான் நிலவும் பங்கயத்துப் பைங்கானல் வெண்குருகு
கான் நிலவு மலர்ப்பொய்கைக் கைதல் சூழ் கழிக் கானல்
மானின் விழி மலைமகளோடு ஒருபாகம் பிரிவு அரியார்
தேனிலவு மலர்ச்சோலைத் திருவேட்டக் குடியாரே.  

துறை உலவு கடலோதம் சுரிசங்கம் இடறிப்போய்
நறை உலவும் பொழிற்புன்னை நல் நீழல் கீழ் அமரும்
இறைபயிலும் இராவணன் தன் தலைபத்தும் இருபதுதோள்
திறல் அழிய அடர்த்தாரும் திருவேட்டக் குடியாரே.  

அருமறை நான்முகத்தானும் அகலிடம் நீர் ஏற்றானும்
இருவருமாய் அளப்பரிய எரியுருவாய் நீண்டபிரான்
வருபுனலின் மணி உந்தி மறிதிரையார் சுடர்ப்பவளத்
திருவுருவில் வெண்ணீற்றார் திருவேட்டக் குடியாரே.  

இகழ்ந்து உரைக்கும் சமணர்களும் இடும்போர்வைச் சாக்கியரும்
புகழ்ந்து உரையாப் பாவிகள் சொல் கொள்ளேன்மின் பொருள் என்ன
நிகழ்ந்து இலங்கு வெண்மணலில் நிறைத்துண்டப் பிறைக்கற்றை
திகழ்ந்து இலங்கு செஞ்சடையார் திருவேட்டக் குடியாரே.  

தெண் திரை சேர் வயல் உடுத்த திருவேட்டக் குடியாரைத்
தண்டு அலைசூழ் கலிக்காழித் தமிழ் ஞானசம்பந்தன்
ஒண் தமிழ்நூல் இவைபத்தும் உணர்ந்தேத்த வல்லார்போய்
உண்டு உடுப்பில் வானவரோடு உயர்வானத்து இருப்பாரே.  

திருவேட்டக்குடி திருமேனி அழகர் ஆலயம் புகைப்படங்கள்


5 நிலை இராஜகோபுரம்


விசாலமான முன் மண்டபம்


கொடி மரம், நந்தி மண்டபம்


சௌந்தரநாயகி அம்மன் சந்நிதி


உற்சவர் வேடமூர்த்தி


இறைவன் சுந்தரேஸ்வரர் சந்நிதி


வெளிப் பிரகாரத்தில் சுந்தர விநாயகர் சந்நிதி


உற்சவர் வேடுவச்சி


நவக்கிரக சந்நிதி


புன்னை வனநாதர் சந்நிதி, மகாலட்சுமி சந்நிதி