Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்


தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

பார்வதீஸ்வரர் கோவில், திருதெளிச்சேரி

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருதெளிச்சேரி (தற்போது கோயில்பத்து என்று வழங்குகிறது)
இறைவன் பெயர்பார்வதீஸ்வரர்
இறைவி பெயர்ஸ்ரீ சுயம்வர தபஸ்வினி, சக்திநாயகி
பதிகம்திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது இத்தலம் காரைக்கால் நகரின் ஒரு பகுதியாக இருக்கிறது. கோவில் உள்ள பகுதி கோயில்பத்து என்று வழங்குகிறது. அருகில் உள்ள ரயில் நிலையம் காரைக்கால்.
ஆலய முகவரிஅருள்மிகு பார்வதீஸ்வரர் திருக்கோயில்
கோயில்பத்து
காரைக்கால் அஞ்சல்
புதுச்சேரி மாநிலம்
PIN - 609602

இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.

கோவில் அமைப்பு: முன்னால் ஒரு நுழைவாயிலும், அதனையடுத்து ஐந்து நிலைகள் கொண்ட மேற்கு நோக்கிய பெரிய ராஜகோபுரத்துடன் இவ்வாலயம் விளங்குகிறது. கோபுரத்தில் சிற்பங்கள் நிறைந்து காணப்படுகின்றன. உள்ளே நுழைந்தவுடன் உள்ள முன் மண்டபத்தில் செப்புக் கவசமிட்ட கொடிமரம், அதன் அருகே கொடிமர விநாயகர் காணலாம். கருவறை முக மண்டபத்தில் அம்பாள் ஸ்ரீ சுயம்வர தபஸ்வினி தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள். அம்பாள் கருவறை வாயிலில் இருபுறமும் துவாரபாலகியர் காணப்படுகின்றனர். இறைவன் பார்வதீஸ்வரர் கருவறையில் லிங்க உருவில் மேற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். கருவறை வாயிலில் இருபுறமும் துவாரபாலகர், இறைவனை நோக்கி நந்தியெம் பெருமான் ஆகியோரும் உள்ளனர். கருவறைச் சுற்றில் 63 லமூவர், நர்த்தன கணபதி, சூரியன், சனீஸ்வரன் ஆகியோர் உள்ளனர். கருவறை கிழக்குச் சுற்றில் வள்ளி, தெய்வானை சமேத முருகர் சந்நிதியும் உள்ளது. கோஷ்ட தெய்வங்களாக தட்சினாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை, ஆகியோரைக் காணலாம், சனீஸ்வரனுக்கு தனி சந்நிதி இங்குள்ளது குறிப்பிடத் தக்கது.

இத்தலத்தில் சூரியபுஷ்கரணி, குகதீர்த்தம், தவத்தீர்த்தம் ஆகய மூன்று தீர்த்தங்கள் உள்ளன. இவற்றுள் சீரியனால் உண்டாக்கப்பட்ட சூரிய புஷ்கரணி சிறந்ததாகும். ஞாயிற்றுக்கிழமைகளில் வைகறையில் இத் தீர்த்தத்தில் நீராடுவது சிறப்பாகச் சொல்லப்படுகிறது. பங்குனி மாதத்தில் 13-ம் தேதி முதல் 7 நாட்கள் சூரியபூசை நிகழ்கிறது எனபதும் குறிப்பிடத் தக்கதாகும்.

புத்தரை வாதில் வென்றது: இத்தலத்திற்கு அருகாமையில் போதிமங்கை என்னும் ஊர் இருக்கின்றது. அவ்வூரில், புத்தர்கள் அதிகமாக வசித்து வந்தனர். திருத்தெளிச்சேரியை தரிசித்த பின் போதிமங்கை வழியாக ஞானசம்பந்தரது அடியார் திருக்கூட்டம் ஞானசம்பந்தர் புகழைப் பாடியவாறு சென்றது. அதைப் பொறுக்காத புத்தர்கள் தடுத்தனர். அப்பொழுது தேவாரத் திருமுறை எழுதும் சம்பந்தரின் அடியார், சம்பந்தரின் பஞ்சாட்சரப் பதிகத்திலிருந்து

புத்தர் சமண் கழுக் கையர் பொய்கொளாச்
சித்தத்தவர்கள் தெளிந்து தேறின
வித்தக நீறு  அணிவார் வினைப்பகைக்கு
அத்திரம் ஆவன அஞ்செழுத்துமே.

பொழிப்புரை :

புத்தர்களும், சமணர்களும் கூறும் பொய் வார்த்தைகளை 
மனத்திற் கொள்ளாத தெளிந்த சித்தத்தவர்களால் உறுதியுடன் 
ஓதப்படுவன திருவைந்தெழுத்தாகும். சகல சக்திகளுமுடைய 
திருநீற்றை அணிபவர்களுடன் போர்புரிய வரும் பகைவர்களை 
எதிர்த்து அம்புபோல் பாய்ந்து அழிக்கவல்லன திருவைந்தெழுத்தேயாகும்.

என்ற பாடலைப் பாட புத்தர்கள் தலைவனான புத்தநந்தி தலையில் இடி விழுந்தது. உடனே அவன் இறந்து போனான். மீளவும் புத்தர்கள் சாரி புத்தனைத் தலைவனாகக் கொண்டு வாது செய்ய வந்தனர். தேவாரத் திருமுறை எழுதும் சம்பந்தரின் அடியார் ஞானசம்பந்தர் முன்னிலையில் அவர்களை வாதில் வென்றார். புத்தர்கள் தங்கள் பிழை உணர்ந்து ஞானசம்பந்தரை வணங்கி சைவர் ஆனார்கள்.

திருஞானசம்பந்தர் பாடியருளியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் இரண்டாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. இத்தல பதிகத்தை தினமும் ஓதுவோர் வானவர்கள் சூழ வாழ்ந்திருப்பர் என்று பதிகத்தின் படைசி பாடலில் சம்பந்தர் குறிப்பிடுகிறார்.

பூ அலர்ந்தன கொண்டு முப்போதும் உம் பொற்கழல்
தேவர் வந்து வணங்கும்  மிகு தெளிச்சேரியீர்
மே வரும் தொழிலாளொடு கேழற்பின் வேடனாம்
பாவகம் கொடு நின்றது போலும் நும் பான்மையே. 
 
விளைக்கும் பத்திக்கு விண்ணவர் மண்ணவர் ஏத்தவே
திளைக்கும் தீர்த்தம் அறாத திகழ் தெளிச்சேரியீர்
வளைக்கும் திண்சிலை மேலல் ஐந்து பாணமும் தான் எய்து
களிக்கும் காமனை எங்ஙனம் நீர் கண்ணிற் காய்ந்ததே.  

வம்படுத்த மலர்ப்பொழில் சூழ மதி தவழ்
செம்படுத்த செழும் புரிசைத் தெளிச்சேரியீர்
கொம்ப் அடுத்தது ஓர் கோல விடைமிசை கூர்மையோடு
அம்பு அடுத்த கண்ணாளொடு மேவல் அழகிதே.  

கார் உலாம் கடல் இப்பிகள் முத்தங் கரைப்பெயும்
தேர் உலாம் நெடுவீதி அது ஆர் தெளிச்சேரியீர்
ஏர் உலாம் பலிக்கு ஏகிட வைப்பிடம் இன்றியே
வார் உலாம் முலையாளை ஓர் பாகத்து வைத்ததே. 

பக்கம் நும் தமைப் பார்ப்பதி யேத்தி முன் பாவிக்கும்
செக்கர் மா மதி சேர் மதில் சூழ் தெளிச்சேரியீர்
மைக்கொள் கண்ணியர் கைவளை மால்செய்து வௌவவே
நக்கராய் உலகெங்கும் பலிக்கு நடப்பதே. 

தவள வெண்பிறை தோய்தரு தாழ்பொழில் சூழ நல்
திவள மாமணி மாடம் திகழ் தெளிச்சேரியீர்
குவளை போற்கண்ணி துண்ணென வந்து குறுகிய
கவள மால்கரி யெங்ஙனம் நீர் கையிற் காய்ந்ததே. 

கோடு அடுத்த பொழிலின் மிசைக்குயில் கூவிடும்
சேடு அடுத்த தொழிலின் மிகு தெளிச்சேரியீர்
மாடு அடுத்த மலர்க்கண்ணினாள் கங்கை நங்கையைத்
தோடு அடுத்த மலர்ச்சடை யென்கொல் நீர் சூடிற்றே. 

கொத்து இரைத்த மலர்க்குழலாள் குயில் கோலஞ்சேர்
சித்திரக் கொடி மாளிகை சூழ் தெளிச்சேரியீர்
வித்தகப் படை வல்ல அரக்கன் விறற்றலை
பத்து இரட்டிக் கரம் நெரித்திட்டதும் பாதமே. 

காலெடுத்த திரைக்கை கரைக்கு எறி கானல்சூழ்
சேலடுத்த வயல் பழனத் தெளிச்சேரியீர்
மால் அடித்தலர் மாமலரான் முடி தேடியே
ஓலம் இட்டிட எங்ஙனம் ஓர் உருக் கொண்டதே. 

மந்திரம் தரு மா மறையோர்கள் தவத்தவர்
செந்தி லங்கு மொழியவர் சேர் தெளிச்சேரியீர்
வெந்த லாகிய சாக்கியரோடு சமணர்கள்
தம் திறத்தன நீக்குவித்தீர் ஓர் சதிரரே. 

திக்கு உலாம் பொழில் சூழ் தெளிச் சேரி எம் செல்வனை
மிக்க காழியுள் ஞானசம் பந்தன் விளம்பிய
தக்க பாடல்கள் பத்தும் வல்லார்கள் தடமுடித்
தொக்க வானவர் சூழ இருப்பவர் சொல்லிலே. 

திருதெளிச்சேரி பார்வதீஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்


5 நிலை இராஜகோபுரம்


கொடி மரம், விநாயகர்


வள்ளி, தெய்வானை சமேத முருகர் சந்நிதி


சனீஸ்வரன் சந்நிதி


வெளிப் பிரகாரம்


63 மூன்று நாயன்மார்கள்


ஸ்ரீ சுயம்வர தபஸ்வினி சந்நிதி


பார்வதீஸ்வரர் சந்நிதி