Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்

தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில், திருநள்ளாறு

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருநள்ளாறு
இறைவன் பெயர்தர்ப்பாரண்யேஸ்வரர்
இறைவி பெயர்பிராணம்பிகை, போகமார்த்த பூன்முலையாள்
பதிகம்திருநாவுக்கரசர் - 2
திருஞானசம்பந்தர் - 4 (இவற்றில் ஒரு பதிகம் திருநள்ளாறு, திருஆலவாய் இரண்டிற்கும் பொதுவானது)
சுந்தரர் - 1
எப்படிப் போவது காரைக்காலில் இருந்து மேற்கே 5 கி.மி. தொலைவில் திருநள்ளாறு ஸ்தலம் இருக்கிறது. திருநள்ளாறு நவக்ரஹ ஸ்தலங்களில் சனி பகவானுக்கு உரிய ஸ்தலம் ஆகும்.

இத்தலம் தியாகராஜருக்குரிய சப்தவிடங்கத் தலங்களில் ஒன்றாகும். இங்குள்ள தியாகராஜர் தகவிடங்கர் எனப்படுகிறார். அவர் ஆடும் நடனம் உன்மத்த நடனம் எனப்படும். இத்தலத்தின் மூலவராக சிவபெருமான் தர்ப்பாரண்யேஸ்வரர் என்ற பெயருடன் அருள் பாலித்து வந்தாலும், இத்தலத்தின் பெருமைக்கு மூலகாரணமாக இருப்பவர் இத்தலத்தில் தனி சந்நிதியில் எழுந்தருளியுள்ள சனீஸ்வரர் ஆவார். நவக்கிரக ஸ்தலங்களில் சனி பகவானுக்கு உரிய ஸ்தலமாக திருநள்ளாறு விளங்குகிறது. மூலவர் தர்ப்பாரண்யேஸ்வரர் சந்நிதிக்கும், இறைவி பிராணம்பிகை சந்நிதிக்கும் இடையில் சனீஸ்வரர் சந்நிதி அமைந்துள்ளது. சனிக்கழமைகளில் சனீஸ்வரரை வழிபடுவதற்காக பக்தர்கள் பெருமளவில் இங்கு கூடுகிறார்கள்.

நள தீர்த்தம்: இக்கோவிலுக்கு அருகில் நள தீர்த்தம் என்ற பெயரில் ஒரு பெரிய குளம் இருக்கிறது. சனியின் ஆதிக்கத்திற்கு உள்ளான நளச் சக்கரவர்த்தி பல துன்பங்களை அனுபவித்தான். கடைசியில் இத்தலம் வந்து இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி சனி பகவானையும், இறைவன் தர்ப்பாரண்யேஸ்வரரையும் வழிபட்டு துன்பம் நீங்கப் பெற்றான். நளன் நீராடிய தீர்த்தம் அவன் பெயரால் நள தீர்த்தம் என்று பெயர் பெற்றது. சனிப் பெயர்ச்சியின் போது அவர் அவர்கள் ஜாதகத்தின் தன்மைக்குத் தக்கவாறு நன்மை தீமைகள் நடைபெறகூடும் என்பதால் இந்நாளில் சனிபகவானுக்கு தீபமேற்றி வழிபட்டால் நன்மை உண்டாகும் என்பது மக்கள் நம்பிக்கை. இதனால் ஒவ்வொரு சனிப் பெயர்ச்சியின் போதும் லக்ஷக்கணக்கில் இங்கு வந்து நள தீர்த்தத்தில் நீராடி சனி பகவானையும், இறைவன் தர்ப்பாரண்யேஸ்வரரையும் வழிபாடு செய்கின்றனர்.