Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்


தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

பிரம்மபுரீஸ்வரர் கோவில், அம்பர் பெருந்திருக்கோவில்

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்அம்பர் பெருந்திருக்கோவில்
இறைவன் பெயர்பிரம்மபுரீஸ்வரர்
இறைவி பெயர்பூங்குழல் அம்மை
பதிகம்திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது மயிலாடுதுறை - திருவாரூர் சாலை மார்க்கத்தில் உள்ள பூந்தோட்டம் என்ற ஊரில் இருந்து 3 கி.மி. தூரத்தில் இத்தலம் இருக்கிறது. பூந்தோட்டம் மயிலாடுதுறையில் இருந்து சுமார் 23 கி.மி. தொலைவில் உள்ளது. பேரளம் என்ற ஊரிலிருந்து பூந்தோட்டம் வழியாக காரைக்கால் செல்லும் சாலையில் சுமார் 7 கி.மி. தொலைவில் இத்தலம் உள்ளது. அம்பர் மாகாளம் என்ற மற்றொரு பாடல் பெற்ற ஸ்தலம் பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் இருந்து மேற்கே 1 கி.மி. தொலைவில் உள்ளது.
ஆலய முகவரி அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்
அம்பல்
வழி பூந்தோட்டம்
நன்னிலம் வட்டம்
திருவாரூர் மாவட்டம்
PIN - 609503

இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

கோவில் அமைப்பு: அரிசிலாற்றின் வடகரையில் அமைந்துள்ள இவ்வாலயத்தின் ராஜகோபுரம் மூன்று நிலைகளையுடையது. கோவிலின் பெயர் அம்பர் பெருந்திருக்கோவில். யானை ஏறமுடியாதவாறு படிக்கட்டுகள் அமைத்துச் சிறு குன்று போல் கோவில் அமைந்துள்ளதால் இக்கோவிலுக்கு பெருந்திருக்கோவில் என்ற பெயர் ஏற்பட்டது. கோச்செங்கட் சோழனால் கட்டப்பட்ட மாடக் கோவிலகளில் இதுவும் ஒன்று. கோவில் கிழக்கு நோக்கியுள்ளது. இறைவன் சந்நிதிக்குச் செல்லும் படிக்கட்டுகள் தெற்கு நோக்கயவாறு அமைந்துள்ளன. இராஜகோபுரம் வழியாக உள்ளே சென்றால் விசாலமான முற்றம் உள்ளது.சுதையாலான பெரிய நந்தி இங்குள்ளதைக் காணலாம். இடப்பக்கத்தில் உள்ள கிணறு "அன்னமாம் பொய்கை" என்று வழங்குகிறது. பக்கத்தில் சிவலிங்க மூர்த்தம் உள்ளது. பிரமன் இக்கிணற்றுத் தீர்த்தத்தில் நீராடி, பக்கத்தில் உள்ள சிவலிங்கமூர்த்தியை வழிபட்டு அன்ன வடிவம் பெற்ற சாபம் நீங்கப்பெற்றார் என்பது தலவரலாறு.

படியேறிச் செல்வதற்கு முன்னரே கிழக்கு மதிற்சுவர் மாடத்தில் கிழக்கு நோக்கித் தல விநாயகரான படிக்காசு விநாயகர் எழுந்தருளி இருக்கிறார். இவர் சந்நிதியில் அடுத்தடுத்து மூன்று சிறிய விநாயக மூர்த்தங்கள் உள்ளன. அதே போன்று பிரகாரத்திலுள்ள விநாயகர் சந்நிதியிலும் மூன்று விநாயகர் சிலைகளும் இருக்கின்றன. பிரகாரத்தில் சுப்பிரமணியர், மகாலட்சுமி, ஜம்புகேஸ்வரர் ஆகியோரின் சந்நிதிகளும் உள்ளன. அம்பாள் சந்நிதி தனியே உள்ளது. நின்ற திருமேனி. சந்நிதிக்கு வெளியில் இருபுறமும் ஆடிப்பூர அம்மன் சந்நிதியும் பள்ளியறையும் உள்ளன. வலம் முடித்துப் படிகளேறி மேலே சென்றால் சோமாஸ்கந்தர் சந்நிதியும் மறுபுறம் விநாயகர், கோச்செங்கட் சோழன், சரஸ்வதி, ஞானசம்பந்தர், அப்பர் ஆகிய மூலத்திருமேனிகளும் உள்ளன. துவாரபாலகர்களையும் விநாயகரையும் வணங்கிச் சென்று சிறிய வாயில் வழியாக உள்ளிருக்கும் மூலவரைத் தரிசிக்கலாம். இங்கு பிரம்மபுரீஸ்வரர் சுயம்புமூர்த்தியாக காட்சி தருகிறார். மூலவரின் பின்னால் சோமாஸ்கந்தர் காட்சியளிக்கின்றார். வலதுபுறம் நடராச சபை உள்ளது. இக்கோயிலில் அம்பலவாணர் மூர்த்தங்கள் மூன்று உள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா உள்ளனர்.

தல வரலாறு: ஒரு முறை படைப்புக் கடவுளான பிரம்மாவிற்கும், காக்கும் கடவுளான மஹாவிஷ்னுவிற்கும் அவர்கள் இருவரில் யார் உயர்ந்தவர் என்ற வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்களின் அறியாமையை அகற்றிட சிவபெருமான் அவர்கள் முன் சோதி வடிவம் கொண்டு ஓங்கி உயர்ந்து நின்றார். வராக அவதாரம் எடுத்த திருமால் பூமியைக் குடைந்து சென்றார். பிரம்மா அன்னப் பறவை உருவெடுத்து உயரப் பறந்து சென்றார். இருவராலும் சோதியின் அடி முடியைக் காண இயலவில்லை. சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்பதைப் புரிந்து கொண்ட இருவரும் அவரை வணங்கினர். சிவபெருமானும் அவர்களுக்கு சோதி வடிவிலிருந்து ஓர் மலையாக மாறி திருவண்ணாமலையில் காட்சி கொடுத்தார். ஆயினும் பிரம்மா அன்னப்பறவை உருவெடுத்து சிவபெருமானின் முடியைக் கண்டதாக பொய் கூறியதால் சிவபெருமான் பிரம்மாவை அன்னமாகும்படி சபித்தார். பிரம்மா பிழைபொறுக்க இறைவனை வேண்டினான். பெருமான் புன்னாகவனம் என்னும் இத்தலத்தை அடைந்து தவம் செய்யுமாறு கூறினார். பிரம்மாவும் அவ்வாறே இத்தலத்தை அடைந்து பொய்கை ஒன்றை உண்டாக்கி அதன் நீரால் இறைவனுக்கு அபிஷேகம் செய்து பல ஆண்டுகள் வழிபட்டு அன்ன உருவம் நீங்கி பழைய உருவம் பெற்று, படைப்புத் தொழிலை மேற்கொண்டார். பிரம்மனுக்கு இறைவன் காட்சி வழங்கிய ஐதீக விழா ஆண்டுதோறும் மாசி மகத்தன்று நடக்கிறது. பிரம்மா உண்டாக்கிய பொய்கை "அன்னமாம் பொய்கை" என்று பெயர் பெற்றது.

அம்பன், அம்பரன் என்ற் இரு அசுரர்கள் இத்தல இறைவனை பூஜை செய்து இறவா வரம் பெற்றனர். அவர்கள் வழிபட்டதால் இத்தலம் அம்பர் எனப் பெயர் பெற்றது. அம்பன், அம்பரன் ஆகிய இருவரும் தாங்கள் பெற்ற தவவலிமையால் உலகிற்கு இடையூறு விளைவித்து வந்தனர். தேவர்கள் வழக்கப்படி சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். பெருமான் பார்வதியை நோக்க, குறிப்பறிந்த தேவி காளியாக உருமாறினாள். காளி கன்னி உருவெடுத்து அவர்கள் முன் வர, வந்த அம்பிகையை இருவரும் சாதாரணப் பெண் எனக்கருதி அவரை அடைய சண்டையிட்டனர். இருவருக்கும் இடையில் நடந்த சண்டையில் மூத்தவன் இறந்தான். இளையவனைக் காளி கொன்றாள். காளி அம்பரனைக் கொன்ற இடமே அம்பகரத்தூர் ஆகும்.

63 நாயன்மார்களில் ஒருவரான சோமாசிமாற நாயனார் அவதரித்த தலம் இதுவே. இவருக்கு சோமயாகம் செய்ய வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. யாகத்தின் அவிர்பாகத்தை சிவபெருமானே நேரில் வந்து பெறவேண்டும் என விரும்பினார். இறைவனை நேரடியாக அழைக்க வேண்டுமானால், அவரது நண்பர் சுந்தரரின் நட்பை முதலில் பெற வேண்டும் என்று நினைத்தார். இந்நிலையில் சுந்தரருக்கு தூதுவளை கீரை மிகவும் பிடிக்கும் என்பதை அறிந்த சோமாசிமாறர் அவருக்கு தினமும் தூதுவளை கீரை கொடுத்து அனுப்பினார். இதைக் கொடுத்து அனுப்புவது யாரென்பது சுந்தரருக்குத் தெரியாது. ஆனால், மனைவி சங்கிலி அம்மையாருக்கு கீரை கொடுத்தனுப்புவது யார் என்று தெரியும். கீரையைக் கொடுத்தனுப்பியவரை பார்க்க வந்தார் சுந்தரர். அப்போது சோமாசி மாறனார், தான் நடத்தும் யாகத்திற்கு இறைவனை அழைத்து வரும்படி சுந்தரரிடம் வேண்டினார். சுந்தரரும் அதற்கு சம்மதித்து இறைவனிடம் வேண்ட, இறைவனும், வைகாசி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் நடக்கும் யாகத்திற்கு வருவதாக வாக்களித்தார்.

இறைவனே நேரடியாக வருவதால் நாட்டில் பல பகுதியிலிருந்தும் வேத விற்பன்னர்கள், முனிவர்கள், ஆன்றோர்கள், சான்றோர்கள் சூழ யாகம் சிறப்பாக நடந்தது. நான்கு வேதங்களை நான்கு நாய்களாக மாற்றி, இறந்த ஒரு கன்றினை சுமந்தபடி நீசனைப் போல் உருமாறி வந்தார் சிவன். அவருடன் பார்வதி தேவி தலையில் மதுக்குடத்துடன் வந்தாள். கீழ்சாதிப் பிள்ளகள் போல் உருமாறிய பிள்ளையாரும், முருகனும் அவர்களுடன் வந்தனர். இவர்களை அடையாளம் தெரியாததால், யாகத்தில் ஏதோ தவறு நடந்து விட்டதாகக் கருதி வேதியர்கள் ஓடிவிட்டனர். சோமாசிமாற நாயனார் இறைவன் வருவார் என்று எதிர்பார்த்து இருந்த நேரத்தில் இவ்வாறு நீசன் ஒருவன் குடும்பத்தோடு வந்திருக்கிறானே என்று வருத்தப்பட்டார். உடனே விநாயகர் தன் சுயரூபத்தில் சோமாசிமாறருக்கும், அவர் மனைவிக்கும் காட்சி தந்து, வந்திருப்பது சிவன் என்பதை உணர்த்தினார். மகிழ்ந்த சோமாசிமாறர் சிவனாகிய தியாகராஜருக்கு அவிர்பாகம் கொடுத்து சிறப்பு செய்தார். தியாகராஜரும் நீசக்கோலம் நீங்கி, பார்வதி சமேதராக சோமசிமாறருக்கு காட்சி கொடுத்து அவரை நாயன்மார்களில் ஒருவராக்கினார். சோமாசிமாறர் யாகம் செய்த இடம் அம்பர் பெருந்திருக்கோவிலில் இருந்து அம்பர் மாகாளம் செல்லூம் சாலை வழியில் சாலையோரத்தில் உள்ளது.

திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய பதிகம் 3-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. கோச்செங்கட் சோழனால் கட்டப்பட்ட ஆலயம் இது என்பதை தனது பதிகத்தில் இவர் குறிப்படுகிறார். எழுபது மாடக்கோயில்களைக் கட்டிய கோச்செங்கட் சோழனின் கடைசித் திருப்பணி எனக் கூறப்படும் திருக்கோயில் இதுவாகும்.

எரிதர அனல்கையில் ஏந்தி எல்லியில்
நரிதிரி கானிடை நட்டம் ஆடுவர்
அரிசிலம் பொருபுனல் அம்பர் மாநகர்க்
குரிசில்செங் கண்ணவன் கோயில் சேர்வரே.  

மையகண் மலைமகள் பாக மாயிருள்
கையதோர் கனலெரி கனல ஆடுவர்
ஐயநன் பொருபுனல் அம்பர்ச் செம்பியர்
செய்யகண் ணிறைசெய்த கோயில் சேர்வரே.  

மறைபுனை பாடலர் சுடர்கை மல்கவோர்
பிறைபுனை சடைமுடி பெயர ஆடுவர்
அறைபுனல் நிறைவயல் அம்பர் மாநகர்
இறைபுனை யெழில்வளர் இடம தென்பரே.  

இரவுமல் கிளமதி சூடி யீடுயர்
பரவமல் கருமறை பாடி யாடுவர்
அரவமோ டுயர்செம்மல் அம்பர்க் கொம்பலர்
மரவமல் கெழில்நகர் மருவி வாழ்வரே. 

சங்கணி குழையினர் சாமம் பாடுவர்
வெங்கனல் கனல்தர வீசி யாடுவர்
அங்கணி விழவமர் அம்பர் மாநகர்ச்
செங்கண்நல் இறைசெய்த கோயில் சேர்வரே.  

கழல்வளர் காலினர் சுடர்கை மல்கவோர்
சுழல்வளர் குளிர்புனல் சூடி யாடுவர்
அழல்வளர் மறையவர் அம்பர்ப் பைம்பொழில்
நிழல்வளர் நெடுநகர் இடம தென்பரே. 

இகலுறு சுடரெரி இலங்க வீசியே
பகலிடம் பலிகொளப் பாடி யாடுவர்
அகலிடம் மலிபுகழ் அம்பர் வம்பவிழ்
புகலிடம் நெடுநகர் புகுவர் போலுமே.  

எரியன மணிமுடி இலங்கைக் கோன்றன
கரியன தடக்கைகள் அடர்த்த காலினர்
அரியவர் வளநகர் அம்பர் இன்பொடு
புரியவர் பிரிவிலாப் பூதஞ் சூழவே.  

வெறிகிளர் மலர்மிசை யவனும் வெந்தொழிற்
பொறிகிளர் அரவணைப் புல்கு செல்வனும்
அறிகில அரியவர் அம்பர்ச் செம்பியர்
செறிகழல் இறைசெய்த கோயில் சேர்வரே. 

வழிதலை பறிதலை யவர்கள் கட்டிய
மொழிதலைப் பயனென மொழியல் வம்மினோ
அழிதலை பொருபுனல் அம்பர் மாநகர்
உழிதலை யொழிந்துளர் உமையுந் தாமுமே. 

அழகரை யடிகளை அம்பர் மேவிய
நிழல்திகழ் சடைமுடி நீல கண்டரை
உமிழ்திரை யுலகினில் ஓதுவீர் கொண்மின்
தமிழ்கெழு விரகினன் தமிழ்செய் மாலையே. 

அம்பர் பெருந்திருக்கோவில் பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்


3 நிலை கோபுரம்


கொடிமரம், பலிபீடம், நந்தி


பலீபீடத்திற்கு அருகில் ஒரு பெரிய நந்தி, ஒரு சிறிய நந்தி


நவக்கிரக சந்நிதி

அம்பர் பெருந்திருக்கோவில் பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்


மாடக்கோவில் தோற்றம்


மாடக்கோவில் மற்றொரு தோற்றம்


கன்னிமூலை விநாயகர் சந்நிதி


சோமாசிமாறர் யாகம் செய்த இடம்