Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்

மாகாளநாதர் கோவில், அம்பர் மாகாளம்

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்அம்பர் மாகாளம்
இறைவன் பெயர்மாகாளநாதர், காளகண்டேஸ்வரர்
இறைவி பெயர்பக்ஷயாம்பிகை
பதிகம்திருஞானசம்பந்தர் - 3
எப்படிப் போவது மயிலாடுதுறை - திருவாரூர் மார்க்கத்தில், மயிலாடுதுறையில் இருந்து 25 கி.மி. தொலைவில் பூந்தோட்டம் என்ற ஊரின் அருகே அரிசிலாற்றின் கரையில் இத்தலம் அமைந்துள்ளது. பேரளம் என்ற ஊரிலிருந்து சுமார் 7 கி.மி. தொலைவில் இத்தலம் உள்ளது. அம்பர் பெருந்திருக்கோவில் என்ற மற்றொரு பாடல் பெற்ற ஸ்தலம் மாகாளநாதர் கோவிலுக்கு கிழக்கே 1 கி.மி. தொலைவில் உள்ளது.
ஆலய முகவரிஅருள்மிகு மாகாளநாதர் திருக்கோயில்
அம்பர் மாகாளம்
பூந்தோட்டம் அஞ்சல்
நன்னிலம் வட்டம்
திருவாரூர் மாவட்டம்
PIN - 609503

இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

மாகாளம் என்ற பெயர் பெற்ற சிவஸ்தலங்கள் இந்தியாவில் மூன்று இடங்களில் இருக்கின்றன. அவை வட இந்தியாவிலுள்ள உஜ்ஜயனி மாகாளம், தொண்டை நாட்டுத் தலமான இரும்பை மாகாளம், மற்றும் காவிரி தென்கரைத் தலங்களில் ஒன்றான அம்பர் மாகாளம் என்ற இத்தலம்.

புராண வரலாறு: 63 நாயன்மார்களில் ஒருவரான சோமாசிமார் நாயனார் நடத்திய யாகத்திறகு இறைவனும் இறைவியும் நேரில் வந்த தலம் இதுவாகும். சோமாசிமாற நாயனார் விரும்பியபடி, அவர் நடத்தும் சோமயாகத்திற்கு இறைவன் நேரில் எழுந்தருளினார். ஆனால் பறையன் உருவில் எழுந்தருளுகிறார். நான்கு வேதங்களையும் நான்கு நாய்களாகப் பிடித்துக் கொண்டு தம்பட்டம், மதுக்குடம், மாட்டு இறைச்சி ஆகியவற்றை சுமந்து கொண்டு யாகத்திற்கு எழுந்தருளுகிறார். யாகத்தை நடத்திவந்த அந்தணர்கள், பறையன் வந்ததால் யாகம் கெட்டுவிட்டது என்று கூறி ஓடி விடுகின்றனர். தந்தை தான் இவ்வாறு வருகிறார் என்பதை சோமாசிமாற நாயனாருக்கு விநாயகர் குறிப்பாக உணர்த்தி அச்சத்தைப் போக்கினார். ஆகையால் சோமாசிமாள நாயனார் வந்திருப்பது இறைவன் எனத் தெரிந்து, தனது மனைவியுடன் பறைத் தமபதிகளை எதிர்கொண்டு வரவேற்று அவிர்பாகம் கொடுக்கிறார்கள். இறைவனும் தனது பறையன் உருவைக் களைந்து ரிஷப வாகனத்தில் சோமாசிமாற நாயனாருக்கும் அவர் மனைவிக்கும் காட்சி கொடுத்து அருளினார். மறுநாள் மகநாளில் அவரைக் கண்டு பயந்து யாகத்திலிருந்து ஓடியவர்களுக்கெல்லாம் காட்சி கொடுத்தருளினார். சோமாசிமாள நாயனாருக்கு இறைவன் வந்திருப்பதைக் குறிப்பால் உணர்த்திய அவ்விநாயகரை அச்சந்தீர்த்த விநாயகர் என்றழைக்கின்றனர்.

புலத்தியர் மரபில் வந்த சம்சாரசீலன் என்பவனிடம் தோற்று தேவேந்திரன் இத்தல இறைவனிடம் அடைக்கலம் அடைந்தான். சுவாமி பைரவ திருக்கோலம் தாங்கி சம்சாரசீலனைக் கொன்று சட்டைநாதராக எழுந்தருளி தேவேந்திரனை மீண்டும் அமராவதிக்கு அதிபதியாக்கினார். அதனால் இத்தலத்திற்கு இந்திரபுரி என்ற பெயரும் ஏற்பட்டது. சட்டைநாதருக்கு இத்தலத்தில் தனி சந்நிதி உள்ளது.

மன்மதன் தேவர்களால் ஏவப்பட்டு, விசுவாமித்தர முனிவரின் தவத்தைக் குலைக்க அவர்மீது மலர்க்கணைகளைத் தொடுத்தான். அதனால் சினம் கொண்ட முனிவர் இந்திரனை சபிக்க, அவன் மாகாளநாதரை வழிபட்டு சாபம் நீங்கப் பெற்றான். அதன் காரணமாக இத்தலம் மாரபுரி என்ற பெயரைப் பெற்றது.

அம்பர் பெருந்திருக்கோவில், அம்பர் மாகாளம் என்ற இரண்டு கோவில்களுக்கும் இடையில் சோமாசிமார் நாயனார் செய்த யாககுண்டம் உள்ளது. ஆண்டு தோறும் வைகாசி மாதம் ஆயில்ய நட்சத்திரம் அன்று இங்கு யாக உற்சவம் நடைபெறும்.

இத்தலத்தில் மாகாள முனிவர், காளி ஆகியோர் இறைவன் மாகாளநாதரை வழிபட்டுள்ளனர். இறைவன் சோழ மன்னன் ஒருவனுக்கு தனது மனக்கோலத்தைக் காட்டியருளிய தலம். அம்பாள் அம்பரனை வதம் செய்ததும் இத்தலத்தில் தான். புன்னை மரம் தலவிருட்சமாகும். இறைவன், இறைவி பறையர் உருவத்தில் செப்புச் சிலை வடிவில் இக்கோவிலில் உள்ளனர். சோமாசிமார் நாயனார், அவர் மனைவி ஆகியோரின் உருவச் சிலைகளும் இக்கோவிலில் உள்ளன. ஆலயம் ஒரு கட்டுமலை மேல் அமைந்துள்ளது. சோழ மன்னன் கோச்செங்கட் சோழன் கட்டிய ஆலயங்களில் இதுவும் ஒன்று.

கோவில் அமைப்பு: இவ்வாலயம் அரிசிலாற்றின் வடகரையில் 5 நிலைகள் கொண்ட கிழக்கு நோக்கிய ராஜகோபுரத்துடன் காட்சி அளிக்கிறது. அம்பரன் என்னும் அசுரனைக் கொன்ற பாவந்தீரக் காளி, இறைவனைப் பூசித்து வழிபட்ட தலம். எனவே "மாகாளம்" என்று பெயர் பெற்றது. . கோபுர வாயில் வழி உள்ளே சென்றால் விசாலமான முற்றம் உள்ளது. இறைவன் சந்நிதிக்கு நேரே பலிபூடமும் நந்தி மண்டபமும் உள்ளன. வடகிழக்கு மூலையில் கல்யாண மண்டபம் உள்ளது. முற்றவெளியை அடுத்து அதிகார நந்தி கோபுரம் என்றழைக்கப்படும் இரண்டாம் கோபுரம் உள்ளது. உள்ளே மகாமண்டபத்தில் நாகநாதசுவாமி லிங்கத் திருமேனியுடன் காட்சி அளிக்கிறார். எதிரில் நந்தியெம் பெருமான், அவருக்கு வலதுபுறம் அம்பிகை அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள். நாகநாதசுவாமிக்குப் பினபுறம் நாககன்னிகை யோகாசனத்தில் வீற்றிருக்கிறாள். நாக கன்னிகை இத்தலத்தில் இறைவனை வழிபட்டு நற்கதி பெற்றாள். காளம் என்றால் நாகம் என்ற பொருளுண்டு. காளம் வழிபட்டதால் மாகாளம் என்று இத்தலம் பெயர் பெற்றது என்றும் கூறுவர். வடக்குப் புறம் சோமாசிமாற நாயனாருக்குக் காட்சி கொடுத்த நாயகர், நடராஜர் மற்றும் பிற உற்சவமூர்த்திகளைக் காணலாம்.

மேலும் உள்ளே சென்றால் மாகாளநாதர் சந்நிதியை அடையலாம். கருவறையில் காளி தன் கையால் பிடித்து வைத்த சிறிய லிங்கத் திருமேனியுடன் இறைவன் சிறிய தோற்றத்தில் எழுந்தருளியுள்ளார். கருவறையை வலம் வரும்போது தெற்குப் புறத்தில் தியாகராஜர் சந்நிதி உள்ளது. அடுத்து 63 மூவர், பரிவார கணபதி, தட்சிணாமூர்த்தி, உதங்க, மதங்க முனிவர்கள், தனுசு சுப்பிரமணியர், மகாலட்சுமி, சண்டேஸ்வரர் ஆகியோரை தரிசிக்கலாம். இங்குள்ள தனுசு சுப்பிரமணியர் வடிவம் வில்லேந்தியவாறு மிக்க அழகாகவுள்ளது. உட்பிரகாரத்தை வலம் வந்துவிட்டு வெளிப் பிரகாரம் வந்தால் அங்கு தென்மேற்கு மூலையில் காளி கோவில் உள்ளது.அன்னை, அம்பாசுரனை வதம் செய்தபின், அந்த தோஷம் நீங்க மாகாளநாதரை வழிபட்ட மாகாளியாவாள்.