Shiva Temples of Tamilnadu
தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்
சகலபுவனேஸ்வரர் கோவில், திருமீய்ச்சூர் இளங்கோவில்
தென்னாடுடைய சிவனே போற்றிஎந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
| தகவல் பலகை | |
|---|---|
| சிவஸ்தலம் பெயர் | திருமீயச்சூர் இளங்கோவில் |
| இறைவன் பெயர் | சகலபுவனேஸ்வரர் |
| இறைவி பெயர் | மின்னு மேகலையாள் |
| பதிகம் | திருநாவுக்கரசர் - 1 |
| எப்படிப் போவது | திருமீய்ச்சூர் மேகநாதர் கோவிலின் உள்ளே வடக்குப் பிரகாரத்தில் திருமீய்ச்சூர் இளங்கோவில் தலம் உள்ளது. |
| ஆலய முகவரி | அருள்மிகு மேகநாதர் (சகலபுவனேஸ்வரர்) திருக்கோயில் திருமீயச்சூர் திருமீயச்சூர் அஞ்சல் வழி பேரளம் நன்னிலம் வட்டம் திருவாரூர் மாவட்டம் PIN - 609405 இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8-45 மணி வரையிலும் திறந்திருக்கும். |
திருமீயச்சூர் மேகநாதர் கோயிலின் உள்ளே வடக்குப் பிரகாரத்தில் உள்ள திருமீயச்சூர் இளங்கோயிலில் கிழக்கு நோக்கி இறைவன் சகல புவனேச்வரரும், தெற்கு நோக்கி இறைவி மின்னு மேகலையாளும் தனித்தனி கருவறையில் வீற்றிருக்கக் காணலாம். அப்பர் பெருமான் தனது பதிகத்தின் 6-வது பாடலில் இத்தல இறைவியை மின்னு மேகலையாள் என்று குறிப்பிடுகிறார். இறைவன் கருவறைச் சுற்றில் கோஷ்டத்தில் வழக்கமாக துர்க்கை காணப்படும் இடத்தில் சதுர்முக சண்டிகேஸ்வரர் காணப்படுகிறார்.
திருநாவுக்கரசு சுவாமிகள் பாடியருளியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் 5-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.
1. தோற்றும் கோயிலும் தோன்றிய கோயிலும் வேற்றுக் கோயில் பலவுள மீயச்சூர்க் கூற்றம் பாய்ந்த குளிர்புன் சடை அரற்கு ஏற்றம் கோயில்கண்டீர் இளங்கோயிலே. 2. வந்தனை அடைக்கும் அடித்தொண்டர்கள் பந்தனை செய்து பாவிக்க நின்றவன் சிந்தனை திருத்தும் திருமீயச்சூர் எம் தமை உடையார் இளங்கோயிலே. 3. பஞ்ச மந்திரம் ஓதும் பரமனார் அஞ்ச ஆனை உரித்மு அனலாடுவார் நெஞ்சம் வாழி நினைந்திரு மீயச்சூர் எம் தமை உடையார் இளங்கோயிலே. 4. நாறு மல்லிகை கூவிளம் செண்பகம் வேறு வேறு விரித்த சடையிடை ஆறு கொண்டு உகந்தான் திருமீயச்சூர் ஏறு கொண்டு உகந்தார் இளங்கோயிலே. 5. வெவ்வ வண்ணத்து நாகம் வெருவவே கவ்வ வண்ணக் கனல் விரித்தாடுவர் செவ்வ வண்ணம் திகழ் திருமீயச்சூர் எவ்வ வண்ணம் பிரான் இளங்கோயிலே. 6. பொன் அம்கொன்றையும் பூ அணி மாலையும் பின்னும் செஞ்சடை மேற் பிறை சூடிற்று மின்னு மேகலையாளொடு மீயச்சூர் இன்ன நாள் அகலார் இளங்கோயிலே. 7. படைகொள் பூதத்தன் பைங்கொன்றைத் தாரினன் சடைகொள் வெள்ளத்தன் சாந்த வெண் நீற்றினன் விடைகொள் ஊர்தியினான் திருமீயச்சூர் இடை கொண்டு ஏத்த நின்றார் இளங்கோயிலே. 8. ஆறு கொண்ட சடையினர் தாமும் ஓர் வேறு கொண்டது ஓர் வேடத்தர் ஆகிலும் கூறு கொண்டு உகந்தாளொடு மீயச்சூர் ஏறு கொண்டு உகந்தார் இளங்கோயிலே. 9. வேதத்தான் என்பர் வேள்வியுள் உளான் என்பர் பூதத்தான் என்பர் புண்ணியன் தன்னையே கீதத்தான் கிளரும் திருமீயச்சூர் ஏதம் தீர்க்க நின்றார் இளங்கோயிலே. 10. கடுக்கண்டன் கயிலாய மலைதனை எடுக்கல் உற்ற இராவணன் ஈட் அற விடுக்கண் இன்றி வெகுண்டவன் மீயச்சூர் இடுக்கண் தீர்க்க நின்றார் இளங்கோயிலே.
