Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்

மதிமுக்தீஸ்வரர் கோவில், திருத்திலதைப்பதி

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருத்திலதைப்பதி (தற்போது செதலபதி என்று வழங்குகிறது)
இறைவன் பெயர்மதிமுக்தீஸ்வரர்
இறைவி பெயர்பொற்கொடிநாயகி, சுவர்ணவல்லி, மரகதவல்லி
பதிகம்திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது மயிலாடுதுறை - திருவாரூர் மார்க்கத்தில், மயிலாடுதுறையில் இருந்து சுமார் 25 கி.மி. தொலைவில் உள்ள பூந்தோட்டம் என்ற ஊரின் அருகே இத்தலம் இருக்கிறது. சரஸ்வதிக்கு கோவில் இருக்கும் கூத்தனூர் இங்கிருந்து அருகில் இருக்கிறது.

இத்தலம் புராணப் பெருமை உடையதாகும். தசரதனுக்கும், ஜடாயுவிற்கும் ராமனும் லக்ஷ்மனனும் தில தர்ப்பணம் செய்த இடம் என்ற பெருமைக்கு உரியது இத்தலம்.

திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய பதிகம்

பொடிகள்பூசிப் பலதொண்டர் கூடிப்புலர் காலையே
அடிகளாரத் தொழுதேத்த நின்றவ்வழ கன்னிடங்
கொடிகளோங்கிக் குலவும் விழவார்தில தைப்பதி
வடிகொள்சோலைம் மலர்மணங் கமழும்மதி முத்தமே.  

தொண்டர்மிண்டிப் புகைவிம்மு சாந்துங்கமழ் துணையலுங்
கொண்டுகண்டார் குறிப்புணர நின்றகுழ கன்னிடந்
தெண்டிரைப்பூம் புனலரிசில் சூழ்ந்ததில தைப்பதி
வண்டுகெண்டுற் றிசைபயிலுஞ் சோலைமதி முத்தமே.  

அடலுளேறுய்த் துகந்தான் அடியார்அம ரர்தொழக்
கடலுள்நஞ்சம் அமுதாக வுண்டகட வுள்ளிடந்
திடலடங்கச் செழுங்கழனி சூழ்ந்ததில தைப்பதி
மடலுள்வாழைக் கனிதேன் பிலிற்றும்மதி முத்தமே. 

கங்கைதிங்கள் வன்னிதுன் னெருக்கின்னொடு கூவிளம்
வெங்கண்நாகம் விரிசடையில் வைத்தவிகிர் தன்னிடஞ்
செங்கயல்பாய் புனலரிசில் சூழ்ந்ததில தைப்பதி
மங்குல்தோயும் பொழில்சூழ்ந் தழகார்மதி முத்தமே.  

புரவியேழும் மணிபூண் டியங்குங்கொடித் தேரினான்
பரவிநின்று வழிபாடு செய்யும்பர மேட்டியூர்
விரவிஞாழல் விரிகோங்கு வேங்கைசுர புன்னைகள்
மரவம்மவ்வன் மலருந் திலதைமதி முத்தமே.  

விண்ணர்வேதம் விரித்தோத வல்லார்ஒரு பாகமும்
பெண்ணர்எண்ணார் எயில்செற் றுகந்தபெரு மானிடந்
தெண்ணிலாவின் ஒளிதீண்டு சோலைத்தில தைப்பதி
மண்ணுளார்வந் தருள்பேணி நின்றமதி முத்தமே.  

ஆறுசூடி யடையார்புரஞ் செற்றவர் பொற்றொடி
கூறுசேரும் உருவர்க் கிடமாவது கூறுங்கால்
தேறலாரும் பொழில்சூழ்ந் தழகார்தில தைப்பதி
மாறிலாவண் புனலரிசில் சூழ்ந்தமதி முத்தமே.  

கடுத்துவந்த கனன்மேனி யினான்கரு வரைதனை
எடுத்தவன்றன் முடிதோள் அடர்த்தார்க் கிடமாவது
புடைக்கொள்பூகத் திளம்பாளை புல்கும்மதுப் பாயவாய்
மடுத்துமந்தி யுகளுந் திலதைமதி முத்தமே.  

படங்கொள்நாகத் தணையானும் பைந்தாமரை யின்மிசை
இடங்கொள்நால் வேதனு மேத்தநின்ற இறைவன்னிடந்
திடங்கொள்நாவின் னிசைதொண்டர் பாடுந் திலைதைப்பதி
மடங்கல்வந்து வழிபாடு செய்யும்மதி முத்தமே. 

புத்தர்தேரர் பொறியில் சமணர்களும் வீறிலாப்
பித்தர்சொன்னம் மொழிகேட் கிலாதபெரு மானிடம்
பத்தர்சித்தர் பணிவுற் றிறைஞ்சுந்தில தைப்பதி
மத்தயானை வழிபாடு செய்யும்மதி முத்தமே.  

மந்தமாரும் பொழில்சூழ் திலதைமதி முத்தமேற்
கந்தமாருங் கடற்காழி யுள்ளான்தமிழ் ஞானசம்
பந்தன்மாலை பழிதீரநின் றேத்தவல் லார்கள்போய்ச்
சிந்தைசெய்வார் சிவன்சே வடிசேர்வது திண்ணமே.