Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்


தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

அக்னீசுவரர் கோவில், திருஅன்னியூர்

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருஅன்னியூர்
இறைவன் பெயர்அக்னீசுவரர்
இறைவி பெயர்பார்வதி
பதிகம்திருநாவுக்கரசர் - 1
எப்படிப் போவது 1. கும்பகோணம் - காரைக்கால் சாலையில் S. புதூர் என்ற இடத்திற்கு வந்து, அங்கிருந்து தெற்கில் திரும்பி வடமட்டம் சென்று அங்கிருந்து திருவீழிமிழலை செல்லும் சாலையில் சென்றால் திருஅன்னியூர் ஊரையடையலாம். கும்பகோணத்தலிருந்து அன்னியூருக்கு நகரப்பேருந்து செல்கிறது. சாலையோரத்திலேயே கோயில் உள்ளது.
2. கும்பகோணம் - நாச்சியார்கோவில் - பூந்தோட்டம் சாலை வழியில் திருவீழிமிழலை சென்று அங்கிருந்து வடக்கே 3 கி.மி. பயணம் செய்தும் இத்தலத்தை அடையலாம். திருக்கருவிலி கொட்டிட்டை என்ற மற்றொரு பாடல் பெற்ற தலத்திலிருந்து வடமட்டம் வழியாக 4 கி.மி. பயணம் செய்தும் இத்தலத்தை அடையலாம்.
ஆலய முகவரிஅருள்மிகு அக்னீசுவரர் திருக்கோயில்
அன்னியூர்
அன்னியூர் அஞ்சல்
வழி கோனேரிராஜபுரம்
குடவாசல் வட்டம்
திருவாரூர் மாவட்டம்
PIN - 612201

இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
ThriuAnniyur route map

எஸ்.புதூரில் இருந்து திருஅன்னயூர் செல்லும் வழி வரைபடம்
Map courtesy by: Google Maps

திருஅன்னியூர் என்ற பெயரில் இரண்டு தேவாரத் தலங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று காவிரி வடகரைத் தலம், மற்றொன்று காவிரி தெனகரைத் தலம். காவிரி வடகரைத் தலமான திருஅன்னியூர் இன்றைய நாளில் பொன்னூர் என்று அழைக்கப்படுகிறது. காவிரி தெனகரைத் தலமான இந்த திருஅன்னியூர் - கும்பகோணம் - காரைக்கால் சாலையிலுள்ள எஸ். புதூரில் இருந்து சுமார் 7 கி.மீ. சொலைவில் உள்ளது.

தல வரலாறு: சிவபெருமானை புறக்கணித்துவிட்டு மற்ற அனைவரையும் அழைத்து தட்சன் யாகம் நடத்தினான். யாகத்தில் கலந்து கொண்டவர்களில் அக்னி தேவனும் ஒருவன். சிவனை அவமதித்து நடத்தப்பட்ட யாகத்தில் கலந்து கொண்டதற்காக இவன் பத்ரகாளியாலும், வீரபத்திரராலும் தண்டிக்கப்பட்டு சாபம் பெற்றான். அக்னிக்கு சாபம் ஏற்பட்டதால் எந்த யாகத்திலும் கலந்து கொள்ள முடியவில்லை. யாகம் நடத்தப்படாததால், மழைவளம் குன்றியது. உயிர்கள் வாட தொடங்கின. இதனால் வருந்திய அக்னி தேவன், பல தலங்களில் ஈசனை வழிபட்டு தனக்கு ஏற்பட்ட சாபத்திலிருந்து மீள வேண்டினான். அச்சமயம் இத்தலத்திற்கும் வந்து லிங்கம் அமைத்து, தீர்த்தம் உண்டாக்கி, வன்னி இலைகளால் இறைவனை அர்ச்சித்து சாபம் நீங்கப் பெற்றான். அக்னி தேவன் வழிபட்ட தலமாதலால் இறைவன் அக்னிபுரீஸ்வரர் ஆனார். அக்னி உண்டாக்கிய தீர்த்தம் அக்னி தீர்த்தம் என்று பெயர் பெற்றது. அக்னிதேவன் தனக்கு அருள் புரிந்த அக்னீ ஸ்வரரை வணங்கி, இத்தலத்திற்கு வந்து அக்னி தீர்த்தத்தில் நீராடி வழிபடுவோருக்கு தன் தொடர்புடைய உஷ்ண ரோகங்கள் நீங்கவும், நற்கதி பெறவும் அருள்புரியுமாறு இறைவனை வேண்டினான். எனவே உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய், ரத்த கொதிப்பு உள்ளவர்கள் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி சிவனுக்கு கோதுமையால் செய்த பொருளை நிவேதனம் செய்து வழிபட்டால் விரைவில் குணமாகும்.

தலச் சிறப்பு: பார்வதி தேவி காத்தியாயன முனிவரின் மகளாகப்பிறந்து இறைவனை அடைய இத்தலத்தில் தவமிருந்தாள். இறைவன் இவளுக்கு காட்சி தந்து இத்தலத்தின் அருகிலுள்ள திருவீழிமிழலையில் திருமணம் செய்து கொண்டார். எனவே இது திருமணத்தடை நீக்கும் தலமாகும். திருமணமாகாதவர்கள் இங்கு வந்து வழிபடின் திருமணம் கூடும் என்பது இன்றுமுள்ள நம்பிக்கை.

கோவில் அமைப்பு: சிறிய இராஜகோபுரத்துடன் இவ்வாலயம் அரிசிலாற்றின் வடகரையில் அமைந்துள்ளது. உள்ளே நுழைந்து வலமாக வரும்போது கருவறைச் சுவரில் அப்பர், அக்கினி, கௌரி, சிவலிங்கம், காமதேனு பால்சொரிவது, ரிஷபாரூடர் சிற்பங்கள் வரிசையாகவுள்ளன - பக்கத்தில் தட்சிணாமூர்த்தி உள்ளார். விநாயகர், பாலசுப்பிரமணியர், கஜலட்சுமி சந்நிதிகளும் தலமரம் வன்னியும் உள்ளன. கோபுர வாயில்க் கடந்தவுடன் நேரே பலிபீடம், நந்தி மண்டபம் உள்ளன. அதையடுத்துள்ள முன்மண்டபத்தில் நால்வர் சந்நிதியும், வலதுபுறம் தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதியும் அமைந்துள்ளன. நேரே இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக லிங்க உருவில் அருள்பாலிக்கிறார். கருவறை வாயில் இருபுறமும் துவார பாலகர்கள் கல்சிற்பங்களாகவே வடிக்கப்பட்டுள்ளனர். இங்குள்ள சோமாஸ்கந்தர், நடராசர் திருமேனிகள் மிக்க அழகுடையவை.

திருநாவுக்கரசர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளியுள்ள இப்பதிகம் 5-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

பாற லைத்த படுவெண் டலையினன்
நீற லைத்தசெம் மேனியன் நேரிழை
கூற லைத்தமெய் கோளர வாட்டிய
ஆற லைத்த சடைஅன்னி யூரரே. 

பண்டொத் தமொழி யாளையோர் பாகமாய்
இண்டைச் செஞ்சடை யன்னிருள் சேர்ந்ததோர்
கண்டத் தன்கரி யின்னுரி போர்த்தவன்
அண்டத் தப்புறத் தான்அன்னி யூரரே.  

பரவி நாளும் பணிந்தவர் தம்வினை
துரவை யாகத் துடைப்பவர் தம்மிடங்
குரவம் நாறுங் குழலுமை கூறராய்
அரவ மாட்டுவர் போல்அன்னி யூரரே. 

வேத கீதர்விண் ணோர்க்கும் உயர்ந்தவர்
சோதி வெண்பிறை துன்று சடைக்கணி
நாதர் நீதியி னாலடி யார்தமக்
காதி யாகிநின் றார்அன்னி யூரரே.  

எம்பி ரான்இமை யோர்கள் தமக்கெலாம்
இன்ப ராகி இருந்தவெம் மீசனார்
துன்ப வல்வினை போகத் தொழுமவர்க்
கன்ப ராகிநின் றார்அன்னி யூரரே. 

வெந்த நீறுமெய் பூசுநன் மேனியர்
கந்த மாமலர் சூடுங் கருத்தினர்
சிந்தை யார்சிவ னார்செய்ய தீவண்ணர்
அந்த ணாளர்கண் டீர்அன்னி யூரரே. 

ஊனை யார்தலை யிற்பலி கொண்டுழல்
வானை வானவர் தாங்கள் வணங்கவே
தேனை யார்குழ லாளையோர் பாகமா
ஆனை யீருரி யார்அன்னி யூரரே.  

காலை போய்ப்பலி தேர்வர் கண்ணார்நெற்றி
மேலை வானவர் வந்து விரும்பிய
சோலை சூழ்புறங் காடரங் காகவே
ஆலின் கீழறத் தார்அன்னி யூரரே.  

எரிகொள் மேனியர் என்பணிந் தின்பராய்த்
திரியு மூவெயில் தீயெழச் செற்றவர்
கரிய மாலொடு நான்முகன் காண்பதற்
கரிய ராகிநின் றார்அன்னி யூரரே. 

வஞ்ச ரக்கன் கரமுஞ் சிரத்தொடும்
அஞ்சு மஞ்சுமோ ராறுநான் கும்மிறப்
பஞ்சின் மெல்விர லாலடர்த் தாயிழை
அஞ்ச லஞ்சலென் றார்அன்னி யூரரே.  

திருஅன்னியூர் அக்னீசுவரர் ஆலயம் புகைப்படங்கள்


2 நிலை இராஜ கோபுரம்


2 நிலை கோபுரம் உட்புறத் தோற்றம்


வெளிப் பிரகாரத்தில் மகா கணபதி சந்நிதி

திருஅன்னியூர் அக்னீசுவரர் ஆலயம் புகைப்படங்கள்


உட்பிரகாரத்தில் கஜலட்சுமி சந்நிதி


இறைவன், இறைவி சந்நிதிகள் உள்ளடக்கிய மண்டபம்


மண்டபத்தின் முன் நந்தி, பலிபீடம்


Copyright © 2004 - 2019 - www.shivatemples.com - All rights reserved