Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்


தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

சொர்ணபுரீஸ்வரர் கோவில், அரிசிற்கரைபுத்தூர்

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்அரிசிற்கரைபுத்தூர் (தற்போது அழகாபுத்தூர் என்று வழங்கப்படுகிறது)
இறைவன் பெயர்சொர்ணபுரீஸ்வரர், படிக்காசு அளித்தநாதர்
இறைவி பெயர்அழகாம்பிகை
பதிகம்திருநாவுக்கரசர் - 1
திருஞானசம்பந்தர் - 1
சுந்தரர் - 1
எப்படிப் போவது கும்பகோணத்தில் இருந்து 7 கி.மி. தொலைவில் திருநறையூர் (நாச்சியார்கோவில்) போகும் வழியில் இத்தலம் இருக்கிறது. திருநறையூருக்கு முன்னாலேயே அழகாபுத்தூர் ஊரின் தொடக்கத்திலேயே கோவில் பேருந்துச் சாலையிலிருந்து சற்றுத் தள்ளி அருகிலேயே உள்ளது.
ஆலய முகவரிஅருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில்
அழகாபுத்தூர்
கிருஷ்ணபுரம்
சாக்கோட்டை S.O.
கும்பகோணம் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம்
PIN - 312401

இவ்வாலயம் தினந்தோறும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.

இவ்வாலயம் மேற்குப் பார்த்த மூன்று நிலைகளுடைய ராஜகோபுரத்துடன் காட்சி அளிக்கிறது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால் விசாலமான முற்றவெளி உள்ளது. நேரே கருவறை முன் மண்டபத்திற்கு எதிரில் கொடிமர விநாயகர், கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவற்றைக் காணலாம். முற்றவெளியின் வலதுபுறம் விநாயகர் சந்நிதியும் இடதுபுறம் ஆறுமுகர் சந்நிதியும் உள்ளன. இந்த ஆறுமுகர் பன்னிருகரங்களுடன் மயில்வாகனராக விளங்குகிறார். இவருடைய வடிவில் வலப்பாலுள்ள ஆறுகரங்களுள் முதல் கரம் சக்கரமும், இடப்பாலுள்ள ஆறுகரங்களுள் முதலாவது கரம் சங்கும் ஏந்தியிருப்பது விசேஷம். இம்மாதிரி அமைப்புள்ள ஆறுமுகர் சந்நிதி காண்பதற்கு அரிது. இச்சந்நிதியில் பிரார்த்தனை செய்து கொண்டால் விஷக்கடி நீக்கம் பெறுவது இன்றும் பிரசித்தமாகவுள்ளது.

வெளிப் பிரகார வலம் வரும்போது கிழக்குச் சுற்றில் கஜலட்சுமி சந்நிதியும், பைரவர், நவக்கிரக சந்நிதிகளும் உள்ளன. கருவறைக்குச் செல்லும் முகப்பு வாயிலின் மேற்புறம் ரிஷபாரூடர், இருபுறமும் விநாயகர், முருகர் ஆகியோரின் சுதைசிற்பங்கள் உள்ளன. வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் முன்மண்டபத்தில் இடதுபுறம் நெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதி உள்ளது. மகாமண்டபத்தில் விநாயகர், நால்வர், புகழ்த்துணை நாயனார் அவர் மனைவியார் ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. ஆவணி இமாதம் ஆயில்ய தட்சத்திரத்தன்று புகழ்த்துணை நாயனாரருக்கு குருபூஜை சிறப்புற நடைபெறுகிறது.

மூலவர் சதுர ஆவுடையார் மீது உயர்ந்த பாணத்துடன் மேற்கு நோக்கி லிங்க உருவில் எழுந்தருளியுள்ளார். நாடொறும் மூன்று கால வழிபாடுகள் நடைபெறுகின்றன. மூவராலும் பாடப்பெற்ற பெருமை உடைய இத்தலத்தின் விருட்சமாக வில்வமரமும், தீர்த்தங்களாக அமிர்த புஷ்கரணி மற்றும் அரசலாறும் திகழ்கின்றன..

புகழ்த்துணை நாயனார்: அழகாபுத்தூர் என்று அழைக்கப்படும் அரிசிற்கரைப்புத்தூருக்கு செருவிலிபுத்தூர் என்றும் பழம் பெயர் உண்டு. இந்த செருவிலிபுத்தூரில் சிவ வேதியர் குலத்தில் தோன்றியவர் புகழ்த்துணை நாயனார். இவர் சொர்ணபுரீஸ்வரருக்கு சிவாகம முறைப்படி தினந்தோறும் பூஜைகள் செய்து வந்தார். வயதாகி தள்ளாமை அவரை ஆட்கொண்டுவிட்ட போதிலும் தினமும் அரிசிலாற்றிலிருந்து நீரைக் கொண்டுவந்து இறைவனுக்கு அபிஷேகம் செய்வதை நிறுத்தவில்லை. முதுமையின் துயரம் போதாதென்று ஊரில் கடும் பஞ்சம் ஏற்பட்ட காரனத்தினால் புகழ்த்துணை நாயனாரை வறுமையும் பற்றிக் கொண்டது. அப்படியும் அவர் தன் கடமையிலிருந்து தவரவில்லை. பசியால் வாடி உயிரிழக்க நேர்ந்தாலும் ஆலயப்பணியை துறக்கும் எண்ணம் அவர் மனதில் எழவில்லை. ஒரு நாள் அரிசிலாற்றிற்குச் சென்று குடத்தில் நீரை நிரப்பிக் கொண்டு இறைவன் சந்நிதிக்கு வந்தார். பசி மயக்கத்தில் கால்கள் தள்ளாட, கைகள் நடுங்க குடத்தைத் தூக்கி அபிஷேகம் செய்யச் சென்றார். குடம் தவறி இறைவனின் திருமுடி மீது விழுந்தது. சிவலிங்கத்தின் மீது விழுந்த குடத்தால் சிவபெருமானின் தலையிலேயே அடிபட்டு விட்டதாக எண்ணி புகழ்த்துணை நாயனார் மூர்ச்சித்து விழுந்தார். மூர்ச்சித்து விழுந்த அவர் கனவில் இறைவன் தோன்றி, "பஞ்சம் தீரும் வரை தினமும் உனக்கு பொற்காசு தருகிறேன், அதனார் உன் துனபங்கள் தீரும்" என்று அருளி மறைந்தார். விழித்தெழுந்த புகழ்த்துணை நாயனார் சுவாமிக்கு அருகிலுள்ள பீடத்தில் பொற்காசு இருக்கக் கண்டார். அதே இடத்தில் தினமும் அவருக்கு ஒரு பொற்காசு கிடைத்தது. அதைக் கொண்டு வறுமையை விரட்டி, இறைவனுக்கு மேலும் சிறந்த தொண்டு செய்து இறுதியில் இறைவன் திருவடியில் ஐக்கியமானார். இதனால் இறைவனுக்கு "படிக்காசு அளித்த நாதர்" என்ற பெயரும் ஏற்பட்டது.

அரிசிற்கரைபுத்தூர் சொர்ணபுரீஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்


3 நிலை இராஜ கோபுரம்


கருவறை முன் மண்டபத் தோற்றம்


நந்தி, கொடிமரம்


வடக்கு வெளிப் பிரகாரம், அம்பாள், சுவாமி சந்நிதி விமானம்


சங்கு, சக்கரத்துடன் காட்சி தரும் ஆறுமுகர்


கிழக்கு வெளிப் பிரகாரத்தில் நவக்கிரக சந்நிதி