Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்


தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

அமிர்தகலசநாதர் கோவில், திருக்கலயநல்லூர்

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருக்கலயநல்லூர் (தற்போது சாக்கோட்டை என்று வழங்குகிறது)
இறைவன் பெயர்அமிர்தகலச நாதர்
இறைவி பெயர்அமிர்தவல்லி
பதிகம்சுந்தரர் - 1
எப்படிப் போவது கும்பகோணம் - நீடாமங்கலம் சாலையில் கும்பகோணத்திலிருந்து சுமார் நான்கு கி.மீ. தொலைவில் சாக்கோட்டை என்ற இடத்தில் இத்தலம் இருக்கிறது. சாலை ஓரத்திலேயே கோவில் உள்ளது. ஊர் மக்கள் இத்தலத்தை கோட்டை சிவன் கோவில் என்று அழைக்கிறார்கள்
ஆலய முகவரி அருள்மிகு
அமிர்தகலசநாதர் திருக்கோவில்
சாக்கோட்டை அஞ்சல்
கும்பகோணம் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம்
PIN - 612401

இவ்வாலயம் காலை 10 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் 6 மணி வரையும் திறந்திருக்கும்.

இத்தலம் இருந்த பகுதியில் சாக்கியர்கள், (பெளத்தர்கள்) அதிகமாக வாழ்ந்து வந்ததால் இவ்விடம் சாக்கியர் கோட்டை என்று அழைக்கப்பட்டு பின் மருவி சாக்கோட்டை என்று பெயர் பெற்றது. தேவாரம் பாடப் பெற்ற காலத்தில் கோவிலைச் சுற்றி அகழியும், கோட்டையும் இருந்ததாக சொல்லப்படுகிறது. கோட்டை சிவன் கோவில் என்று கேட்டால் ஊர் மக்கள் உடனே வழி சொல்வார்கள்.

சாக்கியநாயனார்: காஞ்சிபுரம் அருகே மார்கழி மாதம் பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர் சாக்கியநாயனார். இவர் சிவனிடமும் அவரது அடியார்களிடமும் மிகவும் அன்பு கொண்டிருந்தார். பிறவிப்பெருங்கடலை கடக்க சிவநெறியே உயர்ந்தது என்பதை உணர்ந்தார். சாக்கியர் கோலத்தில் இருந்தாலும் எப்போதும் மனதில் சிவ சிந்தனையுடன், யாரும் அறியாமல் சிவபூஜையும் செய்து வந்தார். எப்போதும் சிவபூஜை முடித்த பின்பு தான் சாப்பிடும் வழக்கம் கொண்டிருந்த இவர், ஒரு நாள் வெளியே சென்ற போது வழியில் ஒரு சிவலிங்கம் வழிபாடு ஏதும் இன்றி இருப்பதைக் கண்டு மனம் வருந்தினார். லிங்கத்தை நீராட்டி, மலர் போட்டு, பூஜை செய்ய ஆசைப்பட்ட அவருக்கு அந்த இடத்தில் பூஜைக்குரிய பொருட்கள் ஏதும் கிடைக்கவில்லை. இவரது நல்ல மனம் மட்டுமே இருந்தது. சிவனின் மீது கொண்ட அன்பால் அருகே கிடந்த சிறு கல்லை எடுத்து "நமசிவாய" மந்திரத்தை உச்சரித்து லிங்கத்தின் மீது போட்டார். இவரது அன்பால் கட்டுப்பட்ட இறைவன், அவர் விசியெறிந்த கல்லை மலராக ஏற்றுக்கொண்டார். இதே போல் தினமும் லிங்கத்தின் மீது கல்லெறிந்து வழிபாடு செய்து அதன் பின் உணவருந்தி வந்தார். இவர் சாக்கியர் கோலத்தில் இருந்ததால், பார்ப்பவர்களுக்கு இவர் சிவன் மீது கோபத்தில் கல் எறிகிறார் என்று நினைத்தார்கள். ஆனால் இறைவன் ஒருவருக்குத் தான் இவர் உணமையான பக்தியால் இவ்வாறு செய்கிறார் என்பது புரியும். இந்நிலையில் ஒருநாள் சாக்கிய நாயனார், சிவ சிந்தனையிலேயே மூழ்கியிருந்ததால், சிவபூஜை செய்யாமல் சாப்பிட அமர்ந்தார். திடீரென நினைவு வந்ததும், தான் எவ்வளவு பெரிய சிவத்துரோகம் செய்துவிட்டோம் என வருந்தி ஓடி சென்று கல் எறிந்து சிவபூஜை செய்தார். சிவபக்தியுடன் இவர் எறிந்த கல் கயிலையில் பார்வதியுடன் அமர்ந்திருந்த சிவனின் பாதத்தில் பொன்மலராக விழுந்தது. மகிழ்ந்த இறைவன் பார்வதிதேவியுடன் இவருக்கு காட்சி கொடுத்து நாயன்மார்களில் ஒருவராக்கினார். சாக்கிய நாயனார் வழிபட்ட தலமாதலால் சாக்கோட்டை எனப்பட்டது.

ஊழிக்காலத்தில் உயிர்களை அடக்கிய கலயம் பிரளயத்தில் மிதந்து வந்து இங்குத் தங்கியதால் கலயநல்லூர் என்று பெயர் வந்ததாக தலவரலாறு கூறுகிறது. கும்பகோணம் தலபுராணத்துடன் தொடர்புடைய இத்தலம் கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவிலின் சப்த ஸ்தானத் தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவனை, பிரமதேவர் வழிபட்டுப் பேறு பெற்றார் என்பதை சுந்தரரின் பதிகம் 10-வது பாடல் மூலம் அறியலாம்.

கோவில் அமைப்பு: இது ஒரு கிழக்கு நோக்கிய கோவில். முதலில் நம்மை வரவேற்பது மதிற்சுவருடன் உள்ள ஒரு நுழைவாயில். நுழைவாயில் மேற்புறம் அமர்ந்த நிலையில் சிவன், பார்வதி, அவர்களுக்கு இருபுறமும் நின்ற நிலையில் விநாயகரும், முருகரும் சுதை வடிவில் காட்சி தருகின்றனர். அதைக் கடந்து உள்ளே சென்றால் 3 நிலை இராஜ கோபுரம் உள்ளது. நுழைவாயிலுக்கும் 3 நிலை இராஜ கோபுரத்திற்கும் இடையில் நந்தி மண்டபம் உள்ளது. உள்ளே கருவறையில் இறைவன் லிங்க உருவில் கிழக்கு நோக்கி அருட்காட்சி தருகிறார். கோஷ்ட மூர்த்தங்களாக தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை ஆகியோர் காட்சி தருகின்றனர். அம்பாள் கோவில் தெற்கு நோக்கியுள்ளது. ஒரே கல்லில் புடைப்புச் சிற்பமாக உள்ள சப்தமாதர்கள் சிற்பங்கள் பார்த்து ரசிக்கத் தக்கது. நவக்கிரக சந்நிதியும் உள்ளது.

இங்குள்ள தட்சிணாமூர்த்தி சிற்பம் சற்று வித்தியாசமாக காணப்படுகிறது. இத்திருமேனி வலது மேற்கையில் ருத்ராட்ச மாலையும் இடது மேற்கையில் அக்கினியும், வலக்கையில் சின் முத்திரையும், இடக்கையில் சுவடியும், தலைமுடி சூரியபிரபை போலவும் அமைப்புடையதாக விளங்குகிறது. இடது காலை மடித்து வைத்துக் கோண்டு வலது காலை முயலகன் மீது வைத்தபடி காட்சி தருகிறார். இங்குள்ள லிங்கோத்பவர் சிற்பம் பச்சை மரகதக் கல்லால் ஆனது. தபஸ்வியம்மனின் புடைப்புச்சிற்பம் மிகவும் அழகானது. வலக்கால் தரையில் ஊன்றி, இடக்காலை வலது தொடையில் பொருந்த மடக்கி மேல் நோக்கிய நின்ற நிலையில் வைத்து, வலக்கரம் உச்சிமீது உள்ளங்கை கவித்துவைத்து, இடக்கரம் வயிற்றின்கீழ் அங்கைமேல் நோக்கி வைத்துத் தவம் செய்கின்ற கோலத்தில் அமைந்துள்ளது. இத்தலத்திலுள்ள அர்த்தநாரீஸ்வரர் புடைப்புச் சிற்பமும் பார்த்து ரசிக்க வேண்டிய ஒன்று.

சஷ்டியப்த பூர்த்தி, பீமரத சாந்தி மற்றும் சதாபிஷேகம் ஆகியன செய்து கொள்ள இத்தலம் ஒரு சிறந்த தலமாக விளங்குகிறது.


சுந்தரர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய இப்பதிகம் 7-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

1. குரும்பைமுலை மலர்க்குழலி கொண்டதவங் கண்டு
குறிப்பினொடுஞ் சென்றவள்தன் குணத்தினைநன் கறிந்து
விரும்புவரங் கொடுத்தவளை வேட்டருளிச் செய்த
விண்ணவர்கோன் கண்ணுதலோன் மேவியவூர் வினவில்
அரும்பருகே சுரும்பருவ அறுபதம்பண் பாட
அணிமயில்கள் நடமாடும் அணிபொழில்சூழ் அயலின்
கரும்பருகே கருங்குவளை கண்வளருங் கழனிக்
கமலங்கள் முகமலருங் கலயநல்லூர் காணே. 

2. செருமேவு சலந்தரனைப் பிளந்தசுடர் ஆழி
செங்கண்மலர் பங்கயமாச் சிறந்தானுக் கருளி
இருள்மேவும் அந்தகன்மேற் றிரிசூலம் பாய்ச்சி
இந்திரனைத் தோள்முரித்த இறையவனூர் வினவிற்
பெருமேதை மறையொலியும் பேரிமுழ வொலியும்
பிள்ளையினந் துள்ளிவிளை யாட்டொலியும் பெருக
கருமேதி புனல்மண்டக் கயல்மண்டக் கமலங்
களிவண்டின் கணமிரியுங் கலயநல்லூர் காணே. 

3. இண்டைமலர் கொண்டுமணல் இலிங்கமது வியற்றி
இனத்தாவின் பாலாட்ட இடறியதா தையைத்தாள்
துண்டமிடு சண்டியடி அண்டர்தொழு தேத்தத்
தொடர்ந்தவனைப் பணிகொண்ட விடங்கனதூர் வினவில்
மண்டபமுங் கோபுரமும் மாளிகைசூ ளிகையும்
மறையொலியும் விழவொலியும் மறுகுநிறை வெய்திக்
கண்டவர்கண் மனங்கவரும் புண்டரிகப் பொய்கைக்
காரிகையார் குடைந்தாடுங் கலயநல்லூர் காணே. 

4. மலைமடந்தை விளையாடி வளையாடு கரத்தான்
மகிழ்ந்தவள்கண் புதைத்தலுமே வல்லிருளாய் எல்லா
உலகுடன்றான் மூடவிருள் ஓடும்வகை நெற்றி
ஒற்றைக்கண் படைத்துகந்த உத்தமனூர் வினவில்
அலையடைந்த புனல்பெருகி யானைமருப் பிடறி
அகிலொடுசந் துந்திவரும் அரிசிலின்றென் கரைமேற்
கலையடைந்து கலிகடியந் தணர்ஓமப் புகையாற்
கணமுகில்போன் றணிகிளருங் கலயநல்லூர் காணே. 

5. நிற்பானுங் கமலத்தில் இருப்பானும் முதலா
நிறைந்தமரர் குறைந்திரப்ப நினைந்தருளி யவர்க்காய்
வெற்பார்வில் அரவுநாண் எரியம்பால் விரவார்
புரமூன்றும் எரிவித்த விகிர்தனூர் வினவிற்
சொற்பால பொருட்பால சுருதியொரு நான்குந்
தோத்திரமும் பலசொல்லித் துதித்திறைதன் றிறத்தே
கற்பாருங் கேட்பாரு மாயெங்கும் நன்கார்
கலைபயிலந் தணர்வாழுங் கலயநல்லூர் காணே. 

6. பெற்றிமையொன் றறியாத தக்கனது வேள்விப்
பெருந்தேவர் சிரந்தோள்பல் கரங்கண்பீ டழியச்
செற்றுமதிக் கலைசிதையத் திருவிரலாற் றேய்வித்
தருள்பெருகு சிவபெருமான் சேர்தருமூர் வினவில்
தெற்றுகொடி முல்லையொடு மல்லிகைசெண் பகமுந்
திரைபொருது வருபுனல்சேர் அரிசிலின்றென் கரைமேற்
கற்றினநன் கரும்பின்முளை கறிகற்கக் கறவை
கமழ்கழுநீர் கவர்கழனிக் கலயநல்லூர் காணே.  

7. இலங்கையர்கோன் சிரம்பத்தோ டிருபதுதிண் டோ ளும்
இற்றலற ஒற்றைவிரல் வெற்பதன்மே லூன்றி
நிலங்கிளர்நீர் நெருப்பொடுகாற் றாகாச மாகி
நிற்பனவும் நடப்பனவாம் நின்மலனூர் வினவிற்
பலங்கள்பல திரையுந்திப் பருமணிபொன் கொழித்துப்
பாதிரிசந் தகிலினொடு கேதகையும் பருகிக்
கலங்குபுனல் அலம்பிவரும் அரிசிலின்றென் கரைமேற்
கயலுகளும் வயல்புடைசூழ் கலயநல்லூர் காணே. 
 
8. மாலயனுங் காண்பரிய மாலெரியாய் நிமிர்ந்தோன்
வன்னிமதி சென்னிமிசை வைத்தவன்மொய்த் தெழுந்த
வேலைவிட முண்டமணி கண்டன்விடை யூரும்
விமலனுமை யவளோடு மேவியஊர் வினவிற்
சோலைமலி குயில்கூவக் கோலமயி லாலச்
சுரும்பொடுவண் டிசைமுரலப் பசுங்கிளிசொற் றுதிக்கக்
காலையிலும் மாலையிலுங் கடவுளடி பணிந்து
கசிந்தமனத் தவர்பயிலுங் கலயநல்லூர் காணே. 

9. பொரும்பலம துடையசுரன் தாரகனைப் பொருது
பொன்றுவித்த பொருளினைமுன் படைத்துகந்த புனிதன்
கரும்புவிலின் மலர்வாளிக் காமனுடல் வேவக்
கனல்விழித்த கண்ணுதலோன் கருதுமூர் வினவில்
இரும்புனல்வெண் டிரைபெருகி ஏலம்இல வங்கம்
இருகரையும் பொருதலைக்கும் அரிசிலின்றென் கரைமேற்
கரும்புனைவெண் முத்தரும்பிப் பொன்மலர்ந்து பவளக்
கவின்காட்டுங் கடிபொழில்சூழ் கலயநல்லூர் காணே. 

10. தண்கமலப் பொய்கைபுடை சூழ்ந்தழகார் தலத்திற்
றடங்கொள்பெருங் கோயில்தனிற் றக்கவகை யாலே
வண்கமலத் தயன்முன்னாள் வழிபாடு செய்ய
மகிழ்ந்தருளி இருந்தபரன் மருவியஊர் வினவில்
வெண்கவரி கரும்பீலி வேங்கையொடு கோங்கின்
விரைமலரும் விரவுபுனல் அரிசிலின்றென் கரைமேற்
கண்கமுகின் பூம்பாளை மதுவாசங் கலந்த
கமழ்தென்றல் புகுந்துலவு கலயநல்லூர் காணே. 
 
11. தண்புனலும் வெண்மதியுந் தாங்கியசெஞ் சடையன்
தாமரையோன் தலைகலனாக் காமரமுன் பாடி
உண்பலிகொண் டுழல்பரமன் உறையுமூர் நிறைநீர்
ஒழுகுபுனல் அரிசிலின்றென் கலயநல்லூர் அதனை
நண்புடைய நன்சடையன் இசைஞானி சிறுவன்
நாவலர்கோன் ஆரூரன் நாவின்நயந் துரைசெய்
பண்பயிலும் பத்துமிவை பத்திசெய்து நித்தம்
பாடவல்லா ரல்லலொடு பாவமிலர் தாமே. 

சுந்தரர் பதிகத்தின் 10-வது பாடலின் படி இத்தலம் சுந்தரர் காலத்தில், அதாவது கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் இக்கோயில் பெருங்கோயில் அமைப்புடையதாய் இருந்தது என்பதும், குளிர்ச்சியை உடைய தாமரைக் குளங்கள் நான்கு புறத்திலும் சூழப்பெற்று அமைந்திருந்தது என்பதும் புலனாகிறது. மேலும் அரிசிலாற்றின் தென்கரையில் அமைந்துள்ள இத்தலத்தின் இயறகை வளத்தையும் தனது ஒவ்வொரு பாடலிலும் குறிப்பிடுகிறார்.

சிறுவர் கூட்டம் துள்ளி விளையாடுதலின் காரணமாக ஓசை எழுந்தத்தால், கரிய எருமைகள் மிரண்டு அரிசலாற்றின் நீரில் புக, அதனால் துள்ளி எழுந்த கயல் மீன்கள் தாமரை மலரின்மேல் நெருங்கி விழ, தாமரை மலரைச் சூழ்ந்திருந்த களிப்புடைய வண்டுகளின் கூட்டம் அஞ்சி ஓடுகின்ற திருக்கலயநல்லூர் என்றும்,

தாமரைப் பொய்கைகளில் மகளிர் மூழ்கி விளையாடுகின்ற திருக்கலயநல்லூர் என்றும்,

பின்னிக்கிடக்கின்ற முல்லைக் கொடியோடு, மல்லிகைக் கொடி, சண்பகமரம் என்னும் இவைகளும் அலைகளால் உந்தப்பட்டு வருகின்ற நீர் பொருந்திய அரிசிலாற்றின் தென்கரையில், கன்றுக்கூட்டம் நல்ல கரும்பின் முளையில் கறித்தலைப் பழக, பசுக் கூட்டம் மணம் வீசுகின்ற செங்கழுநீர்க் கொடியை மேய்கின்ற வயல் களையுடைய திருக்கலயநல்லூர் என்றும்,

நீரில் அலைகள் மேல் எழுந்து சென்று, ஏலம், இலவங்கம் என்னும் மரங்களோடே இருகரைகளையும் மோதியழிக்கின்ற அரிசிலாற்றின் தென் கரையில், பசிய புன்னை மரங்கள் வெள்ளிய முத்துக்களை அரும்பி, பொன்னை மலர்ந்து, பவளத்தினது அழகைக் காட்டுகின்ற நறுமணச் சோலைகள் சூழ்ந்த திருக்கலயநல்லூர் என்றும்,

வெண்மையான கவரி மயிரும், நீலமான மயில் இறகும், வேங்கை மரம், கோங்கமரம் இவற்றினது வாசனை பொருந்திய மலர்களும் கலந்து வருகின்ற நீரையுடைய அரிசிலாற்றின் தென்கரையில், கணுக்களையுடைய கமுக மரத்தின் அழகிய பாளையில் வண்டுகள் சேர்த்த தேனின் வாசனையோடு கலந்த பல மணங்களை வீசும் தென்றல் காற்றுப் புகுந்து உலாவுகின்ற திருக்கலயநல்லூர் என்றும்,

பலவாறு கலயநல்லூர் தலத்தின் இயற்கை வளத்தை வர்ணிக்கிறார்.

திருக்கலயநல்லூர் அமிர்தகலசநாதர் ஆலயம் புகைப்படங்கள்


3 நிலை இராஜ கோபுரம்


ஆலய முகப்பு வாயில்


முகப்பு வாயில் மேலுள்ள சுதைச் சிற்பங்கள்


முகப்பு வாயில் கடந்து உள் தோற்றம்


வெளிப் பிரகா5ரம்


இறைவன் சந்நிதி விமானம்


நவக்கிரக சந்நிதி


தட்சிணாமூர்த்தி


Copyright © 2004 - 2019 - www.shivatemples.com - All rights reserved