Shiva Temples of Tamilnadu
தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்
ராமலிங்கேஸ்வரர் கோவில், ராமனதீச்சுரம்
தென்னாடுடைய சிவனே போற்றிஎந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
| தகவல் பலகை | |
|---|---|
| சிவஸ்தலம் பெயர் | இராமனதீச்சுரம் |
| இறைவன் பெயர் | இராமலிங்கேஸ்வரர், இராமநாதேஸ்வரர், இராம்நந்தீஸ்வரர் |
| இறைவி பெயர் | கருவார்குழலி அம்மை, சூலிகாம்பாள், சரிவார்குழலி |
| பதிகம் | திருஞானசம்பந்தர் - 1 |
| எப்படிப் போவது | நன்னிலத்தில் இருந்து 8 கி.மி. தொலைவில் உள்ள திருப்புகலூரில் இருந்து முடிகொண்டான் ஆற்றைக் கடந்து, திருக்கண்ணபுரம் சென்று கிழக்கே சென்றால் இத்தலத்தை அடையலாம். திருப்புகலூரில் இருந்து 2 கி.மி. தொலைவிலும், திருச்செங்காட்டங்குடி தலத்திலிருந்து 3 கி.மீ. தொலைவிலும் இத்தலம் உள்ளது. நன்னிலம், திருப்புகலூர் முதலிய இடங்களிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன. |
| ஆலய முகவரி |
நிர்வாக அதிகாரி அருள்மிகு ராமநாதேஸ்வரர் திருக்கோவில் திருக்கண்ணபுரம் திருக்கண்ணபுரம் அஞ்சல் நன்னிலம் வட்டம் திருவாரூர் மாவட்டம் PIN - 609704 இவ்வாலயம் தினந்தோறும் காலை 8-30 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். |
கிழக்கு நோக்கிய இவ்வாலயத்திற்கு இராஜகோபுரமில்லை.ஒரு முகப்பு வாயில் மட்டும் உள்ளது. ஆலயத்திற்கு எதிரில் இராமதீர்த்தம் உள்ளது. முகப்பு வாயில் வழியே உள்ளே நுழைந்தால் நேரே பலீபீடத்தையும், நந்தி மண்டபத்தையும் காணலாம். இங்கு கொடிமரமில்லை. அதன்பின் விசாலமான முற்றவெளி உள்ளது. வலதுபுறம் தெற்கு நோக்கிய அம்பாள் சரிவார்குழலி சந்நிதி அமைந்திருக்கிறது. அம்பாள் நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளாள். வெளிச்சுற்றில் விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், கஜலட்சுமி, காலபைரவர், சூரியன் ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. மூலவர் கருவறை உள்ள மண்டபத்தின் நுழைவாயில் மேல் ரிஷபத்தின் மீதமர்ந்த சிவன், பார்வதி சுதைச் சிற்பத்தைக் காணலாம். உள்ளே கருவறையிலுள்ள் மூலவர் சிவலிங்கத் திருமேனி பெரியது. உயரமான பெரிய சுற்றுடைய ஆவுடையாருடன் கூடிய உயர்ந்த பாணத்துடன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். தீபாராதனையின்போது மூலவர் லிங்கத் திருமேனியில் ஜோதி வடிவம் தெரிவது விசேஷம். கோஷ்டமூர்த்தங்களாக, தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். சண்டேசுவரர் சந்நிதியும் அதற்குரிய இடத்தில் அமைந்துள்ளது.
தல வரலாறு: ராமர், சீதையை மீட்க இலங்கை சென்ற போது, போரில் ராவணன் உட்பட பல வீரர்களை வீழ்த்தினார். இதனால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க ராமேஸ்வரத்தில் சிவபூஜை செய்த அவர், அயோத்தி திரும்பும் வழியில் பல தலங்களில் சிவ வழிபாடு செய்தார். அவர் செண்பக வனமான இவ்வழியே வரும்போது, ஒரு மரத்தின் அடியில் சிவன் சுயம்புலிங்கமாக எழுந்தருளியிருந்ததைக் கண்டார். சிவனுக்கு பூஜை செய்ய ஆயத்தமானார். நந்தி தேவர், ராமரை மானிடர் என நினைத்து சிவனை நெருங்கவிடாமல் தடுத்தார். அம்பாள் கருணை கொண்டு நந்தியைத் தடுத்து காட்சி தந்ததாகவும், பின்பு இராமர் தீர்த்தத்தில் நீராடி வழிபட்டதாகவும் சொல்லப்படுகிறது. ராமர் சிவ வழிபாடு செய்து பின்பு அயோத்தி திரும்பினார். பிற்காலத்தில் இங்கு கோயில் எழுப்பப்பட்டது. இராமரால் வழிபடப்பட்டவர் என்பதால் சுவாமி "ராமநாதேஸ்வரர்" என்று பெயர் பெற்றார்.
இராமர் கோயில்களில் அவரது திருநட்சத்திரமான புனர்பூசத்தன்று விசேஷ பூஜை நடக்கும். இராமர் வழிபட்ட தலமென்பதால் இங்கு சிவனுக்கு அந்நாளில் விசேஷ பூஜை நடத்தப்படுகிறது. தற்போதும் சாயரட்சை பூஜையை இராமரே செய்வதாக ஐதீகம். இவ்வேளையில் சுவாமி தரிசனம் செய்வது விசேஷமானதாக கருதப்படுகிறது. இங்குள்ள சோமாஸ்கந்தர் (உற்சவ மூர்த்தி) மிக விசேஷமானவர். இச்சிலை ராமர் சிவனை வழிபடுவதற்காக அம்பிகை நந்தியை இழுத்த அமைப்பில் வடிக்கப்பட்டிருக்கிறது.
| இராமனதீச்சுரம் இராமநாதேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள் | ||
|---|---|---|
![]() ஆலயத்தின் முதல் முகப்பு வாயில் |
![]() பலிபீடம், அதன் பின்னால் நந்தி மண்டபம் |
|
![]() இறைவன் கருவறை மண்டபம் |
![]() வெளிப் பிரகாரத்தில் அம்பாள் சந்நிதி நுழைவாயில் | |
| இராமனதீச்சுரம் இராமநாதேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள் தந்து உதவியவர் சேலத்தைச் சார்ந்த திரு விவேக் அவர்கள் | ||
திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் இயற்றியுள்ள 11 பாடல்களைக் கொண்ட இப்பதிகத்தின் 11-வது பாடல் சிதைந்து போயிற்று.
1. சங்கொளிர் முன்கையர் தம்மிடையே அங்கிடு பலிகொளு மவன்கோபப் பொங்கர வாடலோன் புவனியோங்க எங்குமன் இராமன தீச்சுரமே. 2. சந்தநன் மலரணி தாழ்சடையன் தந்தம தத்தவன் தாதையோதான் அந்தமில் பாடலோன் அழகன்நல்ல எந்தவன் இராமன தீச்சுரமே. 3. தழைமயி லேறவன் தாதையோதான் மழைபொதி சடையவன் மன்னுகாதிற் குழையது விலங்கிய கோலமார்பின் இழையவன் இராமன தீச்சுரமே. 4. சத்தியு ளாதியோர் தையல்பங்கன் முத்திய தாகிய மூர்த்தியோதான் அத்திய கையினில் அழகுசூலம் வைத்தவன் இராமன தீச்சுரமே. 5. தாழ்ந்த குழற்சடை முடியதன்மேல் தோய்ந்த இளம்பிறை துளங்குசென்னிப் பாய்ந்தகங் கையொடு படவரவம் ஏய்ந்தவன் இராமன தீச்சுரமே. 6. சரிகுழல் இலங்கிய தையல்காணும் பெரியவன் காளிதன் பெரியகூத்தை அரியவன் ஆடலோன் அங்கையேந்தும் எரியவன் இராமன தீச்சுரமே. 7. மாறிலா மாதொரு பங்கன்மேனி நீறது ஆடலோன் நீள்சடைமேல் ஆறது சூடுவான் அழகன்விடை ஏறவன் இராமன தீச்சுரமே. 8. தடவரை அரக்கனைத் தலைநெரித்தோன் படவர வாட்டிய படர்சடையன் நடமது வாடலான் நான்மறைக்கும் இடமவன் இராமன தீச்சுரமே. 9. தனமணி தையல்தன் பாகன்றன்னை அனமணி அயன்அணி முடியுங்காணான் பனமணி அரவரி பாதங்காணான் இனமணி இராமன தீச்சுரமே. 10. தறிபோலாஞ் சமணர்சாக் கியர்சொற்கொளேல் அறிவோரால் நாமம் அறிந்துரைமின் மறிகையோன் தன்முடி மணியார்கங்கை எறிபவன் இராமன தீச்சுரமே. 11-வது பாடல் சிதைந்து போயிற்று.




