Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்


தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

கணபதீஸ்வரர் கோவில், திருசெங்காட்டங்குடி

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருசெங்காட்டங்குடி
இறைவன் பெயர்உத்தராபசுபதீஸ்வரர், கணபதீஸ்வரர்
இறைவி பெயர்திருக்குழல் நாயகி, சூளிகாம்பாள்
பதிகம்திருநாவுக்கரசர் - 1
திருஞானசம்பந்தர் - 2
எப்படிப் போவது திருவாரூர் மாவட்டத்திலுள்ள நன்னிலத்தில் இருந்து நாகூர் செல்லும் சாலை வழியில் திருப்புகலூர் அடைந்து, அங்கிருந்து தெற்கே திருக்கண்ணபுரம் செல்லும் சாலை வழியாகச் சென்று திருசெங்காட்டங்குடி தலத்தை அடையலாம். நன்னிலத்தில் இருந்து சுமார் 28 கி.மி. தொலைவில் இத்தலம் இருக்கிறது. திருசெங்காட்டங்குடியில் இருந்து அருகில் உள்ள திருமருகல், திருசாத்தமங்கை, திருப்புகலூர் ஆகிய மற்ற சிவஸ்தலங்களையும் தரிசிக்கலாம். திருவாரூரில் இருந்து சன்னாநல்லூர் வழியாக 24 கி.மீ., தூரத்திலுள்ள திருப்புகலூர் சென்று அங்கிருந்து 4.5 கி.மீ. சென்று இக்கோயிலை அடையலாம்.
ஆலய முகவரி அருள்மிகு
உத்தராபசுபதீஸ்வரர் திருக்கோவில்
திருசெங்காட்டங்குடி
திருக்கண்ணபுரம் அஞ்சல்
நாகப்பட்டினம் வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம்
PIN - 609704

இவ்வாலயம் தினந்தோறும் காலை 6-45 முதல பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
tiruchengattankudi route map

திருப்புகலூரில் இருந்து திருசெங்காட்டங்குடி செல்லும் வழி வரைபடம்
Map courtesy by: Google Maps

தல வரலாறு: கஜமுகன் என்னும் யானை முகம் கொண்ட அசுரன், தேவர்களை துன்புறுத்தி வந்தான். தேவர்கள் கஜமுகாசுரனிடமுருந்து தங்களைக் காக்கும்படி சிவனை வேண்டினர். சிவபெருமான் கணபதியை அனுப்பி அசுரனை சம்ஹாரம் செய்தார். இதனால் கணபதிக்கு தோஷம் உண்டாகவே, பூலோகம் வந்து சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து தவமிருந்தார். சிவன் அவரது தோஷம் நீக்கியருளினார். மேலும் அவரது வேண்டுதலுக்காக அவர் தவமிருந்த இடத்தில் லிங்கமாக எழுந்தருளி கணபதீஸ்வரர் என்றும் பெயர் பெற்றார். இத்தலமும் கணபதீச்சுரம் என்று பெயர் பெற்றது. விநாயகரால் சம்ஹாரம் செய்யப்பட்ட கஜமுகாசுரனின் செங்குருதி (ரத்தம்) இப்பகுதியில் காடாய்ப் பெருகியமையால் இத்தலம் "திருச்செங்காட்டங்குடி" எனப் பெயர் பெற்றது.

கிழக்கு நோக்கியுள்ள 5 நிலை இராஜகோபுரத்துடன் இவ்வாலயம் உள்ளது. கோயில் வாயிலில் சத்திய தீர்த்தம் எனப்படும் திருக்குளம் உள்ளது. கோபுரத்தின் உட்புறம் தல விருட்சமான ஆத்தி மரம் உள்ளது. இறைவன் அமர்ந்திருக்க, சிறுத்தொண்டர் அவரை அமுது செய்ய அழைக்கும் சிற்பம் இங்குள்ளது. முன் மண்டபத்தில் வலதுபுறம் அம்பாள் தனி சந்நிதியில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள். உட்பிராகாரத்தில் பிட்சாடனர், சிறுத்தொண்டர், அவரது மனைவி திருவெண்காட்டு நங்கை, மகன் சீராளதேவர், அவரது வீட்டு பணியாள் சந்தனநங்கை ஆகியோர் மூலத் திருமேனிகளையும், 63 மூவர் திருமேனிகளையும் தரிசிக்கலாம். பிரம்மா, அர்த்தநாரீஸ்வரர், சித்தி விநாயகர், நால்வர், சங்கபதுமநிதிகள் ஆகிய சந்நிதிகள் அடுத்து உள்ளன. வாதாபி கணபதி தனிக்கோயிலில் எழுந்தருளியுள்ளார்.

இவ்வாலயத்திலுள்ள அஷ்டமூர்த்தி மண்டபம் கண்டு தொழத்தக்கது. துர்க்கை, வீரட்டலிங்கம், விஸ்வலிங்கம், புஜங்கலளிதர், கஜசம்ஹாரர், ஊர்த்துவதாண்டவர், காலசம்ஹாரர், கங்காளர், பிட்சாடனார், திரிபுராரி, பைரவர், விநாயகர் ஆகியோரின் அருமையான வேலைப்பாடுடைய மூலத் திருமேனிகள் இம் மண்டபத்தில் உள்ளன.

திருப்புகழ் தலம்: இவ்வாலயத்திலுள்ள முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நானகு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.

வாதாபி விநாயகர்: விநாயகர் வழிபாடு தமிழகத்தில் உருவாக காரணமாக இருந்தவர் இத்தலத்திலுள்ள வாதாபி விநாயகர். பல்லவ மன்னன் நரசிம்மவர்மனிடம் சேனாதிபதியாக இருந்த பரஞ்ஜோதி ஒருசமயம் வடநாட்டிற்கு போருக்குச் சென்றார். சாளுக்கிய மன்னன் புலிகேசியை வென்று, சாளுக்கிய நாட்டின் தலைநகரமான வாதாபி என்ற ஊரில் இருந்த கணபதி சிலையை, தன் வெற்றியின் அடையாளமாக தமிழகம் கொண்டு வந்தார். தன்னுடைய சொந்த ஊரான இத்தலத்தில் அந்தச் சிலையை பிரதிஷ்டை செய்தார். வாதாபியிலிருந்து வந்ததால் இந்த விநாயகர் வாதாபி விநாயகர் என்ற பெயர் பெற்றார். இந்த விநாயகர் ஒட்டிய வயிறுடன் காட்சி தருவது விசேஷம். விநாயகர் சதுர்த்தியன்று இவருக்கு விசேஷ பூஜை செய்யப்படும்.

சிறுத்தொண்ட நாயனார்: பல்லவ மன்னன் நரசிம்மவர்மனிடம் சேனாதிபதியாக இருந்த பரஞ்ஜோதி வாதாபி போரிலிருந்து திரும்பி வந்த பிறகு தன்னை முழுமையாக சிவசேவையில் ஈடுபடுத்திக் கொண்டார். அடியார்களுக்கும் அடியாராக இருந்து தொண்டு செய்ததால் "சிறுத்தொண்டர்" என்று சிறப்புப் பெயர் பெற்றார். சிறுத்தொண்டரின் பெருமையை உலகறியச் செய்ய விரும்பிய சிவபெருமான் இவரை சோதிக்க பைரவ வேடம் பூண்டு வந்தார். அப்போது சிறுத்தொண்டர் வீட்டில் இல்லை. அவரது மனைவி திருவெண்காட்டு நங்கை, பணிப்பெண் இருவரும் அடியாரை சாப்பிட அழைத்தனர். அவர்களிடம், ஆண் இல்லாத வீட்டில் சாப்பிட மாட்டேன் என்றவர், இக்கோயிலில் உள்ள ஆத்தி மரத்தடியில் காத்திருப்பதாகச் சொல்லிச் சென்றார். வீடு திரும்பிய சிறுத்தொண்டர் நடந்ததை அறிந்தார். கோயிலுக்கு வந்து அடியாரை அழைத்தார். அந்த அடியவர் வித்தியாசமான ஒரு சாப்பாடு கேட்டார். சிறுத்தொண்டரிடம் அவரது பிள்ளை சீராளனை சமைத்து கறியாக்கி எனக்கு தர வேண்டும் என்றார். சற்றும் தயங்காத சிறுத்தொண்டரும், அவரது மனைவி திருவெண்காட்டு நங்கையும் அவ்வாறே செய்தனர். அவரது பக்தியைப் பாராட்டிய சிவன், சீராளனை உயிர்ப்பித்து அவரிடம் ஒப்படைத்தார். சிறுத்தொண்டருக்கு நாயன்மார்களில் ஒருவராகும் அந்தஸ்தைக் கொடுத்தார்.

சிறுத்தொண்டருக்கு இறைவன் காட்சி கொடுத்து அருளியதை நினைவு கூறும் வகையில் சித்திரை மாத பரணி நட்சத்திரத்தன்று இவருக்கு "பிள்ளைக்கறியமுது படைத்த விழா" நடக்கிறது. அப்போது தேங்காய் துருவலை வறுத்து, அதனுடன் 63 மூலிகைகளை சேர்த்து பிள்ளைக்கறி தயாரிக்கின்றனர். இதை சுவாமிக்கு படைத்து, பிரசாதமாக தருகின்றனர். இதைச் சாப்பிட புத்திர பாக்கியம் கிடைப்பதாக நம்பிக்கை.

உத்தராபசுபதீஸ்வரர்: ஐயடிகள் காடவர்கோன் என்ற பல்லவ மன்னர் (63 நாயன்மார்களில் இவரும் ஒருவர்) சிறுத்தொண்டருக்கு இறைவன் காட்சி கொடுத்து அருளியதைக் கேள்விப்பட்டார். சிறுத்தொண்டருக்குக் காட்சி கொடுத்த இறைவனை தானும் தரிசிக்க விரும்பி வேண்டினார். இறைவனும் "சித்திரை திருவோணத்தில் உத்திராபதி உருவம் அமைத்து குடமுழுக்கு செய்தால் யாம் சணபகப் பூ மணம் வீச காட்சி தருகிறோம்" என்று அருளினார். மன்னரின் ஆணைப்படி கொல்லர்கள் உத்தராபசுபதீஸ்வரருக்கு சிலை வடித்தபோது, எவ்வளவு முயன்றும் சரியாக அமையவில்லை. அப்போது அங்கு வந்த அடியவர் ஒருவர், சிற்பிகளிடம் தண்ணீர் கேட்டார். அவர்கள் சிலை சரியாக அமையாத கோபத்தில், உலோக கலவையை கொடுத்துவிட்டனர். அதை பருகிய அடியார், அப்படியே சிலையாக மாறினார். சிவனே சிலையாக அமைந்ததைக் கண்டு மகிழ்ந்த மன்னர், அச்சிலையை இங்கு பிரதிஷ்டை செய்தார். அவ்வேளையில் சிவன், செண்பகப்பூ மணம் கமழ காட்சி தந்தார். இந்த விழா சித்திரை மாத திருவோண நட்சத்திரத்தன்று நடக்கிறது. இதை, "செண்பகப்பூ விழா' என்று அழைக்கிறார்கள். இந்நாளில் சுவாமிக்கு பன்னீர் அபிஷேகமும், செண்பகப்பூ மாலையும் சாத்தி அலங்கரிக்கின்றனர்.

மூலவர் கணபதீஸ்வரருக்கு வலப்புறம் தனிச்சன்னதியில் உத்தராபசுபதீஸ்வரர் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். காவியுடை அணிந்து, கையில் திருவோடு, திரிசூலம், உடுக்கை வைத்திருக்கிறார். சிவன் சிலையாக மாறியபோது நெற்றியில் சிறிய புடைப்பு இருந்தது. அதனை சிற்பிகள் செதுக்கவே ரத்தம் பீறிட்டது. கலங்கிய சிற்பிகள் பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ வைத்தவுடன் ரத்தம் நின்றது. தற்போதும் நெற்றியில் இந்த காயத்துடன் உத்திராபசுபதீஸ்வரர் காட்சி தருகிறார். சாயரட்சை பூஜையின்போது மட்டும் காயத்தில் பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ வைக்கின்றனர். சித்திரை, ஆடி, ஐப்பசி மற்றும் தை மாதப்பிறப்பன்றும், சித்திரை பரணி, வைகாசி திருவோணம், ஐப்பசி பரணி ஆகிய நாட்களில் 2 முறையும் என மொத்தம் வருடத்திற்கு பத்து நாட்கள் மட்டும் இவருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.

சிவபெருமான் ஆடிய நவதாண்டவங்களில் திருசெங்காட்டங்குடியில் ஆடியது உபயபாத நர்த்தனம் எனப்படுகிறது.

இவ்வாலயத்திற்கு சம்பந்தர் பதிகங்கள் இரண்டு, அப்பர் பதிகம் ஒன்று ஆக மொத்தம் மூன்று பதிகங்கள் இருக்கின்றன. சம்பந்தர் திருநாகைகைகாரோணம், கீழ்வேளூர் ஆகிய திருத்தலங்களை தரிசித்துக் கொண்டு திருசெங்காட்டங்குடி வந்தார். சிறுத்தொண்டர் சம்பந்தரை வரவேற்று அவருடன் திருக்கோவிலை அடைந்து இருவரும் இறைவனைப் பணிந்தனர். சம்பந்தர் தனது இரு பதிகங்களில் ஒன்றான "பைங்கோட்டு மலர்ப் புன்னைப் பறவைகாள்" என்று தொடங்கும் பதிகத்தின் ஒவ்வொரு பாடலிலும் சிறுத்தொண்டர் இவ்வாலய இறைவனுக்கு செய்து வந்த பணியினைப் போற்றி சிறப்பித்துப் பாடியுள்ளார்.

திருசெங்காட்டங்குடி உத்தராபசுபதீஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்


ஆலயத்தின் தோற்றம்


ஆலயத்தின் 5 நிலை இராஜ கோபுரம்


வாதாபி கணபதி சந்நிதி


வாதாபி கணபதி


சுவாமி சந்நிதி முன் நந்தி


தல விருட்சம் ஆத்தி மரம்


ஆலயத்தின் உட்புறத் தோற்றம்


ஆலயத்தின் தெற்கு நுழைவாயில்


சிறுத்தொண்டர், அவர் மனைவி,
மகன் சீராளன், தாதி சந்தன நங்கை


அஷ்டமூர்த்தி மண்டபத்தில் அஷடமூர்த்திகள்


ஊர்த்துவதாண்டமூர்த்தி, காலசம்ஹாரமூர்த்தி, கங்காளமூர்த்தி


பிட்சாடன மூர்த்தி, திரிபுர சம்ஹார மூர்த்தி