Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்


தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

மாணிக்கவண்னர் (இரத்தினகிரீஸ்வரர்) கோவில், திருமருகல்

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருமருகல்
இறைவன் பெயர்மாணிக்கவண்னர், இரத்தினகிரீஸ்வரர்
இறைவி பெயர்வண்டுவார் குழலம்மை
பதிகம்திருநாவுக்கரசர் - 1
திருஞானசம்பந்தர் - 2 (இவர் இயற்றிய மற்றொரு பதிகம் திருமருகல், திருசெங்கட்டாங்குடி இரண்டு சிவஸ்தலத்திற்கும் பொதுவானது)
எப்படிப் போவது நன்னிலத்தில் இருந்து 12 கி.மி. தொலைவில் நாகூர் செல்லும் சாலை வழியில் இத்தலம் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் சாலை வழியாகவும் திருமருகல் தலத்தை அடையலாம். திருமருகலில் இருந்து அருகில் உள்ள திருசாத்தமங்கை, திருசெங்காட்டங்குடி, திருப்புகலூர் ஆகிய மற்ற சிவஸ்தலங்களையும் தரிசிக்கலாம். திருவாரூர், நன்னிலம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை முதலிய ஊர்களிலிருந்து இத்தலத்திற்குப் பேருந்துகள் உள்ளன.
ஆலய முகவரி நிர்வாக அதிகாரி
அருள்மிகு இரத்தினகிரீஸ்வரர் திருக்கோவில்
திருமருகல்
திருமருகல் அஞ்சல்
நன்னிலம் வட்டம்
திருவாரூர் மாவட்டம்
PIN - 609702

இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12-30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
Tirumarugal route map

திருமருகல் இருப்பிடத்தைக் காட்டும் வரைபடம்
Map courtesy by: Google Maps

கோச்செங்கட் சோழன் கட்டிய யானை ஏற முடியாத மாடக்கோவில்களில் திருமருகல் ஆலயமும் ஒன்றாகும். மருகல் என்பது ஒருவகை கல்வாழையைக் குறிக்கும். இதைத் தலமரமாகக் கொண்டதாதலின் இத்தலம் "திருமருகல்" என்று பெயர் பெற்றது. கிழக்கு திசையிலுள்ள 68 அடி உயரமான கோபுரமே பிரதான நுழை வாயிலாகும். கோவிலுக்கு வெளியே எதிரில் இத்தலத்தின் தீர்த்தமான மாணிக்க தீர்த்தம் நீராழி மண்டபத்துடன் உள்ளது. தீர்த்தக் கரையில் முத்து விநாயகர் சந்நிதியைக் காணலாம். தென் திசையில் ஒரு சிறிய கோபுரம் உள்ளது. 4 புறமும் மதில்களை உடைய இக்கோவிலில் இரண்டு பிரகாரங்கள் உள்ளன. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால் கொடிமரம், பலிபீடம், நந்தி உள்ளன. இடதுபுறம் மேடையுடன் வன்னி மரம் உள்ளது. இம்மரத்தினடியில் தான் ஞானசம்பந்தர் விஷம் தீர்த்து எழுப்பிய செட்டி மகனுக்கும், செட்டிப் பெண்ணுக்கும் திருமணத்தை நடத்தி வைத்தார் என்று சொல்லப்படுகிறது.

பிரகாரத்தில் கொடிமர மண்டபத்தின் மேற்கே அம்பாள் சந்நிதி அமைந்திருக்கிறது. மூலவர் இரத்தினகிரீஸ்வரர் (மாணிக்கவண்ணர்) சந்நிதி ஒரு கட்டுமலை மேல் அமைந்திருக்கிறது. மூலவர் சுயம்பு மூர்த்தியாக சிவலிங்க உருவில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். சனீசுவர பகவானுக்கு சுவாமி சந்நிதிக்கு போகும் வாயிற்படியில் வடபுறம் தனி சந்நிதி உள்ளது. இதுபோல வேறு எந்த தலத்திலும் சனிபகவானை காண முடியாது. உள்பிராகாரத்தில் அறுபத்துமூவர் மூலத்திருமேனிகள், பராசரலிங்கம், விநாயகர், சுப்பிரமணியர் முதலிய சந்நிதிகள் உள்ளன. கோயிலின் உட்பிரகாரத்தில் வடக்கு மதில் ஓரமாக தல விருட்சம் இருக்கிறது. கோஷ்ட மூர்த்தங்களாகக் கணபதியும், தட்சிணாமூர்த்தியும், லிங்கோத்பவரும், பிரம்மாவும், துர்க்கையும் உள்ளனர். நவக்கிரக சந்நிதியும், பைரவர், சூரியன் திருவுருவங்களும், ஒரே பீடத்தில் அமைந்துள்ள செட்டி மகன், செட்டிப் பெண் மூலத்திருவுருவங்களும், பக்கத்தில் ஞானசம்பந்தர் மூலமேனியும் அடுத்தடுத்துள்ளன.

இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழ் வைப்புத் தலங்களில் இத்தலம் ஒன்றாகும். இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் இரண்டு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் எழுந்தருளியுள்ளார்.

விஷம் நீக்கிய வரலாறு: பாண்டியநாட்டு வணிகனாகிய தாமன் என்பவன் தன் மக்கள் எழுவரில் ஒருத்தியைத் தன் மருமகனுக்குக் கொடுப்பதாக வாக்களித்தான். ஆனால் வாக்களித்தடி நடக்காமல்,அவனுடைய பெணகளுக்கு பருவம் வந்த காலத்து ஒவ்வொருத்தியாகப் பிறருக்கு மணம் செய்து கொடுத்தான். அதனை உணர்ந்த ஏழாவது பெண் தாய் தந்தையர் அறியாமல் தன் மாமனோடு வெளியேறி பெரியவர்களின் எதிர்ப்பை மீறி திருமணம் புரிந்து கொள்ள நிச்சயித்தனர். திருமருகலையடைந்து ஒரு திருமடத்தில் அவர்கள் இருவரும் இரவு தங்கினர். அன்றிரவு அந்தச் செட்டி குமரனை வினையின் காரணமாக பாம்பு தீண்டியது. அவன் இறந்தான். திருமணம் ஆகாததால் வனிகனின் உடலைத் தீண்டமாட்டாளாய், இறைவன் மேல் தீராத பக்தி கொண்ட அந்தப் பெண் இறைவனை நோக்கி முறையிட்டுப் புலம்பினாள். சுவாமி தரிசனத்திற்காக வந்த திருஞானசம்பந்த சுவாமிகள் திரு உள்ளத்தை இவள் அழுகை ஒலி அருள் சுரக்கச் செய்தது. இளம் பெண்ணின் அழுகைக் குரலையும் அவளின் நிராதரவான நிலையையும் கண்டு இரக்கப்பட்ட திருஞானசம்பந்தர் இறைவன் மேல்

சடையாயெனுமால் சரண்நீ எனுமால்
விடையா யெனுமால்வெருவா விழுமால்
மடையார் குவளை மலரும் மருகல்
உடையாய் தகுமோ இவளுண் மெலிவே

என்று தொடங்கும் பதிகம் பாட சுற்றிலும் உள்ளோர் அதிசயிக்கும்படி வனிகன் உயிர்பெற்று எழுந்தான். பிறகு அந்த பெண்ணிற்கும் வணிகனுக்கும் இறைவன் முன்னிலையில் சம்பந்தர் மணம் நடத்தி வாழ்த்தி அருளினார். திருமணம் ஆகி ஏதேனும் காரணங்களால் பிரிந்து வாழும் தம்பதியினர் இத்தலத்து இறைவனிடம் வேண்டிக் கொண்டு வழிபட்டால் பிரிந்தர் கூடி வாழ்வர் என்பது நிச்சயம். திருமாலை விட்டுப் பிரிந்த மஹாலக்ஷ்மியும் இத்தலத்திற்கு வந்து சிவனை வழிபாடு செய்து மீண்டும் திருமாலுடன் இணைந்து வாழ அருள் பெற்றாள் என்று தலபுராணம் கூறுகிறது.

சம்பந்தப் பெருமான் திருமருகலில் வணிகன் விடம் தீர்த்து அத்தலத்தில் தங்கியிருந்த போது, சிறுத்தொண்டர் வந்து திருசெங்காட்டங்குடிக்கு எழுந்தருள வேண்டும் என்று விண்ணப்பித்தார். சம்பந்தரும் அடியார்களுடன் திருமருகல் ஆலயத்திற்குச் சென்று இறைவனை வணங்கி சிறுத்தொண்டருடன் திருசெங்காட்டங்குடி செல்ல ஆயத்தமானார். திருமருகல் இறைவன் ஆளுடைய பிள்ளையாருக்கு திருமருகல் கோவிலிலேயே திருசெங்காட்டங்குடி கணபதீச்சரத்து இறைவனைக் காட்டி அருள் புரிந்தார். சம்பந்தரும் அங்கமும் வேதமும் ஓதும் நாவர் என்று தொடங்கும் (திருமருகல், திருசெங்கட்டாங்குடி இரண்டு சிவஸ்தலத்திற்கும் பொதுவான) பதிகம் பாடினார்.