Shiva Temples of Tamilnadu
தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்
அயவந்தீஸ்வரர் கோவில், திருச்சாத்தமங்கை
தென்னாடுடைய சிவனே போற்றிஎந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
| தகவல் பலகை | |
|---|---|
| சிவஸ்தலம் பெயர் | திருச்சாத்தமங்கை (தற்போது சீயாத்தமங்கை என்று வழங்குகிறது) |
| இறைவன் பெயர் | அயவந்தீஸ்வரர், பிரம்மபுரீஸ்வர் |
| இறைவி பெயர் | மலர்க்கண்ணம்மை, உபய புஷ்ப விலோசனி |
| பதிகம் | திருஞானசம்பந்தர் - 1 |
| எப்படிப் போவது | நன்னிலம் - திருமருகல் - நாகூர் சாலை வழியில் இத்தலம் அமைந்திருக்கிறது. திருமருகலில் இருந்து நாகூர் செல்லும் சாலையில் ஒரு கி.மி. சென்றவுடன் "கோயில் சீயாத்தமங்கை" என்ற வழிகாட்டி கல் உள்ளது. அவ்விடத்திலிருந்து ஒரு கி.மி. தொலைவில் இத்தலம் உள்ளது. நாகப்பட்டிணத்தில் இருந்து சன்னாநல்லூர் செல்லும் சாலையில் பயணித்தும் இத்தலத்தை அடையலாம். நாகப்பட்டிணத்தில் இருந்து சுமார் 13 கி.மி. தொலைவில் இத்தலம் உள்ளது. ஊருக்கு "சாத்தமங்கை" என்றும், கோயிலுக்கு "அயவந்தி" என்றும் பெயர். திருச்சாத்தமங்கையில் இருந்து அருகில் உள்ள திருமருகல், திருசெங்காட்டங்குடி, திருப்புகலூர், இராமனதீச்சரம் ஆகிய மற்ற சிவஸ்தலங்களையும் தரிசிக்கலாம். |
| ஆலய முகவரி | அருள்மிகு அயவந்தீஸ்வரர் திருக்கோயில் சீயாத்தமங்கை சீயாத்தமங்கை அஞ்சல் நன்னிலம் வட்டம் திருவாரூர் மாவட்டம் PIN - 609702 இவ்வாலயம் தினந்தோறும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5-30 மணி முதல் இரவு 7-30 மணி வரையிலும் திறந்திருக்கும். |
![]() Map courtesy by: Yahoo Maps | |
இத்தலம் இக்காலம் சீயாத்தமங்கை என்று வழங்கப் பெறுகின்றது. ஊரின் பெயர் சாத்தமங்கை. இங்குள்ள கோயிலின் பெயர் அயவந்தி. உயர்ந்த சுற்றுமதிலையுடைய பெரிய இவ்வாலயம் சுவாமி அம்பாள் சந்நிதிகள் இரண்டிற்கும் தனித்தனி வாயில்களுடனும், கோபுரங்களுடனும் மேற்கு நோக்கி அமைந்துள்ளன. சுவாமி ராஜகோபுரம் ஐந்து நிலைகளையுடையது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால் விசாலமான மூற்றவெளி உள்ளது. வெளிச்சுற்றில் வலம் வரும்போது சந்திரன், காகத்தின் மீது ஒரு காலூன்றிய அமைப்பில் உள்ள சனிபகவான், சப்தமாதர்கள், பைரவர், நவக்கிரகங்கள், மகாலிங்கம், விசுவநாதர், விசாலாட்சி, விநாயகர் முதலிய சந்நிதிகள் உள்ளன.
உள்வாயிலைக் கடந்து முன்மண்டபம் அடைந்து வலம் வரும்போது, வள்ளி தெய்வயானை சமேத சுப்பிரமணியர், மகாலட்சுமி, நால்வர் சந்நிதிகள் உள்ளன. அடுத்து 63 நாயன்மார்களில் ஒருவரான திரு நீலநக்க நாயனார், அவருடைய மனைவி ஆகியோரின் உருவங்கள் உள்ளன. சோமாஸ்கந்தர், மகாகணபதி சந்நிதிகளைத் தரிசித்துப் படிகளேறி உள்சுற்றில் நீலநக்கர், அவருடைய மனைவி, நடன சுந்தரர் முதலிய உற்சவத் திருமேனிகளைத் தரிசிக்கலாம். நடராச சபையில் அம்பலக்கூத்தர் அம்மை சிவகாமி மணிவாசகருடன் காட்சி தருகின்றார். சனீசுவரன், காகத்தின் மேல் ஒரு காலை ஊன்றியவாறு நின்ற கோலத்தில் உள்ளார்.
மூலவர் கருவறையில் மேற்கு நோக்கி தரிசனம் தருகிறார். சுயம்பு மூர்த்தியான இந்த அயவந்தீசுவரர் பாணம் முழுவதும் கொப்புளம் போல காட்சி தருவது, நீலநக்க நாயனார் வரலாற்றை நினைவுபடுத்துவாக அமைந்துள்ளது. கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, நர்த்தனகணபதி, இலிங்கோத்பவர், பிரம்மா, பிட்சாடனர், துர்க்கை, அர்த்தநாரீஸ்வரர் முதலிய மூர்த்திகள் உள்ளனர். இவற்றுள் அர்த்தநாரீஸ்வரர் திருமேனி ரிஷபத்தின் தலைமீது ஒரு கை வைத்திருக்கும் அமைப்பில் இருப்பது தரிசிக்கத்தக்கது.
அம்பாள் சந்நிதி பக்கத்தில் தனிக்கோயிலாகவுள்ளது. சூரியன் விநாயகர், சுப்பிரமணியர் சந்நிதிகள் உள்ளன. நந்தி சற்று உயரத்தில் உள்ளது. படிகளேறிச் சென்றால் கருவறை முன் மூஞ்சூறு வாகனத்தின் மீது அமர்ந்துள்ள விநாயகரையும், தண்டபாணியையும் துவாரமூர்த்திகளாகத் தரிசிக்கலாம். நேரே அம்பாள் நான்கு திருக்கரங்களுடன் கூடிய நின்ற திருக்கோலத்தில் அருட்காட்சி தருகிறாள்.
63 நாயன்மார்களில் ஒருவரான திருநீலநக்க நாயனாரின் அவதாரத் தலம் திருசாத்தமங்கை. சிவத்தொண்டாற்றிய திருநீலநக்க நாயனார், அவரது மனைவியின் உருவச்சிலைகள் மகா மண்டபத்தில் உள்ளன. திருநீலநக்கர் தன் மனைவி மங்கையர்க்கரசியுடன் அனுதினமும் அயவந்தீஸ்வரரை கொன்றை மலர்களால் வழிபடுவது வழக்கம். திருநீலநக்கர் ஒருமுறை மனைவியோடு திருக்கோயிலுக்குச் சென்றிருந்தார். கருவறையில் லிங்கத் திருமேனி மீது ஒரு சிலந்திப் பூச்சியைக் கண்ட அவரது மனைவி, அதனைத் தன் வாயினால் ஊதி அகற்றிட, மனைவியின் எச்சில் இறைவன் திருமேனியில் பட்டுவிட்டதாகக் கருதிய நீலநக்கர் கடுஞ்சினங் கொண்டார். அதனை தகாத செயலாகக் கருதி, மனைவியைப் பிரிந்து வாழத் துவங்கினார். வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த அவரது கனவில் இறைவன் தோன்றி, நாயனாரின் மனைவி வாயினால் ஊதிய பகுதி தவிர இதர பகுதிகள் முழுதும் லிங்கத் திருமேனியில் கொப்புளமாகக் காட்சியளிப்பதைச் சுட்டிக்காட்டி, அம்மங்கையின் பெருமையை உலகுக்கு வெளிப்படுத்தினார். திருநள்ளாறு தலத்தில் இறைவனை வணங்கிய பிறகு திருஞானசம்பந்தர் திருசாத்தமங்கை எழுந்தருளினார். திருநீலநக்க நாயனார் நகரை அலங்கரித்து சம்பந்தரை எதிர்கொண்டு அழைத்து வணங்கினார். பின்னர் இருவரும் அயவந்தி ஆலயத்தை அடைந்து இறைவனை வழிபட்டு நீலநக்கர் இல்லம் திரும்பி திருவமுதுண்டு தங்கினர். மறுநாள் காலை ஆலயத்திற்குச் சென்ற சம்பந்தர் பதிகம் பாடினார். பதிகத்தின் 2-வது மற்றும் 11வது திருக்கடைக் காப்பிலும் திருநீலதக்க நாயனாரை சிறப்பித்துப் பாடியுள்ளார். இப்பதிகம் 3-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.
திருமலர்க் கொன்றைமாலை திளைக்கும்மதி சென்னிவைத்தீர் இருமலர்க் கண்ணிதன்னோ டுடனாவது மேற்பதொன்றே பெருமலர்ச் சோலைமேகம் உரிஞ்சும்பெருஞ் சாத்தமங்கை அருமல ராதிமூர்த்தி அயவந்திய மர்ந்தவனே. பொடிதனைப் பூசுமார்பிற் புரிநூலொரு பாற்பொருந்தக் கொடியன சாயலாளோ டுடனாவதுங் கூடுவதே கடிமணம் மல்கிநாளுங் கமழும்பொழிற் சாத்தமங்கை அடிகள் நக்கன் பரவ அயவந்திய மர்ந்தவனே. நூனலந் தங்குமார்பில் நுகர்நீறணிந் தேறதேறி மானன நோக்கிதன்னோ டுடனாவது மாண்பதுவே தானலங் கொண்டுமேகந் தவழும்பொழிற் சாத்தமங்கை ஆனலந் தோய்ந்தஎம்மான் அயவந்திய மர்ந்தவனே. மற்றவின் மால்வரையா மதிலெய்துவெண் ணீறுபூசி புற்றர வல்குலாளோ டுடனாவதும் பொற்பதுவே கற்றவர் சாத்தமங்கை நகர்கைதொழச் செய்தபாவம் அற்றவர் நாளுமேத்த அயவந்திய மர்ந்தவனே. வெந்தவெண் ணீறுபூசி விடையேறிய வேதகீதன் பந்தண வும்விரலாள் உடனாவதும் பாங்கதுவே சந்தமா றங்கம்வேதம் தரித்தார்தொழுஞ் சாத்தமங்கை அந்தமாய் ஆதியாகி அயவந்திய மர்ந்தவனே. வேதமாய் வேள்வியாகி விளங்கும்பொருள் வீடதாகிச் சோதியாய் மங்கைபாகந் நிலைதான்சொல்ல லாவதொன்றே சாதியால் மிக்கசீரால் தகுவார்தொழுஞ் சாத்தமங்கை ஆதியாய் நின்றபெம்மான் அயவந்திய மர்ந்தவனே. இமயமெல் லாம்இரிய மதிலெய்துவெண் ணீறுபூசி உமையையோர் பாகம்வைத்த நிலைதானுன்ன லாவதொன்றே சமயமா றங்கம்வேதந் தரித்தார்தொழுஞ் சாத்தமங்கை அமையவே றோங்குசீரான் அயவந்திய மர்ந்தவனே. பண்ணுலாம் பாடல்வீணை பயில்வானோர் பரமயோகி விண்ணுலா மால்வரையான் மகள்பாகமும் வேண்டினையே தண்ணிலா வெண்மதியந் தவழும்பொழிற் சாத்தமங்கை அண்ணலாய் நின்றஎம்மான் அயவந்திய மர்ந்தவனே. பேரெழில் தோளரக்கன் வலிசெற்றதும் பெண்ணோர்பாகம் ஈரெழிற் கோலமாகி யுடனாவதும் ஏற்பதொன்றே காரெழில் வண்ணனோடு கனகம்மனை யானுங்காணா ஆரழல் வண்ணமங்கை அயவந்திய மர்ந்தவனே. கங்கையோர் வார்சடைமேல் அடையப்புடை யேகமழும் மங்கையோ டொன்றிநின்றம் மதிதான்சொல்ல லாவதொன்றே சங்கையில் லாமறையோர் அவர்தாந்தொழு சாத்தமங்கை அங்கையிற் சென்னிவைத்தாய் அயவந்திய மர்ந்தவனே. மறையினார் மல்குகாழித் தமிழ்ஞானசம் பந்தன்மன்னும் நிறையினார் நீலநக்கன் நெடுமாநகர் என்று தொண்டர் அறையும் ஊர் சாத்தமங்கை அயவந்திமேல் ஆய்ந்த பத்தும் முறைமையால் ஏத்தவல்லார் இமையோரிலும் முந்துவரே.

