Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்

வெண்ணைப் பெருமான் கோவில், சிக்கல்

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்சிக்கல்
இறைவன் பெயர்வெண்ணைப் பிராண், நவநீத நாதர்
இறைவி பெயர்வேல் நெடுங்கண்ணி
பதிகம்திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது நாகப்பட்டினத்தில் இருந்து 5 கி.மி. தொலைவில் சிக்கல் தலம் உள்ளது.
ஆலய முகவரிஅருள்மிகு நவநீதேஸ்வரர் திருக்கோயில்
சிக்கல்
சிக்கல் அஞ்சல்
வழிநாகப்பட்டிணம்
நாகப்பட்டினம் வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம்
PIN - 611108

இவ்வாலயம் தினந்தோறும் காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.

புராண வரலாறு: புராணகாலத்தில் மல்லிகைவனம் என்று அழைக்கப்பட்ட இத்தலத்தில் வசிஷ்ட முனிவர் ஆசிரமம் அமைத்துக் கொண்டு இத்தலத்து சிவபெருமானை வழிபட்டு வந்தார். அக்கால கட்டத்தில் தேவலோகத்துப் பசுவான காமதேனு தான் செய்த ஒரு சிறு பிழையின் காரணமாக சாபம் பெற்று இத்தலத்திற்கு வந்தது. தற்போதுள்ள ஆலயத்தின் மேற்குப் பக்கம் உள்ள பாற்குளம் என்றும் க்ஷீரபுஷ்கரணி என்றும் சொல்லப்படும் தீர்த்தத்தில் தன் பாவம் தீர நீராடியது. காமதேனு குளித்தபோது அதனுடைய பால் பெருகி குளம் முழுக்கப் பாலாக மாறியது. அங்கு வந்த வசிஷ்ட முனிவர் பால் குளத்தைப் பார்த்து அதில் இருந்து வெண்ணையை எடுத்து சிவலிங்கமாக்கி அதற்கு பூஜை செய்தார். பூஜையை முடித்தபின் அந்த சிவலிங்கத்தை வேறு இடத்தில் வைக்க எண்ணி அதை எடுக்க முயன்றார். அது இயலாமல் அந்த வெண்ணை லிங்கம் அவர் கையில் சிக்கிக் கொண்டது. அதனாலேயே இத்தலம் சிக்கல் என்ற பெயருடன் விளங்குகிறது என்று புராண வரலாறு கூறுகின்றது. வெண்ணெய் லிங்கத் திருமேனியான இறைவன் வெண்ணைப் பிராண் என்றும், நவநீத நாதர் என்றும் அழைக்கப்படுகிறார்.

கோவிலின் சிறப்பு:

கோவிலின் அமைப்பு: கோச்செங்கட் சோழன் கட்டிய மாடக் கோவில்களில் இத்தலமும் ஒன்றாகும். கோவிலின் ராஜகோபுரம் சுமார் 80 அடி உயரமும் 7 நிலைகளையும் உடையது. இராஜகோபுரத்திறகு முன்னால் இரும்புத் தூண்கள் தாங்கும் ஒரு பெரிய கல்யாண மண்டபம் இருக்கிறது. கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் கார்த்திகை மண்டபம் இருக்கிறது. அடுத்த வாசலில் தெற்கே விநாயகரும், வடக்கே தண்டபானியும் காட்சி தருகின்றனர். இரண்டவது சுற்றில் சனீஸ்வரர், தட்சினாமூர்த்தி, திருமகள், துர்க்கை, சண்டீசர் மற்றும் நவக்கிரக சந்நிதிகள் உள்ளன. கோவிலின் மையத்தில் 12 படிகள் கொண்ட ஒரு கட்டுமலை மேல் மூலவர் நவநீத நாதர் லிங்க வடிவில் அருள் புரியும் சந்நிதியும், சிக்கல் சிங்காரவேலர் என்று பிரசித்தி பெற்ற முருகப்பெருமான் சந்நிதியும் உள்ளன. கீழ்ப்படிக்குப் பக்கத்திலுள்ள சுந்தர கணபதியை தரிசித்த பிறகே கட்டுமலை மேலே செல்ல வேண்டும் என்பது வழக்கம். மேலே சென்று மண்டபத்தை அடைந்ததும் நேரே தியாகராஜ சந்நிதி உள்ளது. இது சப்தவிடங்கத்தலங்களுள் அடங்காது. இங்குள்ள மரகதலிங்கம் மிகவும் சிறப்புள்ளது. உள்ளே வெண்ணைப் பிராண் இருக்கும் கருவறை உள்ளது. சிக்கல் சிங்காரவேலர் வள்ளி, தெய்வானையுடன் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். ஐப்பசி மாத விழாவில் வியர்வை சிந்தும் வேலவர் இவர்தான். கட்டுமலயின் கீழ்பக்கம் இறைவி வேல் நெடுங்கண்ணியின் சந்நிதி அமைந்துள்ளது. இறைவி முருகனுக்கு வேல் தருவது போன்ற சிற்பம் சந்நிதியின் மேல்பாகத்தில் இருக்கிறது. பிரகாரம் சுற்றி வரும்போது வடக்குச் சுற்றில் கோலவாமனப் பெருமாள் கோவில் தனியாக அமைந்திருக்கிறது. ஸ்ரீதேவி, பூமாதேவி சகிதம் நின்ற திருக்கோலத்தில் பெருமாள் காட்சி தருகிறார். வடமேற்கு மூலையில் ஆஞ்சனேயர் சந்நிதி அமைந்திருக்கிறது.

சம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய இப்பதிகம் இரண்டாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது:

1. வான் உலாவும் மதி வந்து உலவும் மதில் மாளிகை
தேன் உலாவும் மலர்ச்சோலை மல்கும் திகழ் சிக்கலுள்
வேனல் வேளை விழித்திட்ட வெண்ணெய்ப்பெருன் அடி
ஞானம் ஆக நினைவார் வினை ஆயின நையுமே.  

2. மடம் கொள் வாளை குதிகொள்ளும் மணமலர்ப் பொய்கைசூழ்
திடம் கொள் மாமறையோர் அவர் மல்கிய சிக்கலுள்
விடம் கொள் கண்டத்து வெண்ணெய்ப்பெருமான் அடி மேவியே
அடைந்து வாழும் அடியார் அவர் அல்லல் அறுப்பரே. 

3. நீலம்  நெய்தல் நிலவி மலரும் சுனை நீடிய
சேலும் ஆலும் கழனி வளம் மல்கிய சிக்கலுள்
வேலொண் கண்ணியினாளை ஓர்பாகன் வெண்ணெய்ப்பிரான்
பாலவண்ணன் கழல் ஏத்த நம் பாவம் மறையுமே. 

4. கந்தம் உந்தக் கைதை பூத்துக் கமழ்ந்து சேரும் பொழில்
செந்து வண்டு இன்னிசை பாடல் மல்கும் திகழ் சிக்கலுள்
வெந்தவெண்ணீற்று அண்ணல் வெண்ணெய்ப்பிரான் விரையார் கழல்
சிந்தை செய்வார் வினையாயின தேய்வது திண்ணமே. 

5. மங்குல் தங்கும் மறையோர்கள் மாடத்து அயலே மிகு
தெங்கு துங்கப் பொழில் செல்வம் மல்கும் திகழ் சிக்கலுள்
வெங்கண் வெள்ளேறு உடை வெண்ணெய்ப்பிரான் அடி மேவவே
தங்கும் மேனமை சரதநம் திரு நாளும் தகையுமே.  

6. வண்டு இரைத்து மது விம்மிய மா மலர்ப் பொய்கை சூழ்
தெண் திரைக் கொள்புனல் வந்தொழுகும் வயல் சிக்கலுள்
விண்டு இரைத்து அம்மலராறல் திகழ் வெண்ணெய்ப்பிரான் அடி
கண்டு இரைத்து மனமே மதியாய் கதி யாகவே. 

7. முன்னு மாடம் மதில் மூன்று உட னே எரியாய் விழத்
துன்னுவார் வெங்கணை யொன்று செலுத்திய சோதியான்
செந்நெல் ஆரும் வயல் சிக்கல் வெண்ணெய்ப்பெருமான் அடி
உன்னி நீடம் மனமே நினையாய் வினை ஓயவே. 

8. தெற்றல் ஆகிய தென் இலங்கைக்கு இறைவன் மலை
பற்றினான் முடி பத்தொடு தோள்கள் நெரியவே
செற்ற தேவன் நம் சிக்கல் வெண்ணெய்ப்பெருமான் அடி
உற்று நீ நினைவாய் வினையாயின ஓயவே. 

9. மாலினோடு அரு மாமறை வல்ல முனிவனும்
கோலினார் குறுகச் சிவன் சேவடி கோலியும்
சீலந் தாம் அறியார் திகழ் சிக்கல் வெண்ணெய்ப்பிரான்
பாலும் பன்மலர் தூவப் பறையும் நம் பாவமே.  

10. பட்டை நற்றுவன் ஆடையினாரொடும் பாங்கிலாக்
கட்டடு அமண் கழுக்கள் சொல்லினைக் கருதாது நீர்
சிட்டன் சிக்கல் வெண்ணெய்ப்பெருமான் செழு மாமறைப்
பட்டன் சேவடியே பணிமின் பிணி போகவே.  

11. கந்தம் ஆர் பொழில் காழியுள் ஞானசம்பந்தன் நல்
செந்தண் பூம்பொழில் சிக்கல் வெண்ணெய்ப்பெருமா ன் அடிச்
சந்தமாச் சொன்ன செந்தமிழ் வல்லவர் வானிடை
வெந்த நீறு அணியும் பெருமான் அடி மேவரே.