Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்


தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

தூவாய் நாயனார் கோவில், ஆரூர் பறவயுன்மண்டளி

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்ஆரூர் பரவையுண்மண்டளி
இறைவன் பெயர்தூவாய் நாயனார்
இறைவி பெயர்பஞ்சின் மெல்லடியம்மை
பதிகம்சுந்தரர் - 1
எப்படிப் போவதுதிருவாரூரில் கிழக்கு ரத வீதியில் இத்தலம் இருக்கிறது.
ஆலய முகவரிஅருள்மிகு தூவாய் நாயனார் திருக்கோயில்
கீழரத வீதி
திருவாரூர் அஞ்சல்
திருவாரூர் வட்டம்
திருவாரூர் மாவட்டம்
PIN - 610001

இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

திருவாரூரில் கிழக்கு ரத வீதியில் தேர் நிலைக்கு அருகில் இக்கோவில் அமைந்துள்ளது. கிழக்கு பார்த்த சந்நிதியை உடைய இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். இத்தல இறைவனின் பெயர் தூவாய்நாதர். மக்கள் இக்கோயிலைத் துர்வாசர் கோவில் என்று தான் அழைக்கின்றனர். சுந்தரர் பாடல் பெற்றது. இதன் பின்புறம் திருநீலகண்ட நாயனார் கோயிலும், தெற்குச் சந்நிதியில் பரவை நாச்சியார் கோயிலும் உள்ளன.

தலப் பெருமை: "உன்னை விட்டு எப்போதும் பிரியமாட்டேன்" என்று உறுதி மொழி கொடுத்து சங்கிலி நாச்சியாரை திருவொற்றியூரில் திருமணம் செய்து கொளிகிறார் சுந்தரர். நாட்கள் செல்ல, திடீரென அவருக்கு முதல் துணைவியான பரவை நாச்சியார் நினைவுக்கு வந்தவுடன் திருவாரூர் புறப்படுகிறார். சங்கிலி நாச்சியாருக்கு செய்து கொடுத்த உறுதி மொழியை மீறியதால் சுந்தரரின் பார்வை பறிபோனது. மனம் கலங்கிய சுந்தரர் பார்வை வேண்டி ஒவ்வொரு சிவத்தலங்களாக சென்று, மீண்டும் பார்வை தந்தருளும்படி வேண்டினார். காஞ்சிபுரம் வந்தபோது காமாட்சியின் கருணையால் ஏகாம்பரேஸ்வரர் சுந்தரருக்கு இடது கண் பார்வை மட்டும் தந்தருளினார். மீண்டும் அவர் பல சிவத்தலங்களை தரிசித்து திருவாரூர் வந்து மற்றொரு கண்ணுக்கு பார்வை தந்தருளும்படி வேண்டினார். இவரது வேண்டுதலை ஏற்ற இறைவன், "இத்தலத்தில் அக்னி மூலையில் உள்ள குளத்தில் நீராடி தன்னை வணங்கினால் வலது கண் பார்வை கிடைக்கும்" என்றருளினார். சுந்தரரும் அதன்படி செய்து வலது கண் பார்வை பெற்றார். சுந்தரருக்கு இங்கு கண் கிடைத்ததன் அடையாளமாக, இத்தலத்து இறைவனுக்கு அபிஷேகம் செய்யும்போது அவரது திருமேனியில் கண் தடம் தெரிவதை காணலாம். கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் இக்குளத்தில் நீராடி இங்குள்ள இறைவனுக்கு செவ்வரளி மாலை சாற்றி, அர்ச்சனை செய்து வழிபட்டால் பார்வை குறைபாடு சரியாகும் என்பது நம்பிக்கை.


துர்வாசர் உருவச்சிலை, பின்னப்படுத்தப்பட்ட வலது கை கட்டைவிரல்

தல வரலாறு: பிரளய காலத்தில் கடல் பொங்கி எழுந்த போது, உலகை காப்பாற்ற தேவர்களும், முனிவர்களும் சிவனிடம் முறையிட்டனர். சிவபெருமான் துர்வாச முனிவரிடம் "இத்தலத்தின் அக்னி மூலையில் குளம் அமைத்து தன்னை வழிபட்டால் கடல் அமைதியடையும். உயிர்கள் காப்பாற்றப்படும்"' என்றார். அதன்படி துர்வாசர் தலைமையில் முனிவர்கள் இங்கு ஒன்று கூடி குளம் அமைத்து இறைவனை பூஜைசெய்தனர். முனிவர்களின் பூஜையை ஏற்ற சிவன் பொங்கிவந்த கடலை அக்னி மூலையில் அமைத்த குளத்தின் மூலம் ஈர்த்துக் கொண்டார். கோயிலின் அக்னி மூலையில் அமைந்துள்ள இககுளம் தனி சிறப்புடையது. துர்வாச முனிவர் பூஜித்த காரணத்தினால் இத்தல இறைவனுக்கு துர்வாச நாயினார் என்ற பெயர் ஏற்பட்டது. மக்கள் வழக்கில் துர்வாசர் கோவில் என்றால் தான் தெரியும். இத்தலத்திலுள்ள விநாயகர் சந்நிதியில் துர்வாசருக்கும் ஒரு உருவச்சிலை உள்ளது. ஒரு காலத்தில் இவர் மிகவும் உக்கிரகமாக இருந்ததால் ஆலயத்திறகு வருபவர்கள் துர்வாசர் உருவச்சிலை இருக்கும் விநாயகர் சந்நிதியை தவிர்த்து கோவில் வலம் வந்தனர். இந்த உக்கிரகத்தைக் குறைக்க துர்வாசர் சிலையிலுள்ள வலது கை கட்டைவரலை பின்னப்படுத்தியதாகவும், அதன்பின் மக்கள் பயமின்றி ஆலயத்தை வலம் வருவதாகவும் இவ்வாலயத்தின் குருக்கள் தெரிவிக்கிறார்.

சுந்தரர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் 7-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது

தூவாயா தொண்டுசெய் வார்படு துக்கங்கள்
காவாயே கண்டுகொண் டார்ஐவர் காக்கிலும்
நாவாயால் உன்னையே நல்லன சொல்லுவேற்
காவாவென் பரவையுண் மண்டளி யம்மானே.  

பொன்னானே புலவர்க்கு நின்புகழ் போற்றலாம்
தன்னானே தன்னைப் புகழ்ந்திடுந் தற்சோதி
மின்னானே செக்கர் வானத் திளஞாயி
றன்னானே பரவையுண் மண்டளி யம்மானே.  

நாமாறா துன்னையே நல்லன சொல்லுவார்
போமாறென் புண்ணியா புண்ணியம் ஆனானே
பேய்மாறாப் பிணமிடு காடுகந் தாடுவாய்க்
காமாறென் பரவையுண் மண்டளி யம்மானே.  

நோக்குவேன் உன்னையே நல்லன நோக்காமைக்
காக்கின்றாய் கண்டுகொண் டார்ஐவர் காக்கிலும்
வாக்கென்னும் மாலைகொண் டுன்னை என்மனத்
தார்க்கின்றேன் பரவையுண் மண்டளி யம்மானே.  

பஞ்சேரும் மெல்லடி யாளையோர் பாகமாய்
நஞ்சேரும் நன்மணி கண்டம் உடையானே
நெஞ்சேர நின்னையே உள்கி நினைவாரை
அஞ்சேலென் பரவையுண் மண்டளி யம்மானே. 
அம்மானே ஆகம சீலர்க் கருள்நல்கும்
பெம்மானே பேரரு ளாளன் பிடவூரன்
தம்மானே தண்டமிழ் நூற்புல வாணர்க்கோர்
அம்மானே பரவையுண் மண்டளி யம்மானே.  

விண்டானே மேலையார் மேலையார் மேலாய
எண்டானே எழுத்தொடு சொற்பொருள் எல்லாமுன்
கண்டானே கண்டனைக் கொண்டிட்டுக் காட்டாயே
அண்டானே பரவையுண் மண்டளி யம்மானே.  

காற்றானே கார்முகில் போல்வதோர் கண்டத்தெங்
கூற்றானே கோல்வளை யாளையோர் பாகமாய்
நீற்றானே நீள்சடை மேல்நிறை வுள்ளதோர்
ஆற்றானே பரவையுண் மண்டளி யம்மானே.  

செடியேன்நான் செய்வினை நல்லன செய்யாத
கடியேன்நான் கண்டதே கண்டதே காமுறுங்
கொடியேன்நான் கூறுமா றுன்பணி கூறாத
அடியேன்நான் பரவையுண் மண்டளி யம்மானே.  

கரந்தையும் வன்னியும் மத்தமுங் கூவிளம்
பரந்தசீர்ப் பரவையுண் மண்டளி யம்மானை
நிரம்பிய ஊரன் உரைத்தன பத்திவை
விரும்புவார் மேலையார் மேலையார் மேலாரே.  

ஆரூர் பரவையுண்மண்டளி தூவாய் நாயனார் ஆலயம் புகைப்படங்கள்


3 நிலை இராஜகோபுரம்


மூலவர் தூவாய் நாயனார்


இராஜகோபுரம் கடந்து உள்ளே முற்றவெளி


முற்றவெளியில் நந்தி, பலிபீடம்


சிவன் சந்நிதி விமானம், பின்னால் இராஜகோபுரம்


அக்னி மூலையில் அமைந்துள்ள திருக்குளம்


பஞ்சின் மெல்லடியாள் சந்நிதி நுழைவாயில்


பஞ்சின் மெல்லடியாள்