தகவல் பலகை | |
---|---|
சிவஸ்தலம் பெயர் | திருச்சேறை (உடையார் கோவில்) |
இறைவன் பெயர் | செந்நெறியப்பர், சாரபரமேஸ்வரர் |
இறைவி பெயர் | ஞானாம்பிகை, ஞானவல்லி |
பதிகம் | திருநாவுக்கரசர் - 2 திருஞானசம்பந்தர் - 1 |
எப்படிப் போவது | கும்பகோணத்திலிருந்து தென்கிழக்கே நாச்சியார்கோவில் வழியாக குடவாசல் செல்லும் சாலையில் 10 கி.மீ. தொலைவில் திருச்சேறை சிவஸ்தலம் இருக்கிறது. குடவாசலில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ளது. கும்பகோணத்திலிருந்து வலங்கைமான் வழியாகவும் திருச்சேறை தலத்தை அடையலாம். திருச்சேறையில் 108 திவ்யதேசங்களில் ஒன்றான சாரநாதப் பெருமாள் ஆலயமும் உள்ளது. |
ஆலய முகவரி | அருள்மிகு செந்நெறியப்பர் திருக்கோயில் திருச்சேறை திருச்சேறை அஞ்சல் கும்பகோணம் வட்டம் தஞ்சாவூர் மாவட்டம் PIN - 612605 இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும். |
குடவாசலில் இருந்து திருச்சேறை செல்லும் வழி வரைபடம்
Map courtesy by: Google Maps
கோவிலின் அமைப்பு: இவ்வாலயம் கிழக்கு நோக்கிய அமைப்புடையது. சிறிய ராஜகோபுரம் வழியாக உள்ளே நுழைந்தவுடன் முதல் பிரகாரத்தில் அலங்கார மண்டபம் உள்ளது. இந்த வெளிப் பிரகாரத்தில் இறைவன் செந்நெறியப்பர் எனும் சாரபரமேஸ்வரர் சந்நிதிக்கு இடப்புறம் இறைவி ஞானாம்பிகை சந்நிதி அமைந்துள்ளது. வெளிப் பிரகாரத்திலிருந்து உட்பிரகாரம் சென்றவுடன் கிழக்கு நோக்கிய மூலவர் சந்நிதி உள்ளது. சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கருவறையைச் சுற்றி உள்ள பிரகாரத்தில் மேற்குப் பிரகாரத்தில் தல விநாயகரும் அவரையடுத்து மார்க்கண்டேயரும் அடுத்து அவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, தௌமிய முனிவரால் வழிபாடு செய்யப்பட்டதுமான ஸ்ரீ ரிண விமோசன லிங்கம் உள்ளது. இதையடுத்து ஸ்ரீ பாலசுப்பிரமணியர் சந்நிதியும் பாங்குற அமைந்துள்ளது. மற்ற எங்கும் இல்லாத சிறப்பு அம்சம் இத்தலத்தில் மூன்று துர்க்கைகள் அமைந்துள்ளன. சிவ துர்க்கை, விஷ்னு துர்க்கை, வைஷ்ணவி துர்க்கை என மூன்று வடிவங்களாக ஒரே சந்நிதியில் இத்தலத்தில் காட்சியளிப்பது சிறப்பாகும். வெள்ளிக்கிழமை தோறும் இராகு காலத்தில் துர்க்கைகளை வழிபாடு செய்வது மிகவும் சிறந்ததாகும். மேலும் நடராஜப் பெருமான் சந்நிதியும் அதன் அருகில் ஸ்ரீ பைரவர் சந்நிதியும் உள்ளது. எந்த ஒரு சிவாலயத்திலும் இல்லாத தனிச்சிறப்பு இங்குள்ள பைரவருக்கு உண்டு. திருநாவுக்கரசரால் தனி தேவாரப் பாடல் பெற்ற பைரவர் இவராவார்.
விரித்தபல் கதிர்கொள்சூலம் வெடிபடு தமருங்கை தரித்ததோர் கோலே கால பயிரவனாகி வேழம் உரித்துமை யஞ்சக்கண்டு வொண்டிரு மணிவாய் விள்ளச் சிரித்தருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே.
என்று அவர் பாடிய இரண்டு பதிகங்களில் ஒரு பதிகத்தின் 6வது பாடலில் சிவபெருமானே பைரவர் கோலத்தில் காட்சியளிப்பதாய் கூறுகிறார். ஸ்ரீ பைரவருக்கு அஷ்டமியன்று அபிஷேக ஆராதனை செய்தும், சகஸ்ரநாம அர்ச்சனை செய்தும் வழிபட்டால் காரியானுகூலம், வழக்கு விவகாரங்களில் வெற்றி, நவக்கிரக தோஷங்கள் நீங்குதல் ஆகிய பலன்களைப் பெறலாம்.
சூரியன் இறைவனை பூஜை செய்யும் தலங்களில் திருச்சேறை தலமும் ஒன்றாகும். ஆண்டுதோறும் மாசி மாதத்தில் 13, 14, 15 தேதிகளில் காலையில் சூரியனது ஒளி இத்தலத்து இறைவன் மீதும், அம்பிகை பாதங்களிலும் நேரடியாகப் படுகின்றன. அச்சமயங்களில் இவ்வாலயத்தில் சூரியபூஜை மிகச்சிறப்பாக நடைபெறும்.
மார்க்கண்டேயர் வழிபட்டு அவரது பிறவிக்கடன் நீங்க அருள் புரிந்த ரிண விமோசன லிங்கேஸ்வரரை 11 திங்கட்கிழமை வழிபட்டு அபிஷேக ஆராதனை செய்தால் நம்முடைய அனைத்து கஷ்டங்களும் நீங்கி அருள் பெறலாம். நமது வாழ்க்கையில் படுகின்ற கடன்கள், நமது முன்னோர்களால் செய்ய முடியாமல் விடுபட்ட நிவர்த்திக் கடன்களில் இருந்தும் விடுதலை பெறலாம்.
இவ்வாலயத்தின் தல விருட்சம் மாவிலங்கை ஆகும். இந்த மரம் வருடத்தின் 4 மாதங்கள் வெறும் இலைகளாகவும், அடுத்த 4 மாதங்கள் வெள்ளை வெளேரென்று பூக்களாகவும், அதற்கடுத்த 4 மாதங்கள் பூ, இலை எதுவுமின்றி காணப்படும்.
Top