Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்


தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

சொர்ணபுரீசுவரர் கோவில், திருக்கடுவாய்க்கரைப்புத்தூர் (தற்போது இத்தலம் ஆண்டான்கோவில் என்று வழங்குகிறது)

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருக்கடுவாய்க்கரைப்புத்தூர் (தற்போது ஆண்டாங்கோவில் என்று வழங்குகிறது)
இறைவன் பெயர்சொர்ணபுரீசுவரர்
இறைவி பெயர்சிவாம்பிகை, சொர்ணாம்பிகை
பதிகம்திருநாவுக்கரசர் - 1
எப்படிப் போவது கும்பகோணத்தில் இருந்து வலங்கைமான் வழியாக குடவாசல் செல்லும் வழியில் வலங்கைமானில் இருந்து கிழக்கே சுமார் 3 கி.மி. தொலைவில் இத்தலம் இருக்கிறது. கும்பகோணத்தில் இருந்து சுமார் 12 கி.மி. தொலைவு. கும்பகோணத்தில் இருந்து நரசிங்கமங்கலம் செல்லும் நகரப் பேருந்து எண் A20 கோவில் வழியாகச் செல்கிறது. தஞ்சாவூரில் இருந்து வலங்கைமான் வழியாக திருவாரூர் செல்லும் பேருந்துகள் ஆண்டான்கோவில் வழியாகச் செல்கின்றன். ஆண்டான்கோவில் நிறுத்தத்தில் இறங்கி சுமார் அரை கி.மி. நடந்தால் சொர்ணபுரீசுவரர் ஆலயத்தை அடையலாம்.
ஆலய முகவரிஅருள்மிகு சொர்ணபுரீசுவரர் திருக்கோயில்
ஆண்டான்கோவில்
ஆண்டான்கோவில் அஞ்சல்
வலங்கைமான் S.O.
திருவாரூர் மாவட்டம்
PIN - 612804

இவ்வாலயம் தினந்தோறும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

குடமுருட்டியாற்றின் கரையில் உள்ள தலம். குடமுருட்டி ஆறு தேவார காலத்தில் கடுவாய் எனப் பெயர் பெற்றிருந்தது. ஊரின் பெயர் புத்தூர். கடுவாய் நதிக்கரையில் இருந்ததால் கடுவாய்க்கரைப்புத்தூர் என்ற பெயர் பெற்றது. இந்நாளில் இத்தலம் ஆண்டாங்கோவில் என்ற பெயருடன் அறியப்படுகிறது.

kaduvaikaraiputtur route map

கும்பகோணத்தில் இருந்து வலங்கைமான் வழியாக
ஆண்டாங்கோவில் செல்லும் வழி வரைபடம்
Map courtesy by: Google Maps

ஆலயத்தின் ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் காட்சியளிக்கிறது. ஆலயத்திற்கு வெளியே கோவிலின் தீர்த்தம் - திரிசூல கங்கை கோயிலின் வலப்புறம் உள்ளது. கோபுர வாயிலில் இடதுபுறம் சித்தி விநாயகர் உள்ளார். கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தவுடன் நேரே கோடிமரத்து விநாயகர், கொடிமரம், பலிபீடம் மற்றும நந்தி மண்டபம் உள்ளன. நந்தி மண்டப தூண்களில் அழகிய சிற்ப வேலைப்பாடுகளைக் காணலாம். அதையடுத்து அநேக தூணகளுடைய கருங்கல்லால் ஆன முன் மண்டபம் உள்ளது. உள்ளே சென்று கருவறையை அடைந்தால் மூலவர் கிழக்கு நோக்கு எழுந்தருளியுள்ளார். இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். ஆண்டு தோறும் சித்திரை 11,12,23 தேதிகளில் சூரிய ஒளி மூலஸ்தானத்தில் விழுந்து சூரிய பூஜை நடக்கிறது. கோஷ்டத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி ஆலால மரத்தின் கீழ் சனகாதி முனிவர்கள் இருபுறமும் இருக்க, முயலகனை காலின் கீழ் மிதித்தவாறு காணப்படுகிறார். கருவறை சுற்றுப் பிரகாரத்தில் நால்வர் சந்நிதி, பைரவர், சூரியன், நவக்கிரகங்கள் ஆகியவற்றைக் காணலாம். காக வாகனத்தில் எழுந்தருளியிருக்கும் சனி பகவானின் திருஉருவச்சிலை அழகாக உள்ளது. அம்பாள் சொர்ணாம்பிகை தெற்கு நோக்கி தரிசனம் தருகிறாள்.அம்பாள் சந்நிதி முன் மண்டபத்தின் மேல் விதானத்தில் 12 ராசிகளும் சித்திரங்களாக வரையப்பட்டுள்ளன.

இத்தல விநாயகர் கும்பகர்ண விநாயகர் என்ற திருநாமத்தில் அருள்பாலிக்கிறார். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இத்தல இறைவனை வழிபட்டால் சிறந்த பலன் கிடைக்கும் எனபது ஐதீகம். சரியான வயதில் வயதுக்கு வராத பெண் குழந்தைகள் திங்கள் கிழமையில் இத்தலத்தில் நீராடி, இறைவனுக்கு விளக்கேற்றி அர்ச்சித்து, இறைவி சொர்ணாம்பிகையையும் வழிபட்டு வந்தால் விரைவில் ருது ஆகிவிடுவார்கள் என்பது இங்குள்ள மக்களின் நம்பிக்கை.

திருநாவுக்கரசு சுவாமிகள் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளியுள்ள இப்பதிகம் 5-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. அப்பர் தனது பதிகத்தில் இத்தலத்தை "கடுவாய்க்கரைத் தென்புத்தூர்" என்று குறிப்பிடுகிறார்.

ஒருத்த னைமூ வுலகொடு தேவர்க்கும் 
அருத்த னையடி யேன்மனத் துள்ளமர் 
கருத்த னைக்கடு வாய்ப்புன லாடிய 
திருத்த னைப்புத்தூர் சென்று கண்டுய்ந்தேனே. 

யாவ ருமறி தற்கரி யான்றனை 
மூவ ரின்முத லாகிய மூர்த்தியை 
நாவின் நல்லுரை யாகிய நாதனைத் 
தேவனைப் புத்தூர் சென்று கண்டுய்ந்தேனே. 

அன்ப னையடி யாரிடர் நீக்கியைச் 
செம்பொ னைத்திக ழுந்திருக் கச்சியே 
கம்பனைக் கடுவாய்க்கரைத் தென்புத்தூர் 
நம்பனைக் கண்டு நானுய்யப் பெற்றேனே. 
 
மாத னத்தைமா தேவனை மாறிலாக் 
கோத னத்திலைந் தாடியை வெண்குழைக் 
காதனைக் கடுவாய்க்கரைத் தென்புத்தூர் 
நாதனைக் கண்டு நானுய்யப் பெற்றேனே.  
 
குண்டு பட்டகுற் றந்தவிர்த் தென்னையாட் 
கொண்டு நற்றிறங் காட்டிய கூத்தனைக் 
கண்டனைக் கடுவாய்க்கரைத் தென்புத்தூர் 
அண்டனைக் கண்டருவினை யற்றேனே.  

பந்த பாச மறுத்தெனை யாட்கொண்ட 
மைந்த னைம்மண வாளனை மாமலர்க் 
கந்த நீர்க்கடு வாய்க்கரைத் தென்புத்தூர் 
எந்தை யீசனைக் கண்டினி தாயிற்றே.  
 
உம்ப ரானை உருத்திர மூர்த்தியை 
அம்ப ரானை அமலனை ஆதியைக் 
கம்பு நீர்க்கடு வாய்க்கரைத் தென்புத்தூர் 
எம்பிரானைக் கண்டு இன்பம தாயிற்றே.  

மாசார் பாச மயக்கறு வித்தெனுள் 
நேச மாகிய நித்த மணாளனைப் 
பூச நீர்க்கடுவாய்க்கரைத் தென்புத்தூர் 
ஈச னேயென இன்பம தாயிற்றே. 

இடுவா ரிட்ட கவளங் கவர்ந்திரு 
கடுவா யிட்டவர் கட்டுரை கொள்ளாதே 
கடுவாய்த் தென்கரைப் புத்தூ ரடிகட்காட் 
படவே பெற்றுநான் பாக்கியஞ் செய்தேனே. 

அரக்க னாற்றல் அழித்தவன் பாடல்கேட் 
டிரக்க மாகி அருள்புரி யீசனைத் 
திரைக்கொள் நீர்க் கடுவாய்க்கரைத் தென்புத்தூர் 
இருக்கு நாதனைக் காணப்பெற்று உய்ந்தேனே.  

"கடுவாய்க்கரைத் தென்புத்தூரில் இருக்கும் நாதனைக் காணப்பெற்று உய்ந்தேன்" என்று திருநாவுக்கரசர் இறைவன் தரிசனம் கிடைக்கப்பெற்றதை தனது பதிகத்தின் ஒவ்வொரு பாடலிலும் குறிப்பிடுகிறார்.


கடுவாய்க்கரைப்புத்தூர் சொர்ணபுரீசுவரர் ஆலயம் புகைப்படங்கள்


5 நிலை இராஜகோபுரம்


திரிசூல கங்கை தீர்த்தம்


கோபுர வாயில் நுழைந்து தோற்றம்


கொடிமர விநாயகர்


நந்தி, பலிபீடம்


கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி


சொர்ணபுரீஸ்வரர் சந்நிதி செல்லும் வழி


சொர்ணாம்பிகை சந்நிதி செல்லும் வழி