Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்


தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

சாட்சி நாதர் கோவில், திருஅவளிவநல்லூர்

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருஅவளிவநல்லூர்
இறைவன் பெயர்சாட்சி நாதர்
இறைவி பெயர்சௌந்தர நாயகி, செளந்தர்யவல்லி
பதிகம்திருநாவுக்கரசர் - 1
திருஞானசம்பந்தர் - 1
சுந்தரர்
எப்படிப் போவது கும்பகோணந்நில் இருந்து அம்மாபேட்டை செல்லும் நகரப் பேருந்துகளும், தஞ்சாவூரில் இருந்து அரித்துவாரமங்கலம் செல்லும் நகரப் பேருந்துகளும் அவளிவநல்லூர் வழியாகச் செல்கின்றன. கும்பகோணத்தில் இருந்து சுமார் 21 கி.மீ. தொலைவில் உள்ளது. திருஅரதைப் பெரும்பாழி என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலம் இங்கிருந்து 3.5 கி.மீ. தொலைவில் இருக்கிறது. நீடாமங்கலத்தில் இருந்தும் அம்மாபேட்டை வழியாக அவளிவநல்லூர் செல்லலாம்.
ஆலய முகவரிஅருள்மிகு சாட்சி நாதர் திருக்கோயில்
அவளிவநல்லூர்
அரித்துவார மங்கலம் அஞ்சல்
கும்பகோணம் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம்
PIN - 612802

இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

தேவார மூவர் என்று போற்றப்படும் அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் பதிகம் பெற்ற தலங்கள் பல உண்டு. அவ்வரிசையில் இத்தலமும் ஒன்றாகும்.

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பஞ்ச ஆரண்ய தலங்கள் என்று ஐந்து தலங்கள் உண்டு. இவ்வைந்துமே காவிரியின் தென்கரையிலே அமைந்து இருப்பதுடன் ஒரே நாளில் விடியற்காலையில் புறப்பட்டு ஐந்தாவது கோயிலை அர்த்த ஜாம பூஜையின் போது வந்து வணங்கி முடித்துக் கொள்ளும் படியாக அருகருகே அமைந்தவையாகும். இந்த ஐந்து தலங்களை வரிசையாகச் சொல்வதானால் 1. திருக்கருகாவூர் (முல்லைவனம்) -விடியற்கால வழிபாட்டிற்குரியது. 2. அவளிவநல்லூர் (பாதிரி வனம்) - காலை வழிபாட்டிற்குரியது. 3. அரதைப் பெரும்பாழி (ஹரித்துவாரமங்கலம்) - வன்னிவனம் - உச்சிக்கால வழிபாட்டிற்கு உகந்தது. 4. ஆலங்குடி (திரு இரும்பூளை) - பூளை வனம் - மாலை நேரத்து வழிபாட்டிற்கு உகந்தது. 5. திருக்கொள்ளம்புதூர் (வில்வவனம்) - அர்த்தஜாம பூஜை வழிபாட்டிற்குரியது.

சைவ சமயக் குரவர் நால்வரில் திருஞான சம்பந்தர் தம் தல யாத்திரையின் போது இதே வரிசையில் ஐந்து கோயில்களையும் ஒரே நாளில் வழிபட்டதாகக் கூறப்படுகிறது.

avalivanallur route map

கும்பகோணத்தில் இருந்து அவளிவநல்லூர்
செல்லும் வழி வரைபடம்
Map courtesy by: Google Maps

தல வரலாறு: பண்டைநாளில் இத்தலத்தில் இறைவனைப் பூசித்து வந்த ஆதி சைவ அந்தணர் ஒருவருக்கு இரு பெண்கள் இருந்தனர். மூத்த பெண்ணை ஒருவருக்கு மணம் முடித்தார். மணந்து கொண்டவர் சிறிது காலங்கழித்து, காசி யாத்திரை சென்றார். அவர் காசி சென்றிருந்த காலத்தில் மூத்த பெண்ணுக்கு அம்மை வார்க்கப்பெற்று, உருவம் மாறியதோடு கண்களையும் இழந்தாள். இரண்டாவது பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. சில ஆண்டுகள் கழித்து, காசி யாத்திரை சென்றிருந்த மூத்த மருமகன் வீடு திரும்பினார். தன் மனைவியின் உருவ வேறுபாட்டைக்கண்டு, "இவள் என் மனைவியல்ல என்றும் உருவத்தில் ஒத்திருந்த இளையவளே என் மனைவி" என்று வாதிட்டார். இதனால் இரு பெண்களையும் பெற்ற ஆதிசைவர் மனங்கலங்கி இத்தல இறைவனைப் பிரார்த்திக்க, இறைவன் காட்சி தந்து மனந்தடுமாறிய மருமகனைப் பார்த்து, மூத்தவளே அவர் மனைவி என்னும் பொருளில் "அவள் இவள்" என்று சுட்டிக் காட்டி மறைந்தார். மேலும் இறைவன் அருளியவாறு மூத்தவளும் இத்தலத்துத் தீர்த்தத்தில் மூழ்கிப் பண்டைய உடலும் கண்களும் பெற்றாள்; கணவனுடனும் சேர்ந்து இன்புற்று வாழ்ந்தாள். அவள் இவள் என்று சாட்சி கூறியதால் இத்தல இறைவன் சாட்சிநாதர் என்ற பெயர் பெற்றார். தலத்தின் பெயரும் நல்லூர் என்பது மாறி அவளிவநல்லூர் என்றாயிற்று.

இவ்வாயத்திற்கு இராஜகோபுரமில்லை. ஒரு கிழக்கு நோக்கிய முகப்பு வாயில உள்ளது. உள்ளே நுழைந்தவுடன் வெளிச்சுற்றில் அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியுள்ளது. அம்பாள் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறாள். வழிபட்டுச் சென்றால் முகப்பில் விநாயகர் காட்சி தருகிறார். . உள்ளே நுழைந்தால் நேரே மூலவர் சுயம்பு லிங்க உருவில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். கருவறை வாயிலின் இருபுறமும் துவாரபாலகர்கள் உள்ளனர். மூலவருக்குப் பின்னால் தலவரலாற்றின்படி சாட்சி சொன்ன நிலையில் சாட்சிநாதராக சிவன் பார்வதி காட்சி தருகின்றனர்.

உள்சுற்றில் விநாயகர், நால்வர் சந்நிதிகள், கண்வ முனிவர், வீரபத்திரர், சப்தகன்னியர், அறுபத்துமூவர் மூலத்திருமேனிகள் ஆகிய சந்நிதிகள் உள்ளன. சோமாஸ்கந்தர், விநாயகர், சிவகாமி, நால்வர், ஆறுமுகர், மகாலட்சுமி ஆகிய உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. நடராசர் சந்நிதி உள்ளது. பக்கத்தில் குமாரலிங்கம், காசிவிசுவநாதர், விசாலாட்சி, தபஸ் அம்பாள் திருமேனிகள் உள்ளன. எதிரில் நவக்கிரக சந்நிதிகள் உள்ளது. கால பைரவர், சூரியன் சந்நிதிகள் உள்ளன. கோஷ்டமூர்த்தங்களாக அகத்தியர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரமன், துர்க்கை ஆகியோர் உள்ளனர். எதிரில் சண்டேஸ்வரர் சந்நிதி உள்ளது.

அவளிவநல்லூர் சாட்சி நாதர் ஆலயம் புகைப்படங்கள்


ஆலயத்தின் முகப்பு வாயில்


ஆலயத்தின் உட்புறத் தோற்றம்


சாட்சி நாதர் சந்நிதி நுழைவாயில்


பிராகாரத்தில் நால்வர் திருமேனிகள்


சௌந்தர நாயகி சந்நிதி


அவள் இவள் சகோதரிகளின் திருவுருவங்கள்