Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்


தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

நாகநாதசுவாமி கோவில், திருப்பாதாளீச்சரம்

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருப்பாதாளீச்சரம் (தற்போது பாமணி என்று வழங்கப்படுகிறது)
இறைவன் பெயர்நாகநாதசுவாமி, சர்ப்ப புரீசுவரர்
இறைவி பெயர்அமிர்தநாயகி
பதிகம்திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது மன்னார்குடிக்கு வடக்கே நகர எல்லையில் 3.5 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. மன்னார்குடியிலிருந்து பாமணிக்குச் செல்லும் சாலையில் சென்று, பாமணியை அடைந்து, அங்குள்ள உரத் தொழிற்சாலையை ஒட்டிய சாலையில் சென்றால் கோயிலையடையலாம். கோயில் வரை வாகனங்கள் செல்லும். மன்னார்குடியில் இருந்து நகரப் பேருந்து வசதி உண்டு
ஆலய முகவரிஅருள்மிகு சர்ப்ப புரீசுவரர் திருக்கோயில்
பாமணி
பாமணி அஞ்சல்
வழி மன்னார்குடி
மன்னார்குடி வட்டம்
திருவாரூர் மாவட்டம்
PIN - 614014

இவ்வாலயம் தினந்தோறும் காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5-30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

தல வரலாறு: சுகல முனிவர் என்பவர் இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டு வந்தார். அவர் வளர்த்த காமதேனு தரும் பாலைக் கொண்டு சிவபெருமானை அபிஷேகம் செய்து வந்தார். ஒரு சமயம் அவர் வளர்த்த காமதேனு பால் சொரிந்து சிவலிங்கத்தை வழிபடுவதைக் கண்டு, முனிவர் தமக்குப் பால் குறைந்து விடுமே என்று கோபித்து காமதேனுவை அடித்தார். அதுகண்டு வருந்திய காமதேனு ஓடிச்சென்று, வழிபட்டதனால் தனக்கு நேர்ந்த நிலையை உணர்த்துவது போலச் சிவலிங்கத்தின்மீது முட்டி ஓடி வடக்கு வீதியில் உள்ள பசுபதி தீர்த்தத்தில் விழுந்து இறந்தது. அப்போது இறைவன் காட்சி தந்து பசுவை உயிர்ப்பித்தார். காமதேனு முட்டியபோது சுயம்பு லிங்க மூலத்திருமேனி முப்பிரிவாகப் பிளந்தது. சுயம்பு லிங்கமாதலால் மேற்புறம் சொர சொரப்பாகவுள்ளது. முப்பிரிவாகப் பிளந்த லிங்கம் செப்புத் தகட்டால் ஒன்றாகப் பொருத்தப்பட்டு விளங்குகிறது.

பாதாளத்திலிருந்து ஆதிசேஷன் வெளிப்பட்டு, தனஞ்சய முனிவராய் இத்தல இறைவனை வழிபட்டார். ஆகவே பாதாளீச்சுரம் என்று பெயர் பெற்றது. பாம்பணி, சர்ப்பபுரம் என்பன இத்தலத்தின் வேறு பெயர்கள். பாம்பணி என்பதே மருவி பாமணி ஆயிற்று. இறைவன் கருவறையில் மூலவருக்கு இடதுபுறம் தனஞ்சய முனிவர் உருவமுள்ளது. நாகலிங்கப் பிரதிஷ்டையும் காணப்படுகிறது.

கோவில் அமைப்பு: முகப்பு வாயிலைக் கடந்து உள் புகுந்தால் வலப்பால் அம்பாள் சந்நிதி உள்ளது. உட்கோபுர வாயிலைக் கடந்தால் நேரே மூலவர் தரிசனம். உள்பிராகாரத்தில் சூரியன், தலவிநாயகர், சுப்பிரமணியர், கஜலட்சுமி, துர்வாசர், சாஸ்தா, காலபைரவர், சனிபகவான், நவக்கிரகம், நால்வர், சந்திரன் சந்நிதிகள் உள்ளன.உள்மண்டபத்தில் வலப்பால் நடராஜ சபை உள்ளது.

மனிதமுகம், பாம்பு உடலுடன் ஆதிசேஷனுக்கு இக்கோவிலில் தனி சன்னதி உள்ளது. அனந்தன், வாசுகி, தக்ஷகன், கார்கோடகன், சங்கபாலன், குலிகன், பத்மன், மகாபத்மன் என்ற அஷ்ட நாகங்களுக்கும், ராகு கேதுவிற்கும் தலைவன் ஆதிசேஷன். வேறு எங்கும் காணமுடியாத இந்த ஆதிசேஷனை நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் ஜாதக ரீதியாக நாகதோஷம், ராகு கேது தோஷம், கால சர்ப்ப தோஷம் ஏற்பட்டவர்கள் நிவாரணமடைவர் என்பது நம்பிக்கை. மண்ணால் அமைக்கப்பட்ட லிங்கங்களுக்கு பிற கோயில்களில் அபிஷேகம் செய்ய மாட்டார்கள். ஆனால் இங்கு ஆதிசேஷன் புற்றுமண்ணால் அமைத்த நாகநாதசுவாமிக்கு அபிஷேகம் உண்டு என்பது தனி சிறப்பாகும். இங்கு பைரவரும் சனிபகவானும் சேர்ந்து அருள்பாலிப்பதால் இது சனிதோஷ நிவர்த்தி ஸ்தலமாகவும் உள்ளது.

இத்தலத்தில் குருபகவான் நான்கு சிங்கங்களின் மேல் அமர்ந்து சிம்ம தட்சிணாமூர்த்தியாக அருள்பாலிப்பதால், இவரை வழிபடுபவர்களுக்கு சிம்மகுருவின் அருள் கிடைக்கும். ஒருமுறை தட்சிணாமூர்த்தியின் சீடர்கள் நால்வரும் விஷ்ணுவை தரிசிக்க வைகுண்டம் சென்றார்கள். அப்போது இவர்களை துவார பாலகர்கள் தடுத்தனர். கோபம் கொண்ட முனிவர்கள் இவர்களுக்கு சாபம் கொடுத்தனர். இதனால் முனிவர்களுக்கு தோஷம் ஏற்பட்டது. இந்த தோஷம் நீங்க பாமணி நாகநாதரையும், சிம்ம தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு தங்கள் தோஷம் நீங்கப் பெற்றனர். சிம்மம், கும்பம், கடகம், தனுசு, மேஷம், விருச்சிகம் ராசிக்காரர்களும், லக்னத்திற்குரியவர்களும் சிம்ம தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் சிறப்பான வாழ்வு அமையும் என்பது நம்பிக்கை. 1000 தலை கொண்ட ஆதிசேஷனே இங்கு வந்து வழிபாடு செய்துள்ளதால், இத்தலம் செவ்வாய் உட்பட சகல தோஷங்களுக்கும் நிவர்த்தி தலமாக விளங்குகிறது.

திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளியுள்ள பதிகம் 1-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

மின்னியல் செஞ்சடைமேல் விளங்கும்மதி மத்தமொடு நல்ல
பொன்னியல் கொன்றையினான் புனல்சூடிப் பொற்பமரும்
அன்னம் அனநடையாள் ஒருபாகத் தமர்ந்தருளி நாளும்
பன்னிய பாடலினான் உறைகோயில் பாதாளே.	

நீடலர் கொன்றையொடு நிரம்பா மதிசூடி வெள்ளைத்
தோடமர் காதில்நல்ல குழையான் சுடுநீற்றான்
ஆடர வம்பெருக அனலேந்திக் கைவீசி வேதம்
பாடலி னாலினியான் உறைகோயில் பாதாளே.

நாகமும் வான்மதியும் நலம்மல்கு செஞ்சடையான் சாமம்
போகநல் வில்வரையாற் புரம்மூன் றெரித்துகந்தான்
தோகைநல் மாமயில்போல் வளர்சாயல் தூமொழியைக் கூடப்
பாகமும் வைத்துகந்தான் உறைகோயில் பாதாளே. 

அங்கமும் நான்மறையு மருள்செய் தழகார்ந்த அஞ்சொல்
மங்கையோர் கூறுடையான் மறையோன் உறைகோயில்
செங்கயல் நின்றுகளுஞ் செறுவில் திகழ்கின்ற சோதிப்
பங்கயம் நின்றலரும் வயல்சூழ்ந்த பாதாளே. 

பேய்பல வுந்நிலவப் பெருங்காடரங் காகவுன்னி நின்று
தீயொடு மான்மறியும் மழுவும் திகழ்வித்துத்
தேய்பிறை யும்மரவும் பொலிகொன்றைச் சடைதன்மேற் சேரப்
பாய்புன லும்முடையான் உறைகோயில் பாதாளே. 

கண்ணமர் நெற்றியினான் கமழ்கொன்றைச் சடைதன்மே னின்றும்
விண்ணியல் மாமதியு முடன்வைத்தவன் விரும்பும்
பெண்ணமர் மேனியினான் பெருங்கா டரங்காக ஆடும்
பண்ணியல் பாடலினான் உறைகோயில் பாதாளே. 

விண்டலர் மத்தமொடு மிளிரும்மிள நாகம்வன்னி திகழ்
வண்டலர் கொன்றைநகு மதிபுல்கு வார்சடையான்
விண்டவர் தம்புரம்மூன் றெரிசெய் துரைவேதம் நான்குமவை
பண்டிசை பாடலினான் உறைகோயில் பாதாளே. 

மல்கிய நுண்ணிடையாள் உமைநங்கை மறுகஅன்று கையால்
தொல்லை மலையெடுத்த அரக்கன்றலை தோள்நெரித்தான்
கொல்லை விடையுகந்தான் குளிர்திங்கள் சடைக்க ணிந்தோன்
பல்லிசை பாடலினான் உறைகோயில் பாதாளே. 

தாமரை மேலயனும் அரியுந்தம தாள்வினையாற் றேடிக்
காமனை வீடுவித்தான் கழல்காண்பில ராயகன்றார்
பூமரு வுங்குழலாள் உமைநங்கை பொருந்தியிட்ட நல்ல
பாமரு வுங்குணத்தான் உறைகோயில் பாதாளே. 

காலையில் உண்பவருஞ் சமண்கையருங் கட்டுரைவிட் டன்று
ஆலவிடம் நுகர்ந்தான் அவன்றன் அடியேபரவி
மாலையில் வண்டினங்கள் மதுவுண் டிசைமுரல வாய்த்த
பாலையாழ்ப் பாட்டுகந்தான் உறைகோயில் பாதாளே.

பன்மலர் வைகுபொழில் புடைசூழ்ந்த பாதாளைச் சேரப்
பொன்னியன் மாடமல்கு புகலிந்நகர் மன்னன்
தன்னொளி மிக்குயர்ந்த தமிழ்ஞான சம்பந்தன் சொன்ன
இன்னிசை பத்தும்வல்லார் எழில்வானத் திருப்பாரே.