Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்


தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

பாரிஜாதவனேஸ்வரர் கோவில், திருக்களர்

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருக்களர்
இறைவன் பெயர்பாரிஜாதவனேஸ்வரர், களர்முலை நாதேசுவரர்
இறைவி பெயர்இளம்கொம்பன்னாள், அமுதவல்லி
பதிகம்திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது மன்னார்குடி - திருத்துறைப்பூண்டி சாலை வழியில் மன்னார்குடியில் இருந்து தெற்கே 21 கி.மி. தொலைவிலும், திருத்துறைப்பூண்டியில் இருந்து வடமேற்கே 10 கி.மி. தொலைவிலும் இத்தலம் இருக்கிறது.
ஆலய முகவரிஅருள்மிகு பாரிஜாதவனேஸ்வரர் திருக்கோயில்
திருக்களர்
திருக்களர் அஞ்சல்
திருவாரூர் மாவட்டம்
PIN - 614720

இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் 11-302 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
Tirukkalar route map

திருக்களர் இருப்பிடத்தைக் காட்டும் வரைபடம்
Map courtesy by: Yahoo Maps

கோவில் அமைப்பு: காவிரி தென்கரைத் தலங்களில் 105 தலமாக விளங்கும் இத்தலம் ஊரின் நடுவே கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ஆலயத்தின் எதிரே நான்கு பக்கங்களிலும் நான்கு படித்துறைகளைக் கொண்ட பெரிய திருக்குளம் உள்ளது. 80 அடி உயரமுள்ள இராஜகோபுரம் 5 நிலைகளை உடையது. கோபுரத்தில் அழகிய சுதைச் சிற்பங்கள் உள்ளன. இவ்வாலயம் மூன்று பிரகாரங்களைக் கொண்டுள்ளது. முதல் பிரகாரத்தில் இருந்து உள்ளே செல்ல சுவாமி மற்றும் அம்மன் சந்நிதிகளுக்கு தனித்தனியே கோபுர வாயில்கள் உள்ளன. சிவன், அம்மன் இருவரும் கிழக்கு நோக்கி தனி சன்னதிகளில் அருளுகின்றனர். சுவாமி மற்றும் அம்மன் சந்நிதிகளுக்கு நடுவில் பாரிஜாத விருட்சம் (பவள மல்லிகை) தலவிருட்சமாக உள்ளது. அம்மன் சந்நிதி கருவறைச் சுற்றில் சிம்ம வாகனத்தில் அமர்ந்துள்ள அஷ்டபுஜ துர்க்கை சந்நிதி உள்ளது. வலம்புரி விநாயகர் சந்நிதியும், துர்வாசர் சந்நிதியும், விஸ்வநாதர், கஜலட்சுமி, 63 நாயன்மார்கள் சந்நிதிகளும் இவ்வாலயத்தில் உள்ளன. துர்வாச தீர்த்தம், ஞான தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், ருத்ர தீர்த்தம் ஆகியவை இவ்வாலயத்திலுள்ள தீர்த்தங்கள் ஆகும்.

இத்தலத்தில் உள்ள முருகப் பெருமான் மிக்க அழகுடன் காட்சி தருகிறார். ஆறு முகங்களுடன் வள்ளி தெய்வானை உடன் இல்லாமல் தனியே குரு மூர்த்தமாக அருள் புரிகிறார். முருகப் பெருமான் 60000 முனிவர்களுக்கும், துர்வாசருக்கும் பஞ்சாட்சர மந்திரத்தை உபதேசம் செய்தது இத்தலத்தில் தான் என்பது ஐதீகம். கல்வியில் மேன்மை பெற இவரை வழிபடுவது சிறப்பு. இத்தலம் முருகப் பெருமானின் திருப்புகழ் வைப்புத் தலமாக உள்ளது.

தல வரலாறு: பதஞ்சலி முனிவருக்கும், வியாக்ரபாதருக்கும் சிவபெருமான் ஆனந்த தாண்டவ தரிசனம் தந்தருளியதை அறிந்த துர்வாச முனிவர் தானும் அந்த பாக்கியத்தைப் பெற விரும்பினார். துர்வாச முனிவர் இத்தலத்தின் மகிமையை உணர்ந்து தேவலோகத்தின் சிறந்த மலரான பாரிஜாதத்தை இங்கு கொண்டு வந்து வைத்து வளர்க்களானார். அது நாளடைவில் மிகவும் பெருகி பாரிஜாத வனமாயிற்று. பிறகு துர்வாச முனிவர் ஒரு சிவலிங்கம் அமைத்து பாரிஜாத மரத்தடியில் பிரதிஷ்டை செய்து பக்கத்தில் அம்மனையும் ஸ்தாபித்து தேவதச்சன் மூலமாக இக்கோவிலை எடுப்பித்தார் என்று தலவரலாறு கூறுகிறது. இத்தலத்தில் துர்வாச முனிவருக்கு இறைவன் நடராஜர் பிரமதாண்டவ தரிசனம் கொடுத்தருளியதால் துர்வாசர் இத்தலத்தில் எப்போதும் நடராஜ பெருமானின் பிரமதாண்டவத்தை தரிசித்துக் கொண்டிருக்கிறார் என்பது ஐதீகம். இதன் அடையாளமாக இவ்வாலயத்தில் துர்வாசர் சந்நிதியும், நடராஜர் சந்நிதியும் எதிரெதிரே அமைந்துள்ளது. நடராஜ பெருமானின் 8 தாண்டவ தலங்களுள் இரண்டாவது தலமாக திருக்களர் தலம் அமைந்திருக்கிறது.

இத்தலத்தில் வழிபாடு செய்தால் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மோட்சம் கிடைக்கும். கேது தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபட்டால் தோஷம் நிவர்த்தியாகும் என்பதும் ஐதீகம்.

திருக்களர் பாரிஜாதவனேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்


5 நிலை இராஜகோபுரம்

இராஜகோபுரம் கடந்து ஆலய தோற்றம்


ஆலய பிராகாரம்

நந்தி, பலிபீடம், கொடிமரம்


பாரிஜாதவனேஸ்வரர் சந்நிதி நுழைவாயில்

அம்பாள் சந்நிதி நுழைவாயில்


திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய பதிகம் இரண்டாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

1. நீருளார் கயல் வாவி சூழ்பொழில் நீண்ட மாவய லீண்டு மாமதில்
தேரினார் மறுகில் விழாமல்கு திருக்களருள்
ஊரு ளாரிடு பிச்சை பேணும் ஒருவனே யொளிர் செஞ்ச டைம்மதி
ஆரநின் றவனே அடைந்தார்க் கருளாயே.

2. தோளின் மேலொளி நீறு தாங்கிய தொண்டர் வந்தடி போற்ற மிண்டிய
தாளினார் வளருந் தவமல்கு திருக்களருள்
வேளின் நேர்விச யற்க ருள்புரி வித்த காவிரும் பும்ம டியாரை
ஆளுகந் தவனே அடைந்தார்க் கருளாயே.

3. பாட வல்லநல் மைந்த ரோடு பனிம லர்பல கொண்டு போற்றிசெய்
சேடர் வாழ்பொழில் சூழ்செழுமாடத் திருக்களருள்
நீட வல்ல நிமல னேயடி நிரை கழல்சிலம் பார்க்க மாநடம்
ஆடவல் லவனே அடைந்தார்க் கருளாயே.

4. அம்பின் நேர்தடங் கண்ணி னாருடன் ஆடவர் பயில் மாட மாளிகை
செம்பொனார் பொழில்சூழ்ந் தழகாய திருக்களருள்
என்பு பூண்டதோர் மேனி யெம்மிறை வாஇ ணையடி போற்றி நின்றவர்க்
கன்புசெய் தவனே அடைந்தார்க் கருளாயே.

5. கொங்கு லாமலர்ச் சோலை வண்டினங் கிண்டி மாமது வுண்டி சைசெயத்
தெங்குபைங் கமுகம் புடைசூழ்ந்த திருக்களருள்
மங்கை தன்னொடுங் கூடிய மண வாளனே பிணை கொண்டொர் கைத்தலத்
தங்கையிற் படையாய் அடைந்தார்க் கருளாயே.

6. கோல மாமயில் ஆலக் கொண்டல்கள் சேர்பொ ழிற்குல வும்வ யலிடைச்
சேலிளங் கயலார் புனல்சூழ்ந்த திருக்களருள்
நீல மேவிய கண்டனே நிமிர் புன்ச டைப்பெரு மானெ னப்பொலி
ஆலநீழ லுளாய் அடைந்தார்க் கருளாயே.

7. தம்ப லம்மறி யாதவர் மதில் தாங்கு மால்வரை யால ழலெழத்
திண்பலங் கெடுத்தாய் திகழ்கின்ற திருக்களருள்
வம்ப லர்மலர் தூவி நின்னடி வானவர் தொழக் கூத்து கந்துபே
ரம்பலத் துறைவாய் அடைந்தார்க் கருளாயே.

8. குன்ற டுத்தநன் மாளிகைக் கொடி மாட நீடுயர் கோபு ரங்கள்மேல்
சென்றடுத் துயர்வான் மதிதோயுந் திருக்களருள்
நின்ற டுத்துயர் மால்வ ரைத்திரள் தோளி னாலெடுத் தான்றன் நீள்முடி
அன்றடர்த் துகந்தாய் அடைந்தார்க் கருளாயே.

9. பண்ணி யாழ்பயில் கின்ற மங்கையர் பாட லாடலொ டார வாழ்பதி
தெண்ணிலா மதியம் பொழில்சேருந் திருக்களருள்
உண்ணி லாவிய வொருவ னேயிரு வர்க்கு நின்கழல் காட்சி யாரழல்
அண்ணலாய எம்மான் அடைந்தார்க் கருளாயே.

10. பாக்கி யம்பல செய்த பத்தர்கள் பாட்டொ டும்பல பணிகள் பேணிய
தீக்கியல் குணத்தார் சிறந்தாருந் திருக்களருள்
வாக்கின் நான்மறை யோதி னாயமண் தேரர் சொல்லிய சொற்க ளானபொய்
ஆக்கி நின்றவனே அடைந்தார்க் கருளாயே.

11. இந்து வந்தெழு மாட வீதியெ ழில்கொள் காழிந் நகர்க் கவுணியன்
செந்துநேர் மொழியார் அவர்சேருந் திருக்களருள்
அந்தி யன்னதொர் மேனி யானை அமரர் தம்பெரு மானை ஞானசம்
பந்தன்சொல் லிவைபத் தும்பாடத் தவமாமே.
Thirukkalar Parijathavaneswarar

திருக்களர் மூலவர் பாரிஜாதவனேஸ்வரர்


மலைபோன்று உயர்ந்த நல்ல மாளிகைகளில் கட்டப்பட்ட கொடிகள் மாடங்களினும் நீண்டு உயர்ந்த கோபுரங்களையும் கடந்து மேலே சென்று உயர்ந்து வானிலுள்ள சந்திரனைப் பற்றும்படி இயற்கை வளம் பெற்ற திருக்களர் என்றும், மாடமாளிகைகளோடு பொழில் சூழ்ந்து அழகுற விளங்கும் திருக்களர் என்றும் சம்பந்தர் தனது பதிகத்தின் 8-வது பாடலில் இத்தலத்தைப் போற்றிப் பாடியுள்ளார். மேலும் தனது பதிகத்தின் முதல் பாடலில் நீருட் பொருந்திய கயல் மீன்களோடு திகழும் வாவிகளும், பொழிலும், நீண்ட வயல்களும் நெருங்கிய மதில்களும் தேரோடும் வீதிகளும் சூழ்ந்துள்ள, விழாக்கள் பல நிகழும் திருக்களர் கன்று இவ்வூரின் சிறப்பினை போற்றிப் பாடியுள்ளார்.