Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்


தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

பொன்வைத்த நாதேசுவரர் கோவில், திருச்சிற்றேமம்

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருச்சிற்றேமம் (இன்றைய நாளில் சித்தாய்மூர், சிற்றாய்மூர் என்று பெயர்)
இறைவன் பெயர்பொன்வைத்த நாதேசுவரர், சுவர்ண ஸ்தாபனேஸ்வரர்
இறைவி பெயர்அகிலாண்டேஸ்வரி
பதிகம்திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலை வழியில் ஆலத்தம்பாடி வந்து அங்கிருந்து சித்தாய்மூர் என்ற கைகாட்டி உள்ள இடத்தில் கிழக்கே பிரிந்து செல்லும் சாலையில் 3 கி.மி. சென்றால் இத்தலம் அடையலாம். போக்குவரத்து வசதிகள் குறைவானதால் தனி வாகனத்தில் செல்வது நல்லது.
ஆலய முகவரிஅருள்மிகு சுவர்ணஸ்தாபனேஸ்வரர் திருக்கோயில்
சித்தாய்மூர்
சித்தாய்மூர் அஞ்சல்
பொன்னிறை - S.O.
திருவாரூர் வட்டம்
திருவாரூர் மாவட்டம்
PIN - 610203

இவ்வாலயம் தினந்தோறும் காலை 9-30 மணி முதல் 11-30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

ஆலய தொடர்புக்கு: திரு ரவிகுமார் ஆலய அர்ச்சகர், கைபேசி: 9943417739

தல வரலாறு: இவ்வூரில் ஒரு வணிகர் தனது மனைவியுடன் வாழ்ந்து வந்தார். மனைவி கருவுற்று சில நாட்களில் பொருளீட்டும் முயற்சி மேற்கொண்டு வெளியூர் சென்றார். வணிகர் வெளியூர் சென்ற போது அவர் மனைவி கருவுற்று இருப்பது தெரியாது. தனியாக ஊரிலிருந்த மனைவி சிவப்பற்று கொண்டு, சிவத் தொண்டு செய்து வாழ்ந்து வந்தாள். அம்மங்கைக்கு இறைவன் நாடொறும் ஒரு பொன் காசுவைத்து உதவ, அவள் அதை விற்று வாழ்வு நடத்தி வந்தாள். மகப்பேறு காலம் நெருங்கியது. இறைவனை நோக்கி அழுது வேண்ட, அகிலாண்டேஸ்வரியே தாயாக வந்து உதவிட, மகவினைப் பெற்றெடுத்தாள். சிலகாலம் கழித்து வணிகர் ஊர் திரும்பினார். ஊர் மக்கள் சிலர் அவர் மனைவியின் மேல் பொய் ஒழுக்கக் குற்றச்சாட்டுக்களைக் கூறினர். அம்மங்கை இறைவனிடம் சென்று பல்லோர் முன்னிலையிலும் வேண்டி, தன் கற்பை வெளிப்படுத்துமாறு கலங்கி வேண்ட, இறைவன் கோயிற்கதவைத் தானே திறக்கச் செய்தும், சந்நிதிக்கு பின்னிருந்த ஆத்திமரத்தை இடம் பெயர்ந்து கோவிலுக்கு முன்புறம் வரச்செய்தும், பலிபீடத்திற்கு முன்னிருந்த நந்திதேவரைப் பலிபீடத்தின் பின் இடம் மாறியிருக்கும்படி போகச் செய்தும் பல அற்புதங்களை நிகழ்த்தி அப்பெண்ணின் கற்புத்திறத்தை ஊரறியச் செய்தார் என்பர்.

திருச்சிற்றேமத்திற்கு வடக்கிலுள்ள முத்தரசபுரத்தை ஆண்டு வந்து மன்னனுக்கு நாடொறும் இவ்வூர் வழியாகப் பாற்குடம் செல்வது வழக்கம். சில நாள்களில் அப்பாற்குடம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் விழுந்து உடையலாயிற்று. அரசன் காரணத்தை அறிய அவ்விடத்தை தோண்டிப் பார்க்க, சிவலிங்கத் திருமேனி கண்டான். இறைவனை வணங்கி அவ்விடத்த்தில் பெருமானுக்கு கோயில் எழுப்பினான் என்பது வரலாறு. இதற்கு அடையாளமாக சிவலிங்கத்தின்மீது வெட்டுக்காயம் உள்ளதைப் பார்க்கலாம்.

கிழக்கு நோக்கிய அழகான ராஜகோபுரத்துடன் ஆலயம் உள்ளது. ஆலயத்திற்கு வெளியே தலவிருட்சம் ஆத்தி மரம், நந்தி, பலிபீடம் உள்ளன. தல வரலாற்றின் படி நந்தி பலிபீடத்திற்கு பின்புறம் உள்ளது. ஆத்தி மரத்தடியில் ஆத்திமர விநாயகரும் உள்ளார். இத்தல இறைவன் கிழக்கு நோக்கு காட்சி தருகிறார். அம்பாள் அகிலாண்டேஸ்வரி சந்நிதி தெற்கு தோக்கி அமைந்துள்ளது. பிராகாரத்தில் கன்னி விநாயகர், முருகன், மகாலட்சுமி சந்நிதிகள் உள்ளன. பிரமரிஷி, ஐயனார், பைரவர், சனி பகவான், சூரியன், விசுவநாதர் சந்நிதிகள் தரிசிக்கத்தக்கவை. வேலவர், சோமாஸ்கந்தர், ஆடிப்பூர அம்மன், பிரதோஷநாயகர், சந்திரசேகரர் மற்றும் தலவரலாற்றுடன் தொடர்புடைய வணிகர், அவர் மனைவி ஆகியோர், சம்பந்தர் முதலியோரின் உற்சவத் திருமேனிகளும் உள்ளன. ஆலயத்திற்கு வடக்கில் ஆலய தீர்த்தம் சொர்ணபுஷ்கரணி உள்ளது.

தேன்கூடு வரலாறு: முன்னொரு காலத்தில் பிரம்மரிஷி தினந்தோறும் இத்தல இறைவனை வழிபட்டு வந்தார். ஒரு சமயம் அவர் திருக்கோவிலுக்கு வர நேரமாகி வட்டது. கோவில் திருக்கதவுகள் காப்பிடப்பட்டு விட்டன. பிரம்மரிஷி முனிவர் தேனீ உருவெடுத்து சாளரத்தின் வழியே உள்ளே சென்று இறைவனை வழிபட்டு அங்கேயே தங்கத் தொடங்கினார். சித்தர்களும் இத்தலத்தில் தேனீ உருவில் இறைவனை வழிபடுவதாக ஐதீகம். சுவாமி சந்நிதியின் தென்பக்கத்தில் உள்ள தேன்கூடு சித்தர்கள் தேனீக்களாக உருமாறி இறைவனை பூஜித்து தேன்கூட்டைக் கட்டினர் என்பது ஐதீகம். இத்தேன் கூட்டிற்கு தினமும் பூஜை நடைபெறுகிறது.

இத்திருக் கோயிலின் பக்கத்தில் திருமால் ஆலயம் உள்ளது. இவ்வூருக்குக் கிழக்கில் திருவாய்மூரும், மேற்கில் கைச்சினமும், வடக்கில் வலிவலம், திருக்குவளை, குண்டையூரும், வடகிழக்கில் எட்டுக்குடியும் உள்ளன.

திருச்சிற்றேமம் பொன்வைத்த நாதேசுவரர் ஆலயம் புகைப்படங்கள்


ஆத்திமர விநாயகர்


பலிபீடம், அதன் பின்புறம் நந்தி, தல விருட்சம் ஆத்தி மரம்


2வது நுழைவாயில்


பொன்வைத்த நாதர் சந்நிதி நுழைவாயில்


அம்பாள் அகிலாண்டேஸ்வரி


வெளிப் பிராகாரம்


வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர்


பைரவர், சனீஸ்வரர், ஐய்யனார், பிரம்மரிஷி


பிரம்மரிஷி, மாணிக்கவாசகர், ஶ்ரீகுமரன், சூரியன்


திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய பதிகம் 3-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

நிறைவெண்டிங்கள் வாண்முக மாதர்பாட நீள்சடைக்
குறைவெண்டிங்கள் சூடியோர் ஆடல்மேய கொள்கையான்
சிறைவண்டியாழ்செய் பைம்பொழிற் பழனஞ்சூழ்சிற் றேமத்தான்
இறைவனென்றே யுலகெலாம் ஏத்தநின்ற பெருமானே. 

மாகத்திங்கள் வாண்முக மாதர்பாட வார்சடைப்
பாகத்திங்கள் சூடியோ ராடல்மேய பண்டங்கன்
மேகத்தாடு சோலைசூழ் மிடைசிற்றேமம் மேவினான்
ஆகத்தோர்கொள் ஆமையைப் பூண்டஅண்ணல் அல்லனே.  

நெடுவெண்டிங்கள் வாண்முக மாதர்பாட நீள்சடைக்
கொடுவெண்டிங்கள் சூடியோ ராடல்மேய கொள்கையான்
படுவண்டியாழ்செய் பைம்பொழிற் பழனஞ்சூழ்சிற் றேமத்தான்
கடுவெங்கூற்றைக் காலினாற் காய்ந்தகடவுள் அல்லனே.  

கதிரார்திங்கள் வாண்முக மாதர்பாடக் கண்ணுதல்
முதிரார்திங்கள் சூடியோ ராடல்மேய முக்கணன்
எதிரார்புனலம் புன்சடை யெழிலாருஞ்சிற் றேமத்தான்
அதிரார்பைங்கண் ஏறுடை யாதிமூர்த்தி யல்லனே. 

வானார்திங்கள் வாண்முக மாதர்பாட வார்சடைக்
கூனார்திங்கள் சூடியோ ராடல்மேய கொள்கையான்
தேனார்வண்டு பண்செயுந் திருவாருஞ்சிற் றேமத்தான்
மானார்விழிநன் மாதோடும் மகிழ்ந்தமைந்தன் அல்லனே.  
பனிவெண்டிங்கள் வாண்முக மாதர்பாடப் பல்சடைக்
குனிவெண்டிங்கள் சூடியோ ராடல்மேய கொள்கையான்
தனிவெள்விடையன் புள்ளினத் தாமஞ்சூழ்சிற் றேமத்தான்
முனிவுமூப்பும் நீக்கிய முக்கண்மூர்த்தி அல்லனே.  

கிளருந்திங்கள் வாண்முக மாதர்பாடக் கேடிலா
வளருந்திங்கள் சூடியோ ராடல்மேய மாதவன்
தளிருங்கொம்பும் மதுவுமார் தாமஞ்சூழ்சிற் றேமத்தான்
ஒளிரும்வெண்ணூல் மார்பனென் னுள்ளத்துள்ளான் அல்லனே. 

சூழ்ந்ததிங்கள் வாண்முக மாதர்பாடச் சூழ்சடைப்
போழ்ந்ததிங்கள் சூடியோ ராடல்மேய புண்ணியன்
தாழ்ந்தவயற்சிற் றேமத்தான் தடவரையைத்தன் தாளினால்
ஆழ்ந்தஅரக்கன் ஒல்கஅன் றடர்த்தஅண்ணல் அல்லனே.  

தனிவெண்டிங்கள் வாண்முக மாதர்பாடத் தாழ்சடைத்
துணிவெண்டிங்கள் சூடியோ ராடல்மேய தொன்மையான்
அணிவண்ணச்சிற் றேமத்தான் அலர்மேலந்த ணாளனும்
மணிவண்ணனுமுன் காண்கிலா மழுவாட்செல்வன் அல்லனே.

வெள்ளைத்திங்கள் வாண்முக மாதர்பாட வீழ்சடைப்
பிள்ளைத்திங்கள் சூடியோ ராடல்மேய பிஞ்ஞகன்
உள்ளத்தார்சிற் றேமத்தான் உருவார்புத்தர் ஒப்பிலாக்
கள்ளத்தாரைத் தானாக்கியுட் கரந்துவைத்தான் அல்லனே.  

கல்லிலோதம் மல்குதண் கானல்சூழ்ந்த காழியான்
நல்லவாய வின்றமிழ் நவிலும்ஞான சம்பந்தன்
செல்வனூர்சிற் றேமத்தைப் பாடல்சீரார் நாவினால்
வல்லாராகி வாழ்த்துவார் அல்லலின்றி வாழ்வரே. 

பட்டுக்கோட்டை - அறந்தாங்கி சாலையில் பட்டுக்கோட்டையில் இருந்து 15 கி.மீ. தொலைவிலும், அறந்தாங்கியில் இருந்து 35 கி.மீ தொலைவிலும் திருச்சிற்றம்பலம் என்ற ஊர் உள்ளது. இவ்வூரிலுள்ள புராதனவனேஸ்வரர் கோவிலே சிற்றேமம் என்ற பாடல் பெற்ற தலம் என்று ஒரு கருத்தும் உள்ளது. இக்கோயிலுள்ள பழைய கல்வெட்டுக்கள் எல்லாம் இவ்வூரைச் சிற்றேமம் என்றே குறிப்பிடுகின்றன. இக்கோயிலில் உள்ள சோழ மன்னன் மதுரைகொண்ட கோப்பரகேரி வர்மர், பாண்டிய மன்னன் வரகுணமகாராசர், முதலானோர் கல்வெட்டுக்களில் இவ்வூரின் பெயர் திருச்சிற்றேமம் என்றும், கி. பி. 1459-ல் ஏற்பட்ட கல்வெட்டில் இவ்வூரின் பெயர் திருச்சிற்றம்பலம் என்றும்; இறைவரின் திருப்பெயர் திருச்சிற்றேமத்து மகாதேவர், திருச்சிற்றேமமுடையார் எனவும் கூறப்பெற்றுள்ளன. இக்கோவிலில் காணப்படும் கல்வேட்டுகளில் இத்தல இறைவன் சிற்றேமத்து மகாதேவர் என்றும் சிற்றமேமுடையார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதால் இத்தலமே பாடல் பெற்ற சிவஸ்தலமான திருச்சிற்றேமம் என்று கூறுவர்.