Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்


தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

மந்திர புரீசுவரர் கோவில், திருவுசத்தானம்

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருவுசத்தானம் (கோயிலூர் என்றும் இத்தலம் அழைக்கப்படுகிறது)
இறைவன் பெயர்மந்திர புரீசுவரர்
இறைவி பெயர்பெரியநாயகி, பிருகந்நாயகி
பதிகம்திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது திருவாரூர் மாவட்டத்திலுள்ள முத்துபேட்டையிலிருந்து மன்னார்குடி செல்லும் சாலை வழியில் 1 கி.மி. தொலைவில் சாலையிலேயே கோயிலின் வளைவு ஸ்ரீ மந்திரபுரீஸ்வரர் தேவஸ்தானம் என்று உள்ளது. அதனுள் நுழைந்து சென்றால் கோயிலை அடையலாம். முத்துபேட்டையிலிருந்து சுமார் 3 கி.மி. தொலைவு. தஞ்சை, திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், மன்னார்குடி, பட்டுக்கோட்டை முதலிய பல ஊர்களிலிருந்து முத்துப்பேட்டை செல்ல பேருந்து வசதிகள் உண்டு.
ஆலய முகவரி அருள்மிகு மந்திரபுரீசுவரர் திருக்கோவில்
கோவிலூர்
முத்துப்பேட்டை அஞ்சல்
திருத்துறைப்பூண்டி வட்டம்
திருவாரூர் மாவட்டம்
PIN - 614704

இவ்வாலயம் தினந்தோறும் காலை 6-30 மணி முதல் 11-30 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

ஆலய தொடர்புக்கு: சிவபாத சுந்தரம், அர்ச்சகர் - தொலைபேசி: 04369 262014

கோவில் அமைப்பு: கிழக்கு நோக்கிய இவ்வாலயம் ஐந்து நிலைகளையுடைய இராஜகோபுரத்துடனும், இரண்டு பிராகாரங்களுடனும் அமைந்துள்ளது. இராஜகோபுரத்திற்கு எதிரே ஆலயத்தின் திருக்குளம் உள்ளது. குளக்கரையில் விநாயகர் சந்நிதி உள்ளது. இராஜகோபுரம் வழியாக உள்ளே சென்றால் உட்புறத்தில் இடதுபுறம் சிறிய தீர்த்தமும், வலதுபுறத்தில் அம்பாள் கோயிலும் அமைந்துள்ளது. கவசமிட்ட கொடிமரம், பலிபீடம் நந்தி ஆகியவற்றையும் இந்த வெளிப் பிரகாரத்தில் காணலாம். இரண்டாவது கோபுரம் மூன்று நிலைகளையுடையது. துவார கணபதி, சுப்பிரமணியரைத் தொழுது, உள்புகும்போது வாயிலில் இடதுபுறம் அதிகார நந்தி காட்சி தருகிறார். உட்பிரகாரம் வலம் வரும்போது சூரியன், தலப்பதிகக் கல்வெட்டுக்கள், அறுபத்துமூவர், (நேர் எதிரில் கருவறைச் சுவரில் ஜ்வரஹரேஸ்வரர் மூன்று முகங்களுடனும் மூன்று கால்களுடனும் காட்சி தருகிறார் - அழகான உருவம், தரிசிக்கத்தக்கது) கருவறை சுற்றுப் பிராகாரத்தில் 63 மூவர், ராகு - கேது, சப்த மாதர்கள், வீரபத்திரர், காளி, காசிவிசுவநாதர், சூதவன விநாயகர், சோமாஸ்கந்தர், வருணன் அவர் வழிபட்ட லிங்கம், இராமர் அவர் வழிபட்ட லிங்கம், மார்க்கண்டேயர் அவர் வழிபட்ட லிங்கம், அன்னபூரணி, சுப்பிரமணியர், வள்ளி தெய்வயானையுடன் காட்சி தரும் சுப்பிரமணியர், கஜலட்சுமி, சரஸ்வதி நவகன்னியர், சனிபகவான், நடராஜ சபை, பைரவர், சூரியன், சந்திரன் முதலிய சந்நிதிகள் உள்ளன.

உட்பிரகாரத்தை அடுத்துள்ள முன்மண்டபத்தில் தல வரலாறு வண்ண ஒவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளதைக் காணலாம். கருவறை வாயிலின் இருபுறங்களிலும் சங்கநிதி, பதுமநிதி மூர்த்தங்கள் உள்ளன. நேரே மூலவர் மந்திரபுரீசுவரர் சதுரபீடத்தில் சுயம்பு லிங்க வடிவில் இடதுபுறம் சற்றே சாய்ந்த நிலையில் குனிந்து ஸ்ரீமந்திரபுரீஸ்வரர் காட்சி தருகிறார். கருட பகவான் வானவெளியில் அமுத கலசத்தை ஏந்திச் செல்லும்போது சிந்திய அமுதம் இறைவன் மீது பட்டதால் இறைவன் வெண்மை நிறமாக காட்சி அளிக்கிறார். மூலவர் சுயம்பு மூர்த்தி.

தல வரலாறு: இந்திரன், விசுவாமித்திரர், இராமர், இலட்சுமனன், ஜாம்பவான், சுக்ரீவன், அநுமன் ஆகியோர் இங்கு இறைவனை வழிபட்டுள்ளனர். விசுவாமித்திரருக்கு நடனக் காட்சி காட்டியருளிய தலம். இராமர் சேது அணை கட்டுவதற்கு இத்தலத்து இறைவனிடம் மந்திர உபதேசம் பெற்றதாக வரலாறு. எனவே இறைவன் திருப்பெயர் மந்திரிபுரீஸ்வரர் என்று வழங்குகிறது. மற்றும் கடலில் அணை கட்டுவதற்குரிய வழிமுறைகளை இராமபிரான் இப்பெருமானிடம் உசாவிய (கேட்டறிந்து) காரணத்தால் இத்தலம் உசாத்தானம் என்று பெயர் பெற்றது. இவ்வரலாற்றுக்கு ஆதரவாக இவ்வூருக்கு அருகில் இராமன் கோயில், ஜாம்பவான் ஒடை, அநுமான் காடு, சுக்ரீவன்பேட்டை, தம்பிக்கு நல்லான் பட்டினம் முதலிய ஊர்கள் உள்ளன. இறைவன் மாமரத்தினடியில் திகழ்வதால் இத்தலம் சூதவனம் என்றும் சொல்லப்படுகிறது. சூதவனம் என்றால் மாங்காடு. இதற்கேற்ப தலவிநாயகர் சூதவன விநாயகர் என்ற பெயருடன் மாவிலையைக் கரத்தில் ஏந்தியபடி காட்சி தருகிறார்.

இவ்வாலயத்தின் தலமரமாக மாமரமும், தீர்த்தங்களாக அநும தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம், நெல்லி தீர்த்தம், குஞ்சித தீர்த்தம், ஆதிசேஷ தீர்த்தம் ஆகியவையும் விளங்குகின்றன.

தலத்தின் சிறப்பு: ஸ்ரீராமர் இலங்கை செல்ல இராமேஸ்வரம் அருகில் கடலில் அணை கட்டுவதற்கு முன்பு இத்தலத்தை தரிசித்து சிவபெருமானிடம் மந்திர உபதேசம் பெற்ற தலம் இது. இராமருக்கு மந்திர உபதேசம் செய்யும் நிலையில் சிவபெருமான் சற்று வடபுறமாக சாய்ந்து காணப்படுகிறார். மார்க்கண்டேயன் மீது எமன் வீசிய பாசக்கயிற்றினால் உண்டான வடுக்கள் நீங்க இத்தலத்தில் தன் பெயரால் தீர்த்தம் உண்டாக்கி அதில் நீராடி, இத்தலத்து இறைவனை வழிபட்டு வடுக்கள் நீங்கப் பெற்றார். இத்தலத்தில் நடராஜப் பெருமான் விஸ்வாமித்திரருக்கு நடனக் காட்சி தந்துள்ளார்.


திருஉசத்தானம் மந்திரபுரீஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்


5 நிலை இராஜகோபுரம்


3 நிலை 2-வது கோபுரம்


நந்தி மண்டபம், பலிபீடம், கொடிமரம்


அம்பாள் சந்நிதி தனி கோவில்


கருவறை சுற்றுப் பிராகாரத்தில் 63 மூவர்


கருவறை சுற்றுப் பிராகாரத்தில் ராகு கேது


மகாவிஷ்ணு, ராமர் பூஜித்த லிங்கம்


வெளிப் பிராகாரத்தின் ஒரு தோற்றம்


தனி சந்நிதியில் சனி பகவான்


திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய 3-ம் திருமுறையில் காணப்படும் பதிகத்தில் உள்ள 11 பாடல்களில் 5-ம், 6-ம் பாடல்கள் சிதைந்து போயின. மீதியுள்ள 9 பாடல்கள் கீழே. பாற்கடலில் பள்ளிகொள்ளும் திருமாலின் அவதாரமான இராமனும், இலக்குமணனும், சாம்பவான், சுக்கிரீவன், அனுமன் ஆகியோரும் இத்தல இறைவனை வழிபட்டுள்ளதை முதல் பாடலில் குறிப்பிடுகிறார். திருவுசாத்தானத்தில் வீற்றிருந்து அருளும் இறைவனை உணர்ந்து போற்றிய இந்த தமிழ்ப் பதிகத்தை ஓத வல்லவர்கள் நரை, திரை என வந்து தாக்கும் மூப்பின் தளர்ச்சியின்றி, இளமை மிடுக்குடன் வாழ்ந்து சிவஞான நெறியில் நிற்பர் என்று தனது 11வது பாடலில் குறிப்பிடுகிறார். தில்லைப்பதியான் இங்கு விரும்பி எழுந்தருளியிருக்கும் காரணம் பற்றி இத்தலத்திற்கு கோயிலூர் என்னும் பெயர் எய்திற்று என்றும் கூறுவர். அதற்கு ஞானசம்பந்தப் பெருமானின் பதிகத்தின் 2-வது பாடலில் வரும் நறைகமழ் தில்லையான் உறைவிடந் திருவுசாத்தானமே. என்னும் பதிக அடியைக் சுட்டிக் காட்டுவர்.


1. நீரிடைத் துயின்றவன் தம்பிநீள் சாம்புவான்
பேருடைச் சுக்கிரீ வன்னநு மன்றொழக்
காருடை நஞ்சுண்டு காத்தருள் செய்தஎம்
சீருடைச் சேடர்வாழ் திருவுசாத் தானமே. 

2. கொல்லையே றுடையவன் கோவண ஆடையன்
பல்லையார் படுதலைப் பலிகொளும் பரமனார்
முல்லையார் புறவணி முதுபதி நறைகமழ்
தில்லையான் உறைவிடந் திருவுசாத் தானமே.

3. தாமலார் போலவே தக்கனார் வேள்வியை
ஊமனார் தங்கனா வாக்கினான் ஒருநொடிக்
காமனா ருடல்கெடக் காய்ந்தஎங் கண்ணுதல்
சேமமா உறைவிடந் திருவுசாத் தானமே. 

4. மறிதரு கரத்தினான் மால்விடை யேறியான்
குறிதரு கோலநற் குணத்தினார் அடிதொழ
நெறிதரு வேதியர் நித்தலும் நியமஞ்செய்
செறிதரு பொழிலணி திருவுசாத் தானமே. 

இப்பதிகத்தில் 5-ம், 6-ம் பாடல்கள் மறைந்து போயின. 	
7. பண்டிரைத் தயனுமா லும்பல பத்தர்கள்
தொண்டிரைத் தும்மலர் தூவித்தோத் திரஞ்சொலக்
கொண்டிரைக் கொடியொடுங் குருகினின் நல்லினந்
தெண்டிரைக் கழனிசூழ் திருவுசாத் தானமே. 

8. மடவரல் பங்கினன் மலைதனை மதியாது
சடசட எடுத்தவன் தலைபத்து நெரிதர
அடர்தர ஊன்றியங் கேயவற் கருள்செய்தான்
திடமென வுறைவிடந் திருவுசாத் தானமே. 

9. ஆணலார் பெண்ணலார் அயனொடு மாலுக்குங்
காணொணா வண்ணத்தான் கருதுவார் மனத்துளான்
பேணுவார் பிணியொடும் பிறப்பறுப் பானிடஞ்
சேணுலா மாளிகைத் திருவுசாத் தானமே. 

10. கானமார் வாழ்க்கையான் காரமண் தேரர்சொல்
ஊனமாக் கொண்டுநீர் உரைமின்உய் யவெனில்
வானமார் மதிலணி மாளிகை வளர்பொழில்
தேனமா மதியந்தோய் திருவுசாத் தானமே. 

11. வரைதிரிந் திழியுநீர் வளவயற் புகலிமன்
திரைதிரிந் தெறிகடல் திருவுசாத் தானரை
உரைதெரிந் துணருஞ்சம் பந்தனொண் தமிழ்வல்லார்
நரைதிரை யின்றியே நன்னெறி சேர்வரே.