Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்


தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

மாணிக்கவண்ணர் கோவில், திருநாட்டியாத்தான்குடி

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருநாட்டியாத்தான்குடி
இறைவன் பெயர்மாணிக்கவண்ணர், ரத்னபுரீசுவரர்
இறைவி பெயர்மாமலர் மங்கை, ரத்னபுரீசுவரி
பதிகம்சுந்தரர் - 1
எப்படிப் போவது திருவாரூரில் இருந்து தெற்கே 10 கி.மி. தொலைவில் இத்தலம் இருக்கிறது. திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் மாவூர் கூட்டுரோடில் இறங்கி அங்கிருந்து வடபாதிமங்கலம் செல்லும் சாலையில் சென்று இத்தலத்தை அடையலாம். சாலையோரத்தில் ஊர் உள்ளது.
ஆலய முகவரிஅருள்மிகு மாணிக்கவண்ணர் திருக்கோவில்
திருநாட்டியாத்தான்குடி
திருநாட்டியாத்தான்குடி அஞ்சல்
வழி மாவூர் S.O.
திருவாரூர் வட்டம்
திருவாரூர் மாவட்டம்
PIN - 610202

இவ்வாலயம் தினந்தோறும் காலை 9 மணி முதல் 10-30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

தலச் சிறப்பு: 63 நாயன்மார்களில் ஒருவரான கோட்புலி நாயனாரின் அவதாரத்தலம் என்ற பெருமையை உடையது இத்தலம். கோட்புலி நாயனார் சிவாலய நெல்லைத் தனியாகவும் தனது குடும்பத்திற்கான நெல்லைத் தனியாகவும் சேகரித்து வைத்திருந்து உபயோகப்படுத்துவதில் மிகவும கட்டுப்பாடுடன் இருந்தார். ஒருமுறை யுத்தம் வந்தபோது அவரும் போருக்குச் சென்றிருந்தார்.அவர் போயிருந்தபோது கடும் பஞ்சம் வந்தது. வீட்டுக்காக வைத்திருந்த நெல் பூராவும் செலவழிந்துவிட்டது. மறுபடியும் நெல் விளைந்தவுடன் கோவிலுக்குத் திருப்பித்தந்து விடலாம் என்று எண்ணிய கோட்புலி நாயனாரின் குடும்பத்தினர், சிவாலயத்தின் நெல்லை எடுத்துச் செலவழிக்க ஆரம்பித்தனர். போர் முனையிலிருந்து திரும்பிய நாயனார், இதைக் கேள்விப்பட்டவுடன் கோபம் கொண்டு, அவர்களை சிவ துரோகிகள் எனக்கருதி தனது வாளால் ஒவ்வொருவரையும் வெட்டினார். கடைசியாக இருந்த குழந்தையையும், சுவாமியின் நெல்லை சாப்பிட்ட தாயின் பாலைக் குடித்த பாவம் செய்ததாகக் கருதி உடை வாளால் வெட்டினார். அப்போது ஆகாயத்தில் ரிஷப வாகனத்தில் உமா தேவியோடு சிவபெருமான் காட்சி கொடுத்து அவரையும் அவரது குடும்பத்தையும் ஆட்கொண்டார்

சுந்தரமூர்த்தி சுவாமிகள் இத்தலத்திற்கு வருகை தந்த போது கோட்புலி நாயனாரின் வீட்டில் தங்கி இருந்தார். அச்சமயம் இறைவனை வழிபட இருவரும் ஆலயத்திற்குச் சென்றனர். ஆலயத்தில் இறைவனையும் இறைவியையும் காணாது சுந்தரர் திகைத்தார். விநாயகரைக் கேட்க, அவர் வாய் திறந்து பேசாமல் ஈசான்ய திசையை நோக்கிக் கை காட்டினார். (கிழக்கு கோபுர வாயிலின் முன் சுந்தரருக்கு கைகாட்டிய விநாயகர் சந்நிதி மேற்கு நோக்கியுள்ளது) அவ்வழியே சுந்தரர் சென்று பார்த்த போது, அங்குள்ள ஒரு வயலில் சுவாமியும் அம்பிகையும் உழவன், உழத்தியாக நடவு நட்டுக் கொண்டிருந்ததைக் கண்டார். அதைக் கண்டு சுந்தரர், நடவு நட்டது போதும் வாரும் என்று அழைக்க, சுவாமியும் அம்பிகையும் மறைந்து கோயிலுக்குச் சென்றனர். சுந்தரர் அவர்களைப் பின் தொடர்ந்து கோவிலுக்குள் செல்லும் போது, ஒரு பாம்பு வாயிலில் தடுக்க அப்போது பூணாண் ஆவதோர் அரவங்கண் டஞ்சேன் என்று தொடங்கிப் பாடித் தரிசித்தார் என்று தலவரலாறு சொல்லப்படுகிறது. மேலும் கோட்புலி நாயனார் அவருடைய இரு புதல்விகளான சிங்கடி, வனப்பகை ஆகியோரை சுந்தருக்கு பணிப்பெண்களாக ஏற்றுக் கொள்ளும்படி வேண்ட, சுந்தரர் அந்த இருவரையும் தம் புதல்வியர்களாக ஏற்றருளிய பதி இதுவாகும்.

இரத்தினேந்திர சோழனும், அவனது தம்பியும் தம் தந்தையார் அவர்களுக்கு விட்டுச் சென்ற இரத்தினங்களை மதிப்பீடு செய்து தமக்குள் பிரித்துக் கொள்வதற்கு இரத்தின வியாபாரி ஒருவரை அழைந்நனர். இருவரும் இரத்தின வியாபாரி செய்த மதிப்பீடு சரியில்லை என்று எண்ணி இறைவனிடம் முறையிட்டனர். இவர்களது வேண்டுதலை ஏற்ற இறைவன் தானே ரத்தின வியாபாரியாக வந்து ரத்தினங்களை மதிப்பிட்டு, அதை பிரித்துக் கொடுத்ததால் இரத்தினபுரீசுவரர் என்று பெயர் பெற்றதாக தல வரலாறு குறிப்பிடுகிறது. மேலும் யானை ஒன்று இத்தலத்தில் தீர்த்தம் ஒன்று உருவாக்கி அதில் நீராடி இறைவனை வழிபட்டு முக்தி பெற்றது. யானை உண்டாக்கிய தீர்த்தம் கரி தீர்த்தம் எனப்படுகிறது. கரிக்கு (யானைக்கு) அருள் செய்ததால் இறைவனுக்கு கரிநாதேஸ்வரர் என்றும் ஒரு பெயருண்டு. இத்தலத்தின் மற்றொரு தீர்த்தம் சூரிய தீர்த்தம்.

சுந்தரர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய பதிகம் 7-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

பூணாண் ஆவதோர் அரவங்கண் டஞ்சேன்
புறங்காட் டாடல்கண் டிகழேன்
பேணீ ராகிலும் பெருமையை உணர்வேன்
பிறவே னாகிலும் மறவேன்
காணீ ராகிலுங் காண்பனென் மனத்தாற்
கருதீ ராகிலுங் கருதி
நானே லும்மடி பாடுதல் ஒழியேன்
நாட்டியத் தான்குடி நம்பீ.  

கச்சேர் பாம்பொன்று கட்டிநின் றிடுகாட்
டெல்லியில் ஆடலைக் கவர்வன்
துச்சேன் என்மனம் புகுந்திருக் கின்றமை
சொல்லாய் திப்பிய மூர்த்தி
வைச்சே யிடர்களைக் களைந்திட வல்ல
மணியே மாணிக்க வண்ணா
நச்சேன் ஒருவரை நானுமை யல்லால்
நாட்டியத் தான்குடி நம்பீ.  

அஞ்சா தேயுமக் காட்செய வல்லேன்
யாதினுக் காசைப் படுகேன்
பஞ்சேர் மெல்லடி மாமலை மங்கை
பங்கா எம்பர மேட்டீ
மஞ்சேர் வெண்மதி செஞ்சடை வைத்த
மணியே மாணிக்க வண்ணா
நஞ்சேர் கண்டா வெண்டலை யேந்தீ
நாட்டியத் தான்குடி நம்பீ.  

கல்லே னல்லேன் நின்புகழ் அடிமை
கல்லா தேபல கற்றேன்
நில்லே னல்லேன் நின்வழி நின்றார்
தம்முடை நீதியை நினைய
வல்லே னல்லேன் பொன்னடி பரவ
மாட்டேன் மறுமையை நினைய
நல்லே னல்லேன் நானுமக் கல்லால்
நாட்டியத் தான்குடி நம்பீ.  

மட்டார் பூங்குழல் மலைமகள் கணவனைக்
கருதா தார்தமைக் கருதேன்
ஒட்டீ ராகிலும் ஒட்டுவன் அடியேன்
உம்மடி யடைந்தவர்க் கடிமைப்
பட்டே னாகிலும் பாடுதல் ஒழியேன்
பாடியும் நாடியும் அறிய
நட்டேன் ஆதலால் நான்மறக் கில்லேன்
நாட்டியத் தான்குடி நம்பீ.  

படப்பாற் றன்மையில் நான்பட்ட தெல்லாம்
படுத்தா யென்றல்லல் பறையேன்
குடப்பாச் சிலுறை கோக்குளிர் வானே
கோனே கூற்றுதைத் தானே
மடப்பாற் றயிரொடு நெய்மகிழ்ந் தாடும்
மறையோ தீமங்கை பங்கா
நடப்பீ ராகிலும் நடப்பனும் மடிக்கே
நாட்டியத் தான்குடி நம்பீ.  

ஐவாய் அரவினை மதியுடன் வைத்த
அழகா அமரர்கள் தலைவா
எய்வான் வைத்ததோர் இலக்கினை அணைதர
நினைந்தேன் உள்ளமுள் ளளவும்
உய்வான் எண்ணிவந் தும்மடி அடைந்தேன்
உகவீ ராகிலும் உகப்பன்
நைவா னன்றுமக் காட்பட்ட தடியேன்
நாட்டியத் தான்குடி நம்பீ.  

கலியேன் மானுட வாழ்க்கையொன் றாகக்
கருதிடிற் கண்கணீர் பில்கும்
பலிதேர்ந் துண்பதோர் பண்புகண் டிகழேன்
பசுவே ஏறிலும் பழியேன்
வலியே யாகிலும் வணங்குதல் ஒழியேன்
மாட்டேன் மறுமையை நினையேன்
நலியேன் ஒருவரை நானுமை யல்லால்
நாட்டியத் தான்குடி நம்பீ.  

குண்டா டிச்சமண் சாக்கியப் பேய்கள்
கொண்டா ராகிலுங் கொள்ளக்
கண்டா லுங்கரு தேன்எரு தேறுங்
கண்ணா நின்னல தறியேன்
தொண்டா டித்தொழு வார்தொழக் கண்டு
தொழுதேன் என்வினை போக
நண்டா டும்வயற் றண்டலை வேலி
நாட்டியத் தான்குடி நம்பீ.  

கூடா மன்னரைக் கூட்டத்து வென்ற
கொடிறன் கோட்புலி சென்னி
நாடார் தொல்புகழ் நாட்டியத் தான்குடி
நம்பியை நாளும் மறவாச்
சேடார் பூங்குழற் சிங்கடி யப்பன்
திருவா ரூரன் உரைத்த
பாடீ ராகிலும் பாடுமின் றொண்டீர்
பாடநும் பாவம்பற் றறுமே.  

திருநாட்டியாத்தான்குடி மாணிக்கவண்ணர் ஆலயம் புகைப்படங்கள்


ஆலயத்தின் 5 நிலை கோபுரம்


கை காட்டிய விநாயகர்


நந்தி, பிலிபீடம், கொடிமரம்


நால்வர் சந்நிதி


கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி


தலவிருட்சம் மாவிலங்கை