Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்


தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

கைச்சின நாதேசுவரர் கோவில், திருகைச்சினம்

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருகைச்சினம் (தற்போது கச்சனம் என்று வழங்கப்படுகிறது)
இறைவன் பெயர்கைச்சின நாதேசுவரர்
இறைவி பெயர்வெள்வளை நாயகி
பதிகம்திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலை வழியில் திருவாரூரில் இருந்து சுமார் 18 கி.மி. தொலைவிலும், திருநெல்லிக்காவல் ரயில் நிலையத்தில் இருந்து 4 கி.மி. தொலைவிலும் இத்தலம் ஊள்ளது. திருகோளிலி, திருநெல்லிக்கா, திருக்காறாயில் ஆகிய பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் இத்தலத்திற்கு அருகாமையில் அமைந்துள்ளன.
ஆலய முகவரிஅருள்மிகு கைச்சின நாதேசுவரர் திருக்கோவில்
கச்சனம்
கச்சனம் அஞ்சல்
திருவாரூர் வட்டம்
திருவாரூர் மாவட்டம்
PIN 610201

இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

katchanam route map

திருவாரூரில் இருந்து திருகைச்சினம்
செல்லும் வழி வரைபடம்
Map courtesy by: Google Maps

தலவரலாறு: கெளதம முனிவர் மனைவி அகலிகை மீது மோகம் கொண்ட இந்திரன், முனிவர் இல்லாத போது இந்திரன் கெளதமரைப் போலவே உருமாறி அகலிகையுடன் சேர்ந்து இருந்தான். விபரீதம் நடந்துள்ளதை ஞான திருஷ்டியால் உணர்ந்த முனிவர் ஆசிரமத்துக்கு திரும்பினார். இந்திரனின் செயலைக்கண்ட அவர் அவனுக்கு சாபமிட்டார். சாபம் பெற்ற இந்திரன் பூலோகத்திற்கு வந்து மண்ணால் ஒரு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தான். பலகாலம் வழிபட்டும் தன் சாபம் நீங்காமல் இருக்கக் கண்ட இந்திரன் சிவலிங்கத்தைக் கைகளால் கட்டிப் பிடித்துக் கொண்டு சிவனிடம் தன்னை மன்னித்து அருளும் படி வேண்டினான். இவ்வாறு இந்திரன் செய்துவர இந்திரனின் கைச்சின்னம் சிவலிங்கத்தில் பதிந்து தழும்பாக மாறியது. தவறு செய்தவரையும் மன்னிக்கும் அருள் குணமுள்ள சிவன், நீண்ட நாள் சாபத்தில் சிக்கி வருந்திய இந்திரனுக்கு விமோசனம் கொடுத்தார். இதனாலேயே இந்திரன் பூஜை செய்த இந்த சிவலிங்கத்திற்கு கைச்சின்ன நாதேஸ்வரர் என்ற பெயரும் ஏற்பட்டது. தலமும் கைச்சின்னம் என்று பெயர் பெற்று இன்றளவில் மருவி கச்சனம் என்று வழங்குகிறது. இன்றைக்கும் சிவலிங்கத் திருமேனியில் கைவிரல் குறி இருப்பதை சிவாச்சாரியாரைக் காண்பிக்கச் சொல்லிப் பார்க்கலாம்.

கோச்செங்கட் சோழன் கட்டிய மாடக்கோவில்களில் இத்தலத்து ஆலயமும் ஒன்றாகும். மதிற்சுவருடன் கூடிய கிழக்கு நோக்கிய ஒரு முகப்பு வாயிலுடன் இவ்வாலயம் அமைந்துள்ளது. முகப்பு வாயிலைக் கடந்து உள்ளே நுழைந்தால் நேரே கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் ஆகியவை உள்ளன. அதைத் தொடர்ந்து கிழக்கு நோக்கிய மூன்று நிலை கோபுரம் நம்மை வரவேற்கிறது. கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தால் உள் பிரகாரத்தில் விநாயகர், நவக்கிரகம், சுப்ரமணியர், நடராஜர், விதூமலிங்கம், அர்த்தநாரீஸ்வரர் சந்நிதிகள் இருக்கின்றன. இறைவி வெள்வளை நாயகி சந்நிதி தனிக் கோவிலாக ஒரு சுற்றுப் பிராகாரத்துடன் உள்ளது. சுற்றுப் பிராகார கோஷ்டங்களில் முறையே ஜேஷ்டாதேவி, துர்க்காதேவி, சரஸ்வதி ஆகியோர் உள்ளனர். இந்திரன் ஐராவதத்தின் தந்தத்தால் செய்த வெள்வளையை அம்பிகைக்கு அணிவித்து வழிபட்டதால் அம்பிகைக்கு வெள்வளை நாயகி என்று பெயர் ஏற்பட்டது.

இத்தலத்தில் இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். இந்திரன் சாபம் விலகியதும், தியாகராஜர் காட்சி தந்ததும், அகத்தியரின் பிரம்மஹத்தி தோஷம் விலகியதுமாகிய சிறப்புடைய இத்தலத்தின் மற்றொரு சிறப்பம்சம் இங்குள்ள ரிஷபாரூட தட்சிணா மூர்த்தி. ரிஷபத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சி அளிக்கும் தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர் ஆகியவை பார்க்க வேண்டியவையாகும்.

இந்த ஆலயத்தில் ஸ்ரீனிவாச பெருமானின் அழகிய திரு உருவம் உள்ளது. இவ்வாலயத்திற்குச் சொந்தமான நிலத்தைத் தோண்டும் போது கிடைத்த சங்கு சக்கரபாணியாகத் திகழும் பெருமாள் சிலை இதுவாகும். மகாலட்சுமியின் சகோதரியாக கருதப்படும் ஜேஷ்டாதேவிக்கு (மூதேவி) இக்கோவிலில் தனி சந்நிதி உள்ளது குறிப்பிடத்தக்கது.

திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய பதிகம் 2-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

தையலோர் கூறுடையான் தண்மதிசேர் செஞ்சடையான்
மையுலா மணிமிடற்றன் மறைவிளங்கு பாடலான்
நெய்யுலா மூவிலைவே லேந்தி நிவந்தொளிசேர்
கையுடையான் மேவியுறை கோயில் கைச்சினமே. 

விடமல்கு கண்டத்தான் வெள்வளையோர் கூறுடையான்
படமல்கு பாம்பரையான் பற்றாதார் புரமெரித்தான்
நடமல்கும் ஆடலினான் நான்மறையோர் பாடலினான்
கடமல்கு மாவுரியான் உறைகோயில் கைச்சினமே. 

பாடலார் நான்மறையான் பைங்கொன்றை பாம்பினொடுஞ்
சூடலான் வெண்மதியந் துன்று கரந்தையொடும்
ஆடலான் அங்கை அனலேந்தி யாடரவக்
காடலான் மேவியுறை கோயில் கைச்சினமே. 

பண்டமரர் கூடிக் கடைந்த படுகடல்நஞ்
சுண்டபிரான் என்றிறைஞ்சி உம்பர் தொழுதேத்த
விண்டவர்கள் தொன்னகரம் மூன்றுடனே வெந்தவியக்
கண்ட பிரான் மேவியுறை கோயில் கைச்சினமே. 

தேய்ந்துமலி வெண்பிறையான் செய்யதிரு மேனியினன்
வாய்ந்திலங்கு வெண்ணீற்றான் மாதினையோர் கூறுடையான்
சாய்ந்தமரர் வேண்டத் தடங்கடல் நஞ்சுண்டனங்கைக்
காய்ந்தபிரான் மேவியுறை கோயில் கைச்சினமே. 

மங்கையோர் கூறுடையான் மன்னு மறைபயின்றான்
அங்கையோர் வெண்டலையான் ஆடரவம் பூண்டுகந்தான்
திங்களொடு பாம்பணிந்த சீரார் திருமுடிமேற்
கங்கையினான் மேவியுறை கோயில் கைச்சினமே. 

வரியரவே நாணாக மால்வரையே வில்லாக
எரிகணையால் முப்புரங்கள் எய்துகந்த எம்பெருமான்
பொரிசுடலை யீமப் புறங்காட்டான் போர்த்ததோர்
கரியுரியான் மேவியுறை கோயில் கைச்சினமே. 

போதுலவு கொன்றை புனைந்தான் திருமுடிமேல்
மாதுமையா ளஞ்ச மலையெடுத்த வாளரக்கன்
நீதியினா லேத்த நிகழ்வித்து நின்றாடுங்
காதலினான் மேவியுறை கோயில் கைச்சினமே. 

மண்ணினைமுன் சென்றிரந்த மாலும் மலரவனும்
எண்ணறியா வண்ணம் எரியுருவ மாயபிரான்
பண்ணிசையா லேத்தப் படுவான்றன் நெற்றியின்மேற்
கண்ணுடையான் மேவியுறை கோயில் கைச்சினமே. 

இப்பதிகத்தில் 10-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 

தண்வயல்சூழ் காழித் தமிழ்ஞான சம்பந்தன்
கண்ணுதலான் மேவியுறை கோயில் கைச்சினத்தைப்
பண்ணிசையா லேத்திப் பயின்ற இவைவல்லார்
விண்ணவரா யோங்கி வியனுலக மாள்வாரே. 

திருகைச்சினம் (கச்சனம்) கைச்சின நாதேசுவரர் ஆலயம் புகைப்படங்கள்


முகப்பு வாயில் மற்றும் 3 நிலை கோபுரம்

கொடிமரம், பலிபீடம், நந்தி


ஆலயம் உட்புறத் தோற்றம்


ஆலயம் உட்புறத் தோற்றம்
வடக்கு வெளிப் பிராகாரம்


ஆலய விமானம்


இறைவன் கருவறை கோபுரம்


கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி


அம்பாள் தனிக் கோவில்


வள்ளி தெய்வானையுடன் முருகர்


கைச்சின நாதேசுவரர் சந்நிதி


வெள்வளை நாயகி சந்நிதி


நடராஜர், சிவகாமி