Shiva Temples of Tamilnadu
தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்
ஓணகாந்தேஸ்வரர் கோவில், திருஓணகாந்தன்தளி
தென்னாடுடைய சிவனே போற்றிஎந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
| தகவல் பலகை | |
|---|---|
| சிவஸ்தலம் பெயர் | திருஓணகாந்தன்தளி |
| இறைவன் பெயர் | ஓணகாந்தேஸ்வரர் |
| இறைவி பெயர் | காமாட்சி அம்மன் |
| பதிகம் | சுந்தரர் - 1 |
| எப்படிப் போவது | காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு மேற்கேயுள்ள சர்வதீர்த்தத்துக்கு வடமேற்கே சுமார் ஒரு கி.மீ. தொலைவில் பஞ்சுப்பேட்டை என்ற பகுதியில் உள்ள துணை நிலையத்திற்கு எதிரில் கோவில் உள்ளது. சாலையோரத்திலேயே கோவிலும் மின் நிலையமும் உள்ளன. |
| ஆலய முகவரி |
அருள்மிகு ஓணகாந்தேஸ்வரர் திருக்கோவில் பஞ்சுப்பேட்டை (துணை மினநிலையம் அருகில்) பெரிய காஞ்சீபுரம் காஞ்சீபுரம் மாவட்டம் PIN - 631502 |
வாணாசுரன் என்ற அரசனுடைய சேனாதிபதிகளான ஓணன், காந்தன் என்னும் அசுரர்கள் வழிபட்டுப் பேறுபெற்ற காரணத்தால் இத்தலம் ஓணகாந்தன்தளி என்று பெயர் பெற்றது. 3 நிலை இராஜ கோபுரத்துடன் இவ்வாலயம் காட்சி தருகிறது. கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் பலிபீடமும், நந்தி மண்டபமும் உள்ளன. ஓணன், காந்தன் இவ்விருவரும் வழிபட்ட ஓணேஸ்வரர், காந்தேஸ்வரர் ஆகிய இரு சிவலிங்கத் திருமேனிகளும் கோயிலில் அடுத்தடுத்து தனிச் சந்நிதிகளாக உள்ளன. சலந்தரன் வழிபட்டதாகச் சொல்லப்படும் சலேந்தரேஸ்வரர் சிவலிங்கத் திருமேனி தனியே உள்ளது. இது பிற்காலப் பிரதிஷ்டையாகும். சிறிய கோயில். இத்தலத்திலுள்ள வயிறுதாரிப் பிள்ளையார் சந்நிதியை சம்பந்தர் தனது பதிகத்தின் 2-வது பாடலில் குறிப்பிடுகிறார். இத்தலத்தில் தட்சினாமூர்த்தி சனகாதி முனிவர்கள் உடன் இருக்க வலது காலை முயலகன் மீது வைத்தபடி காட்சி தருகிறார். முருகர் தனது மயில் வாகனத்தில் அமர்ந்தபடி தனது இரு தேவியர் வள்ளி தெய்வானையுடன் காட்சி தருகிறார்.
| திருஓணகாந்தன்தளி ஓணகாந்தேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள் | ||
|---|---|---|
![]() 3 நிலை இராஜ கோபுரம் |
![]() ஓணகாந்தேஸ்வரர் கருவறை விமானம் |
|
![]() கோவில் உள்ளிருந்து இராஜகோபுரம் தோற்றம் |
![]() கோவில் வெளித் தோற்றம் |
|
![]() சலேந்தரேஸ்வரர் கருவறை விமானம் |
![]() தட்சினாமூர்த்தி |
|
![]() வள்ளி தெய்வானையுடன் மயில்மீது அமர்ந்த முருகர் | ||
சுந்தரர் பாடிய இத்தலத்திற்கான இப்பதிகம் 7-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. இங்கு வந்த சுந்தரர், இறைவனிடம் அடிமைத் திறம் பேசி, நெய்யும் பாலும் தயிரும் கொண்டு என்று தொடங்கும் பதிகம் பாடிப் பொன் பெற்றார் என்பது வரலாறு. இப்பதிகத்தில் ஐந்தாவது பாடலைத் தொடங்கிப் பாடும் போது, இறைவன் பக்கத்தில் உள்ள புளிய மரத்தில் சென்று ஒளிந்து கொண்டதாகவும், அதையறிந்த சுந்தரர் அங்குச் சென்று பதிகத்தை தொடரவே, இறைவன் அப்புளிய மரத்துக் காய்களையே பொன் காய்களாக விழுமாறு உதிர்க்க, சுந்தரர் அவற்றைப் பெற்றார் என்பதாக ஒரு செய்தி இப்பகுதியில் செவிவழிச் செய்தியாகச் சொல்லப்படுகின்றது.
1.நெய்யும் பாலும் தயிரும் கொண்டு நித்தல் பூசை செய்யல் உற்றார் கையில் ஒன்றும் காணம் இல்லைக் கழல் அடி தொழுது உய்யின் அல்லால் ஐவர் கொண்டு இங்கு ஆட்ட ஆடி ஆழ்குழிப்பட்டு அழுந்து வேனுக்கு உய்யுமாறு ஒன்று அருளிச் செய்யீர் ஓணகாந்தன்தளி உளீரே. 2. திங்கள் தங்கு சடையின் மேல் ஓர் திரைகள் வந்து புரள வீசும் கங்கையாளேல் வாய் திறவாள் கணபதியேல் வயிறு தாரி அங்கை வேலோன் குமரன் பிள்ளை தேவியார் கொற்று அட்டியாளார் உங்களுக்கு ஆட் செய்யமாட்டோம் ஓணகாந்தன்தளி உளீரே. 3. பெற்ற போழ்தும் பெறாத போழ்தும் பேணி உம் கழல் ஏத்துவார்கள் மற்று ஓர் பற்றிலர் என்று இரங்கி மதி உடையவர் செய்கை செய்யீர் அற்ற போழ்தும் அலந்த போழ்தும் ஆவற் காலத்து அடிகேள் உம்மை ஒற்றி வைத்து இங்கு உண்ணால் ஆமோ ஓணகாந்தன்தளி உளீரே. 4. வல்லது எல்லாம் சொல்லி உம்மை வாழ்த்தினாலும் வாய் திறந்து ஒன்று இல்லை என்னீர் உண்டும் என்னீர் எம்மை ஆள்வான் இருப்பது என் நீர் பல்லை யுக்கப் படுதலையில் பகல் எலாம் போய்ப் பலி திரிந்து இங்கு ஒல்லை வாழ்க்கை ஒழிய மாட்டீர் ஓணகாந்தன்தளி உளீரே. 5. கூடிக் கூடித் தொண்டர் தங்கள் கொண்ட பாணி குறைபடாமே ஆடிப் பாடி அழுது நெக்கு அங்கு அன்பு உடையவர்க்கு இன்பம் ஓரீர் தேடித் தேடித் திரிந்து எய்த்தாலும் சித்தம் என்பால் வைக்க மாட்டீர் ஓடிப் போகீர் பற்றும் தாரீர் ஓணகாந்தன்தளி உளீரே. 6. வார் இருங்குழல் வாண் நெடுங்கண் மலைமகள் மது விம்மு கொன்றைத் தார் இருந்தடமார்பு நீங்காத் தையலாள் உலகு உய்ய வைத்த கார் இரும் பொழில் கச்சி மூதூர்க் காமக் கோட்டம் உண்டாக நீர்போய் ஊர் இடும் பிச்சை கொள்வதென்னே ஓணகாந்தன்தளி உளீரே. 7. பொய்ம்மையாலே போது போக்கிப் புறத்தும் இல்லை அகத்தும் இல்லை மெய்ம்மை சொல்லி ஆள மாட்டீர் மேலை நாள் ஒன்று இடவும் கில்லீர் எம்மைப் பெற்றால் ஏதும் வேண்டீர் ஏதும் தாரீர் ஏதும் ஓதீர் உம்மை என்றே எம்பெருமான் ஓணகாந்தன்தளி உளீரே. 8. வலையம் வைத்த கூற்றம் ஈவான் வந்து நின்ற வார்த்தை கேட்டுச் சிலை அமைத்த சிந்தையாலே திருவடி தொழுது உய்யின் அல்லால் கலை அமைத்த காமச் செற்றக் குரோத லோப மதவல் ஊடு ஐ உலை அமைத்து இங்கு ஒன்ற மாட்டேன் ஓணகாந்தன்தளி உளீரே. 9. வாரம் ஆகித் திருவடிக்குப் பணிசெய் தொண்டர் பெறுவது என்னே ஆரம் பாம்பு வாழ்வது ஆரூர் ஒற்றியூரேல் உம்மது அன்று தாரமாகக் கங்கை யாளைச் சடையில் வைத்த அடிகேள் உம்தம் ஊரும் காடு உடையும் தோலே ஓணகாந்தன்தளி உளீரே. 10. ஓ வணம் மேல் எருது ஒன்று ஏறும் ஓணகாந்தன்தளி உளார்தாம் ஆவம் செய்து ஆளும் கொண்டு அரை துகிலொடு பட்டு வீக்கிக் கோவணம் மேற்கொண்ட வேடம் கோவை ஆக ஆரூரன் சொன்ன பா வணத் தமிழ்பத்தும் வல்லார்க்குப் பறையும் தாஞ்செய்த பாவந்தானே.
இப்பதிகத்தை நாள்தோறும் ஓதுபவர்கள் தேவையான காலத்தில் எவ்வாறேனும் இறைவன் திருவருளால் தேவையான பணம் பெற்று பணமுடையின்றி வாழ்வார்கள் எனபது உறுதி.







