Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்


தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

அநேகதங்கா பதேஸ்வரர் கோவில், கச்சி அநேகதங்காபதம்

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்கச்சி அநேகதங்காபதம்
இறைவன் பெயர்அநேகதங்காபதேஸ்வரர்
இறைவி பெயர்காமாட்சி அம்மன்
பதிகம்சுந்தரர் - 1
எப்படிப் போவது காஞ்சிபுரம் நகரில் இருந்து வடமேற்கே 3 கி.மி. தொலைவில் பிரபல சுற்றுலா மையமான கைலாசநாதர் கோவிலுக்குச் செல்லும் வழியில் இந்த சிவஸ்தலம் உள்ளது. காஞ்சிபுரத்தில் இருந்து நகரப் பேருந்துகள் இருக்கின்றன.
ஆலய முகவரி அருள்மிகு அநேகதங்காபதேஸ்வரர் திருக்கோவில்
பிள்ளையார்பாளயம்
காஞ்சீபுரம்
காஞ்சீபுரம் மாவட்டம்
PIN - 631501

அநேகதங்காபதம் என்ற பெயரில் இரண்டு பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் இருக்கின்றன. ஒன்று வடநாட்டில் ஹரித்வார் - கேதார்நாத் செல்லும் வழியில் உள்ள கெளரிகுண்டம் சென்று அங்கிருந்து பயணிக்க வேண்டும். மற்றொன்று காஞ்சீபுரத்திலுள்ள இத்தலம். வடநாட்டில் உள்ள அநேகதங்காபதம் சிவஸ்தலத்திலிருந்து வேறுபடுத்திக் காட்ட இத்தலம் கச்சி அநேகதங்காபதம் என்ற பெயரால் வழங்குகிறது.

இவ்வாலயம் வடக்கில் ஒரு சிறிய கோபுரத்துடன் கூடிய முகப்பு வாயிலுடனும், கிழக்கில் மற்றொரு முகப்பு வாயிலுடனும் காணப்படுகிறது. . இந்த வாயிலகள் வழியே நுழைந்தால் ஒரு விசாலமான வெளிச் சுற்று உள்ளது. கிழக்கு வாயிலின் உள்ளே சென்றவுடன் நாம் நேரே காண்பது பலிபீடம் மற்றும் நந்தி மண்டபம். தெற்கு வெளிப் பிரகாரத்தில் தேவார மூவர் சந்நிதியைக் காணலாம். மேற்கு வெளிப் பிரகாரத்தில் தென்மேற்குப் பகுதியில் விநாயகர் சந்நிதியும், வடமேற்குப் பகுதியில் வள்ளி தெய்வானையுடன் உள்ள ஸ்ரீசுப்பிரமணியர் சந்நிதி ஆகியவற்றைக் காணலாம். மூலவர் வட்டவடிவ ஆவுடையார் மீது பெரிய லிங்கத் திருமேனியுடன் நமக்கு அருட்காட்சி தருகிறார். கோஷட மூர்த்தங்களாக தட்சிணாமூர்த்தி, விநாயகர், பிரம்மா மற்றும் துர்க்கை உள்ளனர்.

அனேகதம் என்றால் யானை. யானை முகத்தையுடைய விநாயகர் சிவலிங்கத் திருமேனியை நிறுவி வழிபட்ட தலம் ஆதலால் இது அநேகதங்காபதம் என்று பெயர் பெற்றது. குபேரன் வழிபட்ட பெருமையுடையது இத்தலம். அநேகதங்காபதேஸ்வரர் இரணியபுர அசுரரான கேசியை அழித்து கேசியின் மகளான சிவபக்தை வல்லபையை விநாயகருக்கு மணம் முடிக்க வரம் தநத சிறந்த தலமாகும்.

விநாயகப் பெருமானால் வழிபடப்பட்ட அநேகதங்காபதேஸ்வரரை வழிபடுவர்கள் கொடிய துன்பமாகிய பிறவித்துயர் தீர்ந்து இறைவன் உறையும் திருக்கயிலாயத்தை அடைந்து அங்கு தங்கும் பேற்றினைப் பெறுவர் என்று காஞ்சிப் புராணம் கூறுகிறது.

சுந்தரர் பாடிய இத்தலத்திற்கான இப்பதிகம் 7-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

1. தேனெய் புரிந்துழல் செஞ்சடை யெம்பெரு
மானதி டந்திகழ் ஐங்கணையக்
கோனை யெரித்தெரி யாடி இடங்குல
வான திடங்குறை யாமறையாம்
மானை இடத்ததோர் கையனி டம்மத
மாறு படப்பொழி யும்மலைபோல்
யானை யுரித்த பிரான திடங்கலிக்
கச்சி அனேகதங் காவதமே.  

2. கூறு நடைக்குழி கட்பகு வாயன
பேயுகந் தாடநின் றோரியிட
வேறு படக்குட கத்திலை யம்பல
வாணன்நின் றாடல் விரும்புமிடம்
ஏறு விடைக்கொடி யெம்பெரு மான்இமை
யோர்பெரு மான்உமை யாள்கணவன்
ஆறு சடைக்குடை அப்ப னிடங்கலிக்
கச்சி அனேகதங் காவதமே.  

3. கொடிக ளிடைக்குயில் கூவுமி டம்மயி
லாலுமி டம்மழு வாளுடைய
கடிகொள் புனற்சடை கொண்ட நுதற்கறைக்
கண்டனி டம்பிறைத் துண்டமுடிச்
செடிகொள் வினைப்பகை தீருமி டந்திரு
வாகுமி டந்திரு மார்பகலத்
தடிக ளிடம்அழல் வண்ண னிடங்கலிக்
கச்சி அனேகதங் காவதமே. 

4. கொங்கு நுழைத்தன வண்டறை கொன்றையுங்
கங்கையுந் திங்களுஞ் சூடுசடை
மங்குல் நுழைமலை மங்கையை நங்கையைப்
பங்கினிற் றங்க உவந்தருள்செய்
சங்கு குழைச்செவி கொண்டரு வித்திரள்
பாய வியாத்தழல் போலுடைத்தம்
அங்கை மழுத்திகழ் கைய னிடங்கலிக்
கச்சி அனேகதங் காவதமே. 
 
5. பைத்த படத்தலை ஆடர வம்பயில்
கின்ற இடம்பயி லப்புகுவார்
சித்தம் ஒருநெறி வைத்த இடந்திகழ்
கின்ற இடந்திரு வானடிக்கே
வைத்த மனத்தவர் பத்தர் மனங்கொள
வைத்த இடம்மழு வாளுடைய
அத்தன் இடம்அழல் வண்ண னிடங்கலிக்
கச்சி அனேகதங் காவதமே. 
6. தண்ட முடைத்தரு மன்தமர் என்றம
ரைச்செயும் வன்துயர் தீர்க்குமிடம்
பிண்ட முடைப்பிற வித்தலை நின்று
நினைப்பவர் ஆக்கையை நீக்குமிடம்
கண்ட முடைக்கரு நஞ்சை நுகர்ந்த
பிரான திடங்கடல் ஏழுகடந்
தண்ட முடைப்பெரு மான திடங்கலிக்
கச்சி அனேகதங் காவதமே. 

7. கட்டு மயக்கம் அறுத்தவர் கைதொழு
தேத்து மிடங்கதி ரோன்ஒளியால்
விட்ட இடம்விடை யூர்தி யிடங்குயிற்
பேடைதன் சேவலோ டாடுமிடம்
மட்டு மயங்கி அவிழ்ந்த மலரொரு
மாதவி யோடு மணம்புணரும்
அட்ட புயங்கப் பிரான திடங்கலிக்
கச்சி அனேகதங் காவதமே. 
 
8. புல்லி இடந்தொழு துய்துமெ னாதவர்
தம்புர மூன்றும் பொடிப்படுத்த
வில்லி இடம்விர வாதுயிர் உண்ணும்வெங்
காலனைக் கால்கொடு வீந்தவியக்
கொல்லி இடங்குளிர் மாதவி மவ்வல்
குராவகு ளங்குருக் கத்திபுன்னை
அல்லி யிடைப்பெடை வண்டுறங் குங்கலிக்
கச்சி அனேகதங் காவதமே.  

9. சங்கை யவர்புணர் தற்கரி யான்றள
வேனகை யாள்தவி ராமிகுசீர்
மங்கை யவள்மகி ழச்சுடு காட்டிடை
நட்டம்நின் றாடிய சங்கரனெம்
அங்கையி னல்லனல் ஏந்து மவன்கனல்
சேரொளி யன்னதோர் பேரகலத்
தங்கை யவன்னுறை கின்ற இடங்கலிக்
கச்சி அனேகதங் காவதமே. 

10. வீடு பெறப்பல ஊழிகள் நின்று
நினைக்கும் இடம்வினை தீருமிடம்
பீடு பெறப்பெரி யோர திடங்கொண்டு
மேவினர் தங்களைக் காக்குமிடம்
பாடு மிடத்தடி யான்புகழ் ஊரன்
உரைத்தஇம் மாலைகள் பத்தும்வல்லார்
கூடு மிடஞ்சிவ லோகன் இடங்கலிக்
கச்சி அனேகதங் காவதமே.  

கச்சி அநேகதங்காபதம் அநேகதங்காபதேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்


அநேகதங்காபதேஸ்வரர் சந்நிதி


நந்தி மண்டபம், பினபுறம் பலிபீடம்


கருவறை சுற்றுச் சுவரில் கோஷ்ட மூர்த்தங்கள்


வடதிசையிலுள்ள சிறிய கோபுரம்


கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி