Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்


தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

சத்தியநாதசுவாமி கோவில், கச்சிநெறிக் காரைக்காடு

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்கச்சிநெறிக் காரைக்காடு
இறைவன் பெயர்சத்தியநாதசுவாமி, சத்தியவிரதேஸ்வரர், காரை திருநாதேஸ்வரர்
இறைவி பெயர்இத்தலத்திற்குரிய உற்சவ அம்பாளாக பிரம்மராம்பிகை
பதிகம்திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது காஞ்சிபுரம் நகரின் வடகிழக்குப் பகுதியில் திருக்காலிமேடு என்ற இடத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. காஞ்சீபுரம் ரயில்வே ரோடில் உள்ள தலைமை தபால் நிலையத்தின் எதிரே உள்ள சாலையில் சென்றால் இத்தலத்தை அடையலாம்.
ஆலய முகவரி அருள்மிகு சத்தியநாதேஸ்வரர் திருக்கோவில்
திருக்காலிமேடு
காஞ்சீபுரம்
காஞ்சீபுரம் மாவட்டம்
PIN - 631501

இவ்வாலயம் காலை 7 மணி முதல் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.

தலப் பெயர் காரணம்: இவ்வாலயம் இருக்கும் பகுதி முழுவதும் காரைச்செடி காடாக இருந்த காரணத்தால் காரைக்காடு என்று பெயர் பெற்றது. இக்காலத்தில் இப்பகுதி திருக்காலிமேடு என்ற் பெயருடனும், இவ்வாலயம் திருக்காலீஸ்வரர் கோயில் என்றும் வழங்குகின்றது. இந்திரன் வழிபட்ட காரணத்தால் இத்தலம் இந்திரபுரி என்றும் வழங்கப்பெறுகிறது.

கோவில் அமைப்பு: ஆலயம் மேற்கு நோக்கிய ஒரு முகப்பு வாயிலுடனும், அதையடுத்து 3 நிலை கோபுரத்துடனும் அமைந்திருக்கிறது. முகப்பு வாயில் வழியே கோபுரத்தை நோக்கிச் செல்லும் போது இடையில் நந்தி மண்டபம், கொடிமரம், பலிபீடம் ஆகியவற்றைக் காணலாம். கோபுர வாயிலைக் கடந்து உள்சென்று வெளிப் பிராகாரத்தை வலம் வரலாம். வெளிப் பிராகாரத்தில் குறிப்பிட்டுச் சொல்லும்படி சந்நிதிகள் ஏதுமில்லை. உள் வாயிலைக் கடந்து சென்றால் கருவறையைச் சுற்றியுள்ள முதல் பிராகாரம் உள்ளது. கோஷ்ட மூர்த்தங்களாக கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரமன், துர்க்கை ஆகியோர் உள்ளனர். கருவறைச் சுற்றில் நால்வர், இந்திரன், புதன், பைரவர், விநாயகர், வள்ளி தெய்வயானை சமேத ஆறுமுகர் சந்நிதிகள். அதையடுத்து கஜலட்சுமி ஆகிய மூலத் திருமேனிகள் உள்ளன.

துவார விநாயகர், துவார சுப்பிரமணியர் தரிசித்து உள்ளே சென்றால் மூலவரைத் தரிசிக்கலாம். காரை திருநாதேஸ்வரர் என்றும், சத்தியநாதசுவாமி என்றும் வழங்கப்படும் மூலவர் சுயம்புலிங்கத் திருமேனியாக மேற்கு நோக்கி காட்சியளிக்கிறார். மூலவர் செம்மண் நிறத்தில், கரகரப்பாக, சற்று உயர்ந்தும், பருத்தும் காணப்படுகிறார். அருகில் அம்பாள் உற்சவத் திருமேனி வைக்கப்பட்டுள்ளது. சூரியனின் மூலத் திருமேனியும் உள்ளேயே உள்ளது. நடராஜர் சபையும் இங்குள்ளது

இந்திரன் இங்குள்ள இறைவனை வழிபட உண்டாக்கிய தீர்த்தம் இந்திர தீர்த்தம். இது தற்போது வேப்பங்குளம் என வழங்கப் பெறுகிறது. இந்த தீர்த்தம் தற்போது நன்கு பராமரிக்கப்படாத நிலையிலுள்ளது. இத்தலத்திலுள்ள இறைவனை புதன் வழிபட்டு கிரகநிலை பெற்றதால் மிதுனம் மற்றும் கன்னி ராசியில் பிறந்தவர்கள், ஜாதகத்தில் புதன் வலுவிழந்து இருப்பவர்கள் இத்தலம் வந்து புதன்கிழமை இந்திர தீர்த்தம் என்கிற வேப்பங்குளத்தில் நீராடி காரைக்காட்டு ஈஸ்வரரை வணங்குதல் சிறப்புடையது. புதன் இத்தலத்தில் பிரகாரத்தில் சுவாமிக்கு வலதுபுறத்தில் தெற்கு பார்த்தபடி இருக்கிறார்.

இத்தலத்திற்கு திருஞானசம்பந்தர் பாடிய பதிகம் 3-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

வாரணவு முலைமங்கை பங்கினராய் அங்கையினிற்
போரணவு மழுவொன்றங் கேந்திவெண் பொடியணிவர்
காரணவு மணிமாடங் கடைநவின்ற கலிக்கச்சி
நீரணவு மலர்ப்பொய்கை நெறிக்காரைக் காட்டாரே.

காரூரும் மணிமிடற்றார் கரிகாடர் உடைதலைகொண்
டூரூரன் பலிக்குழல்வார் உழைமானின் உரியதளர்
தேரூரு நெடுவீதிச் செழுங்கச்சி மாநகர்வாய்
நீரூரும் மலர்ப்பொய்கை நெறிக்காரைக் காட்டாரே. 

கூறணிந்தார் கொடியிடையைக் குளிர்சடைமேல் இளமதியோ
டாறணிந்தார் ஆடரவம் பூண்டுகந்தார் ஆன்வெள்ளை
ஏறணிந்தார் கொடியதன்மேல் என்பணிந்தார் வரைமார்பில்
நீறணிந்தார் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே. 

பிறைநவின்ற செஞ்சடைகள் பின்தாழப் பூதங்கள்
மறைநவின்ற பாடலோ டாடலராய் மழுவேந்திச்
சிறைநவின்ற வண்டினங்கள் தீங்கனிவாய்த் தேன்கதுவும்
நிறைநவின்ற கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே. 

அன்றாலின் கீழிருந்தங் கறம்புரிந்த அருளாளர்
குன்றாத வெஞ்சிலையிற் கோளரவம் நாண்கொளுவி
ஒன்றாதார் புரம்மூன்றும் ஓங்கெரியில் வெந்தவிய
நின்றாருங் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே.

பன்மலர்கள் கொண்டடிக்கீழ் வானோர்கள் பணிந்திறைஞ்ச
நன்மையிலா வல்லவுணர் நகர்மூன்றும் ஒருநொடியில்
வின்மலையின் நாண்கொளுவி வெங்கணையா லெய்தழித்த
நின்மலனார் கலிக்கச்சி நெறிக்காறைக் காட்டாரே.

புற்றிடைவாள் அரவினொடு புனைகொன்றை மதமத்தம்
எற்றொழியா அலைபுனலோ டிளமதியம் ஏந்துசடைப்
பெற்றுடையார் ஒருபாகம் பெண்ணுடையார் கண்ணமரும்
நெற்றியினார் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே. 

ஏழ்கடல்சூழ் தென்னிலங்கைக் கோமானை யெழில்வரைவாய்த்
தாழ்விரலால் ஊன்றியதோர் தன்மையினார் நன்மையினார்
ஆழ்கிடங்குஞ் சூழ்வயலு மதில்புல்கி யழகமரும்
நீள்மறுகிற் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே. 

ஊண்டானும் ஒலிகடல்நஞ் சுடைதலையிற் பலிகொள்வர்
மாண்டார்தம் எலும்பணிவர் வரியரவோ டெழிலாமை
பூண்டாரும் ஓரிருவர் அறியாமைப் பொங்கெரியாய்
நீண்டாருங் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே. 

குண்டாடிச் சமண்படுவார் கூறைதனை மெய்போர்த்து
மிண்டாடித் திரிதருவார் உரைப்பனகள் மெய்யல்ல
வண்டாருங் குழலாளை வரையாகத் தொருபாகங்
கண்டாருங் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே. 

கண்ணாருங் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டுறையும்
பெண்ணாருந் திருமேனிப் பெருமான தடிவாழ்த்தித்
தண்ணாரும் பொழிற்காழித் தமிழ்ஞான சம்பந்தன்
பண்ணாருந் தமிழ்வல்லார் பரலோகத் திருப்பாரே. 

கச்சிநெறிக் காரைக்காடு சத்தியநாதேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்


ஆலயத்தின் முகப்பு வாயில்


வெளிப் பிராகாரத்தில் பலிபீடம், கொடிமரம், நந்தி


ஆலயத்தின் வெளிப்புறத் தோற்றம்


கோபுர வாயிலிலிருந்து ஒரு தோற்றம்