Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்


தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

வாலீஸ்வரர் கோவில், திருகுரங்கனில் முட்டம்

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருகுரங்கனில் முட்டம்
இறைவன் பெயர்வாலீஸ்வரர், கொய்யாமலைநாதர்
இறைவி பெயர்இறையார் வளையம்மை
பதிகம்திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் காஞ்சீபுரத்திலிருந்து சுமார் 11 கி.மி. தொலைவில் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது. காஞ்சீபுரத்திலிருந்து பயணம் செய்யும் போது பாலாற்றைக் கடந்தால் சுமார் 9 கி.மி. தொலைவில் தூசி என்ற கிராமம் வரும். அங்கிருந்து பிரியும் குரங்கணில்முட்டம் பாதையில் 2 கி.மி. சென்றால் கிராமத்தின் எல்லையில் பாலாற்றின் கரைக்கு அருகில் ஆலயம் அமைந்துள்ளது. அர்ச்சகர் வீடு அருகிலேயே இருப்பதால், எந்த நேரத்திலும் எளிதாக சுவாமி தரிசனம் செய்யலாம். முன்னரே அர்ச்சகரிடம் போனில் தொடர்பு கொண்டுவிட்டுச் செல்வது நல்லது.
ஆலய முகவரி அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோவில்
குரங்கனில் முட்டம் கிராமம்
தூசி அஞ்சல்
செய்யாறு வட்டம்
திருவண்ணாமலை மாவட்டம்
PIN - 631703

இவ்வாலயம் காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.

ஆலய தொடர்புக்கு: ஸ்ரீதர் குருக்கள், கைபேசி:9629050143, 9600787419

வாலி குரங்கு உருவிலும், இந்திரன் அணில் உருவிலும், எமன் காகம் (முட்டம்) உருவிலும் இத்தலத்தில் இறைவனை தனித்தனியே வழிபட்டு தங்களது சாபம் நிவர்த்தியடையப் பெற்றதால் இத்தலம் குரங்கனில்முட்டம் என்ற பெயரைப் பெற்றது. இறைவனை வழிபடும் நிலையில் இம்மூன்றின் உருவங்களும் புடைப்புச் சிறபமாக ஆலயவாயிலில் அமைக்கப் பெற்றிருக்கின்றன. வாலி முதலிலும், பிறகு இந்திரனும், பினபு எமனும் இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளனர். இறைவன் சிறிய லிங்க உருவில் மேற்குப் பார்த்த சந்நிதியில் அருட்காட்சி தருகிறார். கருவறையும் மிகச் சிறியதாக உள்ளது. அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி அமைந்திருக்கிறது. இத்தலத்தின் தல விருட்சம் இலந்தை மரம். தீர்த்தம் காக்கை தீர்த்தம் (காக்கை மடு). இது எமன் சிவபூஜை செய்வதற்காக காக்கை உருவில் இருந்தபோது தன் அலகினால் பூமியைக் குத்தி உண்டாக்கிய மடு என்பது ஐதீகம்.

கோவில் அமைப்பு: மதிற்சுவருடன் கூடிய ஒரு முகப்பு வாயிலுடன் ஆலயம் அமைந்திருக்கிறது. வாயிலைக் கடந்தவுடன் பலிபீடமும், நந்தி மண்டபமும் இருக்கக் காணலாம். வெளிப் பிராகாரத்தில் சந்நிதிகள் ஏதுமில்லை. உள்வாயிலைக் கடந்து சென்றால் நேரே மூலவர் வாலீஸ்வரர் சந்நிதி உள்ளது. இறைவன் சுயம்புலிங்கமாக மேற்கு நோக்கி காட்சியளிக்கிறார். உள்பிராகாரத்தில் விநாயகர்,சுப்பிரமணியர், காசிவிஸ்வநாதர், பைரவர், சூரியன், நவக்கிரகம், துர்க்கை, சப்தமாதர்கள், நால்வர் ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. சித்திரை மாதத்தில் குறிப்பிட்ட சில நாட்களில் சுவாமி மீது சூரிய ஒளி விழுகிறது என்பது இத்தலத்தின் மற்றொரு சிறப்பம்சம்.

இக்கோவிலுக்கு வடக்கே சுமார் அரை கி.மி. தொலைவில் பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்திய குடைவரைக் கோவில் ஒன்றுள்ளது.

திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

1. விழுநீர்மழு வாள்படை அண்ணல் விளங்குங்
கழுநீர்குவ ளைம்மல ரக்கயல் பாயுங்
கொழுநீர்வயல் சூழ்ந்த குரங்கணின் முட்டந்
தொழுநீர்மையர் தீதுறு துன்ப மிலரே. 

2. விடைசேர்கொடி அண்ணல் விளங்குயர் மாடக்
கடைசேர்கரு மென்குளத் தோங்கிய காட்டில்
குடையார்புனல் மல்கு குரங்கணின் முட்டம்
உடையானெனை யாளுடை யெந்தை பிரானே. 

3. சூலப்படை யான்விடை யான்சுடு நீற்றான்
காலன்றனை ஆருயிர் வவ்விய காலன்
கோலப்பொழில் சூழ்ந்த குரங்கணின் முட்டத்
தேலங்கமழ் புன்சடை யெந்தை பிரானே. 

4. வாடாவிரி கொன்றை வலத்தொரு காதில்
தோடார்குழை யான்நல பாலன நோக்கிக்
கூடாதன செய்த குரங்கணின் முட்டம்
ஆடாவரு வாரவ ரன்புடை யாரே.  

5. இறையார்வளை யாளையொர் பாகத் தடக்கிக்
கறையார்மிடற் றான்கரி கீறிய கையான்
குறையார்மதி சூடி குரங்கணின் முட்டத்
துறைவானெமை யாளுடை யொண்சுட ரானே. 

6. பலவும்பய னுள்ளன பற்றும் ஒழிந்தோங்
கலவம்மயில் காமுறு பேடையொ டாடிக்
குலவும்பொழில் சூழ்ந்த குரங்கணின் முட்டம்
நிலவும்பெரு மானடி நித்தல் நினைந்தே. 

7. மாடார்மலர்க் கொன்றை வளர்சடை வைத்துத்
தோடார்குழை தானொரு காதில் இலங்கக்
கூடார்மதி லெய்து குரங்கணின் முட்டத்
தாடாரர வம்மரை யார்த்தமர் வானே. 

8. மையார்நிற மேனி யரக்கர்தங் கோனை
உய்யாவகை யாலடர்த் தின்னருள் செய்த
கொய்யாமலர் சூடி குரங்கணின் முட்டங்
கையால்தொழு வார்வினை காண்ட லரிதே. 

9. வெறியார்மலர்த் தாமரை யானொடு மாலும்
அறியாதசைந் தேத்தவோர் ஆரழ லாகுங்
குறியால்நிமிர்ந் தான்றன் குரங்கணின் முட்டம்
நெறியால்தொழு வார்வினை நிற்ககி லாவே. 

10. கழுவார்துவ ராடை கலந்துமெய் போர்க்கும்
வழுவாச்சமண் சாக்கியர் வாக்கவை கொள்ளேல்
குழுமின்சடை யண்ணல் குரங்கணின் முட்டத்
தெழில்வெண்பிறை யானடி சேர்வ தியல்பே.

11. கல்லார்மதிற் காழியுள் ஞானசம் பந்தன்
கொல்லார்மழு வேந்தி குரங்கணில் முட்டஞ்
சொல்லார்தமிழ் மாலை செவிக்கினி தாக
வல்லார்க்கெளி தாம்பிற வாவகை வீடே. 
குரங்கனில் முட்டம் வாலீஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்

ஆலயத்தின் முகப்பு வாயில்

வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர்

நால்வர்

விநாயகர்

சப்த மாதர்கள்

கோவில் உள்ளிருந்து முகப்பு வாயில் தோற்றம்

பலிபீடம், நந்தி மண்டபம், 2வது நுழைவாயில்

காக்கை மடு தீர்த்தம்