Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்


தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

மாகறலீஸ்வரர் கோவில், திருமாகறல்

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருமாகறல்
இறைவன் பெயர்மாகறலீஸ்வரர், அடைக்கலங்காத்த நாதர், உடும்பீசர்
இறைவி பெயர்திரிபுவனநாயகி
பதிகம்திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது காஞ்சிபுரத்தில் இருந்து ஓரிக்கை வழியாக உத்திரமேரூர் செல்லும் பாதையில் 16 கி.மி. தொலைவில் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது. காஞ்சிபுரத்தில் இருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன. சாலை ஓரத்திலேயே கோயில் உள்ளது.
ஆலய முகவரி அருள்மிகு மாகறலீஸ்வரர் திருக்கோவில்
மாகறல் கிராமம் அஞ்சல்
உத்திரமேரூர் வட்டம்
வழி காஞ்சீபுரம்
காஞ்சீபுரம் மாவட்டம்
PIN - 631603

இவ்வாலயம் காலை 7-30 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.
Tirumaagaral route map

காஞ்சீபுரத்தில் இருந்து திருமாகறல் செல்லும் வழி வரைபடம்
Map courtesy by: Google Maps

செய்யாற்றின் வடகரையில் கிழக்கு நோக்கிய 5 நிலை இராஜகோபுரத்துடனும், இரண்டு பிராகரங்களுடனும் இவ்வாலயம் விளங்குகிறது. மூலவர் மாகறலீஸ்வரர் சுயம்புலிங்க வடிவில் கிழக்கு நோக்கியும், அம்மன் திருபுவனநாயகி தெற்கு நோக்கியும் எழுந்தருளியுள்ளனர். வடக்குப் பிராகாரத்தில் தலமரம் எலுமிச்சை உள்ளது. பிராகாரத்தில் பொய்யாவிநாயகர், ஆறுமுகர், 63 நாயன்மார்கள், நால்வர், நவக்கிரகங்கள் ஆகிய சந்நிதிகள் உள்ளன. கருவறை கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், சிறிய தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, துர்க்கை முதலிய திருமேனிகள் உள்ளன. விசாலமான வெளிப்பிரகாரம் வலமாக வந்து படிக்கட்டுகளையேறி, விநாயகரையும், மறுபுறம் சுப்பிரமணியரையும் வணங்கியவாறே, துவாரபாலகர்களைக் கடந்து உட்புகுந்தால் நேரே மூலவர் காட்சி தருகிறார். இறைவன் மாகறலீஸ்வரர் எங்கும் காண இயலாத உருவில் உடும்பின் வால் போன்று விளங்கக் காணலாம். இராஜேந்திர சோழ மன்னருக்கு பென்னுடும்பின் வால் வடிவில் இவ்வாலயத்தின் இறைவன் காட்சியளித்துள்ளார்.

இத்தலத்தில் முருகப்பெருமான் மயில்மீது ஆறு திருமுகங்களுடன் இருதேவியர் உடனிருக்க வடக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். இவ்வாலயத்தின் தீர்த்தங்களாக அக்னி தீர்த்தமும், செய்யாறும் உள்ளன. அக்னி தீர்த்தத்தில் நீராடி அகத்தீசுவரரை வணங்கினால் எமலோக பயம் நீங்கி சிவலோகத்தில் எப்பொழுதும் வாழலாம் என்று தலபுராணம் விவரிக்கிறது. மற்றொரு தீர்த்தமான சேயாறு இத்தலத்திற்குத் தெற்கில் ஓடுகிறது. இத்தலத்தில் சோமவார தரிசனம் விசேடமாகும். பிள்ளைப்பேறு இல்லாதவர் இக்கோயிலை உடலால் வலம் வந்தால் பிள்ளைப்பேற்றை அடைவர் என்பர். இத்தலத்தைத் தேவேந்திரன் வழிபட்டுப் பேறு பெற்றான்.

தல புராண வரலாறு: மும்மூர்த்திகளில் தானே சிறந்தவன் என்று செருக்குற்று இருந்த பிரம்மாவை சிவபெருமான் சபித்தார். தனது சாபம் நீங்க பிரம்மா இத்தலம் வந்து ஒரு லிங்கம் பிரதிஷடை செய்து இறைவனை வழிபட்டு பேறு பெற்றார். அதன்பின் சத்தியலோகம் திரும்பிச் செல்லுமுன் இத்தல எல்லையில் தினம் ஒரு பழம் தரும் அதிசய பலாமரத்தை உண்டாக்கிச் சென்றார். இம்மரத்தின் சுவைமிக்க பலாப்பழத்தைப் பற்றி கேள்விப்பட்ட இராஜேந்திர சோழ மன்னன், இப்பழத்தை தினந்தோறும் சிதம்பரம் நடராஜருக்கு நிவேதனம் செய்து, அதன்பின் தனக்கு கொண்டுவந்து கொடுக்க வேண்டும் ஊர் மக்களுக்குத் தெரிவித்தான். ஊர் மக்களும் அவ்வாறே செய்து வந்தனர். ஆனாலும் ஊர் மக்கள் தினந்தோறும் சிதம்பரம் சென்று அதன்பின சோழ மன்னனின் தலைநகர் சென்று அரசனுக்கு பழத்தை அளித்துவிட்டு திரும்ப சிரமப்படுவதைக் கண்ட ஒரு அந்தணன் மகன் பலாமரத்தை வெட்டிவிட்டான். பழம் வருவது நின்று போனதைக் கண்ட மன்னன் அதைப் பற்றி விசாரித்து மரம் வெட்டப்பட்டதை அறிந்தான். பலாமரத்தை வெட்டியவனை நாடு கடத்தும் படி உத்தரவிட்டான். இரவு முழுவதும் பயணம் செய்து எவ்வளவு தொலைவில் விடமுடியுமோ அவ்வளவு தூரம் சென்று விட்டுவிடும் படி காவலருக்குச் சொல்லி அரசன் தானும் கூடச் சென்று தண்டனை நிறைவேற்றப்பட்டதை உறுதி செய்துகொண்டு திரும்பினான்.

மன்னன் ஊர் திரும்பும்போது இத்தல எல்லையில் புதர் மண்டிய ஓரிடத்தில் பென்னிற உடும்பு ஒன்று அரசனின் கண்களுக்குத் தென்பட்டது. அதனைப் பிடிக்க முயலும் போது அவ்வுடும்பு ஓர் புற்றினுள் சென்று மறைந்தது. மன்னன் ஆட்கள் சிலரை அழைத்து புற்றைச் சோதித்துப் பார்க்க உத்தரவிட்டான். ஆட்கள் ஆயதங்களால் புற்றை அகழ்ந்த போது உடும்பின் வாலில் ஆயுதம் பட்டு இரத்தம் பீறிட்டுவர அதைக் கண்ட மன்னன் மயங்கிக் கீழே விழுந்தான். மயக்கம் தெளிந்து எழுந்த அரசனுக்கு தான் அவ்விடம் இருப்பதை உணர்த்தி அங்கு சிவாலயம் எடுக்குமாறு அசரீரியாக கட்டளையிட்டு அரசனுக்கு அருளினார். இராஜேந்திர சோழ மன்னனும் அவ்வாறே இறைவன் பணித்தபடி திருமாகறல் தலத்தில் இறைவனுக்கு பெரிய சிவாலயம் ஒன்றைக் கட்டி நாள்தோறும் வழிபாடுகள் செய்வித்து இறையருள் பெற்றான்.

இத்தலத்திற்கான சம்பந்தர் பதிகம் முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. இப்பதிகம் வினை தீர்க்கும் பதிகம் என்று போற்றப்படுகிறது. திருமாகறல் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் அப்பெருமானைப் போற்றி அருளிய இப்பதிகத்தை உணர்ந்து ஓதவல்லவர்களின் தொல்வினைகள் நீங்கும் என்று சம்பந்தர் தனது பதிகத்தில் குறிப்பிடுகிறார்.

விங்குவிளை கழனிமிகு கடைசியர்கள் பாடல்விளை யாடலரவம்
மங்குலொடு நீள்கொடிகண் மாடமலி நீடுபொழின் மாகறலுளான்
கொங்குவிரி கொன்றையொடு கங்கைவளர் திங்களணி செஞ்சடையினான்
செங்கண்விடை யண்ணலடி சேர்பவர்கள் தீவினைகள் தீருமுடனே.

கலையினொலி மங்கையர்கள் பாடலொலி யாடல்கவி னெய்தியழகார்
மலையினிகர் மாடமுயர் நீள்கொடிகள் வீசுமலி மாகறலுளான்
இலையின்மலி வேல்நுனைய சூலம்வல னேந்தியெரி புன்சடையினுள்
அலைகொள்புன லேந்துபெரு மானடியை யேத்தவினை யகலுமிகவே.

காலையொடு துந்துபிகள் சங்குகுழல் யாழ்முழவு காமருவுசீர்
மாலைவழி பாடுசெய்து மாதவர்க ளேத்திமகிழ் மாகறலுளான்
தோலையுடை பேணியதன் மேலொர்சுடர் நாகமசை யாவழகிதாப்
பாலையன நீறுபுனை வானடியை யேத்தவினை பறையுமுடனே.

இங்குகதிர் முத்தினொடு பொன்மணிக ளுந்தியெழின் மெய்யுளுடனே
மங்கையரு மைந்தர்களு மன்னுபுன லாடிமகிழ் மாகறலுளான்
கொங்குவளர் கொன்றைகுளிர் திங்களணி செஞ்சடையி னானடியையே
நுங்கள்வினை தீரமிக வேத்திவழி பாடுநுகரா வெழுமினே.

துஞ்சுநறு நீலமிரு ணீங்கவொளி தோன்றுமது வார்கழனிவாய்
மஞ்சுமலி பூம்பொழிலின் மயில்கணட மாடமலி மாகறலுளான்
வஞ்சமத யானையுரி போர்த்துமகிழ் வானொர்மழு வாளன் வளரும்
நஞ்சமிருள் கண்டமுடை நாதனடி யாரைநலி யாவினைகளே.

மன்னுமறை யோர்களொடு பல்படிம மாதவர்கள் கூடியுடனாய்
இன்னவகை யாலினிதி றைஞ்சியிமை யோரிலெழு மாகறலுளான்
மின்னைவிரி புன்சடையின் மேன்மலர்கள் கங்கையொடு திங்களெனவே
உன்னுமவர் தொல்வினைக ளொல்கவுயர் வானுலக மேறலெளிதே.

வெய்யவினை நெறிகள்செல வந்தணையு மேல்வினைகள் வீட்டலுறுவீர்
மைகொள்விரி கானன்மது வார்கழனி மாகறலு ளானெழிலதார்
கையகரி கால்வரையின் மேலதுரி தோலுடைய மேனியழகார்
ஐயனடி சேர்பவரை யஞ்சியடை யாவினைக ளகலுமிகவே.

தூசுதுகி னீள்கொடிகண் மேகமொடு தோய்வனபொன் மாடமிசையே
மாசுபடு செய்கைமிக மாதவர்க ளோதிமலி மாகறலுளான்
பாசுபத விச்சைவரி நச்சரவு கச்சையுடை பேணியழகார்
பூசுபொடி யீசனென வேத்தவினை நிற்றலில போகுமுடனே.

தூயவிரி தாமரைக ணெய்தல்கழு நீர்குவளை தோன்றமதுவுண்
பாயவரி வண்டுபல பண்முரலு மோசைபயின் மாகறலுளான்
சாயவிர லூன்றியவி ராவணன தன்மைகெட நின்றபெருமான்
ஆயபுக ழேத்துமடி யார்கள்வினை யாயினவு மகல்வதெளிதே.

காலினல பைங்கழல்க ணீண்முடியின் மேலுணர்வு காமுறவினார்
மாலுமல ரானுமறி யாமையெரி யாகியுயர் மாகறலுளான்
நாலுமெரி தோலுமுரி மாமணிய நாகமொடு கூடியுடனாய்
ஆலும்விடை யூர்தியுடை யடிகளடி யாரையடை யாவினைகளே.

கடைகொணெடு மாடமிக வோங்குகமழ் வீதிமலி காழியவர்கோன்
அடையும்வகை யாற்பரவி யரனையடி கூடுசம் பந்தனுரையால்
மடைகொள்புன லோடுவயல் கூடுபொழின் மாகறலுளா னடியையே
உடையதமிழ் பத்துமுணர் வாரவர்கள் தொல்வினைக ளொல்குமுடனே.

திருமாகறல் மாகறலீஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்


ஆலயத்தின்5 நிலை இராஜகோபுரம்


கோபுர வாயில் கடந்து கொடிமரம், பலிபீடம்


நந்தி மண்டபம்


மூலவர் கருவறை விமானம்


வள்ளி தெய்வானை சமேத முருகர்


நவக்கிரக சந்நிதி


விமானத்தில் மகாவிஷ்ணு அனந்தசயனக் காட்சி


பைரவர்


விநாயகர்