Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்

பனங்காட்டு ஈஸ்வரர் கோவில், திருவன்பார்த்தான் பனங்காட்டுர்

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருவன்பார்த்தான் பனங்காட்டுர் ( தற்போது திருப்பனங்காடு என்று வழங்குகிறது )
இறைவன் பெயர்பனங்காட்டு ஈஸ்வரர், தாளபுரீஸ்வரர், கிருபாநாதேஸ்வரர்
இறைவி பெயர்அமிர்தவல்லி, கிருபாநாயகி
பதிகம்சுந்தரர் - 1
எப்படிப் போவது காஞ்சிபுரத்தில் இருந்து கலவை செல்லும் பாதையில் ஐயங்கார்குளம் என்ற ஊர் வரும். அதைத் தாண்டி சிறிது தூரம் சென்றவுடன் திருப்பனங்காடு கூட்டு சாலை வரும். அங்கிருந்து சுமார் 2 கி.மி. தொலைவில் இத்தலம் உள்ளது. காஞ்சிபுரத்தில் இருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன.
ஆலய முகவரி அருள்மிகு
தாளபுரீஸ்வரர் திருக்கோவில்
திருப்பனங்காடு அஞ்சல்
வழி வெம்பாக்கம்
செய்யாறு வட்டம்
திருவண்ணாமலை மாவட்டம்
PIN - 604410

கோவில் அமைப்பு: கிழக்கு நோக்கி உள்ள இக்கோவிலுக்கு ராஜகோபுரம் இல்லை. முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. முகப்பு வாயில் வழியாக உள்ளே சென்றவுடன் வெளிப் பிரகாரமும் நேரே பலிபீடம், கொடிமரம், நந்தி மற்றும் அதைத் தொடர்ந்து 3 நிலை கோபுரத்துடன் உள்ள இரண்டாவது நுழைவு வாயில். இதன் வழியாக உள்ளே சென்றவுடன் நாம் எதிரில் காண்பது கிருபாநாதேஸ்வரர் சந்நிதி. வெளிப் பிரகாரத்தில் உள்ள பலிபீடம், கொடிமரம், நந்தி ஆகியவற்றின் இடதுபுறம் மற்றுமொரு பலிபீடம், கொடிமரம், நந்தி உள்ளது. இந்த இரண்டாவது கொடிமரத்தின் எதிரே ஆலயத்தின் உள் மதிலில் ஒரு சாளரம் உள்ளது. உள் பிரகாரத்தில் கிருபாநாதேஸ்வரர் சந்நிதிக்கு இடதுபுறம் தாளபுரீஸ்வரர் சந்நிதி உள்ளது. இந்த சந்நிதிக்கு எதிரில் தான் உள் மதிலில் நாம் பார்த்த சாளரம் இருக்கிறது. இரண்டு மூலவர் சந்நிதிகளும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன. இரண்டு மூலவர்கள் இவ்வாலயத்தில் இருப்பதைப் போலவே இரண்டு அம்பாள் சந்நிதிகளும் இருக்கின்றன.

கயிலை மலையில் சிவன் பார்வதி கல்யாணம் நடைபெறும் சமயம் தேவர்கள் எல்லோரும் அங்கு கூடியதால் பாரம் அதிகரித்து வடபுலம் தாழ்ந்து தென்புலம் உயர்ந்தது. அதனை சமன் செய்ய அகத்திய முனிவரை தென் திசை நோக்கிச் செல்லும் படி சிவபெருமான் பணித்தார். அதன்படி தென்திசை வந்த அகத்தியர் இத்தலத்தில் ஒரு சிவலிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டார். அகத்தியர் ஸ்தாபித்து வழிபட்ட ஈசன் தாளபுரீஸ்வரர் என்ற பெயரில் இஙகு பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். அகத்திய முனிவரின் சீடரான புலத்தியர் இத்தலம் வந்தபோது தாளபுரீஸ்வரருக்கு அருகில் மற்றொரு சிவலிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டார். இந்த மூலவர் கிருபாநாதேஸ்வரர் என்று போற்றப்படுகிறார். அதே போல் இரண்டு அம்பிகைள் அமிர்தவல்லி, கிருபாநாயகி என்ற பெயர்களுடன் தனித்தனி சந்நிதிகளில் வீற்றிருக்கின்றனர். அகத்தியர் ஸ்தாபித்து வழிபட்ட தாளபுரீஸ்வரரை முதலில் வணங்கி பிறகு தான் புலத்தியர் ஸ்தாபித்து வழிபட்ட கிருபாநாதேஸ்வரரை வணங்க வேண்டும். அதுவே இக்கோவிலில் முறை.

அகத்தியர் தான் ஸ்தாபித்த ஈசன் தாளபுரீஸ்வரருக்கு பனம்பழம் படைத்து வழிபட்டதால் பனைமரமே தலமரமாக விளங்குகிறது. இதனாலேயே இறைவன் பனங்காட்டீசர் என்றும் அழைக்கப்படுகிறார்.

சுந்தரர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் 7-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது

    விடையின்மேல் வருவானை வேதத்தின் பொருளானை
    அடையில்அன் புடையானை யாவர்க்கும் அறியொண்ணா
    மடையில்வா ளைகள்பாயும் வன்பார்த்தான் பனங்காட்டூர்ச்
    சடையிற்கங்கை தரித்தானைச் சாராதார் சார்பென்னே.	

    அறையும்பைங் கழலார்ப்ப அரவாட அனலேந்திப்
    பிறையுங்கங் கையுஞ்சூடிப் பெயர்ந்தாடும் பெருமானார்
    பறையுஞ்சங் கொலிஓவாப் படிறன்றன் பனங்காட்டூர்
    உறையுமெங்கள் பிரானாரை உணராதார் உணர்வென்னே. 	

    தண்ணார்மா மதிசூடித் தழல்போலுந் திருமேனிக்
    கெண்ணார்நாண் மலர்கொண்டங் கிசைந்தேத்தும் அடியார்கள்
    பண்ணார்பா டல்அறாத படிறன்றன் பனங்காட்டூர்ப்
    பெண்ணாணா யபிரானைப் பேசாதார் பேச்சென்னே.	

    நெற்றிக்கண் ணுடையானை நீறேறுந் திருமேனிக்
    குற்றமில் குணத்தானைக் கோணாதார் மனத்தானைப்
    பற்றிப்பாம் பரையார்த்த படிறன்றன் பனங்காட்டூர்ப்
    பெற்றொன்றே றும்பிரானைப் பேசாதார் பேச்சென்னே.	

    உரமென்னும் பொருளானை உருகிலுள் ளுறைவானைச்
    சிரமென்னுங் கலனானைச் செங்கண்மால் விடையானை
    வரம்முன்ன மருள்செய்வான் வன்பார்த்தான் பனங்காட்டூர்ப்
    பரமன்எங் கள்பிரானைப் பரவாதார் பரவென்னே. 	

    எயிலார்பொக் கம்எரித்த எண்டோ ள்முக் கண்இறைவன்
    வெயிலாய்க்காற் றெனவீசி மின்னாய்த்தீ எனநின்றான்
    மயிலார்சோ லைகள்சூழ்ந்த வன்பார்த்தான் பனங்காட்டூர்ப்
    பயில்வானுக் கடிமைக்கட் பயிலாதார் பயில்வென்னே. 	

    மெய்யன்வெண் பொடிபூசும் விகிர்தன்வே தமுதல்வன்
    கையில்மான் மழுவேந்திக் காலன்கா லம்அறுத்தான்
    பைகொள்பாம் பரையார்த்த படிறன்றன் பனங்காட்டூர்
    ஐயன்எங் கள்பிரானை அறியாதார் அறிவென்னே.	

    வஞ்சமற்ற மனத்தாரை மறவாத பிறப்பிலியைப்
    பஞ்சிச்சீ றடியாளைப் பாகம்வைத் துகந்தானை
    மஞ்சுற்ற மணிமாட வன்பார்த்தான் பனங்காட்டூர்
    நெஞ்சத்தெங் கள்பிரானை நினையாதார் நினைவென்னே.	

    மழையானுந் திகழ்கின்ற மலரோனென் றிருவர்தாம்
    உழையாநின் றவருள்க உயர்வானத் துயர்வானைப்
    பழையானைப் பனங்காட்டூர் பதியாகத் திகழ்கின்ற
    குழைகாதற் கடிமைக்கட் குழையாதார் குழைவென்னே. 	

    பாரூரும் பனங்காட்டூர்ப் பவளத்தின் படியானைச்
    சீரூருந் திருவாரூர்ச் சிவன்பேர்சென் னியில்வைத்த
    ஆரூரன் அடித்தொண்டன் அடியன்சொல் அடிநாய்சொல்
    ஊரூரன் உரைசெய்வார் உயர்வானத் துயர்வாரே.