Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்


தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

தெய்வநாதேஸ்வரர் கோவில், இலம்பையங்கோட்டூர்

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்இலம்பையங்கோட்டூர் (தற்போது எலுமியன்கோட்டூர் என்று வழங்குகிறது)
இறைவன் பெயர்தெய்வநாதேஸ்வரர், சந்திரசேகரர், அரம்பேஸ்வரர்
இறைவி பெயர்கனக குசாம்பிகை, கோடேந்து முலையம்மை
பதிகம்திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கூவம் (திருவிற்கோலம்) சிவஸ்தலத்திலிருந்து தென்மேற்கே 4 கி மி. தொலைவில் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது. அருகில் உள்ள பெரிய ஊர் திருவள்ளூர். திருவள்ளூரிலிருந்து பேரம்பாக்கம் சென்று அங்கிருந்து ஆட்டோ மூலம் இலம்பையங்கோட்டூர் செல்லலாம். சென்னை - அரக்கோணம் மின்சார ரயில் மார்க்கத்திலுள்ள கடம்பத்தூரில் இறங்கி அங்கிருந்து பேரம்பாக்கம் சென்று பின் ஆட்டோ மூலம் இலம்பையங்கோட்டூர் செல்லலாம்.
ஆலய முகவரி அருள்மிகு தெய்வநாதேஸ்வரர் திருக்கோவில்
எலுமியன்கோட்டூர்
கப்பாங்காட்டூர் அஞ்சல்
வழி எடையார்பாக்கம்
ஸ்ரீபெரும்புதூர் வட்டம்
காஞ்சீபுரம் மாவட்டம்
PIN - 631553

இவ்வாலயம் காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தரிசனத்திற்காக திறந்திருக்கும். ஆலய குருக்கள் வீடு அருகிலேயே இருப்பதால் எந்நேரமும் தரிசனம் செய்யலாம்.
Dakshinamurthy

யோக தட்சிணாமூர்த்தி

தல வரலாறு: திரிபுர சம்ஹாரத்தின் போது இறைவன் தேரேறி புறப்பட்டுச் சென்றார். அவருடன் சென்ற தேவர்கள் விநாயகரை வழிபடாமல் சென்றதால் அவர் தேரின் அச்சை முறித்தார். தேர் நிலைகுலைந்து சாய்ந்தது. தேர் கீழே விழாமல் மகாவிஷ்ணு அதைத் தாங்கிப் பிடித்தார். அப்போது சிவபெருமான் கழுத்தில் அணிந்திருந்த கொன்றை மாலை கீழே விழுந்தது. மாலை விழுந்த இடத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளினார்.அந்த இடம் தான் இத்தலம் என்று தல புராணம் கூறுகிறது. தேவர்கள் படைக்கு தலைமை ஏற்று திரிபுர சம்ஹாரம் செய்ததாலும், அவர்களால் வழிபடப் பெற்றதாலும் இத்தல இறைவன் தெய்வநாதேஸ்வரர் என்று கெயர் பெற்றார். மேலும் தேவலோக மங்கையான அரம்பை இத்தல இறைவனை பூஜித்து தனக்கு என்றும் மாறாத இளமை வேண்டுமென்று பிரார்த்தித்தாள். அரம்பை வழிபட்டதால் இறைவனுக்கு அரம்பேஸ்வரர் என்ற பெயரும் உண்டாயிற்று. இரம்பை வழிபட்ட இத்தலம் இரம்பைக்கோட்டூர் ஆயிற்று. பிறகு நாளடைவில் மருவி இலம்பயங்கோட்டூர் என்று மாறி தற்போது எலுமியன்கோட்டூர் என்று வழங்குகிறது.

ஞானசம்பந்தரை வரவழைத்தது: ஞானசம்பந்தர் மற்ற தொண்டை நாட்டுத் தலங்களை தரிசித்துக் கொண்டு இத்தலம் வழியே வந்து கொண்டிருந்தார். அப்போது ஒரு சிறு பிள்ளையாகவும், பின் ஒரு முதியவர் போன்றும் தோன்றி வழிமறித்து இக்கோவில் இருப்பதை உணர்த்த கூட வந்த அடியார்கள் அதை தெரிந்து கொள்ளவில்லை. பினபு இறைவன் ஒரு வெள்ளைப் பசு உருவில் வந்து சம்பந்தர் எறி வந்த சிவிகையை முட்டியது. சீர்காழிப் பிள்ளையான சம்பந்தர் வியந்து அப்பசு காட்டிய குறிப்பின் படி அதைத் தொடர்ந்து செல்ல இத்தலத்தின் அருகே வந்தவுடன் பசு மறைந்து விட்டது. அப்போது தான் இறைவனே பசு உருவில் நேரில் வந்து இத்தலத்தைப் பற்றி உணர்த்தியதை சம்பந்தர் அறிந்தார். பின் இத்தலம் வந்த சம்பந்தரை இறைவனைப் பதிகம் பாடி வழிபட்டார். தனது பதிகத்தின் 3-வது பாட்டில் இந்த நிகழ்ச்சியைப் பற்றி குறிப்பிடுகிறார்.பாலனாம் விருத்தனாம் பசுபதிதானாம்
பண்டுவெங்கூற்றுதைத்து  அடியவர்க்கருளும்
காலனாம் எனதுரை தனதுரையாகக்
கனல் எரி அங்கையில் ஏந்திய கடவுள்
நீலமா மலர்ச்சுனைவண்டு பண்செய்ய
நீர்மலர்க் குவளைகள் தாதுவிண்டோங்கும்
ஏல நாறும் பொழில் இலம்பையங் கோட்டூர்
இருக்கையாப் பேணி என்எழில் கொள்வதியல்பே.

இத்தலத்துப் பதிகத்தில் ஞானசம்பந்தர் "எனதுரை தனதுரையாக"
என்ற தொடரை, பாடல் தொறும் அமைத்துப் பாடியுள்ளார்.

கோவில் அமைப்பு: இந்த ஆலயத்திற்கு இராஜகோபுரம் இல்லை. கிழக்கில் ஒரு முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் பலிபீடமும், அதிகார நந்தி மண்டபம் உள்ளன. இத்தலத்தில் கொடிமரம் இல்லை. வெளிப் பிரகாத்தில் இடதுபுறம் அரம்பை வழிபட்ட அரம்பேஸ்வரர் 16 பட்டைகளுடன் மேற்கு நோக்கி காட்சி தருகிறார். கருவறையில் இறைவன் தெய்வநாதேஸ்வரர் கிழக்கு நோக்கு லிங்க உருவில் காட்சி தருகிறார். ஆலயத்திற்கு ஒரு பிரகாரம் மட்டுமே உள்ளது. பிரகாரம் வலம் வருகையில் குருந்த விநாயகர் சந்நிதி, வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகர் சந்நிதி, பைரவர் சந்நிதி ஆகியவை உள்ளன. கோஷ்ட மூர்த்திகளாக விநாயகர், அவரை அடுத்து தட்சிணாமூர்த்தி, கருவறை பின்புறம் லிங்கோத்பவருக்கு பதில் அவ்விடத்தில் மகாவிஷ்ணு, அடுத்து பிரம்மா மற்றும் துர்க்கை ஆகியோர் உள்ளனர். இங்குள்ள தட்சிணாமூர்த்தி யோக தட்சிணாமூர்த்தியாக சின் முத்திரையை இதயத்தில் வைத்து காணப்படுகிறார். வலது காலை மடித்து பீடத்தில் வைத்து, இடது கையை ஆசனத்தில் அழுத்திக் கொண்டு, கணகளை மூடிக் கொண்டு கல்லால மரத்தின் கீழ் சனகாதி முனிவர்களோடு, பாதத்தில் முயலகன் அழுந்திக் கிடக்க மிக அமைதியாக அமர்ந்திருக்கின்ற இவரது சிற்பம் பார்த்துக் கொண்டே இருக்கத் தோன்றும். அம்பாள் கனககுசாம்பிகை என்ற திருநாமத்துடன் தெற்கு நோக்கியபடி தனிச் சந்நிதியில் அருள்பாலித்து வருகிறார்.

இத்தல இறைவன் ஒரு சுயம்பு லிங்கமாகும், மூலவர் தீண்டாத் திருமேனி. பெரிய ஆவுடையார் அடிப்பாகம் பத்மம் போன்ற அமைப்பில் காணப்படுகிறது. இவ்வாலயத்திற்கு வெளியே இருபுறமும் திருக்குளங்களாக இத்தலத்தின் தீர்த்தங்களான மல்லிகை தீர்த்தமும், சந்திர தீர்த்தமும் அமைந்துள்ளன. தட்சனால் சாபம் பெற்ற சந்திரன் இங்குள்ள மல்லிகை திர்த்தத்தில் நீராடி இறைவனை வணங்கியுள்ளான்.

வருடத்தில் ஏப்ரல் மாதம் 2-ம் தேதி முதல் 7-ம் தேதி வரையிலும், செப்டம்பர் மாதம் 5-ம் தேதி முதல் 11-ம் தேதி வரையிலும் சூரியனின் ஒளிக்கற்றைகள் சுவாமி மீது படுகின்றன. தேவர்கள் வழிபட்ட தெய்வநாதேஸ்வரரை வணங்கிட தோஷங்கள் நீங்கும். குரு தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் யோக தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை, அபிஷேகம் செய்து வழிபட்டால் தோஷங்கள் நீங்கும் குரு பெயர்ச்சி, மகா சிவராத்திரி, ஆருத்ரா தரிசனம், திருக்கார்த்திகை, ஆடிப்பெருக்கு போன்றவை இக்கோவிலில் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.


இலம்பையங்கோட்டூர் தெய்வநாதேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்


ஆலய நுழைவாயில் திருப்பணிகள் நடைபெறுவதற்கு முன்


ஆலயத்தின் முகப்புத் தோற்றம் திருப்பணிக்குப் பின்பு


ஆலயத்தின் பழைய தோற்றம்


கனக குசாம்பிகை


குருந்த விநாயகர் சந்நிதி


வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகர் சந்நிதி


சந்திர தீர்த்தம்


ஆலயத்தின் பழைய தோற்றம்