Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்

திரிபுராந்தகர் சுவாமி கோவில், திருவிற்கோலம்

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருவிற்கோலம் (தற்போது கூவம் என்று வழங்குகிறது)
இறைவன் பெயர்திரிபுராந்தக சுவாமி, தீண்டாத் திருமேனி நாதர்
இறைவி பெயர்திரிபுரசுந்தரி அம்பாள்
பதிகம்திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது சென்னை - அரக்கோணம் ரயில் பாதையில் உள்ள கடம்பத்தூர் ரயில் நிலையத்தில் இருந்து 9 Km தொலைவில் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது. அருகில் உள்ள ஊர் திருவள்ளூர். திருவள்ளூரில் இருந்து காஞ்சீபுரம செல்லும் பேருந்து கடம்பத்தூர், பேரம்பாக்கம் வழியாக கூவம் செல்கிறது. கூவம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி சுமார் 1கி.மி. சென்றால் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது.
ஆலய முகவரி அருள்மிகு
திரிபுராந்தக சுவாமி திருக்கோவில்
கூவம் கிராமம்
கடம்பத்தூர் அஞ்சல்
வழி திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டம்
PIN - 631203


கோவில் விபரம்: கூவம் என்ற பெயரில் தற்போது அறியப்படும் இத்தலம் திருவள்ளூர் மாவட்டத்தில் சென்னையிலிருந்து சுமார் 50 கி.மி. தொலைவில் இருக்கிறது. இத்தலத்தின் அருகே தான் கூவம் ஆறு உற்பத்தியாகிறது. சுத்தமான நீரோட்டம் உள்ள இந்த ஆறு சென்னையை நெருங்கும் போது மிகவும் அசுத்தமடைந்து விடுகிறது. இத்தலத்து இறைவன் ஒரு சுயம்பு லிங்கம். இங்குள்ள இறைவனை, லிங்கத் திருமேனியை ஆலய அர்ச்சகர்கள் கூட தொடுவதில்லை. அதனால் இறைவன் தீண்டாத் திருமேனி நாதர் என்றும் பெயர் கொண்டுள்ளார். இங்குள்ள லிங்கம் காலத்திற்கு ஏற்ப நிறம் மாறுவதாக கூறப்படுகிறது. அதிக மழைபெய்வதாக இருந்தால் இறைவரின் திருமேனியில் வெண்மை நிறம் தோன்றுவதும், யுத்தம் ஏற்படுவதாயிருந்தால் சிவப்புநிறம் படர்வதும் ஆகிய அற்புதம் பொருந்திய தலம். இத்தலத்திற்கு வரும் பக்தர்கள் முதலில் இறைவி திருபுரசுந்தரியை வணங்கிவிட்டுத் தான் பிறகு மூலவர் திரிபுராந்தகரை வழிபடவேண்டும் என்ற நியதி வழக்கத்தில் உள்ளது. திருமணமான தம்பதியர்களுக்கு இடையே ஏற்படும் எந்தவிதமான பிரச்னைகளும் இத்தலத்து இறைவனை வழிபடுவதின் மூலம் தீர்ந்துவிடும் என்பது நம்பிக்கை.

தெற்கு திசையிலுள்ள 5 நிலை இராஜகோபுரம் தான் இவ்வாலயத்தின் பிரதான வாயிலாகும். கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்து தெற்கு வெளிப் பிரகாரத்தில் உள்ள வாயில் வழியாக அம்பாள் மற்றும் சுவாமி சந்நிதிகள் உள்ள பகுதிக்குள் செல்லலாம். முதலில் அம்பாள் திரிபுரசுந்தரி சந்நிதியும், அதையடுத்து திரிபுராந்தக சுவாமி சந்நிதியும் கிழக்கு நோக்கு அமைந்துள்ளன. இரண்டு சந்நிதிகளையும் சேர்த்து வலம் வர பிரகாரம் உள்ளது. உட்பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் அச்சிறுத்த விநாயகர் சந்நிதி அமைந்திருக்கிறது. அம்பாள் மற்றும் சுவாமி சந்நிதிகளுக்கு தனித்தனியே கொடிமரம், பலிபீடம் இருக்கின்றன. சுவாமி சந்நிதி நுழை வாயிலுக்கு முன் தெற்கு நோக்கிய நடராஜர் சந்நிதி உள்ளது. வள்ளி தெய்வானையுடன் உள்ள முருகர், தட்சினாமூர்த்தி ஆகிய மூர்த்தங்களும் பார்க்க வேண்டியவை. சுவாமி கருவறை கோஷ்டத்தில் உள்ள லிங்கோத்பவர் சிற்பமும் கலையழகுடன் உள்ளது. மஹாவிஷ்னு வராக அவதாரம் எடுத்து பூமியைக் குடைவதும், பிரம்மா அன்னப் பறவை உருவில் ஜோதி உருவமான சிவபெருமானின் முடியைக் காண முயலுவதும் லிங்கோத்பவர் சிற்பத்தில் காணலாம். நவக்கிரக சந்நிதி வடக்கு வெளிப் பிரகாரத்தின் வடகிழக்கு மூலையில் உள்ளது.

புராண வரலாறு: இத்தலம் சிவபெருமான் நிகழ்த்திய திரிபுர சம்ஹாரத்துடன் சம்பந்தம் கொண்டதாகும். சிவபெருமான் திரிபுர சம்ஹாரம் செய்ய புறப்பட்ட போது முழுமுதற் கடவுள் விநாயகரை வழிபட்டு கிளம்பாததால் சிவன் ஏறிய தேரின் அச்சு முறிந்து விட்டது. பிறகு விநாயகர் வழிபாடு செய்து புறப்பட்டார் என்று புராணங்கள் கூறுகின்றன. சிவபெருமான் வில் கையிலேந்தி காட்சி கொடுப்பதால் இத்தலம் திருவிற்கோலம் என்ற பெயரில் ஒரு பாடல் பெற்ற தலமாக விளங்குகிறது. இத்தலத்திலுள்ள விநாயகருக்கு அச்சிறுத்த விநாயகர் என்று பெயர்.

ஆலய சிறப்பு: இந்த கோவிலிலுள்ள தீர்த்தம் அக்னி தீர்த்தம் எனப்படும். ஆலய அர்ச்சகர்கள் இந்த அக்னி தீர்த்தத்தில் நீராடிய பிறகே தினசரி பூஜைகள் செய்வார்கள். கடுமையான வறட்சி காலத்திலும் இந்த அக்னி தீர்த்தம் வற்றுவதில்லை என்று கூறப்படுகிறது. மேலும் 4 கி.மி தொலவிலுள்ள கூவம் ஆற்றிலிருந்து கொண்டு வரும் நீரால் மட்டுமே இறைவனுக்கு அபிஷேகம் செய்யும் வழக்கத்தை அர்ச்சகர்கள் கடைபிடித்து வருகின்றனர். சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக என்றேனும் இவ்வாறு கூவம் ஆற்று நீர் அபிஷேகத்திற்கு இல்லையெனில் இளநீர் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. பகல்நேர அபிஷேகம் செய்ய அருகில் உள்ள பிஞ்சவாக்கம் என்ற கிராமத்தில் இருந்து கொண்டு வரப்படும் பால் பயன்படுத்தப்படுகிறது. பிஞ்சவாக்கம் கிராமத்தில் வசிக்கும் மக்கள் இவ்வாலய இறைவன் அபிஷேகத்திற்கு பால் கொடுப்பதை தங்கள் கடமையாக நினைத்து செயல்படுகின்றனர்.

திருவிற்கோலம் ஆலயம் புகைப்படங்கள்


திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் மூன்றாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது

உருவினார் உமையொடும் ஒன்றி நின்றதோர்
திருவினான் வளர்சடைத் திங்கள் கங்கையான்
வெருவிவா னவர்தொழ வெகுண்டு நோக்கிய
செருவினான் உறைவிடந் திருவிற் கோலமே.

சிற்றிடை யுமையொரு பங்கன் அங்கையில்
உற்றதோர் எரியினன் ஒருச ரத்தினால்
வெற்றிகொள் அவுணர்கள் புரங்கள் வெந்தறச்
செற்றவன் உறைவிடந் திருவிற் கோலமே. 

ஐயன்நல் அதிசயன் அயன்விண் ணோர்தொழும்
மையணி கண்டனார் வண்ண வண்ணம்வான்
பையர வல்குலாள் பாக மாகவுஞ்
செய்யவன் உறைவிடந் திருவிற் கோலமே.

விதைத்தவன் முனிவருக் கறமுன் காலனை
உதைத்தவன் உயிரிழந் துருண்டு வீழ்தரப்
புதைத்தவன் நெடுநகர்ப் புரங்கள் மூன்றையுஞ்
சிதைத்தவன் உறைவிடந் திருவிற் கோலமே.

முந்தினான் மூவருள் முதல்வ னாயினான்
கொந்துலாம் மலர்ப்பொழிற் கூகம் மேவினான்
அந்திவான் பிறையினான் அடியர் மேல்வினை
சிந்துவான் உறைவிடந் திருவிற் கோலமே. 

தொகுத்தவன் அருமறை யங்கம் ஆகமம்
வகுத்தவன் வளர்பொழிற் கூகம் மேவினான்
மிகுத்தவன் மிகுத்தவர் புரங்கள் வெந்தறச்
செகுத்தவன் உறைவிடந் திருவிற் கோலமே. 

விரித்தவன் அருமறை விரிச டைவெள்ளந்
தரித்தவன் தரியலர் புரங்கள் ஆசற
எரித்தவன் இலங்கையர் கோனி டர்படச்
சிரித்தவன் உறைவிடந் திருவிற் கோலமே. 


இப்பதிகத்தில் 8-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.  

திரிதரு புரமெரி செய்த சேவகன்
வரியர வொடுமதி சடையில் வைத்தவன்
அரியொடு பிரமன தாற்ற லால்உருத்
தெரியலன் உறைவிடந் திருவிற் கோலமே. 

சீர்மையில் சமணொடு சீவ ரக்கையர்
நீர்மையில் உரைகள்கொள் ளாத நேசர்க்குப்
பார்மலி பெருஞ்செல்வம் பரிந்து நல்கிடுஞ்
சீர்மையி னானிடந் திருவிற் கோலமே.

கோடல்வெண் பிறையனைக் கூகம் மேவிய
சேடன செழுமதில் திருவிற் கோலத்தை
நாடவல் லதமிழ் ஞானசம் பந்தன
பாடல்வல் லார்களுக் கில்லை பாவமே.