Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்


தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

வாசீஸ்வரர் கோவில், திருப்பாசூர்

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருப்பாசூர்
இறைவன் பெயர்வாசீஸ்வரர், பாசூர் நாதர்
இறைவி பெயர்தங்காதளி அம்மன்
பதிகம்திருநாவுக்கரசர் - 2
திருஞானசம்பந்தர் - 1
சுந்தரர்
எப்படிப் போவது திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்து 7 கி.மி. தொலைவிலும், திருவள்ளூர் நகர பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 3 கி.மி. தொலைவிலும் இந்த சிவஸ்தலம் உள்ளது. திருவள்ளூர் - திருத்தணி சாலையில் கடம்பத்தூர் செல்லும் சாலை பிரியும் இடத்தில் இக்கோவில் உள்ளது. சென்னையில் இருந்து சுமார் 50 கி.மி. தொலைவில் உள்ளது.
ஆலய முகவரி அருள்மிகு
வாசீஸ்வரர் திருக்கோவில்
திருப்பாசூர் கிராமம்
கடம்பத்தூர் அஞ்சல்
வழி திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டம்
PIN - 631203

இவ்வாலயம் காலை 7 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.

தல வரலாறு: வேதங்களைத் திருடிச்சென்ற மது, கைடபர் என்ற அசுரர்களை அழித்ததால் உண்டான தோஷம் நீங்க, மகாவிஷ்ணு இத்தலத்தில் சிவபூஜை செய்தார். அவருக்கு அருள் செய்த சிவன் இங்கேயே லிங்க வடிவில் எழுந்தருளினார். மூங்கில் வனமாக இருந்த இப்பகுதியில் லிங்கத்திற்கு மேலே புற்று வளர்ந்து மூடியது. அந்தப் புற்றின் மீது மேய்ச்சலுக்கு வந்த பசு ஒன்று தினந்தோறும் பால் சுரந்தது. இடையன் மூலமாக இதை அறிந்த மன்னன் ஒருவன் அங்கு சென்றான். புற்றின் அடியில் லிங்கம் இருந்ததைக் கண்டு கோயில் எழுப்பினான். மூங்கில் வனத்தில் தோன்றியதால் சிவனுக்கு "பாசூர் நாதர்" என்ற பெயர் ஏற்பட்டது. பாசூர் என்றால் மூங்கில். மூங்கில் காட்டில் சுயம்புவாகத் தோன்றிய இடத்தில் ஆலயம் உள்ளதால் திருப்பாசூர் என்று பெயர் பெற்றது.

கோவில் அமைப்பு: தெற்கு திசையில் 3 நிலை இராஜகோபுரமும், கிழக்கு திசையில் ஒரு முகப்பு வாயிலும் கொண்டு இவ்வாலயம் விளங்குகிறது. இவ்வாலயத்தில் 2 பிரகாரங்கள் உள்ளன. முதல் வெளிப் பிரகாரம் நல்ல அகலமான வெளிச்சுற்றாகும். வெளிப் பிரகாரம் சுற்றி வரும்போது கிழக்குச் சுற்றில் பலிபீடம், கொடிமரம், நந்தி மண்டபம் ஆகியவை உள்ளன. இச்சுற்றில் சொர்ணகாளிக்கு தனி சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இச்சுற்றில் தலவிருட்கம் மூங்கில் ஓங்கி வளர்ந்துள்ளது. தெற்கு வெளிச் சுற்றிலிருந்து உட்பிராகாரம் செல்ல வழி உள்ளது. 2வது பிரகாரத்தில் சுவாமி, அம்பாள் மற்றும் சுப்பிரமணியர் சந்நிதிகள் இருக்கின்றன. மூலவர் வாசீஸ்வரர் சந்நிதியும், இறைவி தங்காதளி அம்மன் சந்நிதியும் தனித்தனி விமானங்களுடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன. இறைவன் கருவறை விமானம் கஜப்பிரஷ்ட அமைப்பைக் கொண்டது. அம்மன் சந்நிதி சிவபெருமான் சந்நிதியின் வலதுபுறம் அமைந்துள்ளது. இவ்வாறு சுவாமி சந்நிதியின் வலதுபுறம் அம்மன் சந்நிதி உள்ள சிவஸ்தலங்களுக்கு ஆக்க சக்தி அதிகம் உண்டு என்று சாத்திரங்கள் கூறுகின்றன. இங்குள்ள ஈஸ்வரர் ஒரு சுயம்பு லிங்கமாகும். இந்த சிவலிங்கத்தை யாரும் தீண்டுவதில்லை. அலங்காரங்கள் கூட பாவனையாகத்தான் நடைபெறுகிறது. சுவாமி தீண்டாத் திருமேனி என்று அழைக்கப்படுகிறார்.

Tiruppasur route map

திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் இருந்து திருப்பாசூர் செல்லும் வழி வரைபடம்
Map courtesy by: Google Maps

சுவாமி சந்நிதியின் இரு பக்கமும் துவாரபாலகர்கள் சிலைகள் கருத்தைக் கவரும் வகையில் உள்ளன. மூலவர் கருவறையில் நுழைவாயில் இடதுபுறம் ஏகாதச விநாயகர் சபை இருக்கிறது. இதில் சிறிதும் பெரிதுமாக 11 விநாயக திரு உருவச்சிலைகள் காண்போர் கருத்தை கவரும் வகையில் வைக்கப்பட்டுள்ளன. முன்புறம் மூன்று, பின்புறம் மூன்று என ஆறு விநாயகர்களும், இவர்களுக்கு இடப்புறம் ஐந்து விநாயகர்களும் இருக்கின்றனர். அருகில் கேதுவும் இருக்கிறார். கருவறை சுற்றுச் சுவர்களில் கோஷ்ட மூர்த்தங்களாக தட்சினாமூர்த்தி, அண்ணாமலையார், துர்க்கை, பிரம்மா ஆகியோர் உள்ளனர். உட்பிரகாரத்தில் தேவார மூவரின் உருவச்சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன.

கரிகாலச் சோழன் இக்கோவிலுடன் தொடர்பு உடையவன். ஒருமுறை சோழமன்னன் கரிகாலன் இந்த வழியாக மூங்கில் காட்டில் சென்று கொண்டு இருக்கும்போது மூங்கிற்புதரில் சிவலிங்கம் இருக்கக் கண்டு இவ்வாலயம் சிவபெருமானுக்கு எழுப்பினான் என்று தல வரலாறு கூறுகிறது. சோழர் காலத்திய கல்வெட்டுகள் ஆலயத்தின் உள்ளே காணப்படுகின்றன.

மகாசிவராத்திரி இத்தலத்தில் மிகச் சிறப்பாக கொண்டாடப் படுகிறது. சிவராத்திரி அன்று இத்தலத்தில் சிவபெருமானை வழிபடுவது மிகவும் விசேஷமாகும்.

திருப்பாசூர் வாசீஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்


ஆலயத்தின் வெளிப்புறத் தோற்றம்


தல விருட்சம் மூங்கில்


கிழக்கு வெளிப் பிராகாரம்


கிழக்கு வாயில்


பலிபீடம், கொடிமரம், நந்தி மண்டபம்

மூலவர் வாசீஸ்வரர்

மூலவர் வாசீஸ்வரர்


கிழக்கு வெளிச் சுற்றில் சொர்ணகாளி சந்நிதி ஆலய கோபுரம்

ஆலய கோபுரம்

>

Copyright © 2004 - 2021 - www.shivatemples.com - All rights reserved