உண்றீஸ்வரர் கோவில், திருவெண்பாக்கம்
தென்னாடுடைய சிவனே போற்றி| தகவல் பலகை | |
|---|---|
| சிவஸ்தலம் பெயர் | திருவெண்பாக்கம் (தற்போது பூண்டி என்று அழைக்கப்படுகிறது) |
| இறைவன் பெயர் | ஊண்றீஸ்வரர் |
| இறைவி பெயர் | மின்னொளி அம்மை |
| பதிகம் | சுந்தரர் - 1 |
| எப்படிப் போவது | திருவள்ளூர் நகரில் இருந்து சுமார் 12 Km தொலைவில் இந்த சிவஸ்தலம் உள்ளது. திருவள்ளூரில் இருந்து நகரப் பேருந்து T-41 மற்றும் T-52 ஆகியவை பூண்டி செல்கின்றன. திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை பேருந்தில் சென்று வழியில் நெய்வேலி கூட்டு சாலையில் இறங்கி 1 கி.மி. சென்றும் இத்தலத்தை அடையலாம். |
| ஆலய முகவரி |
அருள்மிகு ஊண்றீஸ்வரர் திருக்கோவில் பூண்டி நீர்த்தேக்கம் அஞ்சல் வழி திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம் PIN - 602023 |
தேவார காலத்தில் இருந்த திருவெண்பாக்கம் ஆலயம் சென்னை நகரின் குடிதீர் தேவைக்காக சுமார் 50 ஆண்டுகளுக்கு முனபு பூண்டி நீர்த்தேக்கம் அமைக்கப்பட்ட போது நீரில் மூழ்கி விட்டது. இப்போதுள்ள ஆலயம் பூண்டி நீர்த்தேக்கம் கரையில் புதிதாக அமைக்கப்பட்டு 1968-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. மீண்டும் ஒருமுறை 2000-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. பழைய ஆலயத்தில் இருந்த சிலைகள், சிற்பங்கள், மண்டபத் தூண்கள் ஆகியவை யாவும் பெயர்த்து எடுக்கப்பட்டு புதிய ஆலயம் நிர்மாணிக்கும் போது அதில் வைக்கப்பட்டன.
சுந்தரர் திருவொற்றியூரில் தங்கி இருக்கும் போது சங்கிலி நாச்சியாரை திருவொற்றியூரில் இருந்து பிரிய மாட்டேன் என்று சபதம் செய்து கொடுத்து திருமணம் செய்து கொண்டார். ஒரு சமயம் திருவாரூரில் உள்ள பரவை நாச்சியாரை நினைத்து திருவொற்றியூரில் இருந்து புறப்பட்டார். சங்கிலி நாச்சியாருக்கு செய்து கொடுத்த சத்தியத்தை மீறியதால் கண் பார்வை இழந்தார். பிறகு திருமுல்லைவாயில் இறைவனை தரிசித்து பின் திருவெண்பாக்கம் வந்த போது இங்குள்ள இறைவன் ஊண்றீசுவரர் மேல் பதிகம் பாடி கண்ணொளி கேட்டபோது இறைவன் ஊண்றுகோல் கொடுத்து அருளினார். கண்ணொளிக்குப் பதிலாக ஊண்றுகோல் கொடுத்த இறைவன் மேல் கோபம் கொண்ட சுந்தரர் இறைவனைப் பார்த்து நீர் உள்ளே இருக்கிறீரா என்று கேட்க இறைவனும் "உளோம் போகீர் " என்று பதில் அளிக்கிறார். ஊண்றுகோல் பெற்ற சுந்தரர் கோபத்தில் அதை வீசியெறிய அது நந்தியின் மேல் பட்டு அதன் கொம்பு உடைந்தது. இந்த சிவாலயத்தில் உள்ள சிவன் சந்நிதி முன் உள்ள நந்தியின் வலது கொம்பு உடைந்து காணப்படுகிறது.
கோவில் அமைப்பு; இப்போதுள்ள ஆலயத்திற்கு கிழக்கிலும், தெற்கிலும் வாயில்கள் இருந்தாலும், பிரதான சாலையில் உள்ள தெற்கு நுழைவு வாயில் தான் முக்கிய வாயிலாக உள்ளது. கிழக்கு நுழைவு வாயில் முன் புதர்கள் மண்டிக் கிடப்பதால் அது உபயோகத்தில் இல்லை. தெற்கு நுழைவு வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் இடதுபுறம் வெளிப் பிரகாரத்தில் வழித்துணை விநாயகர் ஒரு சிறிய சந்நிதியில் காணப்படுகிறார். கிழக்கு வெளிப் பிரகாரத்தில் சற்று உயரமான மண்டபத்தில் நந்தி மற்றும் பலிபீடம் இருக்கின்றன. சுவாமி சந்நிதி, அம்பாள் சந்நிதி மற்றும் இதர சந்நிதிகள் எல்லாம் சற்று உயரமான மண்டபத்தினுள் அமைந்திருக்கின்றன. கிழக்கு வாயில் வழியாக உள்ளே சென்றால் நேர் எதிரே ஊண்றீஸ்வரர் சந்நிதி உள்ளது. இறைவன் கிழக்கு நோக்கி உள்ளார். தெற்கு வாயில் வழியாக உள்ளே சென்றால் நேர் எதிரே அம்பாள் மின்னொளி அம்மை சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது. கண் பார்வை இழந்த சுந்தரருக்கு அவ்வப்போது மின்னலாகத் தோன்றி வழிகாட்டியதால் அம்பாளுக்கு மின்னொளி அம்மை என்று பெயர். சுவாமி மற்றும் அம்பாள் சந்நிதிகளை தனித்தனியாக வலம் வர வசதிகள் உள்ளன. சுவாமி சந்நிதி கருவறைச் சுற்றில் உள்ள விநாயகர், வள்ளி தெய்வானையுடன் ஆறுமுகர், மகாலட்சுமி சந்நிதிகள் பார்த்து பரவசமடைய வேண்டிவை. கருவறை கோஷ்டத்தில் கணபதி, லிங்கோத்பவர், தட்சினாமூர்த்தி, பிரம்மா, துர்கை ஆகியோரைக் காணலாம். சுவாமி சந்நிதி முன் நந்தி, பலிபீடம், அருகில் சுந்தரர் ஊண்றுகோலுடன் நின்று கொண்டிருக்கிறார். உள் மண்டபத்தில் பைரவர், நால்வர் சந்நிதி, அருணகிரிநாதர்,சூரியன், நவக்கிரகங்கள் சந்நிதி ஆகியவை கிழக்குப பக்கம் இருக்கின்றன.
திருவெண்பாக்கம் ஊண்றீஸ்வரர் ஆலயம் திருவேற்காடு கருமாரியம்மன் ஆலய நிர்வாகத்தைச் சேர்ந்ததாக உள்ளது.
சுந்தரர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் 7-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது
பிழையுளன பொறுத்திடுவர் என்றடியேன் பிழைத்தக்காற் பழியதனைப் பாராதே படலமென்கண் மறைப்பித்தாய் குழைவிரவு வடிகாதா கோயிலுளா யேயென்ன உழையுடையான் உள்ளிருந்து உளோம்போகீர் என்றானே. இடையறியேன் தலையறியேன் எம்பெருமான் சரணமென்பேன் அடையுடையன் நம்மடியான் என்றவற்றைப் பாராதே விடையுடையான் விடநாகன் வெண்ணீற்றன் புலியின்றோல் உடையுடையான் எனையுடையான் உளோம்போகீர் என்றானே. செய்வினையொன் றறியாதேன் திருவடியே சரணென்று பொய்யடியேன் பிழைத்திடினும் பொறுத்திடநீ வேண்டாவோ பையரவா இங்கிருந்தா யோவென்னப் பரிந்தென்னை உய்யஅருள் செய்யவல்லான் உளோம்போகீர் என்றானே. கம்பமருங் கரியுரியன் கறைமிடற்றன் காபாலி செம்பவளத் திருவுருவன் சேயிழையோ டுடனாகி நம்பியிங்கே இருந்தீரே என்றுநான் கேட்டலுமே உம்பர்தனித் துணையெனக்கு உளோம்போகீர் என்றானே. பொன்னிலங்கு நறுங்கொன்றை புரிசடைமேற் பொலிந்திலங்க மின்னிலங்கு நுண்ணிடையாள் பாகமா எருதேறித் துன்னியிரு பால்அடியார் தொழுதேத்த அடியேனும் உன்னதமாய்க் கேட்டலுமே உளோம்போகீர் என்றானே. கண்ணுதலாற் காமனையுங் காய்ந்ததிறற் கங்கைமலர் தெண்ணிலவு செஞ்சடைமேல் தீமலர்ந்த கொன்றையினான் கண்மணியை மறைப்பித்தாய் இங்கிருந்தா யோவென்ன ஒண்ணுதலி பெருமானார் உளோம்போகீர் என்றானே. பார்நிலவு மறையோரும் பத்தர்களும் பணிசெய்யத் தார்நிலவு நறுங்கொன்றைச் சடையனார் தாங்கரிய கார்நிலவு மணிமிடற்றீர் இங்கிருந்தீ ரேயென்ன ஊரரவம் அரைக்கசைத்தான் உளோம்போகீர் என்றானே. வாரிடங்கொள் வனமுலையாள் தன்னோடு மயானத்துப் பாரிடங்கள் பலசூழப் பயின்றாடும் பரமேட்டி காரிடங்கொள் கண்டத்தன் கருதுமிடந் திருஒற்றி யூரிடங்கொண் டிருந்தபிரான் உளோம்போகீர் என்றானே. பொன்னவிலுங் கொன்றையினாய் போய்மகிழ்க்கீ ழிருவென்று சொன்னஎனைக் காணாமே சூளறவு மகிழ்க்கீழே என்னவல்ல பெருமானே இங்கிருந்தா யோவென்ன ஒன்னலரைக் கண்டாற்போல் உளோம்போகீர் என்றானே. மான்றிகழுஞ் சங்கிலியைத் தந்துவரு பயன்களெல்லாந் தோன்றஅருள் செய்தளித்தாய் என்றுரைக்க உலகமெலாம் ஈன்றவனே வெண்கோயில் இங்கிருந்தா யோவென்ன ஊன்றுவதோர் கோலருளி உளோம்போகீர் என்றானே. ஏராரும் பொழில்நிலவு வெண்பாக்கம் இடங்கொண்ட காராறும் மிடாற்றானைக் காதலித்திட் டன்பினொடுஞ் சீராருந் திருவாரூர்ச் சிவன்பேர்சென் னியில்வைத்த ஆரூரன் தமிழ்வல்லார்க் கடையாவல் வினைதானே.