Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்

வலிதாய நாதர் கோவில், திருவலிதாயம் (சென்னை)

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருவலிதாயம் (சென்னை)
இறைவன் பெயர்வலிதாய நாதர், வல்லீஸ்வரர்
இறைவி பெயர்ஜகதாம்பாள், தாயம்மை,
பதிகம்திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 12 Km தொலைவில் சென்னை நகரின் மேற்குப் பகுதியில் பாடி என்னும் இடத்தில் இத்தலம் அமைந்துள்ளது.
ஆலய முகவரி அருள்மிகு
திருவல்லீஸ்வரர் திருக்கோவில்
பாடி
சென்னை
PIN - 600050

சென்னையின் ஒரு பகுதியான பாடி என்ற இடத்தில் அமைந்துள்ள வல்லீஸ்வரர் ஆலயம் தேவார காலத்தில் திருவலிதாயம் என்று வழங்கப்பட்டது. சென்னை - ஆவடி சாலையில் பாடி டிவிஸ் லூகாஸ் பேருந்து நிறத்தத்தில் இறங்கி எதிரே உள்ள கிளைப் பாதையில் சென்று இக்கோவிலை அடையலாம். பாரத்துவாஜ முனிவர் கருங்குருவி (வலியன்) யாக வந்து இத்தலத்தில் இறைவனை வழிபட்டதால் இத்தலம் திருவலிதாயம் என்றும் இறைவன் வலிதாய நாதர் என்றும் அழைக்கப்படுகிறார். 3 நிலைகளை உடைய கிழக்கு வாசல் கோபுரமே பிரதான கோபுரம். கோபுர வாசல் வழியாக உள்ளே நுழைந்ததும் ஒரு விசாலமான வெளிப் பிரகாரம் உள்ளது. அதில் கொடிமரம், நந்தி சுவாமி சந்நிதிக்கு நேர் எதிரே உள்ளது. வலது புறத்தில் குரு பகவானுக்கு தனி சந்நிதி இருக்கிறது. குரு பரிகார தலங்களாக சொல்லப்படும் தலங்களில் திருவலிதாயமும் ஒன்றாகும். குரு பகவான் தன்னைப் பற்றி இருந்த தோஷம் நீங்க இத்தலத்தில் தவமிருந்தே சிவனருள் பெற்றார் என்பதால் இத்தலத்தில் குரு பகவானுக்கு தனி சிறப்புண்டு. வெளிப் பிரகாரத்தில் இருந்து உள் மண்டபத்தில் நுழைந்தவுடன் மூலவர் திருவலிதாயநாதர் சந்நிதி கிழக்குப் நோக்கி அமைந்திருக்கிறது. சுவாமி சந்நிதி கருவறை கஜப்பிரஷ்ட விமான அமைப்புடையது. உள் பிரகாரத்தின் வலது புறம் தெற்கு நோக்கிய அம்பாள் தாயம்மை சந்நிதி இருக்கிறது. அம்பாள் சந்நிதிக்கு நேர் எதிரே தெற்கு வெளிப் பிரகாரத்தில் சிம்ம வாகனம் அம்பாளை நோக்கியவாறு உள்ளது.

உள் பிரகாரத்தில் சூரியன், 4 கரங்களுடன் உள்ள பாலசுப்ரமனியர், விநாயகர், தட்சினாமூர்த்தி, மஹாவிஷ்னு, பிரம்மா, துர்க்கை ஆகியோரின் உருவச்சிலைகள் இருக்கின்றன. சோமஸ்கந்தர், வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன், அனுமலிங்கம், மற்றும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் சந்நிதிகள் உள்ளன. பாரத்வாஜ முனிவரால் பிரதிஷ்டை செய்து வணங்கப்பட்ட ஒரு சிவலிங்கமும் உள் பிரகாரத்தில் உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் சுப்பிரமணியராக ஒரு திருமுகத்துடனும் 4 திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் எழுந்தருளியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. கோவிலில் உள்ள தூண்களில் நடராஜர், முருகர், கோதண்டராமர், மச்சாவதாரமூர்த்தி, கூர்மாவதாரமூர்த்தி ஆகியோரின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

பாரத்வாஜ தீர்த்தம்: ஒரு சமயம் பாரத்வாஜ மஹரிஷி சாபம் காரணமாக கருங்குருவி ஆனார். அவர் திருவலிதாயம் வந்து ஒரு தீர்த்தம் உண்டாக்கி இத்தலத்து இறைவனை பூஜை செய்து சாபவிமோசனம் பெற்றார். நவக்கிரஹ சந்நிதிக்கு எதிரே உள்ள கிணறு அவரால் உருவாக்கப்பட்ட பாரத்வாஜ தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.

பிரம்மாவின் இரண்டு பெண்கள் கமலி, வல்லி என்பவர்கள் இத்தலத்து இறைவனை பூஜித்து, விநாயகரை இறைவன் ஆணைப்படி திருமணம் புரிந்து கொண்டனர் என்று தல புராணம் கூறுகிறது.

திருவலிதாயம் ஆலயம் புகைப்படங்கள்

 

திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

பத்தரொடுபல ரும்பொலியம்மலர் அங்கை புனல்தூவி
ஒத்தசொல்லியுல கத்தவர்தாந்தொழு தேத்த உயர்சென்னி
மத்தம்வைத்தபெரு மான்பிரி யாதுறை கின்ற வலிதாயம்
சித்தம்வைத்த அடியாரவர்மேலடை யாமற் றிடர்நோயே.
 
படையிலங்குகரம் எட்டுடையான்படி றாகக்கன லேந்திக்
கடையிலங்குமனை யில்பலிகொண்டுணுங் கள்வன்னுறை கோயில்
மடையிலங்குபொழி லின்நிழல்வாய்மது வீசும்வலி தாயம்
அடையநின்றஅடி யார்க்கடையாவினை அல்லல்துயர் தானே.

ஐயனொய்யன்னணி யன்பிணியில்லவ ரென்றுந்தொழு தேத்தச்
செய்யன்வெய்யபடை யேந்தவல்லான்திரு மாதோடுறை கோயில்
வையம்வந்துபணி யப்பிணிதீர்த்துயர் கின்றவலி தாயம்
உய்யும்வண்ணந்நினை மின்நினைந்தால்வினை தீருந்நல மாமே.

ஒற்றையேறதுடை யான்நடமாடியோர் பூதப்படை சூழப்
புற்றின்நாகம்அரை யார்த்துழல்கின்றஎம் பெம்மான்மட வாளோ
டுற்றகோயிலுல கத்தொளிமல்கிட உள்கும்வலி தாயம்
பற்றிவாழும்மது வேசரணாவது பாடும்மடி யார்க்கே. 
 
புந்தியொன்றிநினை வார்வினையாயின தீரப்பொரு ளாய
அந்தியன்னதொரு பேரொளியானமர் கோயில்அய லெங்கும்
மந்திவந்துகடு வன்னொடுகூடி வணங்கும்வலி தாயஞ்
சிந்தியாதஅவர் தம்மடும்வெந்துயர் தீர்தலெளி தன்றே. 

ஊனியன்றதலை யிற்பலிகொண்டுல கத்துள்ளவ ரேத்தக்
கானியன்றகரி யின்உரிபோர்த்துழல் கள்வன்சடை தன்மேல்
வானியன்றபிறை வைத்தஎம்மாதி மகிழும்வலி தாயம்
தேனியன்றநறு மாமலர்கொண்டுநின் றேத்தத்தெளி வாமே. 

கண்ணிறைந்தவிழி யின்னழலால்வரு காமனுயிர் வீட்டிப்
பெண்ணிறைந்தஒரு பால்மகிழ்வெய்திய பெம்மானுறை கோயில்
மண்ணிறைந்தபுகழ் கொண்டடியார்கள் வணங்கும்வலி தாயத்
துண்ணிறைந்தபெரு மான்கழலேத்தநம் உண்மைக்கதி யாமே. 

கடலின்நஞ்சமமு துண்டிமையோர்தொழு தேத்தநட மாடி
அடலிலங்கையரை யன்வலிசெற்றருள் அம்மானமர் கோயில்
மடலிலங்குகமு கின்பலவின்மது விம்மும்வலி தாயம்
உடலிலங்குமுயிர் உள்ளளவுந்தொழ உள்ளத்துயர் போமே. 

பெரியமேருவரை யேசிலையாமலை வுற்றாரெயில் மூன்றும்
எரியவெய்தவொரு வன்னிருவர்க்கறி வொண்ணாவடி வாகும்
எரியதாகியுற வோங்கியவன்வலி தாயந்தொழு தேத்த
உரியராகவுடை யார்பெரியாரென உள்கும்முல கோரே. 

ஆசியாரமொழி யாரமண்சாக்கிய ரல்லாதவர் கூடி
ஏசியீரமில ராய்மொழிசெய்தவர் சொல்லைப்பொரு ளென்னேல்
வாசிதீரவடி யார்க்கருள்செய்து வளர்ந்தான்வலி தாயம்
பேசுமார்வமுடை யாரடியாரெனப் பேணும்பெரி யோரே. 

வண்டுவைகும்மணம் மல்கியசோலை வளரும்வலி தாயத்
தண்டவாணனடி யுள்குதலாலருள் மாலைத்தமி ழாகக்
கண்டல்வைகுகடல் காழியுள்ஞானசம் பந்தன்தமிழ் பத்துங்
கொண்டுவைகியிசை பாடவல்லார்குளிர் வானத்துயர் வாரே. 

சென்னை நகரிலும் அதன் அருகிலும் உள்ள மற்ற பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்
திருவொற்றியூர் திருமுல்லைவாயில் திருவேற்காடு
திருமயிலை திருவான்மியூர்